தாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்


இனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற் தான் நாங்கள் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டும். எனவே நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தில் நாங்கள் ஐக்கியப்பட வேண்டும். ஆனால் கடந்த 11 ஆண்டுகளையும் நாங்கள் தொகுத்துப் பகுத்துப் பார்ப்போமாக இருந்தால் நாங்கள் ஐக்கியப்பட தவறி விட்டோம். தாயகத்தில் ஓர் அரசியலும் புலம்பெயர் தேசங்களில் வேறொரு அரசியலும் காணப்படுகின்றது. தமிழகம் 2009 க்குப் பின் கொந்தளித்த அளவுக்கு இப்போது இல்லை.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு நோக்கு நிலைகள் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெவ்வேறு நோக்கு நிலைகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் முதலில் ஐக்கியப்பட வேண்டும். இந்த ஐக்கியத்தை புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்தும் தொடங்க முடியாது. தமிழகத்தில் இருந்தும் தொடங்க முடியாது. அதனை தாயகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தாயகத்தில் இருந்து தொடங்குவதற்கு மக்களாணையைப் பெற்ற ஒரு பலமான கட்டமைப்பு இல்லை.



கடந்த 11 ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடம் இருந்து கணிசமான அளவு உதவிகள் குறிப்பாக நிதி ரீதியிலான உதவிகள் கிடைத்திருக்கின்றன. ஓரளவுக்கு அறிவுப் பரிமாறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அனுபவப் பரிமாறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இவை யாவும் அவற்றுக்குரிய இலக்கை அடைந்தனவா என்ற கேள்வி முக்கியம்.

தாயகமும், தமிழகமும், புலம்பெயர்ந்த சமூகமும் ஒரு சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும். பொருத்தமான சாதுரியமான தீர்க்கதரிசனமாக கட்டமைப்புகளின் மூலம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டும் தான் முப்பெரும் தமிழ்ச் சக்திகளும் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கான நீதி என்கிற அடுத்த கட்டத்தை நோக்கிப் போகலாம். இல்லையென்று சொன்னால் தாயகத்தில் செயற்படுகின்றவர்கள் புலம்பெயர்ந்த சமூகத்துடன் தொடர்புகொள்ள தயங்குவார்கள். புலம்பெயர்ந்த சமூகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டால் அது சட்டப் பிரச்சினையாக பாதுகாப்புப் பிரச்சினையாக வரும்.

இந்தச் சட்டச் சிக்கல்கள் இருக்கும் வரைக்கும் இருதரப்புக்களும் பொருத்தமான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய முடியாது. எனவே கடந்த 11 ஆண்டுகாலத்தில் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் உலகத்தில் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலம் தாயகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். தமிழகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து வருகின்ற நிதி பொருத்தமான இடங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். புலம்பெயர்ந்த சமூகத்தில் இருப்பவர்கள் அங்கே இருந்து கொண்டு எங்களைத் தொலை நோக்கியால் பார்ப்பதனை விடவும் இங்குள்ள யதார்த்தத்துக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும். பலர் புலம்பெயர்ந்த சமூகப் பரப்பில் இருந்து கொண்டு தாயகத்தை பிரிவேக்கத்தோடு பார்க்கின்றார்கள். இல்லை. பிரிவேக்கத்தோடு பார்ப்பதற்குப் பதிலாக யதார்த்தப்பூர்வமாக அணுக வேண்டும். யதார்த்த பூர்வமாக அணுகுவது என்பது சட்டரீதியான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

(அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மே - 18 நினைவுகூர்தலை முன்னிட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றுக்கு காணொளி ஊடாக நிகழ்த்திய உரையின் சுருக்கமான வடிவம்)

நன்றி: நிமிர்வு-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.