ஏன் "அவளுக்கு ஒரு வாக்கு"?



இலங்கை நாடாளுமன்றத்திற்கான 2020 தேர்தலில் பலமான போட்டிகளை நாம் தேர்தல் களத்தில் அவதானிக்க முடிகிறது. கட்சிகளுக்கு இடையேயான மோதுகைகள், தனிநபர்கள் மீதான விமர்சன விவாதங்கள் என பரபரத்துக் கொண்டிருக்கிறது. இது பெரும்பாலும் ஆணாதிக்க மையமான அரசியலாகவே வெளிப்படுகிறது. அதனாற் தான் இந்த அரசியலில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாய சூழலும் ஏற்பட்டுள்ளது. 

அந்த மாற்றத்துக்கான ஓர் ஊடகம் தான் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம். பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது சாதாரண பெண்களால் முடியாத காரியம் என்றும் பெண்கள் வேறு, அரசியல் வேறு என பிரித்தாளுகின்ற ஆணாதிக்க சூழலும் பெண்களின் ஆளுமைகளுக்கு சந்தர்ப்பம் வழங்க மறுக்கின்றன.  



ஒரு தேசத்தின் விடுதலை என்ற வகையில் பெண்களும் ஓர் அங்கம் என்ற நிலை உணரப்பட்டமை வரவேற்கத்தக்கது. முழுமையாக இடைவெளி நிரப்பப்படாத போதும் இடைவெளியை நிரப்புவதற்கான முயற்சி அவசியமானது. அந்த வகையில் இந்தத் தேர்தலில் ஏன் பெண்கள் பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதனை உணர வேண்டியதும் உணர்த்த வேண்டியதும் அவசியமாகின்றது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கணிசமான அளவில் பெண்கள் பங்குபற்றத் தொடங்கினார்கள். அவர்களைக் கூட வேட்புமனு தாக்கலின் இறுதிக் கட்ட நிலையில் சட்டத்தின் கட்டாயத்தில் "கறிக்கு கறிவேப்பிலை" போன்று பயன்படுத்தினார்கள். ஆயினும் சமூகத்தின் ஒத்துழைப்பு சில பெண்களையாவது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய உதவியது.



2020 நாடளுமன்றத் தேர்தலிலும் யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வாசுகி சுதாகர், அ. ஞானகுணேஸ்வரி, ரெஜினா என்பவர்களும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருமதி சசிகலாவும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அனந்தியும் ஏனைய வேறு கட்சிகளிலும்  சில பெண்களும் வேட்பாளர்களாக களத்தில் இறங்கியுள்ளனர்.



ஒரு சமூகமாக நாம் வலிகளைச் சுமந்தவர்கள். வலிகளோடு போராடிக் கொண்டிருப்பவர்கள். எமக்கென சரியான அரசியல் தலைமையுடன் ஒழுக்கத்துடனும் கட்டுக் கோப்புடனும் வாழ்ந்த சமூகம் நாம். இன்று சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு சரியான வழிகாட்டல் தலைமைத்துவம் அற்ற நிலையில் வாழ்கின்றோம். குறிப்பாக எமது பெண்களுக்கு என்று பல சொல்லவொண்ணா துயராக அடிப்படைப் பிரச்சினைகள் பல உள்ளன.

“எமது சமூகத்திற்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் பெண்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பெண்களால் தான் அதனை உணர முடியும். ஆண்களுக்கு பெண்களின் மனநிலை சரியாக உணரத் தெரிவதில்லை. தம்மையும் தமது கதிரைகளை பாதுகாக்கவுமே ஆணாதிக்க அரசியல் நடத்துகின்றனர். எனவே எமது பிரச்சினைகளை தீர்க்க பெண்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க பெண்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்” என்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும் பெண் வேட்பாளருமான வாசுகி.

மேலும் அதே கட்சியையில் வன்னி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த ரெஜினா குறிப்பிடுகையில், “வன்னிப் பிரதேசம் என்பது மிகப் பரந்தது. போர்க்காலச் சூழலில் இருந்து இப்போது வரை நாமும் எமது பெண்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். குறிப்பாக ஒரு நேர சாப்பாட்டுக்கே கையேந்தும் பல குடும்ப பெண்களை நாம் சந்திக்க முடிகின்றது” என்று தெரிவித்தார்.



