புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 03


ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 27.02.2022 அன்று நடாத்தப்பட்ட "புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும்" என்கிற உரையாடலின் இறுதிப் பகுதி இங்கே பிரசுரமாகிறது.  

இலங்கையில் செனட் சபை என்றொரு சபை இருந்தது. இலங்கையில் சென்ட் சபையை உருவாக்கிய போது சோல்பரி குழுவினர் இரு பிரதான காரணங்களை சொன்னார்கள். ஒன்று அறிஞர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்றால் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல்கள் மூலம் வரமாட்டார்கள், பின்வாங்கி விடுவார்கள்.  எனவே அவர்களை கண்டறிந்து நியமிக்க வேண்டும். அவர்களை அரசியலில் ஈடுபட செய்து அவர்களின் மூளை அறிவை பெற வேண்டும். இரண்டாவது, சிறுபான்மையினங்களின் உரிமைகளுக்கு இடம் கொடுக்க செனட் சபை உதவும். அவர்களின் பிரச்சினைகளை கையாள உதவும். மூன்றாவது அவசரப்பட்டு ஒற்றைச் சபை தீர்மானத்தை எடுப்பதற்கு பதிலாக இரு சபைகள் இருந்தால் தீர்மானங்களை அவசரப்பட்டு போற போக்கில் எடுக்காமல் தாமதித்து புத்திசாலித்தனமாக எடுக்க உதவும். என்ற காரணங்கள் சொல்லப்பட்டன.

இதில் ஒரு காரணம் சிறுபான்மை இனங்களின் தீர்வுக்கான வாய்ப்பு இருக்கும் என்பது. அமெரிக்காவில் செனட் சபையில் அங்கத்துவம் சம்பந்தமான விடயத்தில் யாரும் சட்ட திருத்தம் கொண்டு வர முடியாது.  ஜனாதிபதியோ, மாநிலங்களோ யாருமே கொண்டுவர முடியாது. இலங்கையில் ஒரு செனட் சபை இரவோடிரவாக கலைக்கப்பட்டு விட்டது.  இதுதான் யாப்புப் பின்னடைவு. சிறீமாவோ பண்டாரநாயக்கா பதவிக்கு வந்த போது, செய்த முதல் வேலை செனட் சபையை ஒழித்தது தான். எந்த சிறுபான்மை இனத்திடமும் கேட்கவில்லை. தமிழ்மக்களிடமும் கேட்கவில்லை. அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா  சமஜாவாஜ கட்சி, கொம்மியூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்றும் சேர்ந்து வந்த ஆட்சி ஒரு இரவிலே அதனை மாற்றியது. இது தான் இலங்கையின் அரசியல் கலாச்சாரம். இதற்குள் அரசியல் தீர்வை காண முடியுமா?

அமெரிக்காவின் அரசியலில் பிரதானமாக ஒரு விடயம் இருக்கிறது. அரசியலில் அவர்கள் பெரும்பான்மைவாதத்தை நிராகரிக்கிறார்கள். அரசியல் யாப்பை உருவாக்கிய ஸ்தாபக கர்த்தாக்கள் “will of the people not  majority of the people”    என்ற கருதுகோளை முன்வைத்தார்கள். வாக்குகளினுடைய எண்ணிக்கையால் அல்ல, மக்களின் அபிலாசைகளால் தான் அரசியல் ஜனநாயகத்தை எடை போட வேண்டுமென சொன்னார்கள். மக்கள், இனம், மொழி, அவர்களின் அரசியல் சக்தி தொடர்பாக காணப்படும் அபிலாசைகளைத்தான் அவர்கள் ஒரு தேசத்தின் will என்று சொன்னார்கள். அரசியலில் அங்கு திரண்டிருக்கின்ற மக்களின் will வேண்டும். பெரும்பான்மை அல்ல. ஆனால் இலங்கை அரசியல் யாப்பின் பிரதான குணாம்சமே பெரும்பான்மைவாதம் தான். அமெரிக்க அரசியல் யாப்பின் பிரதான அம்சமாகிய மக்களின் அபிலாசை (will of the people) இற்கும் பெரும்பான்மைவாதம் (majoritarianism) இற்கும் இடையிலுள்ள வேறுபாடு மிகவும் பாரதூரமானது. Will of the people  என்று இருப்பதனால் தான் மிகச் சிறிய மாநிலத்துக்கும் இரண்டு செனட்டர்களை வழங்கினார்கள். மிகப் பெரிய மாநிலத்துக்கும் அவ்வாறே செய்தார்கள். அங்கே நான்கு அல்லது ஐந்து சிறிய மாநிலங்களை தூக்கி ஒரே மாநிலத்துக்குள் உள்ளடக்க கூடியவாறு அளவு வேறுபாடு இருக்கிறது. அப்படியிருந்தும் சிறிய மாநிலங்களின் will of the people ஐ அங்கீகரித்தார்கள். ஆனால் இங்கே தமிழ் மக்களுடைய will க்கு எந்தவிதமான மதிப்பும் கிடையாது.

