அரகலய யோசனைகளை தீவிரமாக கருத்தில் எடுப்பது பற்றி...

இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்ததன் காரணமாக காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் (அரகலய) ஆரம்பிக்கப் பட்டு அதன் அழுத்தம் காரணமாக பிரதமர் பதவி விலகியதும் சனாதிபதி கோதாபய நாட்டை விட்டு ஓடியதும்  நடந்துள்ளன.  மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத ரணில் விக்கிரமசிங்க புதிய சனாதிபதியாக நாடாளுமன்றத்தில் தெரிவாகி உள்ளார்.  கோத்தாபய சனாதிபதி ஆகியதும் ரணில் சனாதிபதி ஆகியதும் தமிழ் மக்களினதும் அவர்களது அரசியற் தலைவர்களினதும் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளன.  கோத்தாபயவை நாட்டை விட்டுத் துரத்தியதில் தமிழ் தரப்பின் பங்களிப்பு பெரிதாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அந்த முயற்சிக்கு தமிழ் மக்களின் தார்மீக ஆதரவு இருந்தருக்கிறது.  சிறிலங்கா தேசிய அரசியலுக்கு புறம்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அரகலய போராட்டத்தில் நின்று களமாட வேண்டும் என்று நாம் கோரியிருந்தோம்.


ரணில் சனாதிபதியாக வந்தவுடனே பொருளாதார பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கப்படும் ஒரு முயற்சி இது. ஆனால் பொருளாதாரப் பிரச்சனை சுலபமாக தீர்க்கப்பட முடியாதது. ஆகவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம் தொடரப் போகிறது.  அந்தப் போராட்டங்கள் வன்முறை கொண்டு அடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளன. ஆனாலும், அந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தின் நலன்களை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பதைப் பற்றி எமது அரசியற் தலைமைகளும் வெகுசன அமைப்புகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அரகலய போராட்டத்தின் பின்னால் நிற்கின்ற தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அரசியற் செயற்பாட்டாளர்களின் நம்பிக்கைகளுக்கும் முன்னணி சோசலிசக் கட்சியின் தீவிர சோசலிசத்துக்கும் இடையிலே, இருக்கின்ற அல்லது இல்லாத உறவுகள் பற்றி பேராசிரியர் ஜயதேவ உயங்கொட groundviews.org தளத்தில் 2022 ஆ டி 19 ஆம் திகதி ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் (https://groundviews.org/2022/07/19/taking-aragalaya-ideas-seriously/).
 
சோசலிச சிந்தனைக்கும் தாராளவாத ஜனநாயகத்துக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கும் இந்த ஊடாட்டத்தில் மக்களின் தேசிய நலன்களும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை கருத்தில் கொள்ளவில்லை.  ஆனாலும், எவ்வாறு சோசலிச சிந்தனையும் தாராளவாத ஜனநாயகமும் ஒரு உரையாடலுக்கு போகவேண்டும் என்று அவர் வாதிடுகிறாரோ, அதே போன்று, அரகலய போராட்ட செயற்பாட்டாளர்களின் நோக்கங்களுக்கும் தமிழ் அபிலாசைகளுக்கும் இடையிலே உறவை உருவாக்க ஒரு கலந்துரையாடல் நடக்க வேண்டும்.  அடுத்து, அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

அரகலய இயக்கத்தின் முக்கியக் குரலாக முன்னணி சோசலிசக் கட்சி (FSP) ஆடி மாதம் முன்னுக்கு வந்தது. இது பல எதிர்மறையான எதிர்விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக நகர்ப்புற தொழில் மற்றும் வணிக வர்க்கங்கள், மற்றும் வலுவான தாராளவாத-ஜனநாயக நம்பிக்கைகளைக் கொண்ட அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளையும் விவாதங்களையும் இது எழுப்பியுள்ளது.  FSP இன் இறுதி நோக்கங்கள் குறித்தும் அதன் தீவிரவாத நிகழ்ச்சி நிரல் குறித்தும் அவர்கள் கரிசனை கொள்கிறார்கள். வன்முறை அரசியல் வரலாற்றைக் கொண்ட சில தீவிர சோசலிஸ்டுகள், ஜனநாயக ரீதியான அரகலய போராட்டத்தை கைப்பற்றி விட்டனர் என்ற கருத்து நகர்ப்புற நடுத்தர வர்க்க குடிமக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பைப் பெறுகிறது. இந்த தீவிரவாதிகள் இலங்கையின் தாராளவாத, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை அழிக்க முற்படுகிறார்களா? தோல்வியுற்ற அரபு வசந்தத்தின் திசையில் நமது அரகலயவையும் கொண்டு சென்று விடுவார்களா? இன்று விவாதிக்கப்படும் சில கேள்விகள் இவை.

