புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 01 

 

ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 27.02.2022 அன்று நடாத்தப்பட்ட "புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும்" என்கிற உரையாடலின் முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது.  


இலங்கையினுடைய அரசியல் யாப்பு வரலாறு முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக பார்க்கப்பட வேண்டியது. இலங்கைக்கே உரிய தனித்துவமான விசேடமான கலாச்சார அரசியல்  பின்னணியில் இருந்து பார்க்கப்பட வேண்டியது. இது சம்பந்தமாக நாங்கள் மேலுழுந்தவாரியான பார்வைகளை கொண்டிருப்பதனால் பல வேளைகளில் மிகப்பெரும் தவறுகளை விட்டு எமது மக்களுக்கு தீங்கு செய்யும் வரலாற்றுப் போக்கை கொண்டிருக்கிறோம். முதலாவதாக அரசியல் கண்ணோட்டத்தோடு அரசியல் அர்த்தத்தோடு  அரசியல் யாப்பை பார்ப்பதானால், அது வெறும் சட்ட வரையறைக்குள்ளால் பார்க்கப்படக் கூடாது.  மாறாக அது முற்றிலும் ஒரு சமூக அரசியல் பொருளாதார இயக்க பின்னணிக்குள்ளால், வரலாற்றுப் போக்குக்குள்ளால் பார்க்கப்பட வேண்டும். அதுவே அரசியல் அர்த்தத்தில் ஒரு மக்கள் கூட்டத்தின், நாட்டின் வளர்ச்சியை, விருத்தியை  எதிர்காலத்தை புரிந்து கொள்வதற்கு இலகுவாக உதவக் கூடியதாக இருக்கும்.

இந்த உரையாடல் அரசியல் யாப்பை அதன் முழுமையான பின்தளத்தில் வைத்து பார்க்க விரும்புகிறது. அரசியல் பிரச்சினையை பார்ப்பதற்கு என்று விஞ்ஞான பூர்வமான முறைகள் உண்டு. அரசியற் பிரச்சினை வந்தால் அதனை முதலாவது தத்துவார்த்த ரீதியில் (philosophical thinking) ஆக சிந்திக்க வேண்டும். தத்துவார்த்தக் கண் கொண்டு அந்தப் பிரச்சினையை பார்க்க வேண்டும். இரண்டாவது அரசியற் தீர்வு (political solution). எந்த ஒரு பிரச்சினையும் அரசியலுக்கு கீழ்ப்பட்டதே.  எல்லாம் அரசியலுக்கு உட்பட்டதே.  ஆதலால் எந்த ஒரு பிரச்சினையையும் அரசியல் தீர்வுக்குள்ளால் பார்க்க வேண்டும். மூன்றாவது சட்ட வரைபடத்துக்குள்ளால் (legal frame work) அது பார்க்கப்பட வேண்டும்.  அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  நான்காவது நிர்வாக ரீதியான (administrative arrangements) ஏற்பாடுகளுக்குள்ளால் பார்க்கப்பட வேண்டும்.

ஆகவே ஒரு மக்கள் கூட்டத்தினுடைய பிரச்சினை இந்த நான்கு  அடிப்படைகளிலும் அணுகப்பட்டால் மட்டுமே  அவர்கள்  வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் தக்க நடைமுறைக்கு போகக் கூடியதாக இருக்கும்.

முதலாவதாக ஒரு அரசியல் யாப்பை முற்று முழுவதுமாக அதனுடைய பண்பாட்டு வரலாற்று தளத்தில் வைத்து பார்க்க வேண்டும். இலங்கையினுடைய அரசியல் யாப்பை பார்ப்பது என்பது நூறு வீதம் அதனுடைய புவிசார் வரலாற்றுப் பின்னணியில் வைத்து பார்க்கப்படுவதில் ஆரம்பிக்கப்பட வேண்டி இருக்கிறது. டொனமூர் யாப்பிலிருந்து இலங்கையில் வரையப்பட்ட அனைத்து யாப்புகளும்  இலங்கைக்கே உரிய புவிசார் வரலாற்றுப் பின்னணியோடு வரையப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்த் தரப்பு, தமிழ்த் தலைவர்கள் அதனை அவ்வாறு ஒருபோதும் பார்த்ததில்லை. வெறுமனே பிரதிநிதித்துவ வாதமாகவே  ஆரம்பத்திலிருந்தே அதாவது 1833 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் பார்த்தார்கள். கோல்புறூக் அரசியல் யாப்பிலிருந்தே அவர்கள் வெறும் பிரதிநிதிதித்துவ முறை ஊடாகத் தான் அரசியல் யாப்பை பார்த்தார்கள். இது ஒரு மோசமான அணுகுமுறையாகும். அதற்கு காரணம் அரசியல் யாப்பை பற்றி பார்க்கின்ற சிந்தனை விருத்தியடையாமை தான்.

