கொழும்பு கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு - பகுதி 01
ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022 அன்று நடாத்தப்பட்ட "கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது.
இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி சில மாதங்களில் தீர்ந்து போகலாம். அப்போது சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்ந்து போய்விடும். பாணும், பருப்பும், எரிவாயுவும் சந்தைக்கு வந்துவிடும் அப்போது பிரச்சினைகள் அவர்களின் பக்கத்தில் தீர்ந்துவிடும். அவர்களுடைய வாழ்வில் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வும் ஏற்பட்டு போய்விட முடியும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படப் போவது இல்லை. தமிழ் மக்களின் மண்ணில் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட விகாரைகள் இல்லாமல் போகப் போவதில்லை. இராணுவம் திரும்ப பெறப்படப் போவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீரப் போவதில்லை. இந்த பொருளாதார நெருக்கடியில் சிங்கள மக்கள் சில மாதங்களுக்குள் விடுதலை அடைவார்கள். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் நிரந்தரமாக வளரப் போகின்றன. தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டப்பட்ட விகாரைகளுக்குள்ளும், நிர்மாணிக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களுக்குள்ளும், இராணுவ மயமாக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் தான் இருப்பார்கள். இது தொடர்பாக தமிழ் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் ஒரு கொள்கை ரீதியிலான சரியான பார்வை அவசியம்.
முதலாவதாக, அரசியலை வெறுமனே உள்நாட்டு பரிணாமத்தில் ஒருபோதும் பார்க்கக் கூடாது. உண்மையில் அது உலகளாவிய கண்ணோட்டத்தோடும் சர்வதேச பார்வையோடும் உள்நாட்டு தேசிய நகர்வோடும் உள்நாட்டில் காணப்படுகின்ற கசப்பான கள யதார்த்தத்துடனும் இணைத்து அதனை பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கப்படாத எந்த ஒரு பார்வையுமே தவறானது.
முதலாவதாக கருத்தில் கொள்ளவேண்டிய விடயம், இது வெளிநாடுகளின் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்ட பிரச்சினை அல்ல. இது உள்நாட்டில் உருவாகி இருக்கின்ற ஒரு பொருளாதார பிரச்சினை. ஒரு தரகு வர்த்தகத்தை பிரதானமாக கொண்டிருக்கக்கூடிய இலங்கையில் இலகுவாக வெளிநாட்டு பணத்தோடு பிரச்சினை தீர்க்கப்பட முடியும். இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா இந்த நான்கு நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்வதாக முன்வந்துள்ளனர். கூடவே உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பண உதவி செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டு ரீதியிலானவை. இத்தகைய வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்றதும் இலங்கை தன்னை தூக்கி நிறுத்தி விடும். ஆனால் வீழ்ந்த தமிழர்கள் மேலும் மிதிக்கப்படும் நிலையே இருக்கும். இங்கு வெளிநாட்டு ரீதியிலான பரிமாணத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட போகின்றது.
இலங்கை பிரச்சினையை சர்வதேச மற்றும் உலகளாவிய கண்ணோட்டம் இரண்டிலும் வைத்து பார்க்க வேண்டும். நான் சர்வதேசம் என்றும் உலகளாவிய கண்ணோட்டம் என்றும் இரண்டாக சொற்களை பிரித்து பயன்படுத்துகின்றேன். இந்த வகையில் இன்றைய பிரச்சினையை உள்நாட்டு பரிமாணத்திலும் சர்வதேச பரிமாணத்திலும் அதை கடந்து உலகளாவிய கண்ணோட்டத்திலும் மூன்று படிக்கட்டுகளாக நாம் ஆராய வேண்டும். முதலாவதாக உலகளாவிய கண்ணோட்டத்தை எடுக்கும் போது அமெரிக்கா என்ற ஒரு நாட்டிற்கு அமெரிக்காவினுடைய கண்ணோட்டத்தில் நின்று பார்த்தால் அமெரிக்கா என்பது உலகம். அமெரிக்காவிற்கு முழு உலகமும் அதனுடைய உலக கண்ணோட்டத்திற்கு உரியது. அப்படியே சீனா என்ற ஒரு நாட்டிற்கு முழு உலகமும் சீனாதான். சீனாவிற்கு முழு உலகமும் அதனுடைய கண்ணோட்டத்திற்கு உரியது.` இதனை தத்துவார்த்த அடிப்படையில் பார்ப்போம்.
