11 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் (Video)


இளைய தலைமுறைகளுக்கு நினைவுகளை கடத்துதல்     தமிழ் மக்கள் தங்கள் தாயகமாக கருதுகின்ற வடக்கு கிழக்குப் பகுதிகளில் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு படிப்படியாக இராணுவமயமாகி வந்ததுடன்  பல இடங்களில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டும் வந்தார்கள்.   அத்தகைய தொடர்ச்சியின் ஒரு உச்ச நிகழ்வாகத்தான் 2009 இறுதிக் காலங்களில் வன்னியின் கிழக்குப் பகுதியில் முல்லைத்தீவை நோக்கி படிப்படியாக நகர்த்திச் செல்லப்பட்ட போது இடம்பெற்ற படுகொலைகளையும் பார்கின்றோம். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது. இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.   அந்தப் பின்னணியில் நாங்கள் பார்க்கின்ற போது முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது தமிழின அழிப்பின் உச்ச வெளிப்பாடாக நாங்கள் பார்க்கின்றோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவை பேணுவது என்பது முக்கியமானது. எனக் குறிப்பிட்டார் தமிழ் சிவில் சமூக அமைய செயற்பாட்டாளரான அருட்தந்தை இ. ரவிச்சந்திரன். அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, வருடா வருடம் முள்ளிவாய்க்கால் மே 18 ஐ நினைவு கூருகின்ற போது நாங்கள் வெறுமனே முள்ளிவாய்க்காலை மட்டும் நினைவு கூர்வதில்லை. மாறாக தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த மாபெரும் இனவழிப்பின் ஒட்டுமொத்த வடிவத்திலே அதனை நினைவு கூருகின்றோம். இதனை உலகெங்கும் பரந்து வாழுக்கின்ற தமிழ்மக்கள் அதனை ஒரு இனவழிப்பு நாளாக, இனப்படுகொலை நாளாக பிரகடனம் செய்து அதனை நினைவு கூருகின்றார்கள்.  11 வருடங்களின் பின்பு நின்று பார்க்கின்ற பொழுது இந்த நினைவு கூரல் எவ்வளவு அவசியம் என்பதனை தான் நான் வலியுறுத்த விரும்புகின்றேன். எங்களுடைய இழப்புக்களை எங்கள் கூட்டு நினைவிலே பதித்துக் கொள்ளவில்லை என்று சொன்னால் நாங்கள் அடையாளமற்ற இனமாகப் போய்விடும் ஆபத்து இருக்கின்றது. 
இப்போது உருவாகியுள்ள எம் சந்ததி முள்ளிவாய்க்கால் இழப்புக்கள் பற்றி அறியாத சந்ததியாக இருக்கலாம். கூட்டு நினைவை ஆழமாக பேணுதல் மிகமிக முக்கியமான கடமையாகும். அந்த நினைவின் நீட்சியில் தான் எங்களின் எதிர்கால இருப்பு தங்கியுள்ளது என்பதனை உணர்ந்தவர்களாக இந்த வருடம் வருகின்ற நினைவேந்தலையும் இனி வருகின்ற காலங்களில் வரப்போகின்ற நினைவேந்தல்களையும் செய்ய வேண்டும். வெறுமனே அந்த நாட்கள்  அழுகின்ற நாட்கள் மட்டுமல்ல. எங்களுடைய வருங்கால சந்ததிக்கு கூட்டு நினைவைக் கடத்துகின்ற நாட்கள். ஆகவே அதற்கேற்ற விதமாக மக்கள் இதனை அனுட்டிக்க வேண்டும்.  