இந்த அரசியல் யாப்பை பற்றி பார்க்கின்ற மூன்று விதமான நபர்கள் உண்டு. ஒன்று சட்டவாளர்கள்,  இரண்டாவது அரசியல் ஆய்வாளர்கள் அல்லது அரசியல் விஞ்ஞானிகள் அல்லது அரசறிவியலாளர்கள், மூன்றாவது வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மூன்று பேருடைய பார்வைகளிலும் வேறுபாடுகள் உண்டு.

சட்டவாளர்களைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் யாப்பை சட்ட வழிகளுக்குள்ளால் தான் பார்ப்பார்கள்.   சட்ட வழிகளுக்குள்ளால் பார்ப்பது என்னவென்றால்  எழுதப்பட்டிருக்கும் ஒரு சட்டம் நடைமுறையில் எவ்வாறு பொருந்துகிறது பொருந்தவில்லை என்று பார்ப்பது.  நடைமுறைப் பிரச்சினையோடு பொருந்துகிறதா இல்லையா என்று பார்ப்பதும் அந்த சட்டம் சம்பந்தமான விளக்கமும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்டு செயற்படுவதும் அந்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பொருத்தமாக அதனை வியாக்கியானப்படுத்துவதும் தான் சட்டவியலாளர்களுடைய பணி. அவர்களுடைய பார்வை அப்படித்தான் இருக்கும். ஏனென்றால் சட்டவியலாளர்கள் ஒரு அரசியல் யாப்பை நிச்சயமாக வரிகளுக்குள்ளால் பார்ப்பார்கள்.

அரசியல் விஞ்ஞானிகள் அவ்வாறில்லை.  அவர்கள் சற்று மேலே போவார்கள். அரசியல் விஞ்ஞானிகள் அல்லது அரசறிவியலாளர்கள் எவ்வாறு பார்ப்பார்கள் என்று சொன்னால், அதன் சட்ட வரையறை எப்படி ஒரு மக்கள் கூட்டத்தின்   பிரச்சினைகளை உள்ளடக்கி இருக்கிறது என்று பார்ப்பார்கள். அந்த சட்ட வரையறை எவ்வாறு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க உகந்ததாக இருக்கிறது,  அதன் பொருத்தப்பாடு பொருத்தமின்மைகள் என்ன, அவற்றில் எத்தகைய மாற்றங்களை செய்யலாம், செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது போன்ற விடயங்களை ஆராய்வது அரசியல் விஞ்ஞானிகளுடைய பணியாக இருக்கிறது.

