இராஜபக்சவாதிகளின் களியாட்டம் தற்காலிகமாகவே நசுக்கப்பட்டுள்ளது


தென்னிலங்கை நிலவும் அனைத்து நெருக்கடிகளையும் கிரிக்கெட் வீரர் தசுன் ஷனக தற்காலிகமாக தீர்த்து வைத்து விடுவார் என்று அவர் மீது கவனம் திருப்பப்படுகிறது. 'அடிமைகள் தம்மை பிணைத்திருக்கும் இரும்பு சங்கிலிகள் மீது கூட காதல் கொள்வர்’ என்பதை நாம் அறிவோம். ஆதிக்க சித்தாந்தத்திற்கு அடிபணிந்தோரை விடுதலை செய்வது மிக கடினமான ஒரு பணியாகும். இதை இன்னொரு வழியில் சொல்ல வேண்டுமானால், தேய்ந்து போன சங்கிலிக்கு வர்ணம் பூசி அதன் மீது காதலை ஏற்படுத்த தெற்கின் பெரும்பான்மையினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இன்று அல்லது நாளை இல்லாவிட்டாலும், ஒருநாள் நாமல் இராஜபக்ச எமது ஜனாதிபதியாக வருவார் என்பது நிச்சயம். இராஜபக்ச கலாச்சாரம் என்கின்ற சிவப்பு கம்பளத்தின் மீதுதான் பாடலி சம்பிக்க ரணவக்க உலாவி வருகின்றார். ஜே.வி.பி., சரத் பொன்சேகா ஆகியோர் இருவரல்ல. இருவரும் ஒருவரே. கறுப்பு ஜூலையை நடத்தியவர்களின் சந்ததியினருக்கு தங்கள் கைகள் தூய்மையானதென காட்ட முடியாது. தேர்தல் நடைமுறையின் ஊடாக தெற்கில் முடிசூடவுள்ளவர்கள் அனைவருக்கும் இருப்பது ஒரே வேர்கள் தான். அவை ஏதோவொரு வகையில் சிங்கள இனவாதமே.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், போராட்டங்களை தொடர்ந்து கண்டித்து வந்த தெற்கின் பெரும்பான்மை மக்கள், நுகர்வுப் பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாகத் தான் வீதிக்கு இறங்கினர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடைகளில் வரிசைகளுக்கு பதிலாக எந்த விலையிலாவது எரிபொருள், எரிவாயு, தொடர்ச்சியாக மின்சாரம் என்பன கிடைத்திருக்குமானால் பொதுமக்கள் கோ ஹோம் கோட்டா என்று சொல்லியிருக்க மாட்டார்கள். அதனாற்தான் காலிமுகத்திடலில் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டது.

எப்படியோ இப்போது சோடா போத்தல் உடைந்துள்ளது. ஆனாலும், வழமை போல தென்னிலங்கை மக்கள் அழுத்தங்களுக்கு பழக்கப்பட ஆரம்பித்துள்ளனர். என்னதான் நியாயம் சென்னாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகளுக்கு தீயிட்டமையை ஏற்க முடியாது.’ ‘அமரகீர்த்தி அத்துகோரல ஒரு அப்பாவி.’ ‘சமிந்த லக்‌ஷன் வீணாக கொல்லப்பட்டார்.’ ‘இராஜபக்சகள் தவறான தலைமுறையுடன் மோதிவிட்டனர்.’ என்று தான் இந்தப் போராட்டக்காரர்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதப் போராட்டங்களை நிராகரிக்கும், அஹிம்சைவாத, வன்முறையற்ற, அரசியல் தெளிவற்ற, கலைப் போராளிகள் என்றுதான் இவர்களை நாம் சொல்ல வேண்டும். 

‘காலிமுகத்திடலில் நடக்கும் போராட்டம் இந்நாட்டு வரலாற்றில் இடம்பெறும் மிகப்பெரிய போராட்டமாகும்.’ ‘இலங்கை வரலாற்றில் எந்த ஒரு தலைமுறையும் இப்படியானதொரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தியதில்லை.’ இவ்வாறாக அரசு, எதிர்க்கட்சி போன்றே, தெற்கின் போராட்டக்காரர்களும், மக்களும் வரலாற்று ரீதியான நகைச்சுவைகளை வழங்கி வருகின்றனர்.

தென்னிலங்கையின் நிலவரம் இந்தப் போராட்டத்துக்கு சாதகமாக இருக்கின்றது. போராட்டக்கார்கள் குறித்து தென்னிலங்கையில் நிலவும் மனோபாவமும் ஒப்பிட்டளவில் சாதகமாக காணப்படுகிறது. போராட்டத்தை தாக்கினால் தவிர்க்க முடியாமல் ஆளும் வர்க்கத்திற்கு நட்டம் ஏற்படும். இக்காரணங்களால் போராட்டம் பாகாக்கப்பட வேண்டுமென்பது குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றது. இதனால் பலர் மௌனமாக இருக்கின்றனர், சிலர் போராட்ட களத்துக்கு செல்கின்றனர். இப்படிச் சென்றவர்கள், பல இன்னல்கள், முதலாளித்துவ அரசியல் திட்டங்கள், தொழிற்சங்கப் பிரச்சாரங்கள், இனவாதம் இல்லையென்று சொல்லுகின்ற விழாக்கள் என்பனவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அதற்குள் நிற்கிறார்கள். இதுஅவர்களின் பலத்தைக் காட்டவில்லை. மாறாக அவர்களின் நிலையாமையை காட்டுகிறது.

