இயற்கை வளங்களின் நல்லாட்சியும் விவசாயத் துறையின் மீள் எழுச்சியும்



சில வாரங்களின் முன் ஒரு ஞாயிறு மாலை நேரம். குப்பிளான் கிராமத்தில் வாழும் விவசாயப் பெருமக்களில் ஒரு பகுதியினரையும் வடபுலத்தில் இயங்கி வருகின்ற இயற்கைவழி இயக்கத்தினரில் ஒரு பகுதியினரையும் சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது. அவ்விடத்தில் நான் நிறையவே கற்றுக்கொண்டேன். அவற்றை எல்லாம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான்  கோவிட் வைரசு தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சி நெருக்கடியாக மாறியது. அடுத்தடுத்த இருநாட்களும் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டன. நானும் திரும்பப் பயணமாகி விட்டேன். அதேவார இறுதியளவில் நோய் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டம் தவிர்க்கப்பட வேண்டியதாகி விட்டது.  ஊரடங்கு நிலையும் அறிவிக்கப்பட்டது.

அந்நேரத்தில் வயல்களிலும் பண்ணைகளிலும் தேங்கி நிற்கப் போகும் காய்கறி மற்றும் தானிய உணவுப் பொருட்கள் பற்றி எண்ணிப் பார்த்தேன். ஊரடங்கு நிலை முடியும் போது மக்கள் எல்லோரும் சந்தை நோக்கி ஓடப் போகிறார்கள் அதனால் வைரசு நோய் தொற்றும் நிலை மோசமாகலாம் என்பது பற்றியும் அதிகம் யோசித்தேன். மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும். அதற்காக உணவுவகைகளை நேரடியாகவே நுகர்வோர் பெறக்கூடிய வசதிகளை எவ்வாறு சமூக செயற்பாட்டாளர்கள்  ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதை அவர்களிடம் கேட்டிருந்தேன். அவர்களே தொடர்பாளர்களாக இடையில் செயற்பட்டால் உணவுத் தேவை உள்ளோர் தமக்கு முடிந்த வழிகளில் பண்ணைகளுக்கு நேரில் போய் விரும்பியதைப் பெறமுடியும். அத்துடன் மக்கள் பெருங் கூட்டமாக சந்தையில் வந்து நேரடித் தொடர்பு கொள்வதும் தவிர்க்கப்படும் என்றேன்.

ஓரிரு நாட்களினுள் நான் குறிப்பிட்டவையெல்லாம் அங்கு நடக்கத் தொடங்கியுள்ளன என்றும் தொண்டு மனப்பான்மை கொண்டோர், விவசாயத் திணைக்களத்தினர் இம்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்கள். ஊரடங்கு நிலை மேலும் நீண்டு கொண்டு போக வெவ்வேறு இடங்களிலிருந்தும் வணிகர்கள் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டு பண்ணை உற்பத்தியை தாமே நேரில் எடுத்து வந்து நகரப்பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கல் செய்வது பற்றியும் அறிந்து கொண்டேன். ஆறுதல் அடைந்ததோடு மகிழ்ச்சியும் பெற்றேன்.

சிலசமயங்களில், இவ்வாறான நெருக்கடிகள் தான் நல்ல புதிய வாய்ப்புக்களுக்கும் பழையனவற்றை மீளுருவாக்குவதற்கும் காரணமாக அமைகின்றன என்ற உண்மை இவ்விடத்தில் அவதானிக்கப்பட வேண்டியது அல்லவா?

உணவை உற்பத்தி செய்யும் விவசாயி தனது பொருட்களை முடிந்த அளவு நேரடியாக விற்பனைப்படுத்துவதன் மூலம் பொருளுக்கேற்ற விலையைப் பெறுகிறார் வாங்குவோர் அவ் உணவுப்பொருளினது உண்மையான பெறுமதிக்கு ஏற்ற விலையைக் கொடுக்கிறார்கள். இதில் எதைப் புதிய வாய்ப்பாகப் பார்க்கிறோம்? அதைத் தானே காலங்காலமாக எமது மூதாதையர் பின்பற்றினார்கள்? அதைத்தானே உலகெங்கும் பாரம்பரிய முறையில் கமத்தொழில் செய்த விவசாயிகளும் பின்பற்றினார்கள்? அது எப்படி இன்று புதுமையாக உங்களுக்குத் தெரிகிறது என நீங்கள் என்னைக் கேட்கலாம். இவ்விடத்தில் தான் நான் மீளவும் குப்பிளான் சந்திப்பில் நடந்த உரையாடலுக்குச் செல்கிறேன்.