வரலாற்றாளர்களின் பணி இந்த இரண்டிலிருந்தும் வேறுபடுகிறது.  அரசியல் யாப்பு மட்டுமின்றி எந்த சட்டமாகவும் இருக்கலாம் அப்படி  எழுதப்பட்டிருக்கும் ஒரு சட்டம் என்பது  அது முழு சமூகத்தினுடைய நடத்தைகளோடும் எவ்வாறு சம்பந்தப்படுகின்றது என்று பார்ப்பார்கள்.  முழு சமூகத்தையும் வழிநடத்துவதில் அது எவ்வாறு பங்களிக்கின்றது என்பதில் இருந்து எழுதப்பட்டிருக்கும் யாப்பு வரலாற்றுப் போக்கில் வரலாற்றின் வளர்ச்சிக்கு, மக்களின் வளர்ச்சிக்கு மக்களின் வாழ்க்கைக்கு உதவுகின்றதா இல்லையா என்று பார்ப்பார்கள். வரலாற்றாளர்கள் எழுதப்பட்ட வரிகளையோ எழுதப்பட்ட சட்ட வரையறைகளையோ கடந்து எழுதப்பட்ட யாப்பின் கீழ் உள்ள மக்களின்  நடத்தைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்ப்பார்கள். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அது எவ்வாறு வெற்றி அடைந்திருக்கிறது தோல்வி அடைந்திருக்கிறது என்று சட்டத்திற்கு வெளியே அதாவது சட்டத்திற்குள் சிறைப்படாமல் அவர்கள் பார்ப்பார்கள். ஒரு யாப்பு நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து அதாவது டொனமூர் யாப்பை எடுத்தால் 1931 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதில் இருந்து கொண்டு வரப்பட்ட சட்டங்கள், நாடாளுமன்ற விவாதங்கள்,   சட்ட சபை விவாதங்கள்,  உள்ளுராட்சி சபை விவாதங்கள், மக்களுடைய பண்பாடு கலை இலக்கிய செயற்பாடுகள், இவை எல்லாவற்றுக்கும் அந்த அரசியல் யாப்பு எப்படி இடம் கொடுத்து அந்த மக்களின் வாழ்வை ஒருங்கிணைத்தது என்பதனை வரலாற்றாளர்கள் பார்ப்பார்கள்.

எனவே வரலாற்றாளர்கள் எப்போதுமே ஒரு அரசியல் யாப்பை அதன் வரிகளைக் கடந்து அதாவது அங்கு எழுதப்பட்டிருக்கும் வரிகள் மக்களுக்கு என்ன செய்கிறது செய்யவில்லை என்பதையும் கடந்து, அந்த காலகட்டத்தில் நடக்கின்ற அரசியல் யாப்பு வளர்ச்சி எப்படி இருக்கிறது, அதன் செயற்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்பார்கள். அதன்மூலம் ஒரு முடிவுக்கு வருவார்கள். அந்த அரசியல் யாப்பு மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது உகந்ததல்ல, அது திருத்தப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டியதல்ல. என்பன போன்ற விடயங்களை வரலாற்றாளர்கள் சொல்வார்கள்.

எனவே வரலாற்றாளர்கள் அரசியல்யாப்பை பார்ப்பது என்பது வேறு விதம். நான் இங்கு இந்த மூன்றாவது தரப்பிலிருந்து தான் அரசியல் யாப்பை பார்க்கப் போகின்றேன். அதற்காக நான் சட்ட வரிகளைக் கைவிட்டோ, சட்ட வரையறைகளை கைவிட்டோ நான் போகப் போவதில்லை.    நிச்சயமாக சட்ட வரிகளுக்குள்ளாலும், சட்ட வரையறைகளுக்குள்ளாலும், வரலாற்று நியதிக்குள்ளாலும், அதாவது   மூன்றுக்குள்ளாலும் சேர்த்துத்தான் நான் விடயங்களை பார்க்கப் போகின்றேன்.

இப்போது நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். சட்ட வரையறை (legal frame work) என்பது தான் அரசியல்யாப்பு. அது காணப்படும் சமூகத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகாட்டலை மக்களுக்கு செய்வது தான் அரசியல் யாப்பு. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அமெரிக்க நாட்டின் பைபிளாக, வேத நூலாக காணப்படுவது அதனுடைய யாப்பு. அதனைத் தான் அவர்கள் தங்கள் வழிகாட்டி நெறியாகக் கொள்கின்றார்கள்.

இங்கு தான் எழுதப்பட்ட  முதலாவது அரசியல் யாப்பிலிருந்து பிரச்சினையை ஆரம்பிக்கப் போகின்றேன்.  எழுதப்பட்ட  முதலாவது அரசியல் யாப்பாகிய அமெரிக்க அரசியல் யாப்பு 243 வருட நடைமுறையை கொண்டிருக்கிறது. சுமார் இரண்டரை நூற்றாண்டு கால வரலாற்றை எட்டிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிக சுருக்கமாக மிகக் குறைந்த பக்கங்களில் எழுதப்பட்டு நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பு அமெரிக்காவினுடையது தான்.  அந்த 243 வருட கால நடைமுறையில் அதற்கு இருக்க கூடிய இயல்பு, அதன் உள்ளடக்கங்கள் என்பவை ஏனைய நாடுகளில் இருக்கக் கூடிய அந்தப் போக்குகளில் இருந்து வேறுபட்ட பரிமாணங்களை உடையவை.  இந்த வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் அவற்றின் சமூக உள்ளடக்கமே.