இதுபோன்ற கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பதற்குப் பதிலாக, இந்தக் கட்டுரையில், இலங்கையில் மறு ஜனநாயகமயமாக்கலில் இன்று எழுந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணத்தில் இந்த இரண்டு முக்கிய இழைகளுக்கு இடையிலான உரையாடல் ஒன்ற நடக்க வேண்டும் என்பதை வாதிட முயற்சிக்கிறேன்.

முதலாவது இழை, தாராளவாத, பிரதிநிதித்துவ, நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற எங்கள் பாரம்பரியம். இது 1930 களின் முற்பகுதியிலிருந்து ஒரு வரலாற்றை கொண்டுள்ளது. அது சமீபத்திய தசாப்தங்களில் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இரண்டாவது, அநீதியான, அடக்குமுறை அதிகாரத்திற்கு எதிரான சமூகப் போராட்டங்களில் பிரபலமாக காணப்படும் ஒரு ஜனநாயகம். இந்த இழையானது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது முதல் இழையின் வரலாற்றை விட நீண்டதாக இருக்கக் கூடும். இருந்தாலும்கூட, இந்த இழைக்கு ஜனநாயகத்தின் தாராளவாத பாரம்பரியத்தினால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.  

இலங்கையின் நவீன ஜனநாயகத்தின் வரலாற்றுக் கட்டுரைகளில் இரண்டாம் இழைக்கு அதிக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.   அரகலய முக்கியமாக இரண்டாவது இழையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சுவாரஸ்யமாக, இலங்கையில் 2022 பங்குனி – ஆடி காலப்பகுதி ஜனநாயகத்தின் இந்த இரண்டு இழைகளையும் சந்திப்புக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அவை சந்தித்தும் உள்ளன. இருப்பினும், இந்த இழைகள் ஒருவரையொருவர் அடையாளம் காணவில்லை. இந்தக் குறிப்பிட்ட வரலாற்றுத் தருணத்தில், இலங்கைக்கு குறிப்பாகத் தேவைப்படும் தனித்துவமான ஜனநாயகமயமாக்கல் நிகழ்ச்சி நிரல் பற்றிய உரையாடலை அவர்கள் தொடங்கவில்லை. இருவருக்குமிடையில் ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் மட்டுமே ஜனநாயகரீதியான மக்கள் எழுச்சியின் போது திறக்கப்பட்ட வரலாற்றுத் தருணத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

அரசாங்கத்துக்கு எதிரான பக்கத்துக்கும் மேலாக ஆழமான ஒட்டுமொத்த அரசியல் நெருக்கடியின் பரிணாமத்தையும் அரகலய கொண்டிருந்தது. அதன் பல கோரிக்கைகள் மற்றும் கோஷங்கள் அரசியல் நெருக்கடிக்கு எதிர்வினையாற்றும் தனித்துவமான அரசியல் தன்மையைக் கொண்டிருந்தன.  அதாவது, அவை ராஜபக்ச அரசாங்கத்தை அல்லது பதவியில் இருக்கும் நபர்களை அகற்றும் இலக்கைத் தாண்டிய நோக்கை கொண்டிருந்தன.
 