மார்ச் மாதம் 15ஆம் தேதி குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தினர் அச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். என்னை அழைத்ததோடு நிற்காமல் எனது ஆர்வத்தையும் எமது தேவையையும் ஒன்றிணைத்து பொருத்தமான தலைப்பு ஒன்றினையும் தெரிவு செய்திருந்தார்கள். எல்லாமாக 25 பேர் கலந்து கொண்டனர். எனது சிறுவயதில் என்னூர் ஆதாரப் பள்ளியில் எனக்கு கற்பித்த ஆசிரியை விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி குப்பிளானைச் சேர்ந்தவர். அதனைவிட வேறெதுவும் அவ்வூர் பற்றித் தெரியாதவனாக அங்கு சென்றேன். 

கூட்டம் துவங்க முதல் சனசமூகநிலையத்துடன் இணைந்த நிலப்பரப்பையும் அண்டிய கன்னிமார் ஆலயத்தின் வரலாற்றையும் தெரிந்து கொண்டது சிறப்பான அறிமுகமாக அமைந்தது. முற்றிலும் விவசாயத்துடன் இணைந்த ஒரு சாதாரண கிராமமாக இருந்த அவ்வூர் பின்னர் யுத்தத்தின் போது அடங்கிப் போனது. ஊர்வாசிகளில் ஒருபகுதியினர் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இன்று புதிய மினுமினுப்புடன் மீளவும் ஒரு நவீன பணப்பயிர் (cash crops) செய்கைக்கான வகையில் அது உருமாற்றம் பெற்றிருப்பதும் தெளிவாகியது.

நிகழ்வுக்கு வந்திருந்த ஊரவர் அனைவரும் விவசாயத்தில் ஏதோ ஒருவகையில் ஈடுபடுவோராக இருந்தது சிறப்பு. சனசமூக நிலையத்தை நிர்வகிப்போர் இருந்தனர். வந்தோரை நிறைகுடம் வைத்து வரவேற்கவும் சிற்றுண்டி தந்து உபசரிக்கவுமென பள்ளி செல்லும் சிறுமியர் உட்பட ஓர் இளையவர் குழாமே இருந்தது. தாய்மார் இருந்தனர். குரக்கன் சாமை தானியங்களை நெடுங்காலமாகச் சிறப்புப் பயிர்களாகச் செய்து வரும் லலிதா அம்மா இருந்தார். ஆரோக்கிய உணவகம் மூலம் இலைக்கஞ்சியை ஊரறிந்த உணவாக அறிமுகம் செய்து வரும் அல்லை விவசாயி கிரிசன் எமக்கென சூடான கஞ்சிப் பாத்திரத்தோடு வந்திருந்தார். தாராப் பண்ணை புகழ் செல்வி ஸ்ராலினி கலந்து கொண்டார். இயற்கை வழி விவசாய உற்பத்திப் பொருட்களையும் பாரம்பரியம் மிக்க பண்டங்களையும் உணவாய்ப் பதனிட்டு விலைப்படுத்திப் பெயர் பெற்ற ஊக்கமுள்ள விவசாயி செம்புலம் மூர்த்தி அவர்களும் இருந்தார்.

வந்திருந்த அனைவரையும் உரையாடலில் இணைக்கும் வகையில் இளையோர் ஒரு வட்டமாகவும் மிகுதிப்பேர் நான்கு வட்டங்களாகவும் அமர்ந்து விடயங்களைப் பேச இடம் உண்டாக்கிக் கொண்டோம். இந்த வட்டங்களில் வெளிவந்த கருத்துக்களை பின்னர் பெரிய வட்டத்தில் அலசியதோடு பதிவும் செய்து கொண்டோம்.

அத்தனை பரபரப்புடன் உரையாடலில் பங்குபற்றிய சிறுவர் வட்டத்தின் கருத்துக்களை முதலில் உள்வாங்கி அவர்களின் ஆர்வம்மிக்க ஈடுபாட்டுக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகியது. தங்கள் உணவுத் தேவைகளை ஊருக்குள்ளேயே நிரப்பவல்ல வளமும் செழிப்பும் மிக்க தமது ஊரின் விவசாயச் சிறப்பைக் அவர்கள் குறிப்பிட்டார்கள். குப்பிளான் கிராமத்தின் கல்விப் பாரம்பரியத்தையும், கலை, பண்பாட்டு அம்சங்களுடன் பண்டைய கால விழாக்களையும், விளையாட்டுக்களையும் பேணும் மரபையும், அதற்காக இயங்கும் பல்வேறு சமூகக் கட்டமைப்புக்களையும் கழகங்களையும் கொண்டுள்ள தம்மூரின் பெருமை பேசி அமர்ந்தார்கள்.

