புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 02

 


ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 27.02.2022 அன்று நடாத்தப்பட்ட "புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும்" என்கிற உரையாடலின் இரண்டாவது பகுதி இங்கே பிரசுரமாகிறது.  

அமெரிக்காவின் அரசியல் யாப்பை பாருங்கள், அமெரிக்கா நீண்ட வரலாறல்லாத மக்களைக் கொண்ட நாடு, குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு துண்டு துண்டாக உதிரி உதிரியாக குடியேறிய மக்களைக் கொண்ட நாடு. அவர்களுக்கென்று புராணங்கள், இதிகாசங்கள், கலாச்சாரம்,  சொந்த நீண்டகால வரலாற்று பாரம்பரியங்கள் கிடையாது. துண்டு துண்டாக குடியேறிய குடியேற்றவாசிகளின் நாடு தான் அமெரிக்கா. எனவே அவர்களை நிர்வகிப்பதற்கு வெட்டொன்று துண்டு இரண்டாக சட்டம் தேவைப்படுகின்றது.  அவர்களை இணைப்பதற்கும் வெட்டொன்று துண்டு இரண்டான வாள்வெட்டுப் போன்ற கூரிய நடைமுறை அவர்களுக்கு தேவைப்படுகின்றது. ஆகவே சட்டத்தால் அமெரிக்கா எனும் தேசத்தை கட்டுக்கோப்பாக இணைக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது.  அங்கு பண்பாட்டை விட  சட்டம் முதன்மையான இடத்தை வகிக்கின்றது.  குடியேறிகள் என்பதே ஒரு பண்பாடு தான். அங்கே பலர் குடியேறியுள்ளதனால் ஒருவருக்குரிய பண்பாடு இல்லை என்பதனால் எல்லோருக்கும் பொதுவான சட்டம் பற்றிய விடயம்  அங்கே முதன்மை பெற்றிருக்கின்றது. இவ்வாறாக ஒவ்வொரு நாட்டினுடைய அரசியல் யாப்பும் சட்ட அமைப்புகளும்  வடிவம் பெற்று செல்வதனைக் காணலாம்.

இலங்கையினுடைய அரசியல் யாப்பை நாங்கள் பார்ப்பதற்கு இவ்வளவும் முன்னோட்டங்களாக உள்ளன.  இதன் இரண்டாவது பகுதிக்குள் நுழையப் போகின்றோம். மனிதன் அரசியல் பிராணி, அரசியலுக்கு உட்பட்டவன்.  அரசியல் என்பது முதலாவது அர்த்தத்தில் நிறுவன அர்த்தத்தில் நிலத்தோடும் மக்களோடும் சம்பந்தப்பட்டது.  எனவே காணியும் மக்களும் (land and people) தான் அரசியல்.  நாடோடிகளாக மனிதன் இருந்த காலப்பகுதியிலேயே அரசுக்குரிய அம்சங்கள் போன்று இருந்தாலும், அரசுக்குரிய நிறுவனக் கட்டமைப்பு கண்ணுக்குத் தெரியும் ஸ்தூலமான கட்டமைப்பு தோன்றியது நிலத்தில் மக்கள் நிரந்தரமாக குடியேறத் தொடங்கிய பின் தான். எனவே நிலமும் மக்களும் தான் ஒரு அரசினுடைய அடித்தளம். அரசியல் அதிகாரம் என்பதும் நிலத்திலிருந்தும், மக்களில் இருந்தும் தான் வருகின்றது. அரசு என்பது இனக்குழுவில் வேர்விட்டு இருந்தாலும், அரசு முழுமையான நிறுவன முறையோடு நிலத்தில் தான் வருகிறது. நிலத்தை விடுத்து ஒரு போதும் அரசைப்  பார்க்க முடியாது.