சோல்பரி அரசியல் யாப்பை உருவாக்கிய போது செனட் சபைக்குள்ளால் மக்களுடைய குரல்கள் வர முடியும் என்று அவர்கள் கருதினர். சோல்பரி இலங்கையினுடைய அரசியல் யாப்பை உருவாக்கிய போது  தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய பிரச்சினைகள் அடிப்படையாக வைத்தே 29 ஆவது சரத்தை வழங்கினார்கள் என்று பலர் வெளியில் பொய்யாக பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மையான சூட்சமம் அதுவல்ல. அரசியல் யாப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கிறிஸ்தவர் என்னிடம் கூறினார், சோல்பரி 29 ஆவது சரத்தை கொண்டு வந்ததன் பிரதானமான உள்நோக்கம் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் இலங்கையில் அருகிக் கொண்டு போவதை தடுப்பது தான் என்று. சிங்கள பௌத்தர்களான பண்டாரநாயக்கா, டி.எஸ் சேனநாயக்கா போன்றோர் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள். உயர் குழாத்தை இருந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் அரசியல் அதிகாரத்துக்காக கிறிஸ்தவர்களாக மாறி பிரிட்டிஷ் காரர்களுடன் ஒத்துழைத்து நடந்தார்கள். டொனமூர் அரசியலமைப்பு வந்ததன் பிற்பாடு அவர்கள் புத்த மதத்தினராக மாறுகின்றார்கள். பெரும்பாலான கத்தோலிக்கர்கள் மீனவ சமூகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மாறவில்லை.

இங்கு சோல்பரி சிங்கள அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களை பாதுகாப்பதற்கு என்று கொண்டு வந்த சட்டத்தை எல்லா சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புக்கு என்று  சொன்னார். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 29 ஆவது சரத்து தூக்கி எறியப்பட்டது.  29 ஆவது சரத்து தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் சிறிய பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது.  சாதாரண சட்டமாக இருந்த சிங்கள மொழி சட்டத்தை   அரசியல் யாப்பு ஏற்பாடாக மாற்றினார்கள். அவர்கள் சட்டங்களை எப்படி கழட்டுகின்றார்கள். பின் தங்களுக்கு ஏற்ற மாதிரி எப்படி பூட்டுகின்றார்கள் என்று பாருங்கள்.  

பௌத்த மதத்துக்கு முதன்மை அளிப்பதும், அதனை பேணி  பாதுகாப்பதும் அரசின் கடமையும் பொறுப்பும் என்று யாப்பில் எழுதிவிட்டார்கள். இவ்வாறாக இலங்கையின் அரசியல் யாப்பில் எப்போதுமே தங்களுக்கு தேவையான வகையில் பெரும்பான்மைவாதம் செயற்படும். இந்த  செயற்பாட்டுக்குள் தான் எல்லோரும் நாங்கள் தொடர்ந்தும் சிக்குண்டு இருக்கின்றோம்.

