ரணிலின் வருகையும் கோட்டா கோகம போராட்டமும்

 


இன்று இலங்கை தீவில் நடப்பது என்ன? அதை நாம் எவ்வாறு பார்க்கின்றோம்? எவ்வாறு புரிந்து கொள்கின்றோம்? அதில் தமிழ் மக்களும் ஒரு பங்குபற்றுனராக இருக்கின்றோமா? அல்லது வெறுமனே தூர நின்று பார்க்கின்றவர்களாக இருக்கின்றோமா? என்கின்ற பல கேள்விகள் இருக்கின்றன. முதலில் இங்கு நடப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் வாயு தட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் இல்லாமை என்கின்ற காரணங்களினால் தான் ஆரம்பத்தில் “கோட்டா கோ ஹோம்” என்கின்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த பெற்றோலியம், எரிவாயு மற்றும் மின்சார தடை போன்ற காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போது, அரசியல் பரிமாணம் கொண்டதாக இல்லாது, வெறுமனே சுயதேவையின் பற்றாக்குறையால் ஏற்பட்ட உந்துதலினால் உருவான ஒரு  போராட்டமாகத்தான் எல்லோராலும் அவதானிக்கப்பட்டது. 

ஆனால் இரண்டாம் வாரத்தின் பின் இலங்கையினுடைய சகல பல்கலைகழகங்களினுடைய மாணவர்கள் ஒன்றியம் (IUSF) போராட்டத்திற்குள் பிரவேசித்தது, அல்லது போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அது மக்கள் விடுதலை முன்னணி (JVP) அமைப்பினுடைய செல்வாக்குக்கு உட்பட்டது. அந்த அமைப்பு போராட்டத்தை அரசியல் பரிமாணம் கொண்டதாக மாற்றுவதற்கான முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபட்டது. என்றாலும், அரசியல் கட்சி சார்ந்ததாக இல்லாமல் அரசியல் மாற்றத்திற்கான ஒரு தளமாக அதை திறக்க வெளிக்கிட்டது. அதில் அந்த மாணவர்கள் அமைப்புகள், போராளிகள் எல்லோரும் சிறப்பாக வெற்றி பெற்றார்கள். அவர்கள் அந்த போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த பின்பு தான் புதியபரிமாணம் எடுத்தது. அதன் பின்பு அந்த போராட்டத்திற்கு நிரம்ப பங்காளிகள் வந்தார்கள். போராட்ட முறைகள் எல்லாம் மாறின.

போராட்டத்துள் ஒழுங்கு கட்டுப்பாடு என்பன பேணப்பட்டன. போராட்டம் ஏன் எதற்கு என்பதற்கு எல்லாம் தெளிவான கருத்துரைகள் எல்லாம் கூறப்பட்டது. இருந்தும் அந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய தனிமனிதனோ ஒரு கட்சியோ ஒரு குழுவோ சித்தாந்த விடயம் பற்றி யாருக்குமே எதுவும் தெரியாது. அவர்களும் இந்தவிடயத்தில் நிதானமாகவே தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றார்கள். ஏனென்றால் இந்த அரசியல் கட்சிகளை தூரத்தில் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது அவர்களது தெளிவான பார்வையாக இருக்கின்றது.

அவர்கள் ஆரம்பத்தில் முன்வைத்தது இந்த கோட்டா கோ ஹோம் என்கின்ற விடயம் இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச. எனவே அவர் இங்கிருந்து போக வேண்டும். அப்படி போவதன் மூலம் இந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்கின்ற ஓரு ஒற்றை பரிமாணத்தில் தான் இது ஆரம்பிக்கப்பட்டது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அது ராஜபக்ச குடும்பமே போக வேண்டும். அவர்களுடைய ஆட்சியே இருக்கக்கூடாது என்பதாக இருந்தது. பின்பு அடுத்த பரிமாணமாக இவர்களுக்கு முட்டுக் கொடுக்கின்ற ஒருவராக ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரி என்கின்ற பதவியினை ஏற்றுக் கொண்டு வருகின்ற போது இவரும் மிக முக்கியமான இலக்காக மாறினார். ரணில் விக்கிரமசிங்கவை “டீல் கோ கம” என்று போட்டுக்கொண்டார்கள். எல்லா விடயங்களிலும் ஏதோவொரு சூட்சும நாடகத்தை ஆடுகின்ற ஒருவராகவே ரணில் விக்கிரமசிங்கவை இந்த மக்கள் கருதிக் கொண்டனர்.