இந்த அரசியல் கோரிக்கைகள் நாம் மிகவும் பழகிய பாரம்பரிய அர்த்தத்தில் நேரடியாக உணரப்படக் கூடியதாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. நமது அரசியல் கட்சிகளின் கிளர்ச்சிப் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் மொழியிலோ பாணியிலோ அவை உருவாக்கப்படவில்லை. இளைஞர்களின் சமூக ஊடக (social media)  கலாச்சாரத்திற்கு ஏற்ற வடிவத்திலும் மொழியிலும் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

அவர்களின் முழக்கங்கள் நாட்டின் அரசியலில் ஒரு அமைப்பு மாற்றத்தைக் (System Change) கோருகின்றன. அத்துடன் ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்திற்கு பதிலாக ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கும் அறநெறி சார்ந்த புதிய ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று கோருகின்றன. ‘ஒப்பந்த அரசியல் இனி வேண்டாம்’ என்ற கோசம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் உட்கட்சி உறவுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஊழல் ஒப்பந்த அரசியலை அம்பலப் படுத்துகிறது.  அதனை நிராகரிக்கிறது.
 
'புதிய அரசியல் கலாச்சாரம்' என்ற கோசம் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கானது. இது ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு கோருகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மேம்படுத்துவதற்கு கோருகிறது. மக்கள் வழங்கிய ஆணைக்கு பிரதிநிதிகள் விசுவாசமாக இருப்பதற்கு கோருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கவும், அவர்கள் சந்தர்ப்பவாத ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் அரசியல் செய்யவும் கோருகிறது. இத்தகைய முழக்கங்களும் கோரிக்கைகளும் இளைஞர்களின் இலட்சிய உணர்வைப் பிரதிபலிப்பதில் ஆச்சரியமில்லை.

ஜனநாயக அவா

இந்தக் கோசங்கள் அனைத்தும், படித்த தொழில் வல்லுநர்களிலிருந்து சாதாரண ஆண்கள், பெண்கள் வரை எளிதில் எதிரொலித்தது. ஏனெனில் அவை தற்போதுள்ள அமைப்பு பற்றி ஒரு சக்திவாய்ந்த விமர்சனத்தையும் ஒரு சிறந்த அரசியல் ஒழுங்கிற்கான புதிய நம்பிக்கையையும் உள்ளடக்கி உள்ளன. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் உயரடுக்கினரால் கைப்பற்றப்பட்டு, சிதைக்கப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு அமைப்பில் வாழ்ந்த எல்லோரதும் சொந்த அனுபவங்களிலிருந்து இவை வந்துள்ளன. அதனால், அந்த விமர்சனமும் நம்பிக்கையும் அனைவராலும் பகிரப்பட்டது. அதனால்தான், பங்குனி மாத இறுதியில் தொடங்கிய மக்கள் இயக்கம், அதிகளவு ஜனநாயக உள்ளடக்கத்தையும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருந்தது. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம். கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகத்தில் சாதாரண மக்களின் பங்கை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.

இலங்கையின் சாதாரண மக்களின் ஏக்கங்களைப் பிரிதபலித்தமையே அரகலயவிற்கு ஒரு பெரிய அரசியல் முக்கியத்துவத்தை சேர்த்துள்ளது. அதனாற்தான் இது ஒரு புதிய அரசியல் தொடக்கத்திற்கான அடையாளத்தையும் கொண்டுள்ளது.

அரகலயவின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் முழக்கங்களின் கருத்தியல் அடிப்படைகள், அவற்றின் தாக்கங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, மூன்று மிக முக்கியமான விடயங்கள் வெளிப்படுகின்றன. முதலாவதாக, அவை தற்போதுள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நடைமுறைகளையும் ஊழலையும் நிராகரிக்கின்றன. இரண்டாவதாக, தாராளவாத, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை விமர்சிப்பதுடன் அக்கருத்துகள் நின்று விடவில்லை. மாறாக, இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பங்கேற்பு, நேரடியான குடியரசு ஜனநாயகக் கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றை நாடாளுமன்ற ஜனநாயகத்துடன் ஒருங்கிணைப்பதற்கான ஒரு கட்டமைப்பை அவை முன்மொழிகின்றன. மூன்றாவதாக, நவதாராளமய ஜனநாயகம், உள்நாட்டு சர்வாதிகாரம் ஆகியவற்றால் பிறந்த இலங்கையின் ஜனநாயக நெருக்கடிக்கையை  தீர்ப்பதற்காக புதிய யோசனைகளை கொண்டிருக்கின்றன.