அரசியல் என்பது பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தை. அரசியல் என்பது பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி நிர்ணயிக்கின்ற ஒரு செயற்பாடு. அது ஒரு இயங்கும் தன்மை கொண்டது. எனவே அரசியல் என்பது பொருளாதாரத்தைப் பற்றிய வித்தை அது பொருளாதாரத்தை இயக்கும் ஒரு துறை. இப்படி பார்க்கையில் அமெரிக்காவின் அரசியல் என்பது உலகளாவிய பொருளாதாரத்தை தன்வயப்படுத்துகின்ற தன்மயப்படுத்துகின்ற அரசியலை கொண்டது. எனவே அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் அவர்களுக்கு நாடு என்பது முழு உலகமும் தான். முழு உலக பொருளாதாரத்தையும் தன்மயப்படுத்துகின்ற ஒரு அரசியல் தான் அமெரிக்க அரசியல். அதனைத்தான் சீனாவும் இப்பொழுது கையெடுத்து இருக்கின்றது. உலகளாவிய பொருளாதாரத்தை தன்வயப்படுத்தி தமது நலனுக்கு உட்படுத்துகின்ற அரசியலை தான் சீனா செய்கின்றது.
அதே வேளையில் மூன்றாவது பெரிய நாடான ரஷ்யாவை எடுத்துக் கொண்டால், அதனுடைய உலகம் என்பது, முதலாவதாக கிழக்கு ஐரோப்பா, இரண்டாவதாக கருங்கடல் பிரதேசமும் மத்தியதரைக் கடல் பிரதேசமும், விளிம்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதற்கு உலகமாக உள்ளது. இவ்வளவுதான் ரஷ்யாவினுடைய உலகம்.
நான்காவதாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் உலகம் என்பது அடிப்படையாக தென்னாசியப் பிராந்தியம் தான். அதனுடைய நீட்சியாக இந்தோ பசுபிக் பிராந்தியம் இருக்கின்றது. ஆனால் அதனுடைய அடித்தளம் இந்தியா என்று எடுத்தால் இந்தியாவினுடைய பிரதானமாக அரசியல் பொருளாதாரம் தென்னாசியாவை சார்ந்தது. இந்தியாவிற்கு தென்னாசியா தான் உலகம்.
அமெரிக்கா என்னும் தேசம் ஒரு ஜனாதிபதியை கொண்டிருக்கிறது. அது முழு தேசத்திற்கும் முழு உலகத்திற்குமான ஒரு தலைவராக ஜனாதிபதியை நியமித்திருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த முழு உலகத்திற்கும் ஆன ஒரு தலைவனாக ஜனாதிபதியை தெரிவு செய்து வைத்திருக்கிறது. அமெரிக்காவின் முதலாவது அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் தான். இந்தியாவிற்கு முதலாவது அமைச்சர் பிரதம மந்திரி, இரண்டாவது உள்நாட்டு அமைச்சர். இந்தியா எனும் நாட்டிற்கு முதலாவது அமைச்சர் உள் விவகார அமைச்சர். ஏனென்றால் இந்தியாவிற்கு சாதி பிரச்சனை, சமய பிரச்சனை, இனங்களின் பிரச்சனை, மாநிலங்களின் பிரச்சனை, உள்நாட்டு கல்வி அபிவிருத்தி, உள்நாட்டு சமூக வளர்ச்சி போன்ற பிரச்சினைகள். இவை அனைத்தையும் சேர்த்து உள்நாட்டு அமைச்சு இருக்கின்றது. இந்தியா என்ற தேசத்திற்கு ஒரு நாட்டிற்கு அதனுடைய பிரதான பிரச்சினையாக உள்நாட்டுப் பிரச்சினை தான் இருக்கிறது. எனவே இந்தியாவிற்கு உள்நாட்டு அமைச்சர் முக்கியமானது.
அமெரிக்காவிற்கு வெளிநாட்டு அமைச்சர் முக்கியமானவர். ஏனென்றால் அமெரிக்கா உலகம் முழுவதிலுமுள்ள பொருளாதாரத்தை தன் வயப்படுத்த விரும்புகிறது. ஆகவே அமெரிக்காவின் முதலாவது அமைச்சர் வெளிநாட்டு அமைச்சர். இந்தியாவினுடைய அமைச்சரவையில் முதலாவது உள்துறை அமைச்சர், இரண்டாவது நிதியமைச்சர், மூன்றாவது பாதுகாப்பு அமைச்சர், நான்காவது தான் வெளிவிவகார அமைச்சர். இப்படி இந்த உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றினதும் தனிப்பட்ட தன்மைகளுக்கேற்ப அவர்கள் வரையறுத்துக் கொண்ட உள்நாட்டு வளர்ச்சி நிலைக்குப் பொருத்தமாக அதனுடைய அமைச்சர்கள் நிர்வாக கட்டமைப்புக்கள் இருக்கும். அவர்களுடைய அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதற்கு அமைவாகவே நிகழும்.