எல்லா இடங்களிலும் தன்னுடைய நலன்களை பாதுகாத்துக் கொள்கின்ற ஓர் ஆளாக ரணில் விக்கிரமசிங்க பார்க்கப்பட்ட போது அவர்களுடைய கோட்டா கோ ஹோம், டீல் கோ கமவாக மாறி கொஞ்ச காலத்திற்குப் பின் இன்னுமொரு பரிணாமம் எடுத்தது. அதாவது, இந்த நாட்டினுடைய அரசியல் கலாசாரம் முற்றாக மாற்றப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக மாறியது. அரசியல், கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகிய செயன்முறைகள் எல்லாம் மாற்றப்பட வேண்டும். அதற்கு இந்த நாடாளுமன்றமும் அரசியல் கட்டமைப்பும் எந்த விதத்திலும் பொருத்தமில்லை. எனவே அவர்கள் சொன்னார்கள்,  நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அத்தனை கள்ளர்களும் போக வேண்டும் என்று. 225 பேரும் ஏனையோரும் சேர்த்து எல்லோரும் போக வேண்டும் எனவே “ஹொரு கோ கம” என்றார்கள். திருடர்கள் போக வேண்டும் என்று சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் அரசியல் பரிமாணத்தில் விரிவடைந்து அவர்களது சிந்தனையும் செயற்பாடும் விவாதங்களும் கருத்துரைப்புகளும் விரிவடைந்து வந்த போது அவர்களுக்குள் ஒரு மிகத்தெளிவான தேடல் ஒன்று உருவாக்கப்பட்டது.

தற்போதுள்ள அரசியல் கலாசாரம் மட்டுமல்ல, அரசியல் தலைமைகள், அரசியல் கட்டமைப்பு, நாட்டின் அரசியலமைப்பு எல்லாமே மாற்றப்பட வேண்டும். வெறுமனே ஒருதனி மனிதனை மாற்றுவதன் மூலமோ ஒரு குழுவை மாற்றுவதன் மூலமோ இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்க முடியாது என்கின்ற அளவுக்கு அவர்களது பார்வை விரிவடைந்தது.

அதன் பிறகு அவர்கள் நிறைய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தார்கள். தமிழ்மக்கள் இந்த இடத்தில் ஏன் தூரத்தில் நிற்கின்றார்கள், அவர்களும் வரத்தானே வேண்டும் என்கின்ற கேள்வி அப்பொழுது அவர்களுக்கு எழுந்தது. தமிழ் மக்கள்சார் பல்வேறு தரப்பினருடன் கூட்டத்தை நடத்தினார்கள். அந்த இடத்தில் தமிழ் சிவில் அமைப்புகள் மற்றும் வேறும் பல அமைப்புகள் அவர்களுக்கு சில செய்திகளை தெளிவாக சொல்லி இருந்தார்கள்.