தாராளவாத, நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதன் வழமையான வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மட்டும் இலங்கையின் ஜனநாயகத்தின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதை வலியுறுத்த வேண்டும். அரசியல் உயரடுக்குகள் மற்றும் அவர்களது அரசியல் கட்சிகள் சாராத குடிமக்களால் உருவாக்கப்படக் கூடிய 'மக்கள் ஜனநாயகத்திற்கு' சாதகமாக பதிலளிக்கக்கூடிய ஜனநாயகத்தை ஆழமாக்குவதற்கான உத்திகள் இதற்குத் தேவை.  ஜனநாயகத்தை ஆழப்படுத்துவது என்பது இறையாண்மையுள்ள மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கும் இடையே உடைந்து போன தொடர்பை குடியரசு மற்றும் நேரடி ஜனநாயக முறைகள் மூலம் மீள உருவாக்குவது. ஒரு தீவிர ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை அது வேண்டி நிற்கிறது.

இருப்பினும், இந்த பணியில் உள்ளார்ந்த ஒரு பெரிய சவால் உள்ளது. இது பின்வருமாறு வகுக்கப்படலாம்: அரகலயவின் ஊடாக மக்கள் வெளிப்படுத்திய அரசியல் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உள்ளடக்க இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கட்டமைப்பு இடமளிக்குமா?

அரசியலமைப்புச் சிக்கல்

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு ஜனநாயகமானது அல்ல. எதேச்சதிகார சர்வாதிகாரமும் பலவீனமான நாடாளுமன்றமும் இணைந்த ஒரு கலப்பு கட்டமைப்பு. இது எதேச்சதிகார சர்வாதிகாரத்தின் அடக்கு முறைக்குள்ளேயே இருக்கும் ஒரு விசித்திரமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பலவீனமான மற்றும் பெயரளவிலான இரண்டு குடியரசுக் கூறுகளும் உள்ளன. மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய குடியரசின் தலைவரை மக்கள் நேரடி வாக்களிப்பில் தேர்ந்தெடுப்பதற்கான வசதி மற்றும் மக்களுக்கு நேரடி சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்குவதற்கான சர்வசன வாக்கெடுப்பு முறை என்பன உள்ளன. எவ்வாறாயினும், இந்த இரண்டு போலி குடியரசு வழிமுறைகளும், பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் ஜனநாயகம் ஆகியவற்றை வீழ்ச்சியடைய வைப்பதற்கு சர்வாதிகாரத்தால் கருவியாக பயன்படுத்தப்படும் நோக்கங்களை கொண்டன. உண்மையில் அவ்வாறே அவை பயன்படுத்தவும் படுகின்றன.
 
தற்போது நடைமுறையில் உள்ள 20வது திருத்தம்தான் 1978 அரசியலமைப்பிற்கு ஒரு விரிவான சர்வாதிகாரப்  பண்பை வழங்கியது. இன்று மக்களின் எதிர்ப்பு இயக்கம் வெளிப்படுத்தும் அரசியல் சீற்றம் 1978 அரசியலமைப்பு மற்றும் அதன் 20 ஆவது திருத்தம் ஆகிய இரண்டிற்கும் எதிரானது மட்டும் அல்ல. இலங்கையின் ஜனநாயக அரசியலமைப்புச் சிந்தனையின் கருத்தியல் கட்டமைப்பின் எல்லையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பாகவும் இது அமைந்துள்ளது.

அப்படியானால், மக்கள் ஜனநாயகம் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் இரண்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்படும் ஒரு முற்றிலும் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்ற அரகலயவின் கோரிக்கையை அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கம் புறக்கணிக்க முடியுமா? 19 ஆவது திருத்தத்தை அல்லது அதன் நீர்த்துப்போன வடிவத்தை நிறைவேற்றுவது அரசியலமைப்பையும் ஒட்டு மொத்த அரசியல் ஒழுங்கையும் மறு ஜனநாயகப்படுத்துவதற்கான மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வரம்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்ற அரகலயவின் கோரிக்கைக்கு மேலாதிக்க, காலாவதியான, குறுகிய தாராளவாத அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் இடமளிக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில் ‘இல்லை’ என்பதுதான்.
 