இலங்கையில் முதலாவது பதவி ஜனாதிபதியின் உடையது. இரண்டாவது முக்கியமான பதவி பிரதமர் அல்ல. இரண்டாவது முக்கியமான அமைச்சர் பாதுகாப்பு அமைச்சர். பாதுகாப்பு அமைச்சருக்கு பின்தான் பிரதமர். பிரதமருக்கு பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் கொடுக்கப்பட மாட்டாது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு உரியது என வகுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் உள்நாட்டில் இன ஒடுக்குமுறையை செய்வதற்கு தேவைப்படுகிறது. இனங்களை அழிப்பதற்கு தேவைப்படுகிறது. உள்நாட்டு யுத்தத்தை நடத்த தேவைப்படுகிறது. உள்நாட்டு அரச வன்முறைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு பிரதானமாக இருக்கின்றது.
இத்தகைய பின்னணியில் ஒவ்வொரு நாட்டினுடைய அமைச்சரவையும் அதன் உள்ளடக்கத்தோடு அமைக்கப்படுகின்றன. ஆகையால் ஒரு நாட்டை அதன் உள்நாட்டு பரிமாணத்திலும் அதன் சர்வதேச பரிமாணத்திலும் வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையினுடைய இன்றைய பிரச்சினை பற்றி கோட்பாட்டு ரீதியாக, தத்துவரீதியாக, சித்தாந்த ரீதியாக இதுவரை சிங்கள புத்திஜீவிகள் இன்னும் வரையறுக்கவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். அவர்களுடைய பார்வைக்குள் ஈழத்தமிழ் மக்களை உள்ளடக்கிய வகையில் இந்த பிரச்சனைகளை அவர்கள் பார்க்கவில்லை.
அறிவியல் ரீதியில் நாங்கள் ஒரு விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆழ்ந்து அகன்ற பார்வை இருக்க வேண்டும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்று. ஆழ்ந்து அகன்ற பார்வை இருக்க வேண்டும். அவர் கூடவே சொல்கிறார் "பொய் ஆயின எல்லாம் போய் அகல” என்று. ஆழ்ந்து அகன்ற பார்வை இருந்தால் பொய்கள் எல்லாம் போய் அகன்று விடும். குறிப்பாக ஈழத் தமிழர்களாகிய நாம் அவ்வாறு ஆழ்ந்து அகன்று பார்க்க வேண்டிய முதலாவது பொறுப்பில் இருக்கிறோம். ஏனென்றால் எங்களுக்குத்தான் உயிர் பாதுகாப்பு, உடமை பாதுகாப்பு, உரிமை பாதுகாப்பு பற்றிய பிரச்சனை.
இலங்கையினுடைய இன்றைய பொருளாதார பிரச்சனையை எல்லா நாடுகளும் சேர்ந்து தீர்த்து வைக்க போகின்றன. எங்களுடைய பிரச்சனையை ஒருவருமே தீர்ப்பாரில்லை. இந்த வகையில் இந்த பிரச்சினையை ஆழ்ந்து அகன்று நாங்கள் பார்க்க வேண்டும். குறிப்பாக அறிவியல் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். அலை எழுகிறது, நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன, சாதாளைகள் அடிபடுகின்றன. நீர்க்குமிழி அறிவியல் எமக்கு வேண்டாம். சாதாளைகளை எண்ணி கணக்கெடுக்கும் சாதாரண அறிவியலும் எமக்கு வேண்டாம். மாறாக அலை எழுவது பற்றிய மூல அறிவு எமக்குத் தேவை. அதனுடைய கோட்பாட்டு உள்ளடக்கம் எமக்கு தேவை. அப்படித்தான் நாம் அரசியலை பார்க்க வேண்டும்.