1944 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஒற்றையாட்சிக் கட்சியாக பதிவு செய்து கொண்டது.  1946 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு வெளிவருகின்றது. சோல்பரி அரசியல் யாப்பிடம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஒற்றையாட்சியைத் தான் கோரியது. அதற்குள் ஐம்பதுக்கு ஐம்பதை பிரதிநிதித்துவமாக கோரியது. நிலத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்சி சோல்பரியிடம் தீர்வை கோரியது. ஆனால், வெறுமனே அரசியல் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட யாப்பு மட்டுமே சோல்பரியால் முன்வைக்கப்பட்டது.  இவ்வாறு முன்வைக்கப்பட்ட இந்த சோல்பரி அரசியல் யாப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் நிராகரிக்கப்பட்டது.  அதனை தமிழ்மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு நடைமுறைக்கு வந்த போது ஒற்றையாட்சி என்ற காரணத்துக்காக அல்ல தமிழர்களுக்கு உரிமை கொடுக்க மறுத்ததற்காக அந்த யாப்பை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நிராகரித்தது.  

நிராகரித்ததன் பின்பு, டி.எஸ் சேனநாயக்கா  ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ்  பிரதமராக இருக்கும் போது  ஒற்றையாட்சி மந்திரி சபை இருக்கிறது.  இந்த ஒற்றையாட்சி மந்திரி சபையில் 1948 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தமிழ் காங்கிரசின் தலைவர் அமைச்சராக இணைந்து கொள்கிறார். உண்மையான அர்த்தத்தில் பார்த்தால் தமிழ் மக்களை தலைமை தாங்கிய கட்சி ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டது என்று அர்த்தம்.  நாட்டில் சட்டத்தை நிர்ணயிப்பது நாடாளுமன்றம்.  நிர்வாகத்தை நிர்ணயிப்பது அமைச்சரவை. அமைச்சரவையின் கீழ் கையெழுத்திடுவது மற்றும் சோல்பரி அரசியல் யாப்பு செயற்பட உதவுவது எல்லாம் நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம்.  யாப்பின் கீழ் சட்டசபையில் அங்கத்தவராக இருந்தாலும் யாப்பை எதிர்த்துக் கொண்டு இருக்க முடியும். ஆகவே சட்டசபையில் அங்கத்துவமாக இருப்பது வேறு விடயம்.  ஆனால் மந்திரியாக இருந்தால் எதிர்க்க முடியாது. மந்திரி என்பவர் அந்த யாப்பின் மீதான நடைமுறையை அப்படியே செயற்படுத்துபவர்.

முதலாவது அர்த்தத்தில் சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் அமைச்சர் பதவி ஏற்ற அன்றிலிருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ்த் தலைவர்கள் அந்த யாப்பை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்று அர்த்தம்.  பொன்னம்பலம் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொண்டு விட்டார்.  இதற்கு பிறகு 1965 ஆம் ஆண்டு டி.எஸ் சேனநாயக்கா மகன் டட்லி சேனநாயக்கவுடன் பொன்னம்பலம் செல்வநாயகம் இணைந்த கூட்டரசாங்கத்தில் செல்வநாயகம் அமைச்சர் பதவியை  பொறுப்பேற்றார்.  அவர் ஒரு நிபந்தனையை முன்வைத்த பின்னரே அப்படி செய்தார் என்று சின்ன சாக்குப் போக்குச் சொல்லலாம். அவர் மாவட்டசபையை தொடர்ந்து உள்ளூராட்சி சபையை ஏற்றுக் கொண்டார்.  அவர் அதிகாரமுள்ள அமைச்சராக இருந்தவர்.  ஐந்து ஆண்டுகள் அமைச்சரவை தீர்மானங்களின் பங்காளி. எனவே செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும்,  1965 - 1970 வரையும் சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

இது பற்றி நாங்கள் ஆழமாக சிந்திக்காததனால் நாங்கள் மேலெழுந்த வாரியாக பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.  டட்லி - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. என சொல்கிறோம். டட்லி - செல்வா ஒப்பந்தம் ஒரு நிர்வாக ஏற்பாடு. அது ஒரு அரசியல் ஏற்பாடு கிடையாது. அரசியல் ஏற்பாடு அல்லாத ஒரு நிர்வாக ஏற்பாடு ஒப்பந்தத்தை எழுதிவிட்டு கிழித்து இருக்கிறார்கள். இந்த நிர்வாக ஏற்பாட்டை நாங்கள் பெரிய ஒப்பந்தம் என கட்டிக் காவி  இன்று வரை பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்காக தந்தை செல்வா நிச்சயமாக வரலாற்றில் கண்டிக்கப்படுவார். அப்படி அந்த ஒப்பந்தம் எழுதியதற்கான முழுப் பின்னணியும் உங்களுக்கு தெரிய வந்தால் நீங்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பார்கள்.

