சீனாவுக்கு என்ன தான் வேண்டும்?

 


அமெரிக்காவுக்கு நிகரான ஒரு சக்தி, சீனா. அது பல ஆசிய நாடுகளுடன், ஏதாவது ஒரு வகையில் மோதி வருகிறது. மேற்கே இருக்கும் இந்தியா, திபெத் (Tibet) முதல், அதன் கிழக்கே மற்றும் தெற்கே இருக்கும் சீன கடல் வரை, தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதற்கான காரணம் என்ன? சீனாவின் நோக்கம் தான் என்ன? இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சீனா ஒரு பெரிய நாடு. பொருளாதாரத்திலும், நிலபரப்பிலும் பெரிய நாடு. 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். 96 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. நிலப்பரப்பில் அமெரிக்காவை விட சீனா பெரியது.  அமெரிக்காவை எல்லா விதத்திலும் முந்த வேண்டும் என்று மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது.  இந்த அளவுக்கு கடுமையான முயற்சியை பார்க்கும் போது, இந்தியா உட்பட, பல ஆசிய நாடுகளுக்கு ஒரு பயம் உண்டாவது உண்மைதான். 

இமயமலை முதல் தென் சீனக்கடல் வரை தனக்கு சொந்தம் இல்லாத இடங்களை சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சீனா.ஆசியாவில் மிகப்பெரிய ஒரு சக்தியாக மாறினால் அமெரிக்காவை எல்லா விதத்திலும் முந்தி விடலாம். அதற்காக தான் மேற்கில் நிலத்தையும், கிழக்கில் கடலையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 

17ம் நூற்றாண்டில் கிங் டினஸ்டி (Qing dynasty) மன்னர்கள் சீனாவை ஆண்டு வந்தனர். அப்போது இருந்த வரைபடத்தின்படி திபெத், தாய்வான், ஹாங்காங், மங்கோலியா, இவை அனைத்தும் இந்த சீன மன்னர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தன. காலப்போக்கில் இவை அனைத்தும் விடுதலை அல்லது சுய ஆட்சியை பெற்றன. ஆனால், கிங் மன்னர்கள் ஆண்ட பகுதிகள் அனைத்தும் இன்றும் சீனாவுக்கே சொந்தம் என்ற கோட்பாட்டை சீனா பயன்படுத்தி வருகிறது. 



தனது பொருளாதார பலத்தை அதிகரிப்பதற்கு முக்கியமாக 6 இடங்களை ஆக்கிரமிக்க அந்த நாடு  திட்டமிட்டுள்ளது. அவை திபெத்,  இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம், லடாக், தென் சீன கடல், தாய்வான், ஹாங்காங்.

சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையே, ஒரு பெரிய வரலாறு உள்ளது.   13 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, பல காலகட்டங்களில் சீன மன்னர்களும், மங்கோலிய மன்னர்களும் இந்த பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.  ஒரு சில நேரங்களில் வெவ்வேறு சிற்றரசர்களும் திபெத்தை ஒரு தனி நாடாகவும் ஆண்டனர். 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் கூட ஆங்கிலேயர்கள் திபெத்தை ஆட்சி செய்தனர். அந்த ஆட்சியில் இருந்து விடுதலை வாங்கியது திபெத். அடுத்து, 1950 இல், சீனா, திபெத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. சீன மன்னர்கள் ஆண்ட திபெத் தமக்கு சொந்தமானது என்பதை அடிப்படையாக வைத்து, இந்த ஆக்கிரமிப்பு நடந்தது.

அதன் பின்னர் திபெத்தின் ஒரு சில பகுதிகள் சீனாவினுள் உள்வாங்கப்பட்டன. மீதம் இருந்த இடம் சிறப்பு உரிமைகள் கொண்ட, சுய ஆட்சி கொண்ட ஒரு பகுதியாக இருந்து வருகிறது. திபெத்தில் சீன ராணுவம் இருக்கின்றது. திபெத்தின் வெளியுறவுத்துறை விடயங்கள் சீனாவின் வசம் உள்ளது. ஆனால் திபெத் மக்கள் தங்களை திபெத்தியர்கள் என்று தான் கூறுகிறார்கள். சீனர்கள் என்று கூறுவதில்லை. இன்றளவும், அரசியல் ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக, அங்கு அடக்குமுறைகள் நடக்கின்றன. சீனாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கிறது  திபெத்.  

இந்தியா, நேபாளம், பங்களாதேசம் ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து வருகிறது திபெத். இங்கு இருக்கும் இமயமலை ஒரு இய்ற்கையான பாதுகாப்பு அரணாக மட்டும் இல்லாமல், சீனாவிற்கு கேந்திர முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்கின்றது. மேலும், திபெத்தில் நிறைய நன்னீர் வளங்களும் கனிம வளங்களும் உள்ளன. கனிம வளங்கள் இருக்கும் ஒரு இடத்தை சீனா விட்டுக்கொடுக்குமா என்ன?  2000 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதியை முன்னேற்றுவதற்காக, பல முதலீடுகளையும் அந்த நாடு செய்துள்ளது.

