இறுதிப் போரில் இறந்தவர்கள் எவ்வளவு?
நாங்கள் முள்ளிவாய்க்காலில் பெரும் இனவழிப்பை சந்தித்த மக்கள். ஆனால், இனப்படுகொலை நடந்து முடிந்து பத்தாண்டுகளின் பின்னரும் கூட இறுதிப்போரில் இறந்தவர்கள் எவ்வளவு என்ற கேள்விக்கு ஊகத்தின் அடிப்படையில் தான் பல்வேறு பதில்களை சொல்லி வருகின்றோம். எங்களது அரசியல் தலைமைகளும் இறுதிப்போரில் இறந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை தொடர்பில் கணக்கெடுப்பை செய்யவில்லை. இந்த பின்னணிக்குள் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனிடம் நிமிர்வு முன்வைத்த கேள்விகளும் அவரின் பதில்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
நடந்தது இனப்படுகொலை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்கின்றார் சுமந்திரன். அந்த வாதம் சரியா... அப்படியானால் தமிழர்தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் சுமந்திரனின் கடமை தான் என்ன? போதிய ஆதாரங்கள் இல்லை என்றால் அவற்றைத் திரட்ட அவர் எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன?
சுமந்திரன் சொல்கின்ற ஒரு விடயம் சரி. போதியளவு ஆதாரங்கள் அங்கே முன்வைக்கப்படவில்லை. ஏன்? இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு? இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை எவ்வளவு? நாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள்.
நாங்கள் இன்றைக்கு வரைக்கும் அது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் இருக்கும் மக்கள். ஜெனீவாவுக்கு போனீர்கள் என்றால். தமிழ்கட்சிகள் ஒவ்வொன்றும், தமிழ் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளிவிபரத்தோடு வரும். எங்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் இல்லை. எங்களிடம் ஒரு மையப்படுத்தப்பட்ட ஆவணக்காப்பகம் இல்லை. அந்த இடத்தில் அவர் சொல்வது சரி. ஆனால், விசாரணை முடிந்து விட்டது என்று சொல்கிறாரே அது தான் பிழை. நடந்தது விசாரணை அல்ல. வெளிநாட்டில் இருக்கும் சில தமிழர்களை அவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.
தவிர இங்கிருந்து நாங்கள் அனுப்பிய சில முறைப்பாடுகளை அவர்கள் பரிசீலித்திருக்கிறார்கள். இதில் இலங்கை அரசாங்கம் விசாரிக்கப்படவில்லை. அதாவது குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு வெளியே தான் விசாரணை நடந்திருக்கிறது.
அந்த அடிப்படையில் இது விசாரணை அல்ல. அப்படி ஒரு விசாரணை நடக்கவேயில்லை. அப்படி ஒரு விசாரணையைத் தான் நாங்கள் கேட்கிறோம். நிலைமாறுகாலநீதி என்பது அப்படி ஒரு விசாரணையைத் தான் செய்யச் சொல்லிக் கேட்கிறது. நிலைமாறுகால நீதிக்குக்கீழ் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு முதல் அனைத்துலக நீதி விசாரணை என்று கேட்டார்கள். இவர்கள் மாட்டேன் என்றார்கள். பிறகு கலப்புப்பொறிமுறை என்று சொல்லி கொமன்வெல்த் நாடுகளைக் கொண்டு செய்யலாம் என்று கேட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. உள்ளூர் நீதிமன்றங்களைக் கொண்டு செய்யப் போகிறோம் என்று கேட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. கடைசியாக மங்கள சமரவீர வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது என்னவென்றால், உள்ளூர் நீதித்துறையைக் கொண்டு விசாரித்தல் என்பதை அதில் சொல்ல வருகிறார். உள்ளூர் நீதித்துறையைக் கொண்டு விசாரித்தல் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகவும் இருந்திருக்கிறது.
ஆனால், தமிழ்மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பின்னணிக்குள் வந்து விசாரணைகள் இன்னும் தொடங்கவேயில்லை. நடந்திருப்பது ஒருதலைப்பட்சமான விசாரணைகள். பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி புலம்பெயர் தமிழர்களைக் கொண்டு விசாரணை செய்து அதில் சொல்லப்பட்டது தான் அந்த முடிவு. விசாரணை இன்னும் முடியவில்லை. ஆனால், சுமந்திரன் சொல்வது போல நாங்கள் ஆவணங்களை இன்னும் வினைத்திறன் மிக்க வகையில் அனைத்துலகத்தின் மனிதஉரிமை அமைப்புக்களும், சட்டஅமைப்புக்களும் கேட்கின்ற வடிவத்தில் தொகுத்து வழங்கவில்லை.
