காலிமுகத்திடல் போராட்டமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலும் - ஆசிரியர் பார்வை

 


காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதற்கு தமிழ் மக்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்று சொல்லி அதில் கலந்து கொண்டது கூட்டமைப்பின் ஒரு தரப்பு. போராட்டக்காரர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை நாம் அதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தள்ளி நின்றது கூட்டமைப்பின் இன்னொரு தரப்பு. மொத்தத்தில் இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழரின் தேசிய அபிலாசைகளின் பக்கம் நின்று ஓர் அரசியற் தலைமையை கொடுக்கத் தவறிவிட்டது கூட்டமைப்பு.

தெற்கின் தேசிய அரசியலின் ஊடாக போராட்டத்தைப் பார்க்காமல், அதேவேளை போராட்டத்தை விட்டு தள்ளியும் நிற்காமல் தமிழரின் சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி தமிழர் அரசியற் தலைமைகள் போராட்டக்காரர்களுடன் களமாடி இருக்க வேண்டும்.

அடுத்து, நாடாளுமன்றத்தில் நடந்த சனாதிபதி தேர்தலில், எந்த வேட்பாளரும் எமது உரிமையை அங்கீகரிக்கப் போவதில்லை என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதில் தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி தெற்கின் அரசியலில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று முரசறைந்து சொல்ல கிடைத்த சந்தர்ப்பத்தையும் தமிழர் அரசியல் தலைமைகள் தவற விட்டனர்.

நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வ கட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ரணிலை சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தீர வேண்டுமெனில்  சர்வகட்சி அரசாங்கம் அவசியமாகும். எனவே அதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவோம் என கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன். சர்வ கட்சி அரசுக்கு ஆதரவு வழங்க கோரி ரணில் எழுதிய கடிதம் தொடர்பில் ஊடகங்கள் வினவிய போது அவர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஆதிக்கம் இல்லாத சர்வ கட்சி அரசுக்கு ஆதரவளிக்க தயார் என சுமந்திரனும் கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில் தமிழ்மக்களின் எவ்வித கருத்துகளையும் கவனத்தில் கொள்ளாமல் காய் நகர்த்தி வருகிறது கூட்டமைப்பு.

அரகலய போராட்டத்தை கையாண்ட விதத்தில் ஆகட்டும், சனாதிபதி தெரிவில் நடந்து கொண்ட முறையில் ஆகட்டும், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான அவர்களின் நிலைப்பாட்டில் ஆகட்டும், தமிழ் மக்களோடு இன்று கூட்டமைப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மறுபுறத்தில், கொழும்பு அரசியலை மேற்கொள்ளும் மனோ கணேசனோ தான் அன்றாடம் என்ன செய்கிறேன் என்பதனை சமூக ஊடகங்களில் சொல்கிறார்.  அவை தொடர்பாக வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கிறார். அரகலய போராட்டக் காரர்களை சந்தித்த அவர்  பலவருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே உங்கள் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், அப்படியாயின் தானும் ஆதரவளிப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அரகலய போராட்டத்திலிருந்து தள்ளியும் நிற்காமல் அதேவேளை தனது தனித்துவத்தையும் இழக்காமல் போராட்டக் களத்தில் நின்றார். அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்து இறக்கும் தறுவாயில் தான் அவர்களது பிரச்சினைகள் பற்றி எமது அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால், மனோ கணேசனோ தமிழ்மக்களின் முக்கிய பிரச்சினையான அரசியல் கைதிகள் பிரச்சினை பற்றி பேசி இருக்கிறார். இதுவே சரியான நடைமுறை.

எங்களின் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டு வாக்கு வேட்டைக்கு வருவார்கள்.  ஆனால், அரகலய தொடர்பாகவோ, நாடாளுமன்ற சனாதிபதி தெரிவு தொடர்பாகவோ, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாகவோ தமிழ் மக்களின் வேணவா என்ன என்பதைப் பற்றி சிறுதும் கவனம் செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை உடனடியாக தீரப் போகும் ஒன்று அல்ல.  நான்கு ஐந்து வருடங்கள் செல்லலாம், அதற்கு மேலும் செல்லலாம்.  இந்த இக்கட்டான சூழலில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க தமிழ் அரசியற் தலைமைகள் வழி காட்ட வேண்டும்.  அதேவேளை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடரப் போகின்றன. அரகலய 2.0 கூட ஆரம்பமாகலாம். அந்தப் போராட்டம் தொடர்பாக சரியான அரசியற் தலைமையையும் அவர்கள் வழங்க வேண்டும்.

செ. கிரிசாந்-

ஆடி 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.