தன்னிறைவையும் மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கும் வீட்டுத் தோட்டம் (Video)
உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் மக்கள் அன்றாட உணவுக்கு என்ன செய்வது? அன்றாட சமையலுக்கு தேவையான மரக்கறிகளை நாளாந்தம் பெற்றுக் கொள்வதில் பெரும் இடர்களை சந்தித்தனர். ஒரு பக்கம் விவசாயிகளின் தோட்டங்களில் கேட்க, வாங்க ஆளில்லாமல் அழுகும் மரக்கறிகளும் இன்னொரு புறம் மக்களுக்கு மரக்கறிகள் தேவையோ உச்சத்தில் இருந்தது. பின் இதனை உணர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களின் வீட்டு வாசல்களுக்கு கொண்டு சென்று விற்கும் பொறிமுறையை ஏற்படுத்தினர். இந்நிலையில் இயற்கை வழி இயக்கத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக "கிராமங்கள் தோறும் இயற்கை அங்காடி" என்கிற கருதுகோளை வலியுறுத்தி வருகின்றனர். முதலில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் திறக்கப்பட்ட இயற்கை அங்காடிகள் பின் கிளிநொச்சி, மன்னார், வவுனியா என்று பரவலடைந்தன. யாழ்ப்பாணத்திலும் தற்போது பல்வேறு இடங்களிலும் இயற்கை அங்காடிகள் உள்ளன. இன்று மரக்கறி விதைகள், கன்றுகளை உற்பத்தி செய்து விற்குமிடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அந்த வகையில் தாரா வளர்ப்பின் அடையாளமும், இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளரும், இயற்கை ஆர்வலருமான ஸ்ராலினி ராஜேந்திரன் அவர்கள் தனது இடத்தில் மூலிகைகள், இலைவகைகள், மரக்கறிகள் அடங்கிய அழகான வீட்டு தோட்டமொன்றை தொடர்ந்து பராமரித்து வருகிறார். கொரோனா இடர்காலத்தில் வீட்டு தோட்டத்தின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கும் வேளையில் இந்த விழிப்புணர்வு காணொளி முக்கியத்துவம் பெறுகிறது.
தனது அனுபவம் குறித்து ஸ்ராலினி என்ன சொல்கிறார், கேட்போம் வாருங்கள். கொரோனா காலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள விடயம் உணவு தான். அதன் பற்றாக்குறை வரும் மாதங்களில் உலகளவில் உணரப்படும் என்று தெரிகிறது. ஊரடங்கால் பிள்ளைகள், பெற்றோர்கள் என எல்லோரும் வீடுகளில் ஒன்றாக இருக்கும் காலம். போதுமான நேரங்கள் இருக்கிறது. அந்த நேரங்களை நாங்கள் எவ்வாறு பயனுள்ள முறையில் செலவிட முடியும் எனப் பார்ப்போம். வீட்டு தோட்டம் செய்வதனூடாக எங்களது நேரங்களை பெறுமதியானதாக மாற்றுவதுடன் எங்களுக்கு தேவையான மரக்கறிகளை நஞ்சில்லாமல் நாமே உருவாக்குகின்றோம் என்கிற மனத்திருப்தியும் எங்களுக்கு ஏற்படும். இயற்கை வழியில் மரக்கறிகளை பயிரிடும் போது பயிர் வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளையும் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும். திருநெல்வேலியில் விவசாயத் திணைக்களத்துக்கு அருகில் அமைந்துள்ள சேதன விவசாய விற்பனை நிலையத்திலும் இயற்கை வழி உள்ளீடுகள், பூச்சி விரட்டிகளை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் ஆடு, மாடு, கோழி வளர்ப்பையும் ஒவ்வொருவர் வசதிக்கேற்ற முறையில் வீடுகளில் மேற்கொண்டால் குடும்பத்தின் ஆரோக்கியத்தை ஈடு செய்ய முடியும். அத்துடன் அசோலா, co 3 வகை புல்லினத்தையும் பயிரிட்டால் கால்நடைகளுக்கு தேவையான உணவுத்தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். என்றார். வீட்டுத் தோட்டம் என்பது தற்சார்பு நோக்கிய எம் பயணத்தின் முதல் அடியாகும். இயற்கையோடு இயைந்த வாழ்வை நாம் வாழுவோமாக இருந்தால் எக்காலத்திலும் எந்தக் கொரோனாவைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. தொடர்புக்கு 0779 866 409
Post a Comment