மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம்


மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  எங்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றிருக்கிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த விடயங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் தான் மீண்டும் அந்தக் குற்றங்கள் எங்களுடைய மண்ணிலே எங்களுக்கு எதிராக நடப்பதை தடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.   இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பி, புளொட், கருணா குழு, பிள்ளையான் குழு போன்ற துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட  அல்லது கொல்லப்பட்டவர்கள்,  இராணுவத்திடம் சரணடைந்து கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,  முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறி வவுனியா செட்டிக்குளம் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து புளொட் அமைப்பினராலும், ஏனைய துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே என்ன நடந்தது என்பதனை கண்டறியக் கூடியதாக இருக்கும். சர்வதேச சமூகம் யுத்தம் முடிந்த பிற்பாடு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு  எல்லாவற்றையும் மூடி விடுவதற்கு அவர்கள் முனையவில்லை. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்ற ஒன்றை சொல்லிக் கொண்டு   அதற்குப் பின்னர் எல்லாமே நல்லபடியாக நடைபெறுகின்றது என்று சொல்ல முற்பட்டாலும் கூட  நாங்களும் எங்கள் மக்களும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழக மக்களும் இணைந்து இங்கே ஒரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எங்களுடைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டிருக்கின்றது.  இதிலே யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைக் குற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவை சர்வதேசத்தின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். என்ற அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகமும் இங்கே யுத்தக் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றது. அது விசாரிக்கப்படத்தான் வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.   மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்ட தரப்பை அழைத்தார்கள்.   அதிலும் ஒரு இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் அழைத்துப் பேசினார்கள். நடந்த  யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெற வேண்டும். அந்தப் பொறுப்புக் கூறல் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.   பொறுப்புக் கூறல் விசாரணைப் பொறிமுறை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.   அந்த வகையில் உங்களுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. 1. உள்ளக விசாரணை  2. கலப்பு விசாரணை  3. சர்வதேச விசாரணை  இவற்றில் நீங்கள் எதனை விரும்புகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கேட்ட போது,    அவர்கள் கூறிய பதில் எங்களுக்கு உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இருக்கிறது. சர்வதேச விசாரணை வேண்டாம். கலப்பு பொறிமுறையும் வேண்டாம். என்று தான் அவர்கள் கூறியிருந்தார்கள்.  பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான இவர்களின் வேண்டுகோளின் பேரில் தான்   உள்ளக விசாரணை தீர்மானிக்கப்பட்டது.   இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான  இவர்கள் சர்வதேச விசாரணை தான் வேண்டும் என்று கோரியிருந்தால் நிச்சயமாக சர்வதேச விசாரணையை நோக்கி நிலைமை சென்றிருக்கும். ஆகவே அது நடைபெறாது என்று யாரும் சொல்லி விட முடியாது. ஆனால் உள்ளக விசாரணையையே இவர்கள் கேட்டார்கள்.  உள்ளக விசாரணை என்பது இலங்கை அரசு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரிக்க மாட்டார்கள் தானே.   யுத்தக் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்று  தெரிந்து கொண்டு அவர்களைப் பாதுகாப்பதற்காகவே உள்ளக விசாரணையை கோரியது சர்வதேச சமூகத்தின் தவறா? தமிழ் தலைமைகளின் தவறா?  ரோஹிஞ்சா மக்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மியன்மார் நாடு ரோம் சாசனத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எப்படி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது?  அவர்கள் அதற்குரிய வழிமுறையை கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.