நிச்சயமாக எனக்கு 100 வீதம் தெரியும். அந்த ஒப்பந்தத்தை எழுதியவர்கள் சம்பந்தப்பட்டவர்கள், அந்த ஒப்பந்தம் எழுதிய போது டட்லி சேனநாயக்கா தன் பச்சை மை பேனையினால் ஆங்காங்கே வெட்டி வெட்டி திருத்தினார். அந்த திருத்தப்பட்ட  வரைபை என் கண்ணால் பார்த்தேன். முழுமையாக எழுதப்பட்ட ஒப்பந்தமாக அல்லாமலே  ஒரு ஆவணமாக தயாரிக்கப்படாமலே அந்த ஒப்பந்தத்துக்கு இவர்கள் உடன்பட்டுப் போனார்கள். அந்த ஒப்பந்தம் இன்று எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். காவலூர் நவரட்ணத்திடம் இருந்து வாங்கி தான் நான் அந்த ஒப்பந்த பிரதியை பார்த்தேன்.  இதைப்பற்றி யாரும் விலாவரியாக பேசியது சிந்தித்ததோ கிடையாது.

இங்கு தான் நாங்கள் எல்லாவற்றையும் அடிப்படையில் தத்துவார்த்த ரீதியில் அரசியலைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.  வெறுமனே சம்பவங்களிலும் நபர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் பார்க்கக் கூடாது என்று திட்டவட்டமாக சொல்வேன்.    எவராயிருந்தாலும் நபர்கள் மீது நம்பிக்கை வைத்து அரசியலை பார்க்காது,   அவர்களுடைய செயற்பாடுகள், அதன் மூலம் மக்கள் பெறும் விளைவுகள் அதற்கூடாகவே இதனை பார்க்க வேண்டும். காரணமும் அதன் விளைவும் (cause and effect) என்பதற்குள்ளாலேயே ஓர் அரசியல், அரசியல் தலைவன், அரசியல் தலைமைத்துவம், அரசியல் வழிநடத்தல், அரசியல் தீர்மானம் என்பன பார்க்கப்பட வேண்டும். காரணமும் அதன் விளைவும் என்ற கோட்பாட்டுக்குள் ஒரு விடயத்தை நாங்கள் மதிப்பீடு செய்துதான் சரியான பாதையில் எடை போடுவதற்கான பார்வையை எங்களுக்கு தரவல்லது.

இலங்கையின் அரசியல் விடயத்தை சிங்கள அரசியல் பக்கத்தாலும், இந்தியாவோடு சம்பந்தப்படுத்தியும் நாங்கள் எடைபோட வேண்டும். இதனை இன்றைய சர்வதேச அரசியல் போக்கோடு ஒப்பிட்டு பார்ப்போம். இலங்கையின் அரசியல் என்பது 100 வீதம் புவிசார் அரசியல் வரலாற்றின் வெளிப்பாடாகவே உள்ளது. இந்த புவிசார் அரசியல் வரலாற்று வெளிப்பாட்டில் இந்தியா - இலங்கை அரசு - ஈழத்தமிழர் இந்த மூன்று சக்திகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. இந்த புவிசார் அரசியல் என்பது முதலாவது அர்த்தத்தில் இந்த மூன்று சக்திகளோடும் சம்பந்தப்படும் அரசியலாகும்.