உதாரணமாக அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற மூன்று நாடுகளையும் அதன் அரசியல் யாப்புகளை எடுத்துக் கொண்டால், மிக குறைந்த பக்கங்களில் எழுதப்பட்ட யாப்பு அமெரிக்காவினுடையது. அதே போல் மிக அதிகமான பக்கங்களில் எழுதப்பட்டது இந்தியாவின் அரசியல் யாப்பு.   இந்த மூன்றின்  இயல்புகளையும் பார்த்தோமென்றால்   ஈழத்தமிழர்களுக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு இலங்கையில் எப்படி நடக்கும் அல்லது நடக்காது என்பதனை கண்ணை மூடிக் கொண்டே சொல்ல முடியும். அரசியல் யாப்பு ரீதியான தீர்வுக்கு இலங்கை அரசியல் சமூக கலாச்சாரம் ஒரு போதும் தகுதியானதாக இல்லை. எனவே என்னுடைய கணிப்பீடு இலங்கை அரசியலில் அரசியல் யாப்பு ரீதியான தீர்வு என்ற ஒன்று வரலாற்று ரீதியாகவும், இன்று காணப்படுகின்ற சமூக, அரசியல் வரலாற்று போக்கின்படியும் சாத்தியமில்லை. இதையொட்டி எந்த விதமான கற்பனைகளுமின்றி முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக நான் உங்களுடன் உரையாடப்போகிறேன்.

இந்தியாவினுடைய அரசியல் யாப்பு என்பது பெரிதும் மகாபாரத கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலித்தது. மகாபாரதம் என்கிற நூலை எடுத்தீர்களாக இருந்தால், மகாபாரதம் என்கிற நூலைப் படித்துவிட்டு இந்திய யாப்பை படிக்கின்ற ஒருவருக்கு இந்திய யாப்பு மகாபாரத நூலின் ஒரு வெளிப்பாடாக இருப்பதை காண்பீர்கள். இந்திய யாப்பினுடைய கருத்து உள்ளடக்கங்கள் மகாபாரத கலாச்சாரத்தின் கருத்து உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றது. இந்திய யாப்பின் தொகுப்பு மகாபாரத உபகதைகளைப் போன்று இருக்கின்றது. மகாபாரதத்தின் பெருங்கதைகளை விடவும் அதன் உபகதைகள் அதிகம். ஒரு பெருங்கதையின் போக்குக்குள் ஆயிரம் உபகதைகள் வரும். அப்படி வந்து அது பெருத்துப் போயிருக்கிறது.

மகாபாரத கலாச்சாரத்தின் ஒரு சின்ன உதாரணம் ஒன்றை மட்டும் சொல்லி மகாபாரத கலாச்சாரத்துக்குள்ளால் இந்திய யாப்பை பாருங்கள் என்று சொல்வேன். அங்கே கர்ணன் என்கிற ஒரு பாத்திரம் இருக்கிறது. இந்திய யாப்பிலும் இந்த பாத்திரத்தை நீங்கள் காணப் போகிறீர்கள்.  கர்ணன் என்பவன் உன்னதமானவன், கொடைவள்ளல், கண்ணியமானவன், இரக்கமுள்ளவன், அன்புள்ளவன் இப்படி எல்லா விதமான நற்பண்புகளும் கர்ணனுக்கு இருக்கின்றது. ஆனால் அவனுக்கு அப்பாவின் பெயரோ தாயின் பெயரோ தெரியாது. அவர்களின் சாதி, குலம், கோத்திரம் தெரியாது. இப்படி மாகாபாரதம் இன்னொரு பக்கத்தில் சொல்கின்றது. தேரோட்டியின் மகனாக அவன் சாதியற்றவனாக சாதி குறைந்தவனாக உயர்ந்த சாதி கட்டமைப்புக்குள் சத்திரியனாகவோ அல்லது பிரமணனாகவோ எந்த வகையிலும் வராதவனாக அவன் சித்தரிக்கப்படுகின்றான். ஆனாலும் உன்னதமானவனாக இருக்கின்றான். அவனுக்கு வில்வித்தை அரங்கேற்றம் செய்ய சாதிப்பிரச்சினை தடையாக இருந்தது. வில்வித்தை சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்ட போது  ராஜகுலம் இல்லை, சத்திரிய குலம் இல்லை என்று வந்த போது துரியோதனன் அவனுக்கு ஒரு இராச்சியத்தைக் கொடுத்து அரச அந்தஸ்துக்கு உயர்த்திய போது அந்தப் பிரச்சினை தீர்க்கப்படுகின்றது. சாதி குறைந்தவன் இப்போது சத்திரிய குலத்தவனாக மாறுகின்றான். ஆனால் இந்த சத்திரிய குலத்தைச் சேர்ந்தவன் துரியோதனனோடு நிற்கிறான். கொடை வள்ளலாக இருந்த போது கொல்லப்படுகின்றான். இதனை நீங்கள் இந்திய யாப்பு முழுவதும் காணலாம்.