அங்கு கொரோனா வைரசு கொண்டுவரவிருக்கும் இடர் பற்றியோ நீண்டுகொண்டே போகவிருந்த ஊரடங்குநிலை பற்றியோ யாரும் எண்ணவுமில்லை. அவ்விடயம் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவுமில்லை. அது பற்றிக் கடைசியில் எழுதுகிறேன். இப்போதைக்கு உரையாடலுக்கு மீளவும் வருகிறேன்.

மூத்தோரிடையே குப்பிளான் ஊரின் விவசாயத்தின் சிறப்பு என்ன என்பதைக் கணிக்க முற்பட்டேன். ஊரோடு சேர்ந்த வளம் மிக்க மண். 30 அடி ஆழத்திலேயே பெறக்கூடியதான நிலத்தடி நீர் வளம். அவ்வளங்களை திரட்டிக் காலங்காலமாகச் செய்யப்பட்ட பயிர்ச்செய்கையும் கால்நடை வளர்ப்பும் ஒன்றிணைக்கப்பட்ட விவசாயம். பின்னர் வெங்காயம், மிளகாய், கரட், பீற்றூட், உருளைக் கிழங்கு, புகையிலை என்பவை பணப்பயிர்களாக முன்னேற்றம் பெற்றமை. ஊரின் மக்களிடையே படித்த இளைஞரும், அரச தொழில் செய்தோரும்கூட பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கவையாயின. 

அண்மைக் காலத்தில் பயிர்ச்செய்கையின் அளவும் தீவிரமும் அதிகரித்திருப்பது உண்மையென்றால் செயற்கை உரங்களின் வருகை அதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அதன் பெறுபேறாக கால்நடை வளர்ப்பு குறைவடைந்துள்ளது. அதுபோலவே பணப்பயிர்கள் முன்னுரிமை பெற்றுள்ளன. குரக்கன், சாமை போன்ற பாரம்பரிய சிறு தானியங்கள் பயிர்செய்வது குறைவடைந்துள்ளது. இவை கண்கூடாகத் தெரிந்தன. இவற்றோடு சேர்த்துத்தான் இன்று இத்தகைய உற்பத்தியின் விலை சரிவடைவதும், விற்பனையில் சிரமம் ஏற்படுதலும் கூடவே அவதானிக்கப்படுகின்றன.  



இனிவரும் பத்து ஆண்டுகளில் குப்பிளான் விவசாயிகளும் அவர்களது விவசாயமும் எதிர்கொள்ளவுள்ள அச்சுறுத்தல்கள் எவையாயிருக்கும் என வினாவினேன். இயற்கை தரவிருக்கும் கால நிலை மாற்றம், நிலத்தடி நீர் பற்றாக்குறை என்பன பரந்த சூழலியல் அம்சங்களாக தெரிவிக்கப்பட்டன. தொடரும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், அதனால் ஏற்படுத்தக்கூடிய வேலைக்கான ஆள் பற்றாக்குறை, கூலி செலவு அதிகரிப்பு என்பன மனித வளம் சார்ந்த சவால்களாக பட்டியலிடப்பட்டன.  சந்தைப்படுத்தலின் போது இன்று காணப்படும் பத்துக்கு ஒன்று கழிவு என்ற நடைமுறையும் அச்சுறுத்தலாக முன்வைக்கப்பட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பகுதி நிலப்பரப்பின் அதியுயர் வளமான செம்மண் பிரதேசம், குறிப்பாகப் பயிர் நிலங்கள் குடிமனையாதலும், அபிவிருத்தி என்ற பெயரில் நிகழவுள்ள நகரமயமாதலும், இறக்குமதிகளின் வருகையும், சரியான திட்டமிடல், கொள்கை வகுப்பு இல்லாத நிலையில், குப்பிளான் போன்ற கிராமங்களது விவசாயத்தின் சிறப்பம்சங்கள் மழுங்கடிக்கப்படும் என்பதை வந்திருந்தோர் நன்கு தெரிந்து குறிப்பிட்டிருந்தார்கள்.

அலையாக வந்த ஒரு பெரு விவசாயப் புரட்சியின் வரலாற்றையே பதிவாக்கும் வகையில் அமைந்த இவ் உரையாடல் எதனை வெளிப்படுத்துகிறது? இத்தனை தெளிவாக நாம் எடுத்துசொல்லக் கூடிய வகையில் எமக்குத் தெரிந்த எமதூரின் வரலாற்றையும், நாமே ஏற்படுத்திய இம் மாற்றத்துக்கு உந்துதலாக அமைந்த புறச் சூழற் காரணிகளையும் மீளத் திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்படியே தொடர்ந்தால் எம் சமூகத்தையும், எமது நிலபுலங்கள், நீர் வளங்களையும் இந்தப்பாதை எங்கே இட்டுச் செல்லக் கூடும்? இது பற்றி எமது அக்கறை எவ்வளவு? இவ் விடயங்கள் பற்றிக் கூடிப் பேசியிருக்கிறோமா? பெருமளவில் இல்லை என்பது தான் எல்லாவற்றுக்கும் பதிலாகிறது.

