இராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)


சிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

சிறீலங்காவின் இராணுவமயமாக்கல்: சிங்கள பௌத்த மனோநிலையின் கூட்டு முடிவு 

ராஜபக்சக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவு சீமெந்தால் போடப்பட்டது என்று குசேல பெரேரா சொல்லுவார்.  அது தான் உண்மை.

போர்க்குற்றம் என்று வந்தால் படைத்தளபதிகளை விடவும் உத்தரவிட்ட அரசியல்வாதிகளைத் தான் பார்ப்பார்கள்.  இந்த யுத்தக்குற்றங்களுக்குரிய படை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டமை என்று வரும் போது இவர்கள் தான் வந்து மாட்டுவார்கள்.  எனவே இவர்கள் போர்க்குற்றச்சாட்டில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களுக்கு கீழ் யுத்தத்தை சிரமேற்கொண்டு செயற்பட்ட ஆட்களைப் பாதுகாக்க வேண்டும்.  அவர்களுக்கு அரசில் முக்கிய பதவிகளை வழங்குவதன் மூலம் இன்னும் குறிப்பாக ஐநாவில் தண்டனை விலக்காக இருக்கக் கூடிய தூதுவர் பதவிகளை வழங்குவதன் மூலம் தங்களது உத்தரவுகளுக்கு கீழ்ப்பட்டு யுத்தத்தை முன்னெடுத்த தளபதிகளை பாதுகாக்கப் பார்ப்பார்கள். 


கோவிட் 19 என்பது ராஜபக்சக்களுக்கு விழுந்த பெரிய லொத்தர். இது ஒருபக்கம் படைத்தரப்பை கொரோனாவுக்கு எதிராகப் போராடும் போராளிகளாக மாற்றியிருக்கிறது. இன்னொருபக்கம் படைத்தரப்பை மருத்துவர்களோடு சேர்த்து நாட்டின் பேச்சாளர்களாக மாற்றி இருக்கிறது. இதற்கு முன் இராணுவ விவகாரம் என்று வரும் போது மட்டும் தான் இராணுவ பேச்சாளர் என்று ஒருவர் இருப்பார் அவர் கதைப்பார். 
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை பார்த்தால் மருத்துவர்களோடு, சிவில் அதிகாரிகளோடு சரிக்குச் சமமாக படை அதிகாரிகளும் இருந்து கருத்துச் சொல்கிறார்கள். இது படைத்தலைவர்களை புரமோட் பண்ணியிருக்கிறது. படைத்தரப்பினர் ஒரு பக்கம் வைரசுக்கு எதிராக ரிஸ்க் எடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகர்களாக மாற்றப்படுகிறார்கள். 

கோவிட் 19 க்கு எதிரான யுத்தத்தில் படைத்தரப்புக்கு புனித நீர் தெளிப்பது,  சிவில் கட்டமைப்புக்களை படை மயப்படுத்துவது இவை எல்லாமே ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் தான் வருகிறது. யாரைப் பாதுகாத்தால் தங்களைப் பாதுகாக்கலாமோ அவர்களை ராஜபக்சக்கள்  பாதுகாக்கிறார்கள்.  படைத்தரப்புக்கு புனித நீர் தெளித்து அவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் மறுதலையாக தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள் என்பது தான் உண்மை. இது ஒரு சுயபாதுகாப்பு உத்தி. அல்லது ஒரு கூட்டு உத்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம். சிங்கள பௌத்த மனோநிலையின் ஒரு கூட்டு முடிவு. முக்கிய பொறுப்புக்களை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது நிலைமாறுகால நீதிக்கு எதிரான  ஒரு செயற்பாடு. நிலைமாறுகால நீதி இராணுவமய நீக்கத்தை வலியுறுத்தியது. ஆனால் நாடு திரும்ப இராணுவ மயமாகிக் கொண்டு வருகிறது. 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.