இரண்டாவது, இலங்கை - இந்தியா போன்ற நாடுகளோடு தொடர்புடைய உலக வல்லரசுகள் அல்லது வெளி சக்திகளுடைய நலன்கள் இந்த அரசுகளோடு சம்பந்தப்பட்டிருக்கும் அளவுக்கு ஏற்ப எங்கள் பிரச்சினை விரிந்தும் சுருங்கியும் போகும். இலங்கையின் புவிசார் அரசியல் என்பது பாக்கு வெட்டிக்குள் அகப்பட்டிருக்கும் பாக்கு போன்று இருப்பது ஒருபுறமிருக்க, இந்த இரண்டு நாடுகளினதும் சம்பந்தப்படும் ஏனைய சக்திகளின் நலன்களோடு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.  இவை தான் இலங்கையின் அரசியல் யாப்பை காலம் காலமாக நிர்ணயிக்கின்றன. உலக சக்தியாக விளங்கும் பிரித்தானியர்கள் 1833 ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியல் யாப்பை அறிமுகப்படுத்திய போதே இந்தியாவை பாதுகாப்பதற்கான ஒரு காவல் அரணாக தான் இலங்கையை வைத்திருந்தார்கள். பிரித்தானியருடைய பார்வையிலும் நடைமுறையிலும் ஒரு இராணுவ முகாம் தான் இலங்கை. அதனை வெற்றிகரமாக  செயற்படுத்தினார்கள்.

இந்த வகையில் புவிசார் அரசியல் என்பது தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும். இதனை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளத் தவறினால் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல் பேச வேண்டி வரும்.  பிராந்திய சக்திகள் சர்வதேச நியமங்களை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவர்கள். சர்வதேச கட்டமைப்பு எப்படி அடித்தளத்தில் இருந்தாலும் அவ்வப்போது அந்தந்த பிராந்தியங்களில் காணப்படும் அரசுகளும் அந்த அரசுகளோடு கூட்டு சேரும் அரசுகளும் சேர்ந்து சட்டம் அதற்கு கீழே விதி வளம் அதனை உருவாக்குகின்ற ஆற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது எப்போதும் உண்மையானதாக இருக்கும். உக்ரேனுக்குள் ரஷ்யா தனது படையை அனுப்பியுள்ளது. அது ரஷ்யாவின் புவிசார் அரசியல் நலனோடு மிகவும் பின்னிப் பிணைந்தது. ரஷ்யா தனது பாதுகாப்புக்காக புவிசார் அரசியல் நலனை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.   நேட்டோவோடு உக்ரைன் சேராமல் இருந்தால் தான் படைகளை விலக்குவதாக ரஷ்ய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.  ஒரு பிராந்திய அரசு தன் பிராந்தியத்தில் தன்னுடைய காலை 100 வீதம் பதிக்கும். இலங்கை இந்தியாவில் இருந்து 27 கிலோமீற்றர் தொலைவு. சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் 167 கிலோமீற்றர் தொலைவு. அங்கே 167 கிலோமீற்றர் தொலைவு தாண்டியும் சீனா தன் புவிசார் அரசியலை பேணுவதில் குறியாக உள்ளது. 100 கிலோமீற்றர் தாண்டியும் புவிசார் அரசியல் நலன் எப்படி உள்ளது எனப் பாருங்கள். எனவே புவிசார் அரசியலை நீங்கள் யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது தீர்க்கமான ஒரு பாத்திரம் வகிக்கும். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல புவிசார் அரசியலுக்கு அடிப்படையான பலம் உள்ளது. இலங்கை இந்தியாவின் புவிசார் அரசியல் பூட்டுக்குள் இருக்கின்றது என்பதுதான் உண்மை. இன்று சிங்கள மக்கள் அரைவாசிக்கும் மேல் அந்த பூட்டை உடைத்திருக்கிறார்கள். இந்த நிலத்தை பிய்த்துக் கொண்டு போய் ஆயிரம் மைலுக்கு அப்பால் இலங்கையை கொண்டு போய் சிங்களவர்கள் இடம்மாற்றவில்லை. மாறாக பூகோள அரசியலை சரியாக கையாண்டு பூகோள அரசியல் பூட்டை அவர்கள் வலுவிழக்க பண்ணி இருக்கிறார்கள்.

1949 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றம், அல்லை - கந்தளாய் குடியேற்றத்துடன் தான் இந்தக் குடியேற்றம் எழும்புகிறது. தமிழர் தாயகத்துக்கு வைக்கப்பட்ட பெரிய ஆப்பு அது தான். அதனை தொடர்ந்து அவர்கள் எல்லா இடங்களையும் முன்னேறி விட்டார்கள்.  கிழக்கு மாகாணம் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த மாகாணமாகி விட்டது.  அங்கே முஸ்லிம்களும், சிங்களவர்களும் 60 வீதம். இந்நிலை இப்போது முல்லைத்தீவுக்கு வந்து விட்டது.  தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்குவதில் அவர்கள் புவியியல் ரீதியான வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள். புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிணக்கை உருவாக்கினார்கள். பின் சண்டை நடந்தது.