தேசிய வாதம் என்பது தாயகம் (homeland) என்கிற கருதுகோளோடு வருகின்றது. எனவே தாயகம் இல்லாமல் ஒரு தேசிய இனம் இருக்க முடியாது. அரசியல் தீர்வு ஒரு மக்கள் கூட்டத்துக்கு வேண்டுமென்றால் அது நிலத்தை அடிப்படையாக கொண்டதாக தான் இருக்க வேண்டும்.  ஒரு மக்கள் கூட்டம் என்று எடுத்துக் கொண்டால்  குறிக்கப்பட்ட கூட்டமான நிலத்தை தான் அது கருதும்.    தேசிய இனம் என்றால் அது நிச்சயமாக தாயகத்தைக் கருதும். தாயகம் இல்லாமல் தேசியம் இல்லை. எனவே தாயகம் பற்றிய சிந்தனை இல்லாமல், ஒரு அரசியல் யாப்பை பற்றியதான சிந்தனை ஒரு தேசிய இனத்திற்கு இருக்க முடியாது. எனவே ஒரு தேசிய இனத்திற்கு அதன் தாயக சிந்தனையில் இருந்து தான் அரசியல் யாப்பு சிந்தனை பிறக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தாயகம் பற்றிய சிந்தனை  1949 ஆம் ஆண்டு சம்ஷடிக் கோரிக்கையோடு தான் ஆரம்பமாகிறது. அதற்கு முதல் உதிரிகளாக யாரும் சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலத்தோடு சம்பந்தப்பட்ட சமஷடித் தீர்வு என்பது   1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்படுகின்றது. அது தாயகத்துடன் சம்பந்தப்படுகின்றது. அது வரைக்கும் நிலம் என்பது தமிழ்மக்களின் வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் பின்நாட்களில் இந்த நிலத்தை தமிழரசுக் கட்சி கைவிட்ட வரலாறும் துயரகரமானது.  அவர்களால் எழுதப்பட்ட ஒப்பந்தங்களில் கூட நிலத்தை அவர்கள் கைவிட்டிருக்கின்றார்கள்.   தமிழரசுக் கட்சி எழுதிய பண்டா செல்வா ஒப்பந்தத்தில் பிரதேச சபைகள் அமைக்கப்படுவது என்பது இருக்கின்றது. அந்த பிரதேச சபைகள் என்பது நிலத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் டட்லி செல்வா ஒப்பந்தத்தில் மாவட்ட சபை என்று ஒன்று இருக்கின்றது.  அது நிர்வாக மாவட்டங்களை மையமாக கொண்டது.  அங்கு நிலம் சம்பந்தப்படவில்லை. அந்த நிர்வாக அலகுகளுக்குள்ளே தான்  பண்டா செல்வா ஒப்பந்தம் இருக்கிறது. அது நிச்சயமாக நிலத்தை வைத்து இல்லை.

இலங்கை அரசியலில் நிலத்தை அடிப்படையாக கொண்டு சிந்தித்த முதலாவது யாப்பு வடிவம் என்று சொல்வதாக இருந்தால் அது 1928 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு 1931 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் கமிஷன் அறிக்கை.  அதில் தான் மாகாண சபைகளைப் பற்றி பரிசீலிக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கின்றது. இது தான் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரதேச ரீதியான தீர்வு பற்றி தமிழ்மக்கள் தங்களுக்கு பொருத்திப் பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் சிங்கள மக்கள் 100 வீதம் பிரதேச ரீதியாக நிலத்தை மையமாக கொண்ட அரசியல் சிந்தனையை கொண்டிருந்தார்கள்.  அவர்களின் தம்மதீவு கோட்பாடு என்பது இலங்கைத்தீவு முழுவதனையும் தாயகம் என்று கூறுகின்றது. இவற்றை நாம் விவரமாக பார்க்க வேண்டியது அவசியம். சிங்கள மக்களுடைய அந்த தாயக கருத்தை  மேலெழுந்தவாரியாக பார்க்கும் பார்வையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.

தமிழர் தரப்புக்கு நிலத்தை மையமாக கொண்ட பிரதேசசபைகளை வைத்து அளிக்கப்பட்ட முதலாவது தீர்வு கிழித்தெறியப்பட்டது.  டொனமூர் யாப்பு எழுதப்பட்ட போதும் அது பரிசீலித்துப் பார்க்கப்படவில்லை.  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது சரத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது. அது யாப்பு திரிபுக்கு போயிருக்கிறது. அது ஒரு யாப்பு பின்னடைவுக்கு போயிருக்கிறது. இது இரண்டையும் இந்திய அரசு கடுமையாக கவனத்தில் கொள்வது அவசியமானது. எழுதப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் எப்படி யாப்பு திரிபுக்கும் பின்னடைவுக்கும் போனது என்பதை புரிந்து கொள்வதற்கு இலங்கை அரசியல் யாப்பை புரிந்து கொள்வது அவசியம்.