ஒரு தனிமனித ஆட்சியின் மாற்றத்தின் ஊடாக, அல்லது தனி குடும்பத்தின் அல்லது தனி அரசியல் கட்சியின் மாற்றத்தின் ஊடாக நாங்கள் இந்த நாட்டிற்கு விடிவு கிடைக்கும் என்று நம்பவில்லை. ஒட்டுமொத்த அரசியல் கலாசார பண்பாடு மாற்றப்பட வேண்டும். நாட்டின் அரசியலமைப்பு மட்டுமல்ல, அத்துடன் அரசியல் மனோ நிலை மாற்றப்பட வேண்டும். எல்லா தேசிய இனங்களும் இத்தீவில் உரித்துடையவர்கள் என்பதை அனுமதிக்க வேண்டும். அந்த அங்கீகரிக்கின்ற மனோநிலையை நீங்கள் கொண்டு வருகின்ற போது நாங்களும் உங்களோடு இணைந்து கொள்வோம். அதுவரை உங்களை தூரத்தே நின்று  பார்க்கின்றோம். ஆனால் இந்த அகிம்சை போராட்டத்தை, இலங்கையில் ஒரு மாற்றத்துக்காக நீங்கள் போராடுகின்ற போராட்டத்தை அங்கீகரித்து ஆதரிக்கின்றோம்.

அவர்கள் இவ் விடயங்களை சிறப்பாக உள்வாங்கி பல விடயங்களில் உடன்பட்டார்கள். இப்படி விரிவடைந்து வந்த போராட்டம் ஒருகட்டத்தில் இலங்கையினுடைய ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ச சுயமாக நடமாட முடியாமல் முடங்கிப்போக வேண்டி வந்தது. அவர் எங்கே இருக்கின்றார் எனத் தெரியாத அளவுக்கு நிலைமை மாறியது. இவ்வாறு நிலைமைகள் எல்லாம் மாறி ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய இருப்பை இங்கு தக்க வைக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறி ஒளிக்க வேண்டிய நிலை வந்தது .

1971 ஆம் ஆண்டு JVP ஆயுதப்போராட்டம் செய்த போது அப்பொழுதும் ஸ்ரீமாவோ அம்மையார் அவர்கள் கப்பலில் இருந்ததாக ஒரு தகவல் இருக்கின்றது. அதே போல் தான் இம்முறையும் கோத்தாபய தன்னுடைய மாளிகையை விட்டு ஓட வேண்டிவந்தது. அதற்கு முன்பு அவருடைய தமையன் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கொழும்பை விட்டு ஓடவேண்டி நேர்ந்தபோது திருகோணமலை கடற்படை தளத்திற்குள் தான் ஓடி ஒளிந்து இருந்தார். எங்கு இருக்கின்றார் என்று தெரியாமலே ஒரு மாயமான் விளையாட்டுக்களை காட்டிக்கொண்டு இருந்து விட்டு, இறுதியாக தன்னுடைய நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களையும் சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டு, ராணுவ விமானம் ஒன்றை பெற்றுக் கொண்டு மாலைதீவில் இறங்கினார் கோத்தாபய. பின் அவர் சிங்கப்பூருக்கு பறந்தார்.