இந்த சண்டைக்கு பின்பு மூன்று விதமான பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தது. ஒன்று, விடுதலைப்புலிகள் இரண்டு, ஈழத் தமிழ்மக்கள் மூன்று, இந்தியா. புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த சண்டையை சரிவர பயன்படுத்தி இந்தியாவினுடைய வார்த்தைகளுக்கு கீழ் 13 ஆவது திருத்தத்தை வடக்கு கிழக்கை அரசியல் ரீதியாக இணைத்து விட்டு அதனை நாடாளுமன்றத்துக்குள்ளால் நுணுக்கமாக ஆப்பு வைத்து பிரித்து விட்டார்கள்.  புலிகளை அழிக்க வேண்டும் என்ற காலகட்ட தேவையின் பின்னணியில் இந்தியா இதனைக் கண்டுகொள்ளாது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நீதிமன்ற தீர்ப்புக்குள்ளால் அந்த பிரிப்பை செய்து விட்டார்கள். இங்கு ஒரு விடயம் மிகவும் முக்கியமானது. வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது நாடாளுமன்றத்துக்குள்ளால் இணைக்கப்படாமல் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மட்டும் இணைத்தமை தான் பிழையானது. ஆகவே செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியென்றால் மீண்டும் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கூடாக இந்த வடக்கு - கிழக்கு இணைப்பை செய்ய முடியும். இந்த விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருந்து விட்டது.  புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கிற பிரச்சினை ஒருபுறமிருக்க தமிழ்மக்களின் நலன் என்பது இன்னொரு புறமிருக்கிறது.