கோத்தா கோகம ஒரு கம்யூனிச சமுதாயத்தின் மாதிரி என்று சுட்டிக்காட்ட விரைந்தவர்களின் அரசியல் ஞானம், விக்டர் ரத்நாயக்கவை ஜனரஞ்சகப் பாடகராக வளர்த்த சிறுபிள்ளைத்தனம், சுனில் போலவும் நந்தா போலவும் மீண்டும் மீண்டும் வேஷம் போட்டுக் கொண்ட சிறுபிள்ளைத்தனம், நாட்டின் காவல் தெய்வங்களுக்கு மலர்களை சமர்ப்பித்த செயற்பாடுகள் என்பவற்றையெல்லாம் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.

‘தமிழரது விசேட பிரச்சனைக்கு இப்போராட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்தால் இப்போராட்டத்தால் முதலாளித்துவத்திற்கு ஏற்படும் நெருக்கடி குறைக்கப்பட்டுவிடும். வர்க்கப் பிரச்சனையின் முக்கியத்துவமும் குறைந்து விடும்.’ என்று போலியான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களின் மனப்பான்மை ‘வடக்கு எங்களுடையது. ஆனால் வடக்கின் பிரச்சினைகள் எங்களுடையதல்ல.’ என்பதாகத்தான் இருக்கிறது. 

கம்யூனிச சமுதாயம் உருவாவது வெகு தொலைவில் இல்லை, ஆகவே தேசிய அரசை உருவாக்குவது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் போலியாக சொல்லப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட வாதங்களை தெரிவிப்பவர்களின் முக்கிய குற்றச்சாட்டு யாதெனில், நாம் குற்ற உணர்ச்சியாற்தான் வடக்கே திரும்புகின்றோம் என்பதாகும். முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டம் பிரதானமானது என்கின்ற அதேவேளை அந்தப் போராட்டம் வடக்கிலும் நடக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம். பிரிவினைவாதம் என்பது முதலாளித்துவ சித்தாந்தத்தால் நமக்கு முன்வைக்கப்படும் மாயை அல்ல. இருப்பினும் இது பொதுவான பார்வையாகும். பிரிவினைக் கோட்பாட்டையிட்டு சோசலிஸ்டுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சோசலிச அரசுகள் உருவாக்கப்படும் நாள் தேசிய அரசுகள் ஒழிக்கப்பட முடியும். அதுவரை குறைந்தபட்சம் சமஷ்டி ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு போராட்டக்காரர்கள் அஞ்சத் தேவையில்லை.

அது மாத்திரமல்ல, இந்த தருணத்தில் கோத்தா கோகம நூலகத்திலிருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு சிங்களப் புத்தகங்களை எடுத்துச் செல்லுபவர்கள் குருந்தூர்மலையில் பௌத்த கட்டிடங்களைக் கட்டுவதற்கு எதிராகவும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழரின் சுயநிர்ணயத்துக்காக நேரடியானதும், நேர்மையானதுமான அரசியல் தலையீடு செய்யாது முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் போலியான நல்லிணக்க முயற்சிகளே.

வடக்குடன் நல்லிணக்கம் என்கின்ற ரீதியில் சில கலைப் படைப்புகளை தூக்கிப்பிடிக்கும் தெற்கின் செயற்பாடு, தெற்கு வடக்கை தங்களது தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ‘வேறுபாடுகளை களைய அன்பை முன் வைப்போம்’ என்று வெற்றுக் கோசங்களை முன்வைப்பதை விடுத்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக தென்னிலங்கையில் குரல் எழுப்ப வேண்டும். 

வடக்கின் மூன்று தசாப்த கால கடின உழைப்புக்கும், தெற்கின் பயங்கரவாதத்தால் தோற்கடிக்கப்பட்ட அவர்களின் அனைத்து வெற்றிகளுக்கும், அவர்களின் வலிமிகுந்த தியாகங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். இவை செய்யப்பட வேண்டியவை. இது குற்ற உணர்ச்சியால் வந்தது என்று அவர்கள் கூறிக் கொண்டு இருந்தால் இவற்றை செய்வதற்கான சூழல் உருவாக்கப்படாது.


சிங்களத்தில் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி 

தமிழாக்கம் - நிமிர்வு

நன்றி: www.nivahal.com

நிமிர்வு ஆடி 2022 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.