அவருக்கு இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார் காரணம் எனும் கேள்விக்கு பிரதமர் ரணில் அவர்களின் பெயர் தான் இங்கு முன்வைக்கப்படுகிறது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டு எதிர்ப்புகளை தாங்க முடியாது ஜனாதிபதி தப்பித்து போன பின்னர் ரணில்விக்கரமசிங்க பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு ஜனாதிபதியின் பொய்மையான அதிகாரத்தை இன்னுமொரு முறையில் பிரயோகிக்கின்ற ஒரு நயவஞ்சக செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு அவர் செய்த முதல் காரியம் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து  இராணுவ அடக்குமுறைகளுக்கான அதிகாரங்களை வழங்கியமை. சிங்கள மக்கள் எடுத்துக்கொண்ட அகிம்சை போராட்டத்தை, போராளிகளை ஒரு சமூக விரோதிகளாகவும் குற்றவாளிகளாகவும் திருடர்களாகவும் பொதுச்சொத்துக்களை பாதிக்கின்ற நபர்களாகவும் உருவகம் காட்ட வெளிக்கிடுகின்றனர். ஆடி 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற கூட்டத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று போராட்டக்காரர்கள் சார்பில் ஒரு அறிக்கை தெளிவாக விடப்பட்டது. கோட்டா கோ கமவில் போராடுகின்றவர்களாகிய நாங்கள் இங்கிருந்து போராடுகின்றோம். நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நடக்கின்ற போராட்டத்திற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டார்கள. ஆனால் இராணுவ தளபதியும் முக்கியமானபடைத் தளபதிகளும் இராணுவத்தை தாக்கி அவர்களுடைய துப்பாக்கிகளையும் 60 பயன்படுத்தக்கூடிய தோட்டாக்களையும் இந்த போராளிகள் அபகரித்துச் சென்றுவிட்டார்கள் என்று சொல்லி இருக்கின்றனர். எந்த நேரமும் இந்த துப்பாக்கிகளையும்  தோட்டாக்களையும் வைத்து எதுவும் செய்யலாம் என ஒரு விடயத்தை வெளியிட்டார்கள். அது உண்மையா, பொய்யா, நாடகமா திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு சதி முயற்சிக்கான துவக்கமா என்பது யாருக்குமே புரியவில்லை. ஆனால் இது மிக ஆபத்தானது. போராளிகள் மிகத்தெளிவாகத்தான் பேசுகின்றார்கள். தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற ஜனாதிபதி மாளிகையையும் அவரது வீட்டையும் பிரதம அமைச்சரின் அலுவலகத்தையும் உடனடியாக கையளிக்க தயாராக இருக்கின்றோம் என்று அவர்கள் சொன்னார்கள். நாங்கள் கைப்பற்றிய இடங்ளில் எந்தவொரு சேதாரத்தையும் ஏற்படுத்தவில்லை. அவற்றை கண்ணியமாக பாதுகாக்கின்றோம். ஆனால் அவர்கள் அவ்விடங்களை சேதப்படுத்தி விட்டதாக அரசதரப்பில் இருப்பவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களின் நோக்கம், மக்கள் சார்ந்து போராட்ட எழுச்சி நடக்கும் போது அந்த போராட்டக்காரர்களை, பயங்கரவாதிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும் சமூக விரோதிகளாகவும் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும் காட்டுவது தான். அப்படியானால் மக்களின் எழுச்சிக்கு பின்னால் உள்ள ஆன்மாவை யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லையா? எல்லோருமே என்ன செய்கின்றார்கள்? மிக அபத்தமாக நாடகம் ஆடுகின்றார்களா? இந்த போராட்டத்திற்கு ஊடாக ஏற்பட்டிருக்கின்ற சிங்கள மக்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கின்ற மனநிலையை நாம் பார்த்தோமா?

இந்த தேசத்தை விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மீட்டதாகச் சொல்லி பெருமைப்படுத்தி, மார்பிலே பதக்கம் சூட்டி அதை நினைவு நாளாக கொண்டாடி, அநுராதபுரவில் ருவென்வெலிசாயவிற்கு பக்கத்திலே மிகப்பெரிய தாதுகோபத்தை நிர்மாணித்து, சிங்கள பௌத்த தேசத்தின் தேசியவாதத்தின் காவலர்கள் தாங்கள் தான் என்று சொன்னவர்கள். அவர்களது கதைகளை எல்லாம் நம்பி அவர்களுடைய சாதனைகள் எல்லாம் சிங்கள மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடைகளாக, பெருமைகளாக நம்பி அவர்களுக்கு தமது வாக்குகளை அள்ளிப் போட்ட 69 இலட்சம் மக்கள் இன்று மாறி இருக்கின்றார்கள். தங்களால் யார் கதாநாயகன், பாதுகாப்பின் காவலன், சிங்கள பௌத்த மதத்தின் காவலன் என்றெல்லாம் சொல்லப்பட்டவர்கள் எல்லோரையும் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கேயோ ஒரு இடத்தில் மாறுதல் அல்லது வெடிப்பு வந்திருக்கின்றது.

