இளையோர்கள் விரும்பும் தலைமைத்துவத்தைக் கொடுப்போம்


இளைஞர்கள் பெருமளவில் வழிதவறிச் செல்கின்றார்கள் என்கிற கருத்து இங்கே உள்ளது. இளைஞர்கள் கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றார்கள், போதைப்பொருளுக்கு அடிமையாகி எதிர்மறையான சிந்தனைகளை இந்த சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்கிற ஆழ்ந்த கவலை மக்கள் மத்தியில் உள்ளது. அதில் ஒரு வித உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. எல்லா இளைஞர்களும் தவறான பாதையில் செல்கின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

இங்கே தேசிய உணர்வு மிக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள். இங்குள்ள இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழலும் இருக்கின்றது.
இன்றைய தேர்தல் களத்தில் எங்களோடு வந்து அணிவகுத்திருக்கின்ற இளைஞர்கள் நிச்சயமாக காசுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல. உடனடி வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்து வருபவர்களும் அல்ல. உணர்வு ரீதியாக உந்தப்பட்டு வருபவர்கள். தங்களுடைய வேலைகளை விட்டு விட்டு கூட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரு சரியான அரசியல் மாற்றத்தை தான். உருவாகின்ற அரசியல் மாற்றம் என்பது நேர்மையானதாக தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடும் என்கிற உணர்வோடு தான் அவர்கள் எங்களோடு பயணிக்கின்றார்கள். உண்மையில் அவர்களை நினைக்கும் போது எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது.
நாங்கள் உரிமைப் போராட்டத்தில் சோர்வடைந்து விடக் கூடாது என்கிற உந்துதலைக் கூட அவர்களுடைய செயற்பாடுகள் எமக்கு தருகின்றது. சில வேளைகளில் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி வந்தால் கூட மனம் தளராது எமக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் அர்ப்பணிப்புக்கு நான் உண்மையிலேயே தலை வணங்குகின்றேன்.
இவ்வாறான இளைஞர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும். வாள்வெட்டு, போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு அடிமையாகாமல் இந்த சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையை நாங்கள் எடுத்துப் பார்க்கின்ற போது அங்கே தனியார் துறை என்பது மிகவும் வளர்ச்சியடைந்த நிலையிலே உள்ளது. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அந்த நிலைமை இல்லை. யாழ்ப்பாணத்தில் துரதிஷ்டவசமாக உத்தியோகம் பார்ப்பதென்றால் அரச உத்தியோகம் தான் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மனநிலையில் வளர்ந்த சமூகம் நாங்கள். அந்த நிலையை மாற்றி தனியார் துறையை விருத்தி செய்வதனூடாக எம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை இங்கே கொண்டு வந்து தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதன் ஊடாக எம் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கலாம். ஒரு ஆரோக்கியமான ஒழுக்கமான தலைமைத்துவமிக்க இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு விளையாட்டுத்துறை மேம்பாடு அவசியமானது. விளையாட்டுத் துறையில் செல்லும் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதனைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
மக்களின் அங்கீகாரத்தை பெறுகின்ற போது என்னுடைய கவனம் இளைஞர்களை அர்ப்பணிப்புடன் வழிப்படுத்துவதற்காகவே முழுமையாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் எம்மோடு அணிவகுப்பது என்பது அவர்கள் எமது தலைமைத்துவம் சரியான தலைமைத்துவம் சரியான பாதையை நோக்கி நகர்கின்றது என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அந்த நம்பிக்கையை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கின்றோம். அந்த நம்பிக்கையை நாங்கள் வீண் போகாதவாறு பாதுகாத்துக் கொள்வோம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.