அடுத்து, அருணாச்சல் பிரதேசத்தை சீனா ஏன் ஆக்கிரமிக்க நினைக்கிறது என்று பாக்கலாம். இதற்கு ஒரு எளிமையான விளக்கம் தான் உள்ளது. அருணாச்சல் பிரதேசம் திபெத்தின் தென் பகுதி. அதனால் தான் அந்தப் பகுதியும் சீனாவிற்கு சொந்தம் என்று சீனா சொந்தம் கொண்டாடுகிறது. வரலாற்றின்படி இந்த அருணாச்சல் பிரதேசம் இந்தியாவுக்கும் சொந்தமில்லை, சீனாவுக்கும் சொந்தமில்லை.  பழங்குடியின மக்கள் மட்டும் தான் இங்கு சின்ன சின்ன குழுக்களாக வாழ்ந்து வந்தனர். 

1913 – 1914ல், சிம்லா மாநாடு நடந்தது. பிரித்தானியா, சீனா மற்றும் திபெத் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தான் இந்தியா - திபெத் எல்லைக்கோடு இறுதி செய்யப்பட்டது. ஆனால் சீனப்பிரதிநிதிகள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது ஆரம்பித்தது தான் இந்தப் பிரச்சனை. 1950 இல் சீனா திபெத் மீது படையெடுக்கும் போது தலாய்லாமா இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். அப்போது இந்தியா அவரை வரவேற்று திபெத்துக்கு ஆதரவாக செயல்பட்டது சீனாவை கோபப்படுத்தியது. அருணாச்சல் பிரதேசம் மீது சீனாவிற்கு இருக்கும் ஆசைக்கான மற்றும் ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், அங்கு தங்கம் மற்றும் லித்தியம் ஆகிய உலோகங்கள் அதிகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பது தான். ஏற்கனவே இருந்த ஆயிரக்கணக்கான உலக வரைபடங்களை அழித்து, அருணாச்சல் பிரதேசத்தை சீனாவோடு இணைத்து அதற்கு சீனப் பெயர்களும் கொடுத்து வரைபடங்களை வெளியிட்டுள்ளது சீனா.



இந்தியாவும் சீனாவும் மோதிக்கொள்ளும் இன்னொரு பகுதி லடாக். சியாச்சின் பனிப்பாறை லடாக் அருகே கிழக்கு இமயமலை தொடர்ச்சியில் உள்ளது. இங்கு வானிலை மிகவும் மோசமாக இருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவம் இப்பிரதேசத்தினூடாக எளிதில் காஷ்மீருக்குள் நுழைந்து விட முடியும். 

இந்தியாவை மத்திய ஆசியாவிலிருந்து பிரிப்பதுவும், சீனா – பாகிஸ்தான் இந்தப் பகுதியில் இணைவதை தடுப்பதுவும் இந்த சியாச்சின் தான். சியாச்சின் அருகே இருக்கும் ஷேக்ஸ்கம் (Shaksgam) பகுதி பாகிஸ்தானுடையது. ஆனால், 1960 களில் அந்தப் பகுதியை பாகிஸ்தான் சீனாவிடம் கொடுத்தது. ஏற்கனவே காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சைஷின் (Aksai Chin) ஐ ஆக்கிரமித்திருக்கும் சீனாவிற்கு சியாச்சின் வழியாக காஷ்மீர் நுழைவதற்கும் வாய்ப்புள்ளது.



அக்சைஷின் இந்தியாவசம் இருக்கும் போது, சீனா இங்கு ஒரு சாலை போட்டதன் மூலம் தான், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் லடாக்கில் பிரச்சனை ஆரம்பித்தது. சீன மாகாணமான சிங்ஜியாங் (Xinjiang) ஐயும், திபெத்தையும் இணைப்பதற்காகப் போடப்பட்டது தானிந்த சாலை.  இதை பார்த்த இந்தியாவிற்கு கோபம் வர, 1962 வில் இந்தியாவும்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்தது.  இதன் முடிவில், அக்சை ஷின் பகுதியின் 38 ஆயிரம் சதுர கிமீ பகுதி சீனா வசம் சென்றது. அதன் பின், 93 & 96 ல், LAC என்று சொல்லக்கூடிய யதார்த்தமான கட்டுப்பாட்டு எல்லை (line of actual control) போடப்பட்டது. இந்த  LAC தான் லடாக்கில் இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கிறது. அக்சை ஷின் 17,000 அடி உயரத்தில் உள்ளது. 