முதலில் தமிழ் மக்கள் நாம் அதைப் புரிந்து கொள்ளத் தயாராக வேண்டும். சிங்கள மக்களின் சிந்னையில் உடைவு ஏற்பட்டிருக்கின்றது. காலம் காலமாக அவர்களது மனதில் ஊறி இருந்த சிங்கள தேசியவாதத்தின் பெயரால் இந்த அரசியல்வாதிகள் ஆடிய கபட நாடகங்கள், தங்களது பதவிக்காகவும் சொந்த இருப்புக்காகவும் தாங்கள் இந்த தேசத்தை சூறையாடுகின்ற விடயங்களை மறைப்பதற்காக செய்த விடயங்களே என்று சிங்கள மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். இது ஒரு மாபெரும் விடயம்.

இந்த உடைவின் ஊடாக தமிழ் மக்களாகிய நாம் எதனைக் கைப்பற்ற போகின்றோம்? எதை நாம் கையில் எடுத்து முன் நகரப்போகின்றோம் என்ற விடயத்தை நாங்கள் தெளிவாக பார்க்க வேண்டும். நாங்கள் இந்த போராட்டக்குழுக்களுடன் அல்லது இப்படியான புத்தாக்க சிந்தனை கொண்டவர்களுடன் எதனை பேசப்போகின்றோம் என்கின்ற விடயத்தைக் கூட நாங்கள் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மதபீடங்களின் தலைவர்கள் ஒன்றாக ஒரு அறிக்கை விடுத்து இருக்கின்றார்கள். எங்களுடைய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நாங்கள் எதனை எவ்வாறு செய்யப் போகின்றோம், எமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது, புதிய மாற்றங்களால் திறக்கப்படுகின்ற புதிய தளங்களில் கலந்துரையாடலில் ஈடுபடும் போது என்ன விடயங்களை நாங்கள் முன்வைக்கப் போகின்றோம் என்பது தொடர்பாக இந்த தமிழ்பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்கள் முன் வந்து கலந்துரையாட வேண்டும். மக்களின் பிரதிநிதிகளாக இந்த சமூகத்தில் செயற்படுகின்றவர்களும் வந்து கலந்துரையாடி ஒரு பொதுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு கூறி அவர்களது வேண்டுகோள் அறிக்கை வந்துள்ளது. ஆனால் அதற்கு இன்னமும் யாராலும் பதிலளிக்கப் பட்டதாக தெரியவில்லை. நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கு இந்தச் செய்தி போனதா என்பது கூடத் தெரியவில்லை.

சாதாரணமாக அரசியல்அக்கறை உள்ள பல பேர் கேட்கின்ற கேள்வி, எங்களுடைய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் எங்கே இருக்கின்றார்கள், இவர்கள் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள் என்பது. எங்களுக்கு இந்த போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக மதிப்பிடத் தெரியவில்லையா? அல்லது வெறுமனே விழலுக்கிறைத்த நீர் போல இளைஞர்களும் போராளிகளும் செய்கின்றார்கள் எனவும், நாங்கள் இதில் அக்கறைப்படத் தேவையில்லை, மீண்டும் எல்லாமே பழையபடி நடக்கும், நாங்கள் அதற்கு பிறகு மீண்டும் எங்களுடைய கோசங்களை உரக்கச் சொல்லிக் கொண்டு தமிழ் மக்களினுடைய வாக்குகளுக்காக வீதி வீதியாகச் சென்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்களா?

ஆனால் மதத்தலைவர்களின் அந்த அறிக்கையில் இன்னுமொரு வாசகம் வெளி வந்தது. அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள், தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிராக அந்த இளைஞர்களின் நெற்றிக்கண் திறக்கப்பட்டது போன்று தமிழர் பிரதேசங்களிலும் நெற்றிக்கண்கள் திறக்கப்படுவதற்கு நீண்டகாலம் ஆகாது. எனவே நீங்கள் அதற்கு முன்பாகவே வெளியில் வாருங்கள், கருத்துரையுங்கள். ஏனென்றால் தவிர்க்க முடியாமல் நீங்கள் தான் இந்த மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்.  


செல்வின்-

நிமிர்வு ஆடி 2022 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.