“பொருளாதாரம் இன்மை, சுயதொழில் வசதி இன்மை, போசாக்கு இன்மை, அடிப்படை சுகாதார வசதி இன்மை, கல்வி வசதி இன்மை, போக்குவரத்து வசதி இன்மை, தங்குமிட வீடு கூட சரியான பாதுகாப்பற்ற நிலை. இவைகளுக்கும் மேலாக சுகாதாரமான மலசலகூடம் இன்றிய நிலை, தண்ணீர் பிரச்சினை என பல்வேறு அவலங்களை பல்வேறு இடங்களில் முகங்கொள்ள வேண்டி இருக்கிறது. கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்பட்டும் என்று போரின் இழப்புக்களால் பெருமளவான பெண்கள் பெண் தலைமைத்துவக்  குடும்பங்களாகவே உள்ளன. இவர்களுக்கான சரியான நீண்டகால சுயதொழில் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் நிரந்தரமாகவே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டுமாயின் எமது வலிகளை நாமே வெளிப்படுத்தவும் அவற்றை நிவர்த்திக்கவும் அதிகாரங்களைப் பெற வேண்டும். அந்த அதிகாரத்துவமே பெண் பிரதிநிதித்துவம். அந்த வகையில் தான் நான் போட்டியிட முன் வந்தேன்” என்றார்.

பெரும்பாலும் இங்கு போட்டியிடுகின்ற ஒவ்வொரு பெண் வேட்பாளர்களும் தமது கட்சிக் கொள்கைகளுடன் பயணிக்கும் அதேவேளை பெண்களின் குரலாகவே பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களது அரசியல் பிரவேசம் வெற்றி பெறவும் பெண்களுக்கான பிரதிநித்துவம் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும் என்ற வகையில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வலுவூட்டல் விழிப்புணர்வு செயற்பாடுகளை செய்து வருகின்றது. 



இது குறித்து ஒன்றியத் தலைவி மகாலட்சுமி குறிப்பிடுகையில், “அரசியல் மற்றும் பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பெண்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்களை சமூகத்தில் துணிந்து செயற்பட எமது சமூகத்தில் வேரூன்றியுள்ள ஆணாதிக்க மனோபாவம் அவர்களை மிரட்டுகின்றது. இது அவர்களின் உள்மன சிந்தனைகளிலும் புறநிலை சூழலிலும் நடக்கிறது. குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட கௌரவத்தினை பாதிக்கும் வகையில் அவதூறாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் புறநிலையாக முன்வைக்கப்படுகின்றன. அது அவர்களின் அகநிலையைப் பாதிக்கின்றது.  கற்ற சமூகத்தில் உள்ள பெண்கள் கூட இந்த மனோபாவத்துக்கு பலியாகும் போது  சாதாரண பெண்களை எப்படி நாம் புரிதலுக்கு உட்படுத்த முடியும். அந்தவகையில் சமூக விழிப்புணர்வுகளை நாம் பல்வேறு ஊடகங்களூடாக ஏற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். 

இத்தேர்தலில் பல பெண்கள் போட்டியிடாமல் வெளியே நிற்பதற்கு அதுவும் காரணமாக உள்ளன.மேலும் நாம் எமது ஒன்றியத்தின் ஊடாக எமது வலையமைப்புடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். கட்சி என்கிற பிரிவினைக்கு அப்பால் "அவளுக்கு ஒரு வாக்கு" என்ற கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம். 



எந்தக் கட்சி என்பதல்ல முக்கியம். இங்கு நீங்கள் யாருக்கு வாக்கு என்று தீர்மானிக்கும் செயற்பாட்டில்ஒரு பெண்ணுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற சிந்தனையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கை.அந்த வகையில் இந்த கொரோனா அச்சுறுத்தற் சூழலிலும் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் பல்வேறு அனுமதிகளையும் பெற்று இந்த செயற்திட்டத்தினை நாடகங்கள் ஊடாக வெளிப்படுத்தி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்” என்றார்.

இந்த விழிப்புணர்வுப் பயணத்தில் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் ஊடக பெண்கள் குழுவும் இணைந்து பயணித்து வருகின்றது. பெண்களாகிய நாம் எமக்கான அங்கீகாரம், அதிகாரத்துவ உரிமை ஆகியவற்றுக்காக எமக்கான கொள்கையினை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஏமாற்றுக் கட்சிகளின் காலில் சிக்காமல் எமக்கான பெண் பிரதிநிதியை தெரிவு செய்ய பங்களிப்போம் என்று உறுதி கொள்வோமாக.  

தர்மினி பத்மநாதன்-

நிமிர்வு ஆடி 2020 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.