இங்கு பேசப்பட்டவை குப்பிளான் என்ற ஒரு ஊரின் கதை மட்டுமா அல்லது இங்குள்ள ஓராயிரம் ஊர்களின் கதையா? என்று என்னைக் கேட்டீர்களானால் இங்கு மட்டுமல்ல, இந்திய தேசத்தில் உள்ள ஆறரை இலட்சம் கிராமங்களில், ஏன் உலகளாவிய வகையில் உள்ள 25 இலட்சம் கிராமங்களில் இது தான் கதை. தங்களது விவசாயத் துறையினை நவீனமயமாக்கவும், அதனை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்கவும் வெளிக்கிட்ட அத்தனை நாடுகளின் ஊர்களிலும் இதே தான் நடந்து வருகிறது என்று தான் நான் சொல்வேன். இதே கேள்விகள் தான் அங்கெல்லாம் கூட கேள்விகளாக உள்ளன.

இப் பதிவின் துவக்கத்தில் புதிய வாய்ப்புகள், புதுமையான விற்பனை முயற்சிகள் பற்றி எழுதிய இடத்துக்கு இப்போது திரும்பிப் போகலாம்.

ஒரு விவசாயக் கிராமத்தில் நடந்தேறிய உரையாடல் தந்த பாடங்களையும், அது போன்ற மற்றைய கிராமிய, சமூக சூழ்நிலைகளில் இனி நடக்க வேண்டியவையாக, நடக்கும் சாத்தியம் உள்ளவையாக நான் காண்பவற்றை இவ்விடத்தில் பதிவு செய்வதோடு ஒரு சிலவற்றை மேலும் அலசிப்பார்ப்பது தான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் இன்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியினைப் பார்த்தால், இது நாம் ஆரம்பத்தில் எண்ணிக் கொண்டது போல எல்லாவற்றையும் போன்ற ஒரு காய்ச்சல் மட்டுமல்ல. மாறாக, இதை எழுதுகின்ற எனக்கும், வாசிக்கும் உங்களுக்கும், முழு மானிட இனத்தின் இருப்புக்குமே அச்சுறுத்தலாக வந்துவிட்ட ஓர் உலகளாவிய தொற்றுநோயாக (pandemic ) உருவெடுத்துள்ளது. எவருமே எதிர்பார்த்திருக்காத வகையில் எமது வாழ்க்கைமுறை, பொருண்மியம், எமக்கான எதிர்காலத் திட்டங்களாக நாம் எண்ணி வைத்திருக்கும் எல்லாவற்றையுமே பெருமளவில் உலைத்துத் தான் நிற்கப்போகின்றது என்பதும் தெளிவாகி வருகிறது.

இந்த நோய்க்கான வைரசின் வீரியம் தணிந்து, அதன் அச்சுறுத்தலும் தாக்கமும் அகன்று போகவும், அதே வேளையில் அதற்கான தடுப்பு மருந்து (vaccine) எல்லோருக்கும் கிடைக்கவும் எடுக்கப் போகும் காலம் மாதங்கள் பலவாகலாம். அதுவரை நாம் நடமாட்டத்தைக் குறைத்தும், வெளியே உலவும் போது நெருக்கமாகப் போகாமலும், பாதுகாப்போடு நம் ஒவ்வொருவருக்கும் இடையே குறிப்பிட்ட அளவு  தூரத்தைக் கையாண்டும் தான் இச் சிக்கலில் இருந்து மீள முடியும் என்று உலகளாவிய வகையில் கடந்த நான்கு மாத காலமாகத் திரட்டிய அனுபவமும்  நோயியல் அறிவும் தெரிவிக்கின்றன.    