இந்திய யாப்பில் சாதிப்பிரச்சினையும் இருக்கு அதற்கு மாற்று வழித் தீர்வும் இருக்கிறது. சாதிப்பிரச்சினைகள் தொடர்பிலான மிக குழப்பகரமான விடயங்களும் உண்டு. சாதி முறைமையும் உண்டு. அது பிழை  என்றும் இருக்கிறது. ஜனநாயகம் என்றும் இருக்கிறது. சமஷ்டி ஆட்சி  என்றும் சொல்லலாம் அது இல்லை என்றும் சொல்லலாம். ஒற்றையாட்சி என்றும் சொல்லலாம் அரைச் சமஷ்டி என்றும் சொல்லலாம்.  இப்படி எல்லாவிதமான கலவையையும் கொண்ட ஒரு மகாபாரத கலாச்சாரத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டும் சொந்தமான விடயம் கிடையாது. ஒரு நாட்டு மக்களின் அந்த சமூகத்தை நிர்ணயிக்கின்ற அரசியல் தலைமையை நிர்ணயிக்கின்றவர்கள்  தங்கள் சமூகத்தில் காணப்படும் விழுமியங்களுக்கு உள்ளாலும் வாழ்க்கை முறைக்குள்ளாலும் தங்களுடைய வரலாற்று வெளிப்பாட்டுக்கு உள்ளாலும் தான் எதனையும் சொல்வார்கள் செய்வார்கள். எனவே அவர்கள் வகுக்கின்ற சட்டங்களும் அந்த சமூகத்தை அந்த மக்களின் வாழ்வை பிரதிபலிப்பதாகவே இருக்கும். ஒரு மனிதனை ஒரு வரலாற்றுப் பிராணி என்பதில் இருந்தோ அவனது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்தோ பிரித்துப் பார்க்க முடியாது. இது யாப்பை எழுதுபவர்களின் மனப்பாங்குக்கும் பொருந்தும்.  அதனை செயற்படுத்துபவர்களின் மனப்பாங்கும் அப்படித்தான் இருக்கும். எனவே ஒரு யாப்பு ஒரு போதும்  எழுதப்பட்டிருக்கும் வரிகளினால் அப்படியே செயற்படுத்தப்படுவது கிடையாது.

