பனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)

கடந்த கால போரினால் பெருமளவு பனை மரங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ள சூழல் நேயம் சார்ந்த சில தன்னார்வ அமைப்புக்களும், நிறுவனங்களும், தனியாரும் எடுக்கும் முயற்சிகளால் பனை விதைகள் தொடர்ந்து நாட்டப்பட்டு வருகின்றன. 

 இது தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் ஓய்வுநிலை அலுவலரான தியாகராஜா பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகள் வருமாறு, 

 தானே விழுந்து தானே முளைத்து வளரும் தனித்துவமான மரமான பனை ஒருவித்திலைத் தாவரமாகும். வறண்ட நிலத் தாவரமான இது நார் வேர் தொகுதியைக் கொண்டிருப்பதனால் அதன் வேர்கள் மண்ணை இறுக பற்றிப் பிடிக்கின்றன. இதனால் மண்ணரிப்பிலிருந்து நிலம் பாதுகாக்கப்படுகின்றது. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் இதன் வேர்களுக்கு உண்டு என்கின்றனர் பனை வல்லுநர்கள். வேரிலிருந்து, குருத்து வரை மனிதனுக்கு பயன்படுகின்றது. கால்நடைகளுக்கும் சிறந்த உணவாகிறது. 

 பெண் பனையிலிருந்து ஆடி மாத நடுப்பகுதியிலிருந்து பனம்பழங்கள் பெறப்படுகின்றன. புரட்டாதி இறுதியும், ஐப்பசி மாதமுமே பனை நடுகைக்கு ஏற்ற காலப்பகுதியாகும். ஐப்பசியில் பனம் விதைகள் நாட்டினால் எப்பசியினையும் போக்கும் கற்பகத்தரு என்பது முன்னோர் வாக்காகும்.
 

ஒரு விதையுள்ள பழம், இரு விதையுள்ள பழம், மூன்று விதையுள்ள பழம் என மூன்று வகையாக பனம்பழங்கள் கிடைக்கின்றன. ஒரு விதையுள்ள பழம் பெண் பனையாகவும், இரு விதையுள்ள பழத்தினுள் ஒன்று, ஆணாகவும் மற்றையது பெண்ணாகவும், மூன்று விதையுள்ள பழத்தில் இரண்டு ஆண் பனைகளும் ஒன்று பெண் பனையாகவும் வளரும் என அனுபவமுள்ளவர்கள் சொல்கிறார்கள். 

 நல்ல இன பனைகளில் இருந்து விதைகளை தேர்வு செய்தல் முக்கியமானது. பொதுவாக இரு விதைகளுள்ள பனம் பழங்களை தேர்வு செய்தால் நல்லது. உயரம் குறைந்த பனை மரங்கள், தோல் முழுவதும் கறுப்பான பழம், கறுப்பானதும் பரிமூள் பக்கத்திற்கு எதிர்ப்பக்கம் செம்மஞ்சள் நிறமுள்ள பனம்பழம், மற்றும் கறுப்பும் செம்மஞ்சளும் சேர்ந்த பனம்பழங்கள் சுவை மிகுந்ததாகவும் நிறைய களியினையும் கொண்டிருக்கும். இவற்றை தெரிவு செய்து நடுகை செய்தால் சிறந்த இனப்பரம்பலை பெற்றுக் கொள்ளலாம். 

கனதியான விதைகள் நடுகைக்கு உகந்ததாகும். அப்படி பார்த்து நடுகை செய்தால் 90 வீதமானவை முளைப்பதனை முன்னரே உறுதி செய்ய முடியும். சிறு குழி வெட்டி பனம் பழ விதையின் உள் பகுதி தரையை தொடுமாறு பார்த்து நடுகை செய்ய வேண்டும். 

 நீர்நிலைகள், குளங்கள், கால்வாய்களின் வெளிப்புற கட்டில் இருந்து சற்று தள்ளி பனையை நாட்டலாம். நிரையாக பனை விதை நடுகை செய்யும் போது 2.5 மீற்றர் இடைவெளியினை பேண வேண்டும். இடங்களின் அளவை பொறுத்து 2.5 X 2.5 மீற்றர், 3 X 3 மீற்றர், 5 X 5 மீற்றர் அளவுகளில் நேராகவும், சதுர அமைப்பாகவும் நடுவது சிறந்தது. 

 தோப்பாக நடுகை செய்யும் போது இயலுமானவரை கால்நடைகள் வடலியை கடிக்காதவாறு பாதுகாப்பு வேலிகளை அமைத்தால் பத்து வருடங்களில் பனையில் இருந்து பயன்களை பெறக் கூடியதாக இருக்கும். திக்கம் வடிசாலை அமைந்துள்ள காணியில் நாட்டப்பட்ட பனை 10 வருடங்களில் பயன் தந்ததை அனுபவ ரீதியாக நேரடியாகவே உணர்ந்தோம். 

 பனம் விதைகளை சேகரித்து வெயில் படாத இடங்களில் பாதுகாப்பதே நல்லது. சேகரிக்கும் விதைகளை இயன்றளவு அவை முளைக்க முன் விதைக்க வேண்டும். இல்லாவிடின் வேர் விடும் போது விதைகளை இடம்மாற்றினால் அந்த ஒரே வேர் முறியும் தறுவாயில் அந்த பனை மரம் முளைக்காது போய்விடும். இதனால் நீண்டகாலத்துக்கு சேமித்து வைத்திருந்து பனை விதைகளை நடுகை செய்வதனை தவிர்க்க வேண்டும். 

 பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் பனம் விதைகளை நாட்டி மண் வளத்தை பேணுவதோடு நிலத்தடி நீரின் இருப்பையும் உறுதி செய்வோம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.