இதுதான் இங்கு எழுந்துள்ள அரசியலமைப்புச் சிக்கல். இது உண்மையிலேயே ஆழமான ஜனநாயக சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கும், ஆளும் வர்க்கம் மற்றும் தாராளவாத, பிரதிநிதித்துவ, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரையறுக்கப்பட்ட சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்கின்ற கல்விசார் அரசியலமைப்புவாதிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு. FSP இனால் பிரேரிக்கப்படும் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் படும் மக்கள் பேரவை முன்மொழிவுக்கு இன்று வெளிப்படுத்தப்படும் பலத்த எதிர்ப்புகளின் மூலம் இந்த முரண்பாடு தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை நாடாளுமன்றத்தின் கொள்கை மற்றும் சட்டவாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வருவதுதான் இந்த மக்கள் பேரவையின் முதன்மையான நோக்கம். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் ஆன  நாடாளுமன்றத்தை கண்காணிப்பதும் இதன் நோக்கம்.

இந்த முன்மொழிவுகளின் விவரங்களை FSP விவரிக்கவில்லை. இருந்தாலும், இது ஒரு கருத்தியல் முன்மொழிவாக முன்வைக்கப்படுகிறது. இது பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரகலய இயக்கத்தினரிடையே கலந்துரையாடல் மூலம் உருவாக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அதேவேளை, இலங்கையில் தாராளவாத அரசியலமைப்புச் சிந்தனையை நெகிழ்வுடையதாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும், மாற்றங்களை உள்வாங்கக் கூடியதாகவும் மாற்ற வேண்டிய தேவை முக்கியமானது. ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நோக்குடன், குடியரசுவாத, சமூக-ஜனநாயக மற்றும் நேரடி ஜனநாயக முன்மொழிவுகள் என்பவற்றை கலந்துரையாடுவதற்கு இந்த நெகிழ்வுத்தன்மை குறிப்பாக தேவைப்படுகிறது.  அப்படி இருந்தால் மட்டுமே அவற்றை செம்மைப்படுத்தி புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ள முடியும்.

அரகலயவால் வெளிப்பட்டுள்ள மக்களின் உள்ளார்ந்த ஜனநாயக எழுச்சி மற்றும் அரசியலமைப்பு சிந்தனை என்பவற்றால் நாட்டின் அரசியலமைப்பு பயனடைவதற்கான ஒரே வழி இதுதான். இலங்கையின் ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கான அரசியல் சிந்தனை மக்களின் போராட்டங்களில் பொதிந்துள்ளன என்பதை அரகலயவின் சீர்திருத்த முன்மொழிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இதனை ஒப்புக்கொள்வது முக்கியம். நாடு பாரிய, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் இருக்கும் இந்த பொருத்தமான நேரத்தில், கடந்த மூன்று மாதங்களில் இந்தச் சிந்தனைகள் தம்மை வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் சாதாரண குடிமக்கள், நடுத்தர மற்றும் ஏழ்மையான சமூக வர்க்கங்களின் இளைஞர்களின் உள்ளார்ந்த அனுபவங்களில் இருந்து முளைத்த இந்த சிந்தனையின் மதிப்பையும் சக்தியையும் நமது அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் புரிந்து கொள்ளத் தவறினால் அது ஒரு சோகமான தவறு.

உண்மையில் இந்த அரசியலமைப்புச் சிக்கலைத் தீர்க்க வழிகள் உள்ளன. அவற்றுள் மிகவும் செயற்திறனுடைய வழி இந்த இரண்டு இழைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடலை ஆரம்பிப்பதே. இலங்கையின் ஜனநாயகத்தை மறுவடிவமைக்கும் ஒரு புதிய திட்டத்தில் ஒவ்வொரு இழையும் மற்றைய இழையை எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பதைக் கண்டறிய இது தேவை. ராஜபக்சவுக்குப் பிந்தைய சகாப்தத்தை இலங்கையின் அரசியலில் ஆரம்பிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடி

பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு இருக்கும் நெருக்கடிகள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. இன்று உலகில் உள்ள அனைத்து தாராளவாத ஜனநாயகங்களும் பிரதிநிதித்துவ ஜனநாயகங்களும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் சில கூறுகள் பிரத்தியேகமானதாக இருக்கலாம். ஒரு நாட்டின் சொந்த அரசியல் வரலாறு, பல்வேறு சமூக வர்க்கத்தினரிடையே நடக்கும் அதிகாரத்திற்கான போராட்டங்களின் தன்மை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அதிகாரங்களை அடையாமல் தடுத்து வைப்பதற்கான உயர் வர்க்கத்தின் நிகழ்ச்சிநிரல்கள், அதிகார நிறுவனங்கள், செல்வம் மற்றும் அரசியல் அதிகாரத்தை மறுபகிர்வு செய்வதற்கான தாழ்த்தப்பட்ட சமூகங்களின் அழுத்தங்கள் என்பவை நாட்டுக்கு நாடு வேறுபடும்.  இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நெருக்கடியானது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் உள்ள மூன்று பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகிறது. ஒன்று, நிறைவேற்று அதிகாரத்துவத்துவத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இணைத்தல். இரண்டாவது,  நாடாளுமன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது. மூன்றாவது,  நாடாளுமன்றத்தின் தரம் மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தில் மையமாக இருப்பதில் அதன் தோல்வி. இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க விரும்பும் அரகலயவிற்கு இன்றைய ‘அமைப்பு’ எவ்வாறு பதிலளிக்க முடியும் என்ற புதிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

இளைஞர்களும் ஜனநாயகமும்

இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது 1970 களின் முற்பகுதியில் இருந்து பல தடவைகள் திரும்பத் திரும்ப நாம் கண்ட மோசமான சிக்கலை மீண்டும் உருவாக்கியுள்ளது. இளைஞர்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கின் அமைப்பு ரீதியான தவறுகளை முன்னிலைப்படுத்திய போதெல்லாம், ஆளும் வர்க்கம் அவர்களின் குரல்களை கேட்பதற்கு இயலாமல் இருக்கின்றது. அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை வழங்க முடியாமல் இருக்கின்றது.

கடந்த காலங்களில், மாற்றத்திற்கான இளைஞர்களின் அழுத்தம் கிளர்ச்சி மற்றும் வன்முறை வடிவத்தில் வந்ததால், மாற்றத்திற்கான கூக்குரலை சிறுமைப்படுத்தவும் புறக்கணிக்கவும் வன்முறை ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நேர்மாறாக, 2022 இன் மாற்றத்திற்கான அழுத்தம் வன்முறையற்றது. மேலும், மாற்றத்திற்கான இயக்கத்தின் அடித்தளங்கள் இளைஞர்களை மட்டும் கொண்டிராமல், குடிமக்களின் பரந்த பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ஆளும் வர்க்கத்தால் ஊழல் நிறைந்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் ஊடாக நாடு ஆளப்படுவது மாற்றப்பட வேண்டும் என்று சமூகம் முழுவதுமே அழைப்பு விடுக்கிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு தற்பொழுதுள்ள ‘அமைப்பு’ நெகிழ்வாக இருக்க முடியுமா? அது உருவாக்கிய கலாச்சாரம், நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளைச் சுத்தப்படுத்த ஒரு பெரிய திட்டம் இருக்க வேண்டாமா? மக்கள் போராட்டத்தில் இருந்து வெளிவரும் சில புதிய முன்மொழிவுகள் வெளிப்படையாகவே வழக்கத்திற்கு மாறானவை. அவை இலங்கையின் பிரதான அரசியல் உரையாடலில் பரிச்சயமற்றவை.  தாராளவாத அரசியலமைப்பு கோட்பாடு பற்றிய வழக்கமான பாடப்புத்தகங்களில் அவை இல்லை என்பதால் அவற்றை நிராகரிக்க முடியாது.