இலங்கையினுடைய அரசியல் யாப்பானது முதலாவதாக ஒரு பரிணாம வளர்ச்சிக்குள்ளால் (constitutional evolution)  போகவில்லை. ஆனால் அது யாப்புப் பகிர்விற்கு (constitutional de-evolution) போக முனைகிறது. இன்னொரு பக்கம் அது யாப்புச் சிதைவுக்கு (constitutional destruction) போகிறது. இலங்கை யாப்புக்கு இரண்டு மோசமான இயல்புகள் இருக்கின்றன. ஒன்று யாப்பு வளர்ச்சி இல்லை.  யாப்பு பகிர்வு அரசியல் யாப்பு வளர்ச்சி அல்ல. அது அரசியல் யாப்பு தேய்வு. இரண்டாவது அரசியல்யாப்பு திரிபுகள் (constitututional distortions)  என்று சொல்லலாம். எனவே எழுதப்பட்ட வாக்கியங்கள் எவ்வளவோ உன்னதமாக இருந்தாலும் நடைமுறையில் அவை அந்த சமூகத்தில் காணப்படும் இயல்புகள் அப்படியே பிரதிபலிக்கும். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால், மற்றும் அதன் தலைவர்களால் நிர்ணயிக்கப்படும் நிர்வாகி, உயரதிகாரி, குறிப்பிட்ட சாதிமான், சாதி குறைந்தவன்,  போன்ற வரையறைகளுக்குள்ளாலேயே அந்த நடைமுறை இருக்கும்.

சீனாவின் அரசியல் யாப்பை எடுத்துப் பாருங்கள். அதில் பலரும் கவனம் செலுத்தாத ஒரு பகுதி இருக்கின்றது. சீனாவில் மாசேதுங் அரசியல் யாப்பு அந்தஸ்துள்ளவர். மாசேதுங் சொல்கிற ஒரு வசனம் அரசியல் யாப்பு விதிக்கு சமதையானது. அது தான் அரசியல்யாப்பு அந்தஸ்து உள்ளவர் என்பதன் அர்த்தம். இதேபோல் டென்சியாபிங் அரசியல் யாப்பு அந்தஸ்துள்ளவர். இன்றுள்ள சிஜின்பிங் உம் அரசியல் யாப்பு அந்தஸ்துள்ளவர். அரசியல்யாப்பு அந்தஸ்துள்ளவர் நாடாளுமன்றத்தை கூட்டி சட்டமியற்றி சட்டம் போட வேண்டும் என்றில்லை. அவர் சொல்வதெல்லாம் சட்டம் தான். அவர் சொல்வதெல்லாம் யாப்பு.  இது சீனாவின் மன்னராட்சிக் கால வெளிப்பாடாக வந்திருக்கிறது. 2300 வருடங்களுக்கு மேற்பட்ட சீன மன்னராட்சிக் கலாச்சாரத்தை  பேரரச கலாச்சாரத்தை அப்படியே சீன அரசியல்யாப்பு பிரதிபலிக்கிறது. எனவே அந்த தேசத்து அரசியல், பண்பாடு, கலாசார வெளிப்பாடாக அந்த யாப்பு காணப்படுகின்றது.

நானே மன்னன், நானே அரசு என்று கூறினார் பிரான்சின் 14 ஆம் லூயி மன்னன். இலங்கையிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது நீங்கள் தேடிய தலைவன் நானே (I'm the leader that you searched for) என்று சொன்னார் சனாதிபதி கோத்தபாய.  பிரெஞ்சு சக்கரவர்த்தி 14 ஆம் லூயி சொன்னதும் சீனாவில் அரசியல் யாப்பு அந்தஸ்து உள்ளவர்களாக தலைவர்கள் இருப்பதும் இலங்கை ஜனாதிபதி சொல்லியிருப்பதும் ஒன்று தான். அந்தந்த நாடுகளில் காணப்படுகின்ற அரசியல் கலாச்சாரத்துக்குள்ளால் இது வருகின்றது. மன்னராட்சிக் கலாச்சாரம் எங்கு பலமாக இருக்கின்றதோ அல்லது அதன் பண்டைய கலாச்சாரங்கள் எங்கு அரசியல் அர்த்தத்தில் பலமாக இருக்கின்றதோ அங்கு இது வரும். எந்த நாட்டினுடையது எப்படி வருமோ அது அப்படி வரும். ரஷ்யா என்றால் ரஷ்யாவுக்கு உரியதாக வரும், அமெரிக்காவுக்கென்றால் அமெரிக்காவுக்கு உரியதாக வரும்.

அடுத்த இதழிலும் தொடரும்... 

நிமிர்வு மாசி - பங்குனி 2022 இதழ் 


1 comment:

  1. மேலே கட்டுரை வடிவில் உள்ள உரையின் காணொலியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும்
    https://www.youtube.com/watch?v=E3onCc9-s6s

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.