Covid-19 காலப்பகுதியில் அதிகரித்து வரும் இளவயது நீரிழிவு நோயாளர்கள் (Video)
கொரோனா காலப்பகுதியில் இளவயதினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினமாகும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருள். இந்த வருடத்தை பொறுத்தவரை தாதியர்களும் நீரிழிவும் என்பது தொனிப்பொருளாகும். தாதியர்கள் மூலமாக நாங்கள் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் பொதுமக்களோடு, நோயாளிகளோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறார்கள்.
கொவிட் 19 போன்ற தொற்று நோய்களும் இன்று அதிகரித்திருக்கின்ற நிலையில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களும் பெருகி வருகின்றது. கொவிட் 19 பரவுகின்ற கடந்த ஆறு மாத காலத்தில் அதிகளவு இளைஞர் யுவதிகளுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இளம் சமுதாயத்தினரிடையே நீரிழிவு நோய் பெருகி வருகின்றது.
பாடசாலை சிறுவர்களிடையேயும் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. முன்னைய காலங்களில் சிறுவர்களுக்கு (Type - 01) வகை - 01 எனப்படும் இன்சுலின் சுரப்பியில் ஏற்படுகின்ற பிரச்சினை இருந்தது. ஆனால் இன்று எத்தனையோ பேருக்கு (Type - 02) வகை - 02 எனப்படும் வளர்ந்தவர்களுக்கு ஏற்படுகின்ற நீரிழிவு இருக்கின்றது. கொரோனா விடுமுறை காலப்பகுதியில் வீட்டிலிருந்து அடிக்கடி உணவுகளை உண்பதால் உடற்பருமன் அதிகரிப்பும், இலத்திரனியல் உபகாரணங்களுக்கு அடிமையாகி எந்தவொரு விளையாட்டுக்களிலும் ஈடுபடாமல் இருப்பது போன்றவை காரணங்களாக உள்ளன. ஆகவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து சிறார்களுக்கு ஏற்படும் நீரிழிவு அபாயத்தை முன்கூட்டியே தடுப்பது அவசியமாகும்.
இலங்கையில் 80 களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஏறக்குறைய 3 சதவீதமானவர்களுக்கு தான் நீரிழிவு நோய் இருந்தது. அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 30 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. யாழ். மாவட்டத்தில் 15 - 20 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்கு எங்கள் வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களே முக்கிய காரணங்கள் ஆகும். ஆரோக்கியமற்ற உணவுப்பபழக்க வழக்கங்கள், மன அழுத்தங்கள் நிறைந்த, அப்பிசாயப் பயிற்சிகள் அற்ற வாழ்க்கை முறைகள் தான் நீரிழிவு போன்ற தொற்றாநோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.
ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றதா இல்லையா என்பதனை கண்டுபிடிப்பது அவசியம். அடிக்கடி சிறுநீர் கழித்தால், அதிக தாகம், அதிக பசி இருந்தால், உடற்பருமன் திடீரென குறைந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். நீரிழிவு நோயானது எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமலும் கூட ஒருவருக்கு வரலாம். இதனால் குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு இருந்தால், உடற்பருமன் அதிகமாக இருந்தால், நீரிழிவு நோய்க்குரிய அறிகுறிகள் இருந்தால் நீரிழிவு பரிசோதனையை மேற்கொள்வது மிக அவசியமாகும். நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். மாச்சத்து அதிகமான உணவுகளை குறைத்துக் கொள்வதுடன் சீனி அதிகம் பயன்படுத்தும் உணவுகளை தவிர்த்தல் நல்லது. முடிந்தளவு உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி மிக அவசியம். BMI எனப்படும் உடற்திணிவு சுட்டெண்ணை தகுந்த அளவில் பேணுவது அவசியம்.
எங்களது மக்கள் மத்தியில் நீரிழிவு நோய் தொடர்பில் தப்பபிப்பிராயங்களும் இருக்கின்றன. அண்மையில் 30 வயதுடைய ஒரு இளைஞரை நான் சந்தித்தேன். அவருக்கு மூன்று வருடங்களாக நீரிழிவு நோய் இருக்கிறது. அவரது குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு மிக அதிகம். ஆனால், அவர் எந்தவொரு மருந்தினையும் எடுப்பதில்லை. நீங்கள் ஏன் நீரிழிவுக்கான மருந்துகளை எடுப்பதில்லை என அவரிடம் கேட்டேன். நீரிழிவுக்கு மருந்து எடுத்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என நண்பர்களும் உறவினர்களும் பயமுறுத்துகிறார்கள் என அவர் கூறினார். இது ஒரு தப்பான அபிப்பிராயம். நீரிழிவுக்கு எடுக்கின்ற மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதில்லை. நீரிழிவு நோய் கட்டுப்பாடு அற்ற நிலையில் இருக்கும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும். அதே போல் கண்களில் பாதிப்பு ஏற்படும். வேறும் பல பாதிப்புகள் ஏற்படும். ஆகவே அனைவரும் இந்த நீரிழிவு மாதத்தில் நீரிழிவு நோய் இருக்கின்றதா இல்லையா என்பதனை கண்டறிவது அவசியம்.
யாழ். போதனா மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் மருத்துவ அதிகாரி திருமதி சங்கீதா பிரதீபன் பெண்களும், கர்ப்பகால நீரிழிவும் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் எல்லா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி நிலையங்களிலும் சுகவனிதையர் கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கே 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கின்றதா என்பதனை அறிந்து கொள்வது அவசியம். எல்லா பெண்களும் தங்களது உடல் நிறையை உயரத்திற்கேற்ப வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். திருமணமான பெண்கள், கர்ப்பமான பெண்கள் அனைவரும் நீரிழிவு பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பம் தங்கிய பின் பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் உள்ள பிள்ளைக்கும் நீரிழிவு நோயினால் பாரிய விளைவுகள் ஏற்படும். இதனால் முன்கூட்டியே அறிந்து அதற்கான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுதல் மிக அவசியமானதாகும்.
Post a Comment