இலங்கையினுடைய அரசியல் யாப்பு புவிசார் அரசியல் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது என்பது மிகவும் அடிப்படையானது. பிரித்தானியர்கள் தமக்கு தேவையான புவிசார் அரசியல் நலனுக்கு பொருத்தமாக யாப்புகளை வரைந்தார்கள். சிங்களவர்களுக்கு அது சாதகமாக இருந்தது. அதனை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதனை அவர்கள் பயன்படுத்தினார்கள். ஈழத்தமிழர்களின் வாழ்வும் புவிசார் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. சிங்கள பௌத்தர்களுக்கும் அப்படித்தான். ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவோடு ஒட்டிய புவிசார் அரசியல் வாழ்வு என்பது ஒரு பூட்டாக அமைந்திருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய பௌத்தம் அங்கே சைவ, வைஷ்ணவ மதங்களினால் பலாத்காரமாக அழிக்கப்பட்டது, துரத்தப்பட்டது.   இந்தியாவில் பௌத்த சமண மதங்களுக்கு எதிராக சைவ வைஷ்ணவ மதங்கள் பெரும் போராட்டங்களை நடத்தின.  பெரும் எழுச்சிகளை ஏற்படுத்தின. இவற்றின் விளைவால் பௌத்தம் இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டது.  அங்கே துரத்தப்பட்ட பௌத்தம் இலங்கையில் குடி புகுந்திருக்கிறது.  பௌத்தம் எவ்வளவு தான் அகிம்சையாக இருந்தாலும், இலங்கையில் அது ஒரு ஆதிக்க மதமாகவே இருக்கிறது. அது இலங்கையில் புகுந்த நாளில் இருந்து அதற்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் அழிந்த பௌத்தம் இந்தியாவினுடைய அரசியல் கலாசார விஸ்தரிப்பினால் இலங்கையிலும் அழிந்துவிடும் என்கிற அச்சத்தை சிங்கள மக்கள் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தியாவுக்கு எதிரான அரண் தான் அவர்களுடைய உள்நாட்டு வெளிநாட்டு அரசியலின் பிரதானமான அம்சம். ஆகவே தான் சிங்களவர்கள் தங்களுடைய தம்மதீபக் கோட்பாட்டை இந்தியாவுக்கு எதிரான கோட்பாட்டோடு தான் வடிவமைத்தார்கள்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்கள சட்டத்தை கொண்டு வரும் போது தமிழகத்தினால் சிங்களவர்கள் விழுங்கப்பட்டு விடுவார்கள் என்கிற சிங்கள மக்களின் அச்சத்தை சொல்லி அதனை நியாயப்படுத்தினார். தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் என்று 1944 ஆம் ஆண்டு இலங்கையினுடைய அரசாங்க சபையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பத்து ஆண்டுகளின் பின்பு அது நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானத்தில் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 1953 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட  நீதிபதி ஆதர் விஜயவர்த்தனா ஆணைக்குழு அதனை ஆய்வு செய்தது.  அது நியமிக்கப்பட்டதன் நோக்கம், தமிழையும் சிங்களத்தையும்  உத்தியோக மொழி ஆக்குவதற்கான வாய்ப்புகளை, அதற்கு தடையாக இருக்கின்ற காரணிகளை நீக்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவான வழிமுறைகளை சொல்லி நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்வது தான்.  

 ‘தமிழையும் சிங்களத்தையும் உத்தியோகபூர்வ மொழியாக்கினால் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழால் சிங்களம் பாதிக்கப்பட்டுவிடும். எனவே தமிழையும் சிங்களத்தையும் உத்தியோகபூர்வ மொழி ஆக்குவதனை விட்டுவிட்டு தனியே சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்குவதாக இருந்தால் இந்தப் பணி இலகுவானதாக இருக்கும். சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். தென்னிந்தியாவில் இருந்து வரும் புத்தகங்கள், ஆசிரியர்கள், அறிவு தமிழர்களின் அறிவை உயர்த்தும். சிங்களவர்களின் அறிவு தாழ்ந்து போய் இருக்கும். சிங்களவர்களுக்கு சிங்கள நூல்கள் மட்டும் தான் இருக்கிறது. தமிழர்களுக்கு தமிழ்நாட்டு நூல்களும் தமிழ்நாட்டு ஆசிரியர்களும்  தமிழ்நாட்டு ஊடகங்களும் உண்டு. எனவே தமிழை விடுத்து சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக்குங்கள்.’ என ஆதர் விஜயவர்த்தன தன்னுடைய அறிக்கையில் எழுதினார்.