புலிகளின் தோல்வி முதலில் நிகழ்ந்தது கடலில். அது தான் தரை தோல்வியையும் நிர்ணயித்தது. புலிகளின் 12 ஆயுதக் கப்பல்கள் தோற்கடிக்கப்பட்ட பின் தான் தரையில் அவர்களை தோற்கடிக்கப் பட்டார்கள்.  எனவே புலிகளுக்கு சாதகமாக இருந்த கடல் புவிசார் கடல் தான். அந்தக் கடலில் இந்தியா புலிகளோடு ஒத்துழைக்காத காலத்தில் இலங்கை அரசாலும், அமெரிக்காவாலும், இந்தியாவாலும் அந்தக் கடலை கையாளக் கூடிய சூழலில் புலிகளை தோற்கடிப்பது இலகுவாக இருந்தது. புலிகளின் தோல்வி என்பது புவிசார் அரசியல் தோல்வி. இப்போது குடியேற்றங்களாலும் புவிசார் அரசியல் பூட்டை உடைக்கிறார்கள். இப்போது கடலில் இலங்கை அரசு தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்துகின்றது. எனவே கடலிலும் ஈழத்தமிழர்கள் சார்ந்த புவிசார் அரசியல் பூட்டு உடைகிறது. கடலிலும் உடைகிறது, தரையிலும் உடைகிறது. இதனை நாம் தெளிவாக பார்க்க வேண்டும். இதனை குறுங்காலத்தில் சரி செய்யாது விட்டால் ஈழத்தமிழர்களுக்கும் நல்லதல்லை, இந்தியாவுக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல. நான் இங்கு எல்லா விடயங்களிலும் வரலாற்றில் நல்லது நடக்க வேண்டும் என்கிற அவாவோடும் அதன் போக்கோடும் தான் கதைக்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழான வடக்கு - கிழக்கு    தற்காலிக இணைப்பை நீதிமன்ற தீர்ப்பினால் உடைத்தமையை இணைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட முறையில்  இருக்கிறது என ஏன் கண்டு பிடிக்கவில்லை. எனவே இந்திய சட்டவாளர்களுக்கு வரலாற்றில் விழுந்த பெரிய பின்னடைவாக இதனை நோக்க வேண்டும்.  இதனை இந்தியா இனியாவது சரி செய்ய வேண்டும். ஜனாதிபதி நாடாளுமன்றுக்குள்ளால் அறிவித்ததால் மீண்டும் இணைப்பு உடனே சாத்தியமாகி விடும். இங்கே ஒரு பிரச்சினையும் கிடையாது. அரசியல் அடிப்படையிலான நகர்வு தான் இங்கே முக்கியமானது. இலங்கை அரசியலை சிங்களவர்கள் எப்படி நகர்த்தி செல்கின்றார்கள். தமிழ் தரப்பில் எதுவுமே  இல்லை. நாங்கள் இலட்சியங்களையும் வாய் வீச்சு தத்துவங்களையும் பேசுகின்றோமே தவிர நடைமுறையில் எங்கள் மக்களை பாதுகாப்பதற்கான ஏதுக்களை நடைமுறை சார்ந்து சிந்திப்பதாக இல்லை. முற்றிலும் கற்பனாவாதத்தில் இருந்து விடுபட்டு நடைமுறை சார்ந்து மக்களை பாதுகாக்க கூடிய கடைசி எல்லை வரையும் போவது பற்றி சிந்திக்க வேண்டும். எதுவரை போய் எங்கள் மக்களைக் காப்பாற்ற முடியுமோ? எதுவரை போய் எங்கள் மக்களுக்கு விமோசனமளிக்க முடியுமோ? அதுவரை போவதற்கான அறிவியலை புதிய தலைமுறையை சேர்ந்த நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக 1980 களின் மத்தியில் புவிசார் அரசியல் பற்றி மிகவும் ஸ்திரமான வளர்ச்சியை தமிழ்ப்பரப்பு அடைந்திருக்கிறது. ஆனால் அரசியல் அர்த்தத்தில் அவை சரிவர பிரயோகிக்கப்படவில்லை. அது வேறு விடயம். அறிவியல் ரீதியான அர்த்தத்தில் மிக கணிசமான வளர்ச்சி உள்ளது. புவிசார் அரசியல் தெளிவுள்ள இம்மண்ணை சேர்ந்த பலர் பல்வேறு நாடுகளிலும் சிதறிப் போயுள்ளார்கள்.

இத்தகைய பின்னணியில் இலங்கை அரசாங்கம் இப்போது என்ன செய்யப் போகின்றது. அரசியல் தீர்வு பற்றி சொல்கிறது. அரசியல் யாப்பை உருவாக்க போவதாக சொல்கிறது. எளிமையாக சொல்கிறேன். இலங்கையின் அரசியல் யாப்பில் தமிழ்மக்களுக்கான தீர்வுகள் எவையும் முன்வைக்கப்பட மாட்டாது.  நிலம் சம்பந்தமான தீர்வுக்கு போவதில்லை என்பது அவர்களுடைய தாயகம் சார்ந்த கோட்பாட்டுக்கு அவசியமானது.  ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே எல்லை, ஒரே அரசு, ஒற்றையாட்சி என்பது அவர்களுடைய கொள்கை.  இதற்கு நிலத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு பாதகமானது. ஆகவே நிலத்தை அடிப்படையாக கொள்ளா விட்டால் தீர்வில்லை.  கடந்த நூறாண்டு இலங்கையின் வரலாற்றில் நிலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரே ஒரு அரைகுறை ஆவணம்  13 ஆவது திருத்த சட்டம் தான்.  சிங்களவர்கள் நிலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வுக்கும் ஒரு போதும் வர மாட்டார்கள்.  இப்போது புதிய அரசியல் யாப்பொன்றை அவர்கள் கொண்டு வருவதாக சொன்னாலும், அவர்கள் ஒரு போதும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை நிலத்தை அடிப்படையாக கொண்டு வரமாட்டார்கள்.  எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இரண்டாவது, இலங்கையின் அரசியல் யாப்பு கலாசாரத்தில் அவர்களிடம் இருப்பது ஒற்றைவாதக் கோட்பாடு.  அதனை நான் நாசிசம் என்று சொல்வேன். நாசிசம் என்பது என்னவென்றால் இனவாதம், ஏதேச்சதிகாரம், ஆக்கிரமிப்புவாதம், ஏனைய இனங்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளாமை, தான் சார்ந்த ஓரினத்தன்மையை அரசியலாக்குவது, இனப்படுகொலை, மனிதப்படுகொலை, இவ்வளவத்துக்கும் பெயர் தான் நாசிசம். ஆகவே இலங்கை அரசு வைத்திருக்கின்ற அரசியல் கோட்பாடு என்பது  நியோ நாசிசமாக அல்லது ஓரின கோட்பாடாக காணப்படுவதுடன்  அது அரசியல் யாப்பு கலாசாரத்தை பெரும்பான்மை ஆகப் பார்க்கிறது. அதன்படி அரசியல் யாப்பு என்பது தொடர்ச்சியாக திரிபுக்கு போகிறது. வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை பிரித்ததும் ஒரு திரிபு தான். தமிழ்மக்களுக்காக இருக்கின்ற ஏதாவது ஏற்பாடுகளை தூக்கி எறிவீர்களாக இருந்தால், அரசியல் ரீதியாக இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை தூக்கி எறிந்தால், தமிழ்மக்களின் நிர்வாக ரீதியான நலன்களை தூக்கி எறிந்தால், அது யாப்பு பின்னடைவு (deevalution) என்பதற்குள் வரும்.