எதிர்காலத்தில் சீனாவிற்கு பாகிஸ்தானுடனோ, இந்தியாவுடனோ பிரச்சனை ஏற்படும் போது இந்த அக்சை ஷின் சீனாவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டுக்கும் ஏதாவது ஒரு வகையில் சீனாவின் உதவியோ, வர்த்தகமோ, நட்போ தேவைப்படுகிறது. அதனால் தான், எந்த ஒரு பெரிய எதிர்ப்பும் இல்லாமல்ஆசியாவில் பல அத்துமீறல்களை சீனா நடத்திக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்கா அடிக்கடி கண்டனம் தெரிவித்து வந்தாலும் அதை சீனா கண்டுக்கொள்வது இல்லை. 

ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூடதெற்கு சீன கடலுக்கு அமெரிக்கா தனது மிகப் பெரிய போர்க் கப்பலை அனுப்பி பலம் காட்டியது. உண்மையைச் சொல்லப் போனால், தென் சீனக் கடலில் இருக்கும் நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவில் இருப்பது சீனாவின் ஒரு முக்கிய பிரச்சனை.  முறையாக பார்த்தால் சீனாவுடன் சேர்ந்து வியட்நாம், மலேசியா, தாய்வான், புரூனாய், பிலிப்பீன்ஸ்ஆகிய நாடுகள் எல்லாம் தென் சீனக் கடலை சொந்தம் கொண்டாடலாம். உலக வர்த்தகத்தின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் போக்கு வரத்து இந்த வழியாக தான் நடக்கிறது.  உலகின் மீன்பிடித் தொழிலில் 10% இங்கே தான் நடக்கிறது. இந்த பகுதியில் சுமார் 28 பில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெய் இருக்கிறது. இயற்கை எரிவாயுவும் உள்ளது. தென் சீனக் கடலை முழுவதுமாக சீனா ஏன் சொந்தம் கொண்டாடுகிறது என்று இப்போது தெரிகிறதா?



இது ஒரு சிக்கலான பூகோள ஆதிக்கப் போட்டி. ஒரு நாட்டின் எல்லையில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரைக்கும் அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பொருந்தும். அது ஆட்சிப்பரப்புக்கடல் (territorial waters) என்று கூறப்படும். இந்த விதி ஒரு நாட்டுக்கு சொந்தமான எல்லா தீவுகளுக்கும் கூட பொருந்தும். அடுத்து, ஒரு நாட்டினுடைய கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்களுக்குள் இருக்கும் கடல் பகுதி அந்நாட்டின் பொருளாதாரக் கடல் வலயம் (exclusive economic zone) எனப்படும். ஒரு நாட்டின் கடல் வலயத்தில் எந்த நாட்டு கப்பல் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஆனால், அந்த இடத்தில் இருக்கும் மீன்களைப் பிடிக்கக் கூடாது, அங்கே இருக்கும் எண்ணையை எடுக்கக் கூடாது, வேறு எந்த வளங்களையும் எடுக்கக் கூடாது. கடல்வலயத்தில் இருக்கும் வளங்கள் அந்த வலயத்திற்கு சொந்தமான நாட்டுக்கு தான் சொந்தம். சீனாவின் தெற்கிலுள்ள கடல் வரைபடத்தைப் பார்த்தால், சீனா உட்பட பல நாடுகளுக்கு சொந்தமான சின்ன சின்ன தீவுகள் அங்கு சிதறிக் கிடக்கும். இதில் அந்த 12 கடல் மைல் விதியை செயல்படுத்தக் கூட வாய்ப்பு இல்லை. இவ்வளவு அருகில் தீவுகள் இருப்பதால் இங்கு இருக்கும் வளங்கள் உனக்கு சொந்தமா, எனக்கு சொந்தமா என்பது தான் பிரச்சனை. 

ஆனால் சர்வதேச சட்டபடி, இந்த சின்ன சின்ன நிலத் திட்டுகளை தீவுகளாக அங்கீகரிக்க முடியாது என்றும், சீனா இந்த இடங்களை சொந்தம் கொண்டாடுவது தவறு என்றும், வரலாறுப்படி தென் சீனக் கடலில் எந்த தீவையும் சீனா சொந்தம் கொண்டாட முடியாது என்றும், ஹேக் (Hague, Netherlands) இல் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் 2006ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. அதையும் கண்டுக்கொள்ளவில்லை சீனா. மேலும் ஒரு படி சென்று, செயற்கை தீவுகளை உண்டு பண்ணியும், அங்கு தன் படைகளை நிறுத்தியும், தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை பலப்படுத்தி வருகிறது. இந்தக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளுடன், அமெரிக்கா, ராணுவ ஒப்பந்தம் போட்டிருப்பதால் அமெரிக்க கப்பல்கள் அவ்வப்போது இங்கு வலம் வருகின்றன. 

