இடப்பெயர்வின் போதான வலியும் மீள்குடியேறலின் பின்னரான ஏக்கமும் (Video)
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட தையிட்டி வள்ளுவர்புரம் கிராமமக்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீளக் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு முகாம்கள், நண்பர்கள், உறவுகளின் வீடுகள் என அலைந்து பொருளாதார உதவிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடம் திரும்பிய நிலையிலும் சரியான வாழ்வாதார உதவிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.
அருகில் உள்ள பலாலி மேற்கு உள்ளிட்ட பல பிரதேசங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட இடங்களில் ஓரளவுக்கு வீதி வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேறி நான்கு வருடங்களின் பின்னர் பலர் மீன்பிடி, கூலி வேலை, விவசாயம், சிறிய கடைகள் என வைத்திருந்து வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்கின்றனர்.
சொந்த ஊர் திரும்பிவிட்டோம் என்கிற திருப்தியில் சிறிது சிறிதாக தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றனர்.
இவர்களுள் ஒருவர் வள்ளுவர்புரத்தை சேர்ந்த மீனவரான இராசையா சோதீஸ்வரன். அவர் எம்மிடம் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
2016 கார்த்திகை மாதம் தையிட்டி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.
ஆனால் அங்கே வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டு ஆங்காங்கே குவிக்கப்பட்டு இருந்ததுடன், எங்கள் காணிகளில் மண்ணும் அகழப்பட்டு பாரியகுழிகளும் அமைந்திருந்தன.
1991 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கேட்ட வெடிச்சத்தங்களோடு ஊரை விட்டு ஓடினோம். அப்போது எனக்கு 17 வயது. அன்று எங்கள் ஊர் அவ்வளவு அழகாக இருக்கும். பேரும் பெருமைக்குரிய இடமாகவும் சின்ன சிங்கப்பூராகவும் எங்கள் ஊர் இருந்தது.
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என்ற பாட்டைக் கேட்டால் அம்மாவின் மடியில் இருந்து கேட்ட மாதிரி இருக்கும். இதெல்லாத்தையும் விட்டு நாங்கள் உயிருக்கு பயந்து ஓடி 27 வருடங்கள் கழித்து வந்து பார்க்கும் போது எங்கள் ஊர் ஊராக இருக்கவில்லை. காடு பத்திப் போய் இருந்தது.
Post a Comment