‘மக்கள் பேரவை’

FSP மற்றும் இன்னும் சில குழுக்களால் முன்வைக்கப்பட்ட தேசிய மட்டத்தில் ஒரு மக்கள் பேரவை யோசனையை பார்ப்போம். இலங்கையின் தற்போதைய சூழலுக்கு அதன் ஜனநாயகத் தேவை, மதிப்பு மற்றும் பொருத்தம் என்பவற்றைப் போதுமானளவுக்கு ஆராயாமல் அது நிராகரிக்கப்படக்கூடாது.  நாடாளுமன்றம் ஒரு நிறுவனமாக செயற்பட ஒரு பொறிமுறை இல்லாமல் இருப்பது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களுக்காக சட்டம் இயற்ற முடியாமல் இருப்பது, அவர்களின் அதிகாரத்துக்கு ஆதாரமாக இருக்கின்ற இறையாண்மையுள்ள மக்களுக்கு பொறுப்புக்கூற முடியாமல் இருப்பது போன்ற தற்போதுள்ள  நாடாளுமன்ற அரசாங்க முறைமையின் முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த மக்கள் பேரவை முன்மொழியப்பட்டுள்ளது. மக்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான ஒரே சந்தர்ப்பம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்  நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே. இது உலகம் முழுவதிலும் உள்ள நாடாளுமன்ற முறையின் பொதுவான பலவீனம். குடியரசுக் கொள்கை உள்ளவர்கள் மற்றும் சோசலிசக் கொள்கை உள்ளவர்கள்  நாடாளுமன்ற ஜனநாயகம் மீது பெரும்பாலும் வைக்கும் விமர்சனம் இது.

அதேவேளை, இலங்கை உட்பட எல்லா இடங்களிலும், மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்து, அவர்களின் விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்திற்குள் அரசியல்  செய்வது வழக்கமாகி விட்டது. இதனைத்தான் 'ஒப்பந்த அரசியல்' மற்றும் 'அதிகாரப் போட்டி அரசியல்' என்று அரகலயவில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். 'ஊழல்காரர்களின் கூட்டு'களை உருவாக்குவது, உடைப்பது மற்றும் மீண்டும் உருவாக்குவது என நாடாளுமன்ற அரசியல் தரம் குறைந்துள்ளது என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது.  இதுதான் இலங்கை நாடாளுமன்றமும், அதன் உறுப்பினர்களும் பல்வேறு கண்டனங்களுக்கும் சந்தேகங்களுக்கும் ஆளாகுவதற்கு ஒரு முக்கிய காரணம். அரசாங்கத்தின் மிக உயர்ந்த நிறுவனமான  நாடாளுமன்றம் அதன் நம்பகத்தன்மையையும் சட்டபூர்வமான தன்மையையும் இழந்துவிட்டது.

வழக்கம் போல், அரசியல் வர்க்கம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிவான நிலைக்கு தீர்வு காண எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுப்பதில் குறிப்பிட்ட அக்கறை காட்டவில்லை. இந்தப் பின்னணியிற்தான் மக்கள் வழங்கிய ஆணையின்படி நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் செயல்படுவதை உறுதிசெய்யும் கண்காணிப்புப் பாத்திரம் கொண்ட மக்கள் பேரவை யோசனை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அரசியல் வர்க்கத்தின் புலமைசார் உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு வல்லுநர்கள் செய்ய வேண்டியது இந்த யோசனையை நிராகரிக்காமல், அதைச் செம்மைப்படுத்தி, அதன் ஆதரவாளர்களுடன் உரையாடி இனி உருவாகும் ஜனநாயக அரசியலமைப்பில் அதை உள்ளடக்க வேண்டும்.

கருத்தியல் வறுமையை வெல்வது

இது இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தவாதிகள் ஒரு சுயவிமர்சனத்தை செய்ய வேண்டும் என்று கோருகிறது. இலங்கையின் அரசியலமைப்புச் சிந்தனையிலும் நடைமுறையிலும் ஒரு கருத்தியல் வறுமை இருக்கின்றது என்பதை ஒத்துக் கொண்டு அதனை வெல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அது மிகவும் பலனளிக்கும். 1978 அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து 20வது திருத்தம் வரை, மற்றும் அண்மையில் கைவிடப்பட்ட 21வது மற்றும் 22வது திருத்தங்கள் வரை நாம் கண்ட அனைத்து அரசியலமைப்பு நெருக்கடிகளும் இந்த பரந்த ஜனநாயக நெருக்கடியின் விளைவுகள் தான்.