இப்படியானவொரு சூழ்நிலையில் எம் ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை உணவு ஏதோ ஒருவகையில் எமக்குக்  கிடைத்தாக வேண்டும். அவ்வுணவை நாம் உற்பத்தி செய்பவர்களாக இல்லையென்றால் வேறு யாரோ அப்பொருட்களை, பயிரென்றால் விளைவித்தும், கால்நடையென்றால் அவற்றைப் பராமரித்தும் எமக்கு கிடைக்கப் பண்ண வேண்டும். அந்த விவசாயப்  பெருமக்களுக்கும் நுகர்வோராகிய எங்களுக்கும் இடையே ஓடித் திரிந்து அவற்றை எமக்கு கொண்டு வந்து சேர்க்கும் வியாபாரிகள், கடைக்காரர், சமூக ஆர்வலர்கள், தொண்டமைப்புக்கள் உள்ளடங்கிய ஒரு மூன்றாம் பகுதி அங்கு இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் சரியாக ஒழுங்கமைக்கவும், அறிவுரை வழங்கவும், விதிகள் வகுத்து மேற்பார்வை செய்யவும் நியமிக்கப்பட்டுள்ள விவசாயத் திணைக்களம் உட்பட்ட  அரச அமைப்புக்கள் நான்காவது பகுதியாக இருக்க வேண்டும். இந்த நான்கு பிரிவினரும் உணவுத் தொகுதியில் அடங்குகிறார்கள் அல்லவா?

இத்தனை பேரும் ஒருமுகமாக ஊரடங்குக் காலத்தின் போது  தாமாக முன்வந்து உழைத்ததனால் தான் ஏதோ ஒரு வகையில் ஓரளவுக்கேனும் இந்த நெருக்கடி நிலை கையாளப்பட்டுள்ளது தெளிவு. இதன்போது உள்ளூர் மட்டத்தில் கண்டும் கேட்டும் பட்டறிந்தும் பெற்ற பாடங்கள், அதைவிட யுத்த காலம் தந்த அனுபவங்கள், ஒப்பீடாக இன்று எமது கையிலுள்ள புதிய தொழில் நுட்பக்கருவிகள், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தந்த நன்மைகள் எல்லாவற்றையும் இப்போதே ஓரளவுக்கேனும் ஒன்று திரட்டிப் பார்க்க வேண்டிய தேவையும் வெளிப்படுகிறது. இயற்கைவழி இயக்கம், சிறகுகள் போன்ற ஒரு சில வட்டங்கள் அதில் ஒருபகுதியை ஏற்கெனவே செய்து வருகிறார்கள். பொறுப்புமிக்க இளையோர், அரச பணியாளர்கள் பலரும் அக்கறையுடன் ஊரடங்கு காலத்தில் வேலைசெய்து வரும் செய்தி உற்சாகம் தருகின்றது.  

தொடரும் நெருக்கடி நிலையை இனியும் சமாளிப்பதற்கு இந்தப் பாடங்களும், அவை பற்றிய சமூக மட்டத்திலான அக்கறை, புதிய விழிப்புணர்வு, நெடுங்காலப் பார்வை, பொறுப்புணர்வு, அறம்  மிக்க நடத்தை என்பனவும் அடிப்படையானவை. விவசாய நிலங்களும் அவற்றுடன் இணைந்த இயற்கை வளங்களும் எவ்வாறு சிதையாமல் பேணப்பட வேண்டுமோ, அதையும் விடக் கூடிய அக்கறையோடு அந்நிலங்களைப்  பண்படுத்திப் பயிர் செய்யும் விவசாயிகள் இக்கொடிய நோயில் சிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டியதும் இந்நேரத்தில் அவசியமானது.

நீண்டுகொண்டே போய்விட்ட உணவு வழங்கல் சங்கிலி (supply chain) அவசியமற்றது என்பதும், அநியாய விலைக்குத் தான் அது வழிவகுக்கிறது என்பதும் உணவுத் தற்சார்பு என்ற தலைப்பின் கீழ் இந்நேரத்தில் அதிகம் பேசப்படுவதை இப்போது கண்டுள்ளோம். அந்தத் தெளிவு நிலைத்து நிற்குமேயானால் ஒவ்வொரு மாகாணத்திலும் விவசாயிகள் நீதியான விலையையும் நியாயமான வருமானத்தையும் பெறுவார்கள். நஞ்சற்ற பயிர்களையும் ஆரோக்கியமான உணவுப் பண்டங்களையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்து தருவார்கள். ஒருபகுதித் தேவையை வீட்டுத் தோட்டங்களும் நிரப்பிக் கொள்ளும். பெரும் வணிகம் அன்றாட உணவு விநியோகத்தில் வரவும் தேவையில்லை என்பதை ஊரடங்குக்  காலம் நிரூபித்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால், கோப்பாயில் விளையும் காய்கறிகள் பல கைகள் மாறி தம்புள்ளை வரை ஏற்றிச் செல்லப்பட்டு, அங்கு விலைகூறி விற்கப்பட்டபின் அதில் ஒருபகுதி மீண்டும் வண்டியிலேறி சுன்னாகம் சந்தைக்கு வருவது உண்மை என்றால் அதன் நியாயத் தன்மை தான் என்ன? அல்லது முல்லைத்தீவில் மேயும் பசுக்களின் பால், அதுவும் 87 சதவிகிதம் நீர்ப்பதன் இயல்பாகக் கொண்ட பசுப்பால், நீண்ட தாங்கியில் பயணம் செய்து அங்கு நீர் நீக்கி உலர்த்தப்பட்டபின் பால்மாவாக வடக்கு நோக்கி வருவதன் விண்ணாணம் தான் என்ன? அதிகம் கேட்கப்படாத இக்கேள்விகளும், இவ்வகை முரண்பாடுமிக்க உணவுத் தொகுதியினை வளர்த்தெடுத்த பொருண்மிய சந்தைப்படுத்தல் கோட்பாடுகளும் அதிகம் பேசப்படுவதற்கு கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய நெருக்கடி இங்கு வாய்ப்பளித்துள்ளது தெரிகிறது.

