2009 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையில் கூட்டமைப்பின் வகிபாகம்


2009 இறுதிப்போர் காலத்தில் அமெரிக்கா - கனடா மேற்பார்வையில் அரசு - புலிகள் போர் நிறுத்தத்துக்கான வாய்ப்பு நன்றாகவே இருந்தது. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐயா எவ்வாறு நழுவ விட்டார் என்பதனை விளக்குகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின்   செயலாளருமான சிவாஜிலிங்கம்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 போர் 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து போரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை போதிய அழுத்தத்தங்களைக் கொடுக்கவில்லை.  ஆனால் 2007 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில்  சம்பந்தன் ஐயா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு  15 ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். ஆனால் 2006 ஆம் ஆண்டிலே அன்றைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை சந்தித்ததன் பின்னர்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  2007, 2008, 2009 ஏப்பிரல் வரை சந்திக்கவில்லை. ஏன் புதுடில்லிக்கு சென்று அழுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தக் கேள்விக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பதில் சொல்வார்களா?


தனிப்பட்ட சிவாஜிலிங்கம் சென்றார் நாடாளுமன்றுக்கு முன் போராடினார் என்பதல்ல. தனிமரம் தோப்பாகாது.  உங்கள் தலைவர் சம்பந்தன் ஐயாவை கூட்டி வாருங்கள் என அவர்கள்  கூறினர்.  வரவில்லை. இறுதியாக கூட இனத்துக்காக போராடாமல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நின்று கொண்டு செய்த விடயங்களை நாங்கள் பார்க்க முடியும். 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 17 ஆம் திகதி சம்பந்தன் ஐயா தலைமையில் சென்ற குழு கூட அங்கே போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை. அவர்கள் கொடுத்த மகஜர் தமிழ்நெட்டில் வெளியாகி இருந்தது இன்றும் நீங்கள் பார்க்கலாம். ஏப்ரல் 17 ஆம் திகதி கொடுத்தார்கள். மே 18 இல் எல்லாமே முடிவுக்கு வந்தது. ஆகவே போர் நிறுத்தத்தை அன்றும் அவர்கள் வலியுறுத்தவில்லை.

இதைவிட அருமையான சந்தர்ப்பம் ஒன்று 2009 பெப்ரவரி மாதம் முதல்வாரத்திலே இந்தியாவிலே நான் ஒரு மாதத்துக்கு மேல் தங்கியிருக்க முடியாமல் பல நெருக்கடிகளை இந்திய அரசு அதிகாரிகள் கொடுத்த போது நான் சிங்கப்பூருக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து போராடிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் லண்டனுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட போது இரவு வந்த தொலைபேசி அழைப்பில் சட்டத்தரணி கரிகாலன் அவர்கள் பேசினார்.  கனடாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். ஒன்ராறியோ மாநிலத்தினுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த இராஜதந்திரியும் வழக்கறிஞருமான முன்னாள் முதலமைச்சர் Bob Rae ஐ  அதற்கு நியமித்திருக்கிறார்கள். புலிகள் தாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சொல்ல வேண்டும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கனடாவுக்கு சொன்னால்  சொன்ன 72 மணித்தியாலத்தில் அமெரிக்காவும் கனடாவும் இணைந்து உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்தும். விடுதலைப்புலிகளின் தலைவர், போராளிகள், பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பை இந்த இரு நாடுகளும் பொறுப்பெடுக்கும். ஆயுதம் முழுவதும் பொறுப்பேற்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட மாட்டாது. களஞ்சியப்படுத்தப்படும்.  அதன் பின் ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும். என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு இருந்தது.

இதற்கு நீங்கள் தான் புலிகளுடன் பேச வேண்டும் என கரிகாலன் ஐயா கூறினார். அடுத்தநாள் அதிகாலை வன்னிக்கு அந்த செய்தியை அனுப்பினேன். சுமார் ஆறு மணித்தியாலத்தில் நடேசன் அண்ணன் தொடர்பில் வந்தார். பின் தலைவருடன் பேசி விட்டு போர் நிறுத்தத்துக்கு தாங்கள் தயார் எனக் கூறினார். பின் சம்பந்தன் ஐயாவின் சென்னை வீட்டு தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி சொன்னதாக நடேசன் கூறினார். இது சட்டத்தரணி கரிகாலனுக்கு தெரிவிக்கப்பட்டது.   பின் சம்பந்தன் ஐயா  கனேடிய முன்னாள் முதலமைச்சர் Bob Rae ஐ இலங்கைக்கு அல்லது இந்தியாவுக்கு வரும்படி வேண்டினார். ஆனால் அவர் நிலைமைகளை விளக்கி மறுத்துள்ளார். சம்பந்தன் ஐயாவை லண்டனுக்கு வர சொன்ன போதும் அவர் விசா இருந்து கொண்டும் வர மறுத்தார். அன்று இவர் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்க ஓத்துழைத்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் நழுவ விட்டு விட்டு மீண்டும் மக்களிடம் ஆணை கேட்டு வந்துள்ளார்கள். என்றார்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.