இந்த நாட்களில் ஏற்பட்டிருக்கின்ற கோவிட் 19 உலகப் பெருந்தொற்று காரணமாக இம்முறை பெருந்திரளாக முள்ளிவாய்க்காலிலோ வேறு இடங்களிலோ  ஒன்றுகூடி நினைவுகூரலை செய்ய முடியாது. அதனை நாங்கள் புரிந்து கொள்ளலாம். இதனை நாங்கள் ஆத்மார்த்தமாக நினைவு கூருவது தான் முக்கியமானது. எங்களுடைய குடும்பங்களில் நினைவு கூருவது. எங்களது பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வது. இந்த வருடம் பொது ஏற்பாட்டுக்குழு, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  போன்ற பலதரப்பிடம் இருந்து வந்த வேண்டுகோள்களில் சில விடயங்கள் அழுத்திச் சொல்லப்பட்டு இருக்கின்றன.  அன்றைய மாலைப்பொழுதில் நாங்கள் வீடுகளில் இருந்து வழிபாட்டிடங்களில் மணி ஒலிக்க எங்கள் வீட்டிலோ, முற்றங்களிலோ நினைவு கூருவோம் என்ற வேண்டுகோள் பரவலாக விடுக்கப்பட்டு இருக்கின்றது. எனவே உணர்வுபூர்வமாக ஒவ்வொரு குடும்பத்தினரும் வீடுகளில் இதனை செய்வதற்கு முன்வர வேண்டும்.  முள்ளிவாய்க்காலில் இறுதிநாட்களில் கடும் உணவுப்பற்றாக்குறை எழுந்த போது கஞ்சிக் கொட்டில்களில் வெறும் அரிசியும், உப்பும் போட்ட  அந்த கஞ்சி பலநாட்கள் எம் மக்களுக்கு உயிர் கொடுத்த உணவாக இருந்தது. அதனை குடித்தவர்கள் பல்வேறு விதமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த நினைவை பேணுவதற்கு முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி சிறந்த வடிவமாக கருதப்பட்டதால்  அன்றைய நினைவு நாளில் அதனை நாம் ஒரு நேர உணவாக எடுத்து அந்த நினைவை நாங்கள் பேணுவதும் பிள்ளைகளுக்கு கடத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அந்தக் கஞ்சி அமைந்துள்ளது. அதனை ஏன் உண்கின்றோம் என்பதனை தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் எங்களுடைய நினைவுகூரலை நாங்கள் ஆழமாக செய்யலாம். ஆகவே அத்தகைய ஒரு நினைவு கூரலை செய்வது மிகவும் முக்கியமானது.  இவ்வாறு நினைவுகளை தக்க வைக்கின்ற போது தான் எதிர்காலத்தில் எங்களது உரிமைகளை பெற்றுக் கொள்வது சாத்தியமாகும். அடிப்படையிலே தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எதிர்காலத்தில் இந்த இனவழிப்பின் மீதான விசாரணைகளில் தான் தங்கியிருக்கிறது. இந்த இனவழிப்பின் மீதான பொறுப்புக் கூறலில் தான் எங்களுடைய மீட்சி தங்கியிருக்கிறது.  வேறு எந்த அரசியல் நகர்வுகளிலும் தங்கி இல்லை என்பதனை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேறு விதமான அரசியல் நகர்வுகளுக்கூடாக தீர்வை பெற்றுக் கொள்வது என்பதனை விட எங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு வடிகாலாக இருக்கக் கூடியது இனவழிப்பின் மீதான நினைவுகூரலும் பொறுப்புக் கூறலும் தான். அதற்கு அவசியமானது நாங்களே அவற்றை மறந்து விடாதிருப்பது. இவற்றை மறக்கச் செய்வதற்கான பல முயற்சிகளில் பல்வேறு தரப்புக்களும் ஈடுபடலாம். ஆனால் நாங்கள் அவற்றை மறக்காத வரை எமக்கான தீர்வும் எம்மிடமிருந்து அகன்று போகப் போவதில்லை.  ஆகவே இந்த 11 ஆவது ஆண்டு நிறைவிலே அனைவரும் நினைவுகூரலை மேற்கொள்ளவும், ஆத்மார்த்தமாகவும், ஆழமாகவும் பொருள் பொதிந்த வகையிலும் எங்களுடைய சந்ததிக்கு இவற்றை கடத்துகின்ற பெருங்கடமையாக அதனை நாங்கள் நிறைவேற்றவும் அதன் மூலம் நாங்கள் உணர்வுகளைத் தக்கவைத்து எதிர்காலத்தில் எங்கள் மக்களுடைய விடியலுக்காக எங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும் அந்த நாட்களில் நாங்கள் இழந்தவை ஒன்றும் வீண் போய் விடாது என்கிற உறுதியுடன் நினைவேந்தலை மேற்கொள்வோம். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.