எமது உரையாடலின் இறுதியில் அன்று குப்பிளானில் முன்வைக்கப் பட்ட பிரச்சனைகளான கூலிச் செலவு, சந்தையின் நெருக்கடி, அதனால் ஏற்படும் விலைச் சரிவு, உற்பத்தி முயற்சிக்கும் பொருளின்  பெறுமதிக்கும் (value) பொருத்தமான விலை எமக்குக் கிடைக்காமை, கூட்டுறவு காலத்தில் எமக்கிருந்த பலமும் எம் குரலுக்கிருந்த வலிமையையும் அற்றுப் போனமை எல்லாமே பண்ணைக்கு வெளியே நிகழும் நடைமுறைகள் சார்ந்தவை. பாரம்பரியப் பயிர்வகைகளுடனும் அவரவர் பண்பாட்டுடனும் ஒன்றிணைந்த தற்சார்பும் (self reliance) தன்னிறைவும் (self sufficiency) மிக்க ஒரு கிராமிய பொருளாதாரத்தின் அச்சாக இருந்த வேளாண் தொழில் புது யுகத்தில் ஒரு ஆலைத்தொழில் (industrialisation) சிந்தனைக்குள் புகுத்தப்பட்டதன் விளைவாக இம்மாற்றங்களைப் பார்க்கலாம்.



அப்பாதையில் விவசாய உற்பத்தி பெருக்கப்படத்தான் வேண்டுமென்பதில் ஐயம் ஒருபோதும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. ஆனால் அந்தப் பெருக்கத்தை அடைய என்ன விலை கொடுத்தாக வேண்டும்? கண்ணை விற்று கைலாய தரிசனம் தேடுவதா என்பதுதான் இவ்விடத்தில் கேள்வி.  

மேற்கு நாடுகளில் விவசாயத்தை ஆலைத்தொழில்மயப்படுத்தும் பாதையில் பயணித்து நெடுந்தூரம் போனவர்களில் ஒரு பகுதியினர், அதன் பாரதூரமான விளைவுகளைக் கண்டு, அவற்றைத் தவிர்க்கவென மீண்டும் இயற்கை வழி வேளாண்மையைக் கையில் எடுக்கத் தலைப்பட்டு இன்று அரை நூற்றாண்டு ஆகிறது. மண்ணில் வாழ்ந்து பயிர்நிலத்தைப் பண்படுத்தும் மண்புழுக்கள், உக்க வைக்கும் பூச்சியினங்கள் தவிர, எம் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இரசாயன உரங்களால் அழிக்கப்படுவதை அறிந்து 'வாழும் மண்' என நூல் எழுதிய ஆங்கில மூதறிஞர்  Lady Balfour  அம்மையார் இங்கிலாந்தில் சேதன விவசாயம் செய்ய வெளிக்கிட்டு 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே அறிவையும் இயற்கையின் அபூர்வமான தன்மைகளையும்  நேற்றுவரை நன்கறிந்திருந்த எங்கள் ஊர் மக்கள், மண்ணையும் மலடாக்கி மக்களுக்கும் நஞ்சூட்டும் அளவுக்கு இரசாயனப் பதார்த்தங்களுக்கு எவ்வாறு இன்று பழக்கப்பட்டார்கள், அடிமையாகினார்கள் என்பது சிந்தனைக்குரியது.

ஆனாலும் இவ் விடயத்தில் நாங்கள் ஒன்றும் தனித்தவர்கள் இல்லை என்று ஏற்கெனவே சொல்லிவிடடேன். வளம் குறைந்த நாடுகளில் நிலவிய வறுமை போக்கவும், இந்தியா, இலங்கை போன்று தானிய உற்பத்தியில் தன்னிறைவு இன்றி தத்தளித்த நாடுகளுக்கு உதவவும் என்ற பரந்த நோக்குடன் தரமான ஆய்வுகளை நிகழ்த்திய தலை சிறந்த விவசாயத் துறை அறிஞர்களின் ஆலோசனையுடன் தான் பசுமைப் புரட்சி (Green Revolution) என்ற சீரிய முயற்சி ஐம்பது ஆண்டுகளின் முன் இங்கும் வந்தடைந்தது.