ஆசியான் (The Association of Southeast Asian Nations,ASEAN) என்று ஒரு அமைப்பு உள்ளது. இந்த அமைப்புஒரு சில ஆண்டுகளாக தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பாக சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. 

தாய்வான்:

சீனா-தாய்வான் பிரச்சனையும் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது. 1950 இல் இருந்து, தாய்வான் ஒரு தனி நாடு தான். தாய்வான் மக்களே அவர்களுக்கு என்று ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துஆட்சி செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால், சீனா அதை தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கிறது. தாய்வான், சீனாவினொரு பகுதி என்றும், இன்றில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் மீண்டும் சீனாவுடன் தாய்வான் இணையும் என்பதுவும் சீனாவின் எண்ணம். 17 ஆம் நூற்றாண்டில் தாய்வானும் சீனாவினொரு பகுதியாக இருந்தது. 1895 இல் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் நடந்த முதல் சீனா  ஜப்பானிய போரின் முடிவில், ஜப்பான் வசம் தாய்வான் சென்றது. இரண்டாம் உலகப் போர்க்கு பின்னர்அது மீண்டும் சீனாவிடம் சென்றது. 1946 இல், சீனாவில் சிவில் யுத்தம் ஆரம்பித்தது. அப்போது போரில் தோற்றுக் கொண்டு இருந்த தரப்பினர் தாய்வானுக்கு தப்பித்துச் சென்றனர். தாய்வானை தனி நாடாக அறிவித்தனர்.  அதை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்வானுக்கு பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக, தம்முடன் இராசதந்திர உறவு இருந்தால், தாய்வானுடன் இராசதந்திர உறவு வைக்க தேவை இல்லை என்று சீனா வலியுறுத்தி வருகிறது.ஏனென்றால், தாய்வான் சீனாவின் ஒரு மாகாணம்  என்று ஏற்றுக் கொள்ளுமாறு மற்ற நாடுகளை வற்புறுத்தி வருகிறது. அதனால் தாய்வான் தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்கா தாய்வானுக்கு பல விதங்களில் உதவி வருகிறது.  

சீனாவுக்கு தாய்வானில் முதலீடு செய்ய உரிமை உள்ளது. அதேவேளை தாய்வானுக்கு என்று ஒரு தனி ராணுவமும், அரசியலமைப்புச் சட்டமும் உள்ளன. அமெரிக்காவும் தாய்வானுக்கு ராணுவ உதவி செய்து வருகிறது. அதனால் சர்வதேசத்தில் தாய்வானின் சட்டரீதியான இருப்பு என்ன என்று இன்று வரை ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தாய்வானை தனி நாடாக அறிவித்தால், தென் சீனக் கடலில்அமெரிக்கா தனது கடற்படையை அதிகாரபூர்வமாக நிறுத்த முடியும். அதனாலும் தாய்வானை தன்வசமிழுக்கிறது சீனா.

ஹாங்காங்:

சமீபத்தில் சீனாவால் நிறைவேற்றப்பட்ட ஹாங்காங் பாதுகாப்பு சட்டம் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் பலருக்கு ஹாங்காங்க் என்பது தனி நாடா அல்லது சீனாவின் ஒரு பகுதியா என்ற சந்தேகமே தீர்ந்திருக்கும். 1997ம் ஆண்டில், "ஒரு தேசம், இரண்டு அமைப்பு" என்ற முறையில் ஹாங்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டு, பிரிட்டன் சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைத்தது. அதாவது, சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருக்கும். ஆனால் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை தவிர்த்து சுயாட்சியாக ஹாங்காங் இயங்கும். இதனால், சீனாவில் இல்லாத சுதந்திரத்தை, ஹாங்காங் மக்கள் அனுபவித்தார்கள். ஒரு கொமுயூனிச நாட்டினுள் ஒரு ஜனநாயக மாகாணமாக ஹாங்காங் இருந்தது. ஆனால், தற்போது அந்த பாதுகாப்பு சட்டம் வந்ததுள்ளதால் அந்த நிலை மாறியது. ஹாங்காங்கில் வர்த்தக முக்கியத்துவம் சீனாவுக்கு அவசியமானதொன்று. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஹாங்காங்கை சீனமயப்படுத்தி வருகிறது சீனா.   ஆசியாவில் சீனா செய்து வரும் அத்துமீறல்களும், அதற்கான காரணங்களும், இவையே.

  

நிஷா சேகர்

பாதுகாப்பு, சர்வதேச விவகார செய்தியாளர்  

நிமிர்வு  - (2020 ஆவணி - புரட்டாதி இதழ்)

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.