இந்த அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துகளால் உந்தப்பட்ட சிங்கள மக்கள் கொதித்தெழுந்தார்கள். ‘தமிழ் எந்தக் காரணம் கொண்டும்  உத்தியோகப்பூர்வ மொழி ஆகாது’ என்றார்கள். தமிழை உத்தியோகபூர்வ மொழி  ஆக்கக் கூடாது என்பதற்கான காரணம் எங்கிருந்து பிறந்தது? அது இந்திய எதிர்ப்பில் இருந்து பிறந்தது. ஈழத்தமிழர்களின் பக்கம் இருந்து அவர்கள் அதனை சிந்திக்கவில்லை. தமிழர்களுக்கு எதிரான அரசியல் சிங்களவர்களிடம் எங்கிருந்து பிறந்தது? இந்தியாவில் பௌத்தம் அழிந்தது போல இலங்கையிலும் இந்தியா பௌத்தத்தை அழித்துவிடும் எனவே பௌத்தத்தை காப்பாற்ற வேண்டும் என்பதிலிருந்து பிறந்தது.

இந்தியாவில் இருந்து காலத்துக்கு காலம் படையெடுப்புகள் நிகழ்ந்தன. நிசங்க மல்லன் என்கிற சிங்கள மன்னன் பௌத்த சிங்களவர் மட்டுமே இலங்கையில் மன்னனாக இருக்கலாம், எந்த இந்துவும் இலங்கையில் மன்னனாக முடியாது என கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான். அசோகப் பேரரசின் எழுச்சியோடு இலங்கை மதத்தின் பெயரால் இந்தியாவின் செல்வாக்குக்கு ஆட்பட்டது.  அது மதத்தின் பெயரால் ஆதிக்கமாகவே படர்ந்தது. ஆனால் சிங்களவர்கள் அதனை வேறுவிதமாக கையாண்டார்கள். அந்த இராஜதந்திர நடைமுறை என்பது மிகவும் நுணுக்கமானது.  இந்தப் பிரச்சினையை சிங்கள தலைவர்கள் நீண்டகாலமாக கையாண்டிருக்கும் நடைமுறை என்பது மிகவும் மெருகானது. உலகமே அவர்களிடம் படிக்க வேண்டிய மெருகு அங்கு உண்டு.

இப்படியாக இந்திய எதிர்ப்பு வாதத்தை தான் தமிழர்களுக்கு எதிரான அரசியலுக்கான அடிப்படையாக சிங்களவர்கள் செய்தார்கள். இந்தியா என்கிற பெரிய நாடு அருகில் இருக்கும் போது அதன் ஆதிக்கம் இலங்கையில் படரும். அப்படி படர தமிழர்கள் காரணமாக இருப்பார்கள். 1970 களின் மத்தியில் சிறில் மத்தியூ என்பவர் ஒரு நூலை எழுதினார். அதில் சிங்கள மக்களின் வினோதமான எதிரிகள் இந்தியர்கள் என்று அவர் எழுதி இருந்தார். தமிழர்களும் இந்தியர்களுமே சிங்கள மக்களின் எதிரிகள் என எழுதி இருந்தார். அதன் அட்டைப்படத்தை பார்த்தால் இந்தியாவில் இருந்து ஒரு அரக்கனின் கை இலங்கையை நோக்கி நீளும்.  அதன் ரோமங்களை பார்த்தாலே ஆணி போல இருக்கும். அதன் வலது கை இலங்கை தமிழர்களை உதவியாக கொண்டு இலங்கையின் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி இந்தியாவோடு இழுத்துக் கட்டுகிறது. இப்படித்தான் அட்டைப்படம் இருக்கும்.  இந்தியாவோடு இலங்கையை இணைக்க தமிழர்கள் காரணமாக இருப்பார்கள் எனவே தமிழர்களை அழிக்க வேண்டும் என்பது தான் சிங்களவர்களினுடைய பிரதானமான அடிப்படை சிந்தனை. இங்கே தான் அரசியல் யாப்பு சிந்தனையைப் பற்றி நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும்.