சிக்கல் என்னவென்றால் காலப் போக்கில் சனத் தொகைப் பெருக்கம் ஒருபுறம் தள்ள, நாமும் நவீன உற்பத்திரக விவசாயம் என்ற பெயரில், எம்மக்களது தேவைகளுக்காக ஏதோவொரு அக்கறையோடு செய்து வந்த விவசாய முயற்சியை, காலப்போக்கில் மேலே கூறியதுபோல முகம் தெரியாத யார் யாருக்கோவென, எங்கேயோ அனுப்பவென பெருக்கி வந்திருக்கிறோம். இவற்றை அறிமுகம் செய்த அரசுகளும், அறிவுசார் சமூகமும் இவ்விடயத்தில் தமது பொறுப்புகளைப்  படிப்படியாக நழுவ விட்டதோடு மட்டுமில்லாமல், ‘பயிர் விதை முதல் இரசாயனப் பொருள் வரை விவசாயியின் அத்தனை தேவைகளையும் ஒரே பொட்டலமாக நானே தருகிறேன், நீ வளர்த்து முடிய நானே உன்னிடம் அதை நான் கூறும் விலைக்குப் பெற்றுக் கொள்கிறேன், உனது வாழ்க்கையை இலேசாக்குவது தான் எனது விருப்பம்,  என்னை விட்டால் உனக்கு யார் வரப்போகிறார்கள’; என்னும் அளவுக்கு வணிகம் (Agri business) அந்தப் பொறுப்புக்களை எடுத்து வந்துள்ளது.

உணவு உற்பத்தியைப் பொறுத்த வரையில் உலகமயமாக இயங்கும் பெருவணிக உணவுத் தொகுதி (corporate food  system) ஏற்றுமதிக்கான உற்பத்தி, திறந்த சந்தை, பெரிதாகிக்  கொண்டே வரும் பண்ணைகள் என்ற பாதையில் கொண்டு செலுத்திய நாடுகள் தந்த பாடம் என்ன? விலை வீழ்ச்சி, உணவு பற்றாக்குறை, மண்வளம் சீரழிதல், வருமானம் இழப்பு, பெருங்கடன், நிலத்தை விட்டு வேறு தொழில் தேடுதல், ஏன் தனது சொந்தப் பண்ணையிலேயே தொழிலாளியாகும் இழி நிலை என்ற சோகக்கதைத்தான். இந்திய மண்ணில்  பசுமைப் புரட்சியின் முன்னோடியான பஞ்சாப் மாநிலத்தில், ஓர் அற்புதம் என்று விபரிக்கப்பட்ட நீர்ப் பாசனத்துடனான கோதுமை உற்பத்தியை நிகழ்த்திக் காட்டிய பஞ்சாபிய விவசாயப் பெருமக்களிடையே  இன்று மண்ணையும் நச்சாக்கி, நிலத்தைத் துளைத்தெடுத்த நீரும் வரண்டுபோக, சமூகக் கட்டமைப்பு சீர் குலைந்து கடனாளியாகிய பின் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஏழாயிரம் பேர் என அம்மாநில விவசாயப் பல்கலைக் கழகம் தெரிவிக்கிறது.

வழி தவறிப் போன பசுமைப் புரட்சி பற்றிய இந்தப் பார்வையையும் கையில் எடுத்துக்கொண்டு,  நாம் ஏறியிருந்த இரசாயனக் குதிரையை விட்டு இறங்கவேண்டிய நேரத்தில் குதித்திறங்கத் தெரிந்தவர்களாக எம்மை மாற்றிக்கொண்டு, எம்மையெல்லாம் அக் குதிரையில் ஏற்றிவிட்டு இலாபம் பெற்றவர்களையும் அவதானத்தில் வைத்துக் கொண்டு, இன்று குப்பிளான் உரையாடல் வெளிப்படுத்திய எமது சஞ்சலங்களைத் தாண்டிய ஓர் எதிர்காலத்தைக் கற்பனை பண்ண முடியுமா? 

நாம் கையில் வைத்திருக்கும் பாரம்பரிய அறிவையும், நவீன விஞ்ஞான அறிவையும் ஒருங்கிணைத்து, எமது மண்ணுடன் சேர்ந்த இயற்கை வளங்களைப் பேணுகின்ற அதே நேரத்தில் ஒவ்வொரு பரப்பு நிலத்தினதும் மொத்த விளைச்சல், உற்பத்தி குன்றாத வகையில் விவசாயம் செய்வது சாத்தியமா?