எனவே மொத்தத்தில் இலங்கை அரசியல் யாப்பில் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு யாப்பு கலாசாரத்தில் இல்லை. ஆதலினால் யாப்பு கலாசாரத்துக்குள் தீர்வை தேடுவது என்பது சுத்த அபத்தம். அப்படி நிகழும் என்று நினைப்பதும் சுத்த அபத்தம். அப்படி நிகழும் என்று நினைப்பது கடந்த நூறாண்டு கால அனுபவத்தில் நடக்கவில்லை என்று சொல்லலாம். நானே தலைவன் என்று சொல்கின்ற ஒரு தலைவனின் கீழ், நான் சிங்கள பௌத்தர்களின் தலைவன் என்று சொல்பவரின் கீழ், ஒற்றைவாத அரசியல் போக்கையே தனது கொள்கையாக வைத்திருக்கும் ஒரு தலைவனின் அரசியலின் கீழ் ஒரு அரசியல் யாப்பு தீர்வு வரும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. இங்கே இறுதியும் அறுதியுமாக சொல்வது இது தான். இந்தப் பிராந்தியத்தின் மொத்த நலன் கருதி ஈழத்தமிழ் மக்களுடைய  புவிசார் அரசியல் அடிப்படையில் அவர்களின் முழு நலனும் பாதுகாக்கப்படும் ஒரு  பின்னணியில் தான் இந்தப் பிராந்தியத்துக்கு அமைதி உண்டு. அதற்கேற்ற அரசியல் தீர்வு ஒன்றுக்கு போக வேண்டும். அது யாப்பு ரீதியான தீர்வு கிடையாது. அப்படி நினைக்கும் ஒவ்வொரு கட்டமும்  சிங்கள தரப்பு வெற்றி பெறும். யாப்பு ரீதியான தீர்வு என்று ஒருவர் எவ்வளவு தூரம் யோசிக்கின்றாரோ அவ்வளவு தூரம் சிங்கள அரசுக்கு வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றார் என்பதே  அர்த்தம். இலங்கை அரசியலில் யாப்பு ரீதியான தீர்வுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒரு போதும் இடமில்லை. அது சிங்கள மக்கள் மத்தியில் வாழ்க்கின்ற எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி ஒற்றைவாதப் போக்குடையவர்களுக்கு மட்டுமே நன்மையாக இருக்குமே ஒழிய வேறொன்றும் இருக்காது. 

முடிந்தது.

நிமிர்வு வைகாசி 2022 இதழ் 

புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 01

புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும் - பகுதி 02

1 comment:

  1. மேலே கட்டுரை வடிவில் உள்ள உரையின் காணொலியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    புதிய உத்தேச அரசியல் யாப்பும் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வும்
    https://www.youtube.com/watch?v=E3onCc9-s6s

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.