அப்படி இருந்தும், நமது அரசியல் மற்றும் அரசியலமைப்பு அறிவுசார் வர்க்கங்கள் இரண்டும் இந்த நெருக்கடிகளை எமக்கே உரிய வகையில் ஜனநாயக அரசியலமைப்பு சிந்தனை ஒன்றைக் கட்டமைக்க பயன்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். நாம் இன்னும் துடிப்பான விமர்சன ரீதியான அரசியலமைப்புச் சிந்தனையை கொண்டிருக்காமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம். அதாவது, நாம் அரசியலமைப்பு சட்ட நுட்பங்களை பற்றி விரிவாகக் கையாளத் தெரிந்திருப்பவர்களாக இருந்த போதும் அதன் நெறிமுறை, கருத்தியல் மற்றும் தத்துவ அடிப்படைகளை கையாள தெரியாதவர்களாக இருக்கிறோம்.

இறுதியாக, இன்றைய தருணத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம், மக்களின் எதிர்ப்பு அந்த எதிர்ப்பு இயக்கத்தின் முழக்கங்கள் மற்றும் கோரிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஓர் உள்ளார்ந்த ஜனநாயக அரசியல் சிந்தனையின் தோற்றம் ஆகும். மக்கள் பேரவைகள், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை, நேரடி ஐனநாயக வழிமுறைகள்,  உயர்வர்க்கத்தினர் கொண்டிருக்கும் அதிகாரத்தை கண்காணிப்பதற்கான மக்கள் இயக்கங்கள் , கொள்கை வகுப்பு விவாதங்களில் பங்குபற்றக் கூடிய மக்கள் அமைப்புகள் என்பவை இந்த சிந்தனையில் அடங்கியுள்ளன. அது பிரதிநிதித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நீண்டகால குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மக்கள் இயக்கத்தின் தலையீடுகள் நமது அரசியலில் முற்றிலும் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளன. இந்த மாற்றம் அரசியலில் ஒரு குடிமகனின் பாத்திரத்தை ஒரு பார்வையாளன் என்பதிலிருந்து விழிப்புணர்வுள்ள ஒரு பங்காளியாக மாற்றியுள்ளது.  இந்த மாற்றம் ஜனநாயகத்தையும் எமது குடியரசின் அரசியலமைப்பு அடித்தளங்களையும் மறுவடிவமைக்கவும் ஆழப்படுத்தவும் ஒரு புதிய அறிவு மற்றும் அரசியல் சக்தியை வழங்கியுள்ளது.

இப்போது எமக்குக் கிடைத்திருப்பது, நாம் பயன்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணம்.  எவ்வகையான ஜனநாயக அரசியலமைப்பு, எவ்வகையான ஜனநாயக அரசியல் ஒழுங்கு என்பவற்றை மக்கள் புதிதாக உருவாக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கான பதிலை பெற்றுக் கொள்ள இந்த தருணத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு:
தாராளவாத கொள்கை உடைய ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அரசியற் செயற்பாட்டாளர்கள் அரகலய போராட்டத்திலிருந்து மெல்ல கழன்று போக  ஆரம்பித்துள்ளார்கள். அவர்களில் சிலர் அரகலயவை எதிர்க்கவும் தொடங்கி உள்ளனர். அரகலயவில் எஞ்சி நிற்பவர்கள் தீவிர சோசலிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் மட்டுமே. இந்தச் சூழலில் கட்டுரையாளர் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொடவால் ஆதரிக்கப்பட்ட இரு சிந்தனைப் போக்குகளுக்கும் இடையேயான கலந்துரையாடல் நடப்பதற்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு.

பேராசிரியர் ஜயதேவ உயங்கொட-
தமிழாக்கம் - நிமிர்வு 
நன்றி -  groundviews.org
நிமிர்வு ஆடி 2022 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.