அந்தக் கேள்விகட்குரிய எனது பதில் திடமான ஒரு ‘ஆம், சாத்தியம் தான’ என்பது மட்டுமல்லாமல், நாம் இவ்விடயத்தில் கற்றுக் கொள்வதற்குத் தாராளமாக உதாரணங்கள் உண்டென்றும் சொல்லிக் கொள்வேன். பசுமைப் புரட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, புரட்சியையே பசுமையாக்குவோம் எனத் தமக்கு 1991இல் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் வெளிக்கிட்ட கியூபா நாடு முழுத் தேசத்தையும் இயற்கை வழி விவசாயம் நோக்கி இட்டுச் சென்றது ஒரு உதாரணம்.   IFOAM     என்ற பெயருடன் 50 ஆண்டுகளாக உலக நாடுகளில் எல்லாம்  Organic  Agriculture    எனும் முத்திரையுடன் இயற்கைவழி விவசாயத்தை இயக்கி வளர்க்கும் இந்த பன்னாட்டு முயற்சியும், அவர்களால் மிகத் தெளிவாக வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ள கோட்பாடுகளும் மாற்றுவழி வேளாண்மைக்கு வழிகாட்டும் மற்றுமோர் உதாரணம். கடைசியாக வெளிவந்த புள்ளி விபரங்களின் படி இன்று 180 நாடுகளில் மூன்று மில்லியன் விவசாயிகளால் அண்ணளவாக 70 மில்லியன் ஹெக்டயர் நிலப் பரப்பில் இயற்கை வழி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

மக்களது உடல்நலத்தையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் விட முக்கியமானதாக தனது இலாபத்தை முதலிடத்தில் வைக்கும் விவசாயம் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக இயற்கையோடு இசைவானதாயும், சமூக நீதியை நிலை நாட்டுவதுமான விவசாயமே தெரிவு செய்யப்படவேண்டும் என்கிறார்கள்  Agroecology     என்ற பெயரில் இயங்கும் செயற்பாட்டாளர்கள். விவசாயிகளிடையே உள்ளூர் மட்ட தன்னாட்சி நிலவும்போது  உணவு உற்பத்தி, விலை நிர்ணயித்தல்,  சந்தைப்படுத்தல் சார்ந்த முடிவுகளைத் தாமே எடுக்குமளவுக்கான வாய்ப்புகள் உறுதியாகும். உணவு உற்பத்தி முயற்சியினை இயற்கையுடன் எதிர்த்து நின்று நடத்தும் போராட்டமாகக் கொள்ளாமல் இயற்கையின் அறிவுத் திறனை (nature’s intelligence) உள்வாங்கும் வகையில் நடத்தும்போது, நிலம் நீர் வளங்களைப் பேணுவதான நல்லாட்சியும், பல்வகையான பயிர்களைப்  பயிரிடவல்ல விவசாயத்தின் மீள் எழுச்சியும் நிதர்சனமாகும்.

அத்தகைய கோட்பாடுகளுக்கு உள்ளடங்கிய இயற்கை வழிவிவசாயம் குப்பிளான் கிராமத்தில்  அதிகம் இன்றில்லை என்றாலும், இந்த உரையாடலின் பெறுபேறாகவும் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவும் அது இக்கிராமத்தில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டால், அதுவும் இன்றைய கொரோனா வைரசுத் தொற்றுநோய் நெருக்கடி வெளிப்படுத்தியுள்ள புதிய தேவைகளை நிரப்பும் வகையில் புத்தம் புது நேரடி விற்பனைக்கும் வழி செய்து கொடுத்தால் எமது முதல் சந்திப்பின் தலைப்பும் பொருள் நிறைந்ததாய் அமையும். 

மேற்கூறியவாறு குப்பிளான் முன்னுதாரணமாக விளங்கும்போது செம்புலம் எங்கும் இயற்கை வழியில் விவசாயம் மீள் எழுச்சி பெறும். சிறப்பு மிக்க செம்மண் கிராமங்கள் பல சிதைவுறாமல் காப்பாற்றப்படும். சீர் சேர்க்கவல்ல சிவப்பு மண்ணை சீமெந்தால் மூடிவிடும் சிற்றறிவு நீங்கிப் போகும். அனைவருக்குமான தற்சார்பு உணவு வழங்கல் தானாகவே வந்தடையும். அதுவே நேர்த்தியான விவசாயத்தோடு நிலைபேறான சமூகத்தையும் தக்கவைக்கும் என்பதை அன்றைய உரையாடல் மீளவும் எனக்கு உணர்த்தி நிற்கிறது.

பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா- 

நிமிர்வு 

வைகாசி- ஆனி - 2020 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.