அப்படியாயின் மக்களின் ஆதரவைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை செய்யவேண்டும் அல்லவா?
கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் செய்திருக்க வேண்டும். அதனை செய்திருந்தால் நீங்கள் ஒன்றில் சிறைக்குள் போயிருப்பீர்கள். இன்றைக்கு நாவற்குழி வழ்க்கை எடுத்ததனால் குருபரனுக்கு வந்திருக்கும் நெருக்கடியைப் பாருங்கள். அதேபோல் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய துணைவேந்தராக இருந்த விக்கினேஸ்வரன் ஓவியர் புகழேந்தியிடமிருந்து ஒரு விருதைப் பெறுகிறார். அந்தவிருதில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று உள்ளது. அந்த வாக்கியத்துக்காக தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நீதிமன்றில் சொன்னவுடன் வழக்குத் தள்ளுபடியாகிறது. இதில் துணிந்து முன் போகின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு நெருக்கடிகள் வருகின்றன.
குருபரன் விவகாரம் இதனைக் காட்டுகிறது. நாவற்குழி வழக்கை எடுத்ததனால் அவரை பல்கலையில் சட்டம் படிப்பிக்கிற நேரத்தில் நீதிமன்றுக்கு போகாதே என சொல்கிறது. இரண்டு தொழிலை ஒன்றாய் செய்யாதே என்று சொல்கிறது. ஆனால் மருத்துவத்துறை, பொறியியற்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை.
கடந்த பத்தாண்டுகளில் நான் எல்லாக் கட்சிகளிடமும் இது தொடர்பில் கதைத்திருக்கிறேன். நான் நினைக்கிறேன் நிலைமாறுகாலநீதி தொடர்பில் வடக்கு கிழக்கு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட சந்திப்புக்களில் வளவாளராக பங்குபற்றி இருக்கின்றேன். பங்கு பற்றிய எல்லா இடங்களிலும் “இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் விதத்தில் நீங்கள் வழக்கைத் தொடுக்கலாம்.” என்று ஊக்குவித்தும் இருக்கிறேன். இவ்வாறு நான் சொன்னதன் விளைவாக பளை பிரதேசசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி மனித உரிமைகள் தரவாய்வு (human rights data analysis) என்கிற அமைப்பைக் கூப்பிட்டு தமது பகுதிக்குள் நடந்திருக்கும் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களைத் தொகுத்துக் கணக்கெடுப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். கிளிநொச்சி பிரதேசசபையும் அப்படி ஒரு தீர்மானத்தை நான் வகுப்பு செய்த பிற்பாடு முடிவெடுத்தது. சரியோ பிழையோ இரண்டு பிரதேசசபைகள் அப்படி செய்திருக்கின்றன.
ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால், மாகாணசபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிப் போட்டு அந்த மனித உரிமைகள் தரவாய்வுக் குழுவைக் கூப்பிட்டு எங்களுக்கு ஒரு சரியான புள்ளிவிபரத்தை பெற்றுத்தா என்று கேட்கவில்லை. நான் 15 க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இது பற்றி எழுதி இருப்பேன். அது உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. அவர்களின் புள்ளிவிபரத்துக்கு ஐநாவும் கட்டுப்படும். அவர்களின் புள்ளி விபரங்கள் அவ்வளவுக்கு கூர்மையானதாக இருக்கும்.1998 இல் ஜேவிபி கணக்கெடுப்புக்கு சந்திரிக்கா காலத்தில் இவ்வமைப்பு வந்திருக்கிறது. அவர்கள் மனித உரிமைகள் இல்லம் என்கிற அமைப்போடு குறிப்பிட்ட காலம் வேலை செய்திருக்கிறார்கள்.
அவர்களை அழைப்பது எப்படி என்பது கூட எழுதியிருக்கிறேன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மன்றம், மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு தலைவர் அல்லது நாடாளுமன்ற பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுக்கும் போது அவர்கள் வருவார்கள்.
ஆனால், எங்களின் எந்தவொரு கட்சியும் அதனைச் செய்யவில்லை. நான் இது தொடர்பில் பெரும்பாலான தமிழ்க் கட்சிகளுடன் கதைத்திருக்கிறேன். ஓர் அரசியல் கட்சித் தலைவர் சொன்னார். புள்ளிவிபரங்களை தொகுப்பதே ஓர் அரசியல் சூழல். அந்த அரசியல் களச் சூழல் இன்னும் எங்களிடம் வரவில்லை என்று. அவர் இதனை சொல்லும் போது மஹிந்த ஆட்சியில் இருந்தார். பிறகு ரணில் மைத்திரி வந்து விட்டார்கள்.