முதலாவது விடயம் இது தான், அமெரிக்கா அரசியல்யாப்பை உருவாக்கிய போது அங்கே ஒரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டது.  அமெரிக்க யாப்பின் ஐந்தாவது சரத்தில் செனட் சபையில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் தன்மையில் எந்த அரசியல் யாப்பு திருத்தங்களாலும் மாற்றம் செய்ய முடியாது. ஒரு மாநிலத்திற்கு இரண்டு வாக்குகள் இருக்கின்றன. அளவால் மிகச்சிறிய மாநிலத்திற்கும் அளவால் மிகப்பெரிய மாநிலத்திற்கும் இரு செனட்டர்கள் தான் இருப்பார்கள். ஒரு இடத்தில் மாற்றுவது என்றாலும் முழு மாநிலங்களும் ஓமென்று வாக்களிக்க வேண்டும். குறிப்பிட்ட மாநிலம் அதற்கு ஒப்புக் கொள்ள  வேண்டும்.  இல்லாவிடில் மாற்றவே முடியாது. அமெரிக்க அரசியல் யாப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கு இரு பிரதான விதிகள் இருக்கின்றன. ஒன்று, செனட் சபையும் பிரதிநிதிகள் சபையும் கலந்த காங்கிரசில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் அரசியல் யாப்பு திருத்தம் முன்மொழியப்படும். மாநிலங்களில் நான்கில் மூன்று மாநிலங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அப்படி ஏற்றால் தான் அது திருத்தத்துக்கு வரும். இந்நிலையில் 1790 ஆம் ஆண்டு அமெரிக்காவில் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.  அந்த திருத்தம் 1992 ஆம் ஆண்டு 202 வருடங்களின் பின்பு தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மாநிலங்களின் நான்கில் மூன்று பெரும்பான்மை வரும் வரைக்கும் இழுபட்டுக் கொண்டே சென்றது. இது தொடர்பில் எங்களுக்கு சரியான அறிவும் அனுபவமும் அவசியம்.

அரசியல் யாப்பில் செனட்டர்கள் சம்பந்தமான விடயங்களில் மாற்றம் செய்யவே முடியாது. முழு மாநிலங்களும் ஒன்றாக வாக்களிக்காதவரை கடவுளாலும் மாற்ற முடியாது. பைபிளை தொட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் கடவுளுக்கும் அங்கே இடம் கொடுக்கவில்லை.  அவர்கள் திட்ட வட்டமாக சட்டத்துக்கு  இடம் கொடுத்திருக்கிறார்கள்.  ஒரு மாற்றமும் செய்ய முடியவில்லை. இதனை நான் அழுத்தி சொல்வதற்கு தெளிவான ஒரு காரணம் உள்ளது.

அமெரிக்க அரசியல் யாப்பில் சமஷ்டி ஆட்சி முறை என்பது  செனட் சபையை மையமாகக் கொண்டது. எனவே அமெரிக்க அரசியல் யாப்பில் சமஷ்டியின் முதுகெலும்பு என்ன என்றால் அது செனட் சபை தான். அந்த சபையினூடாகத்தான் ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டு கொடுப்பதற்குரிய உரிமைகளை வழங்கப்படுகிறது.

இலங்கையில் ஈழத்தமிழர்களுடைய  அரசியல் யாப்பு பிரச்சினை பற்றி பார்க்கின்ற போது எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கில்லை.  எங்கள் உரிமைகள் நிராகரிக்கப்படுகின்ற விடயங்களை பார்ப்போம். அமெரிக்காவில் ஆட்சியதிகாரங்களில் எல்லா மாநிலங்களுக்கும் பங்கிருக்கிறது.  அந்தந்த மாநிலங்களை அங்குள்ளவர்களே நிர்வகிக்கும் உரிமை உள்ளது. சமஷ்டி முறையில் அவர்களுக்கு மத்தியில் பங்கிருக்கிறது. மாநிலத்தில் உரிமை இருக்கிறது. இது சமஷ்டி ஆட்சி முறையின் பிரதானமான அம்சம்.  மாநிலத்தில் அவர்களின் உரிமை, மத்தியில் அவர்களின் பங்கு.

(அடுத்த இதழில் முடியும்)

நிமிர்வு சித்திரை 2022 இதழ் 

புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 01

புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 03

1 comment:

  1. மேலே கட்டுரை வடிவில் உள்ள உரையின் காணொலியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும்
    https://www.youtube.com/watch?v=E3onCc9-s6s

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.