இதற்குப் பிறகும் அவர்கள் அதனை செய்யவில்லை. கிராமங்கள் தோறும் சென்று புள்ளி விபரங்கள் சேகரிப்பது என்பதனையே ஒரு செயற்பாடாக முன்னெடுக்கலாம். கிராமங்களில் போய் ஒரு சாவடியை அமைத்திருந்து அந்தக் கிராமமக்களைக் கூப்பிட்டு நாங்கள் உங்கள் ஊரில் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களையும் கொல்லப்பட்டவர்களையும் நாங்கள் பதியப் போகிறோம். தரவுகளைத் தாங்கோ. எனும் போது மக்கள் வந்து பதிவார்கள். அப்படிப் பதியப் போகும் போது அதுவே ஒரு செயற்பாடாக மாறும். அதுவே உங்களுக்கும் கிராமமக்களுக்குமான உண்மையான பிணைப்பை ஏற்படுத்தும். ஆனால் எங்கள் கட்சிகள் ஒன்றுமே அதனைச் செய்யவில்லை. அதனை செய்யப் போனீர்களாக இருந்தால், குருபரனுக்கு வந்த மாதிரி உங்களுக்கும் நெருக்கடி வரும். கிராமங்களுக்குள் இறங்கி நீங்கள் கணக்கெடுக்கப் போகும் போது அங்கிருக்கும் புலனாய்வாளர் உங்களுக்கு நெருக்கடி தருவார். அந்த ஊரிலிருக்கும் முகாம் உங்களுடன் பிரச்சினைப்படும். அந்தப்பகுதி பொலிஸ் உங்களைத் தடுக்கப் பார்க்கலாம். இதனை ஒரு விவகாரமாக மாற்றுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கிராமங்களில் நீங்கள் கணக்கெடுப்புச் செய்ய வெளிக்கிடும் போது விவகாரமாக வரும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் எந்த ஒரு கட்சியும் அதனை செய்யவில்லை. எல்லோரும் இனப்படுகொலை என்கிறார்கள். எல்லோரும் தேசம் என்கிறார்கள். எல்லாரும் ஒற்றையாட்சிக்கு எதிர் என்கிறார்கள். அதனை எப்படி அடையப் போகிறார்கள்? உங்கள் இலக்குகளை எப்படி அடையப் போகிறீர்கள்.
இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைப் பெறவேண்டும் என்று சொன்னால், நடந்தது இனப்படுகொலை என்று நிரூபிக்கத்தக்க சான்றாதாரங்களை நாங்கள் திரட்ட வேண்டும். எத்தனை பேர் திரட்டி இருக்கிறோம். திரட்டக்கூடிய பொறி முறை எந்தக் கட்சிகளிடம் உள்ளது?
இல்லை. ஐநாவுக்கு கொஞ்ச கோப்புக்களை அனுப்பியதற்கு பிறகு எதுவும் நடக்கவில்லை. ஒருவரிடமும் இது தொடர்பில் நீண்டகால தரிசனம் இல்லை. எல்லாருமே வாயால் வடை சுடுகினம். ஒருத்தரும் செயலுக்கு போகவில்லை. இந்தப் புள்ளிவிபரங்களை தொகுக்கும் பணியை உண்மையில் யார் செய்திருக்க வேண்டும்? இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு வேண்டிய தொகுக்கப்பட்ட பெருமளவிலான ஆவணங்கள், சான்றாதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்பது உண்மை. ஆனால், அதனை முன்வைத்திருக்க வேண்டியது யார்?
கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தான் அதனைச் செய்திருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத் தலைமை அவர்களிடம் தான் இருந்தது. எனவே அவர்கள் தான் அதனை செய்திருந்திருக்க வேண்டும். தாங்கள் அதனை செய்யாமல் விட்டு விட்டு வேறுயாராவது செய்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?அவர்கள் செய்யாமல் விட்டதனால் தான் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் போதியளவு தொகுக்கப்படவுமில்லை. அதனை தொகுக்கும் ஒரு செயற்பாட்டை அவர்கள் முன்னெடுக்கவும் இல்லை. அந்த தொகுக்கப்பட்ட ஆவணங்கள் உரிய இடத்துக்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
நிமிர்வு - பங்குனி -சித்திரை 2020
Post a Comment