நீர்ப்பரப்பின் மீது காற்று உராய்வை ஏற்படுத்துகிறது. அது அலையை தோற்றுவிக்கிறது. அந்த காற்று தொடர்ச்சியாக நீர்ப்பரப்பின் மீது உராய்வை ஏற்படுத்துவதனால் அலைகள் கும்பம் கும்பமாக குவியல்களாக அல்லது வரம்பு வரம்பாக எழுகின்றன. அவற்றில் நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. ஒரு அலை நீர்க்குமிழியை கொண்டு வர இன்னொரு அலை நீர்க்குமிழியை அழித்து விட்டு போய் விடுகிறது. இந்த நீர்க்குமிழி அறிவியலை மட்டும் நாங்கள் பார்க்காமல் நாங்கள் அடிப்படையில் நீரையும் காற்றையும் காற்றுக்கும் நீருக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதலையும் அதன்பின் விளைவாய் தோன்றுகின்ற அலைகளையும் அதன் தொடர்ச்சியாக தோன்றுகின்ற அலைகள் மலை போன்று குவிந்து குவிந்து வருவதையும் ஒரு தொடர் அறிவியலுக்குள்ளால் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதாரப் பிரச்சினையை நாங்கள் பார்க்க வேண்டும்.
முதலாவது உலகளாவிய அரசியல் கண்ணோட்டத்தில் நின்று இந்தப் பிரச்சனையை பார்ப்பதற்கு நாம் தயாராக வேண்டும். இரண்டாவது, இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய இன்றைய அரசியல் பொருளாதார பிரச்சினை வெறுமனே ஒரு இராஜபக்ச குடும்பத்தின் தவறுகளில் இருந்தோ அவர்களுடைய ஊழல்களில் இருந்தோ தோன்றியது அல்ல. இது கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கையின் பிழையான அரசியல் பொருளாதார கொள்கையில் இருந்து தோன்றியது. அதனால் தான் இதனை கொள்கை ஆய்வு என்று நான் வரையறை செய்து இருக்கிறேன். இந்தக் கொள்கை ஆய்வை இங்கே நாங்கள் திட்ட வட்டமான வரைபடங்களோடு செய்தாக வேண்டும்.
2005 ஆம் ஆண்டு ராஜபக்சக்களுக்கு சிங்களமக்கள் பெருந்தொகையாக ஆதரவளித்தார்கள். 2005ஆம் ஆண்டு இராணுவம் ஆதரவளித்தது. ஊடகங்கள் ஆதரவளித்தன. மகாசங்கம் ஆதரவளித்தது. அறிஞர்கள் ஆதரவளித்தார்கள். எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன. வெளிநாடுகள் ஆதரவு அளித்தன. இப்படி அளிக்கப்பட்ட ஒன்று திரட்டப்பட்ட அனைவரது ஆதரவுடனும் யுத்தம் நடந்தது. யுத்தத்தின் மறுபக்கம் தானே இன்றைய பொருளாதார பிரச்சனை. எனவே இவ்வளவு பேரும் இந்த பொருளாதார பிரச்சினையில் பங்காளிகள். இன ஒடுக்குமுறையில் விளைந்த யுத்தத்தில் இவ்வளவு பேரும் தங்களுடைய பங்குகளை மறைப்பதற்கு இன ஒடுக்குமுறையை பற்றி பேச தவறுகிறார்கள்.
எனவே அனைவரினதும் பங்கும் இதில் இருக்கிறது. உள்நாட்டில் உள்ள அனைத்து சக்திகளினதும் பங்கு, உள்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் பங்கு, மகா சங்கத்தின் பங்கு, இராணுவத்தின் பங்கு என அனைவரின் பங்கும் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியும் யுத்தத்தை தெளிவாக ஆதரித்தது. இப்படி இந்த யுத்தத்திலிருந்து ஒருவரையும் நீங்கள் விடுவித்து பார்க்க முடியாது. இப்பொழுது ராஜபக்சவை ஊழல் காரணமாக அல்லது பொருளாதார பிரச்சினை காரணமாக வீட்டிற்கு போ என கூறும் அதே மக்கள் தான் ராஜபக்சவை ஆதரித்தார்கள். எனவே அனைத்து மக்களினதும் அனைத்து சக்திகளினதும் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் திரட்சியினதும் வெளிப்பாடுதான் ராஜபக்சவே தவிர ராஜபக்ச வானத்தில் இருந்து குதித்த ஒரு புதினப் பொருள் கிடையாது. ஒரு புதினப் பொருளாக இதனை பார்ப்பதற்கு பதிலாக அரசியலின் ஒரு விளைபொருளாக நாங்கள் இதனை பார்க்க வேண்டும்.
கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியலின் ஒரு விளைபொருளாக பார்க்க வேண்டும். அதனை பார்ப்பதற்கு ஈழத்தமிழர்கள் நூறுவீதம் தவறுகிறார்கள். இப்போது இந்த அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பதன் மூலம் ஈழ தமிழ் மக்களுக்கு ஈழ தமிழ் வாழ் அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அறிஞர்களும், நிச்சயமாக தீங்கு இழைக்கின்றார்கள். தவறு இழைக்கின்றார்கள் என்று வரலாறு எதிர்காலத்தில் சொல்லும்.
அப்படியாயின் இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனையோடு இணைத்து இந்தப் பொருளாதாரப் பிரச்சனையை பார்ப்பதற்கு ஏதுவாக நான் ஒரு விடயத்தை தொடங்கப் போகிறேன். அரசியல் என்பது பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தை. இதுதான் முதலாவது கோட்பாடு. பொருளாதாரம் எவ்வாறு இயங்கும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு இயக்க சக்திதான் அரசியல். இந்த அரசியல் தான் கொள்கை வகுக்கிறது. கொள்கைக்கு உட்பட்டே பொருளாதாரம் இயங்குகிறது, இராணுவம் இயங்குகிறது, பொலிஸ் இயங்குகிறது. இந்தக் கொள்கைக்கு உட்பட்டே அதிகாரிகள் இயங்குகிறார்கள், இந்தக் கொள்கைக்கு உட்பட்டே மக்கள் இயக்கப்படுகின்றார்கள். எனவே கொள்கை முதலாவது. இலங்கையினுடைய அரசியல் கொள்கை என்பது அதன் பொருளாதார கொள்கை இதை நாங்கள் முதலாவதாக கருத்தில் கொள்ள வேண்டும்.
இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உலகளாவிய அரசியல் பற்றிய அடிப்படை தெளிவாக தெரிய வேண்டிய ஒன்று. அதை நான் இப்போது இலங்கை பற்றி சொல்லிக் கொண்டு வந்து இறுதியாக உலகளாவிய அரசியலோடு இணைக்க போகின்றேன். இப்போது இலங்கை உள்நாட்டு அரசியலுக்கு வருவோம். சுதந்திரமடைந்த இலங்கையினுடைய அரசியலில் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்ற சக்திகளாக பலர் இருந்தார்கள். பல சக்திகள் இருந்தன. அறிஞர்கள், மத நிறுவனங்கள், கட்சிகள் இருந்தன. இதில் முதலாவது கட்சிகள் என்று எடுத்தால் ஐக்கிய தேசிய கட்சி இரண்டாவது ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மூன்றாவது, பொதுஜன பெரமுன அடுத்தது லங்கா சமசமாஜ கட்சி இந்த நான்கு கட்சிகளும் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை நிர்ணயித்த பிரதான காரணிகளாக இருந்தன. ஜே. வி. பி தோல்வியடைந்த ஒரு சக்தி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பவற்றின் அரசியல் பொருளாதாரம் பற்றி நான் பேசப் போவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்க, ஒற்றையாட்சியின் கீழ் விவசாயம், வறண்ட வலய குடியேற்றத்திட்டம், அந்நிய செலவாணியை பெறும் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை என்பவற்றைத் தான் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரமாக திட்டமிட்டார்.
பின்னாளில் லீ குவான் யூ ஜெயவர்த்தனவுக்கு கூறிய வசனம் பலருக்கும் தெரியும். அத்தோடு லீ குவான் யூ கூறிய இன்னுமொரு முக்கியமான வசனமும் இருக்கிறது. அது பல பேருக்கு தெரிந்திருக்காது. ஈழ தமிழர்களுடைய மூளை சிங்கப்பூரையும் மலேசியாவையும் கட்டியெழுப்புவதில் பெரிதும் பயன்பட்டுள்ளது. அதனை நாங்கள் திறமையாக பயன்படுத்தி உள்ளோம். நீங்களும் அவர்களை பயன்படுத்தி இலங்கையை மேலும் உன்னதமான நிலைக்கு கொண்டு வர முடியாததை எண்ணி நான் கவலை அடைகிறேன். அதற்கு காரணம் உங்களின் இனம் சார்ந்த கொள்கை தான் என்று கூறி இருக்கிறார். இங்கு இனப் பிரச்சினை சார்ந்த கொள்கை இலங்கையை சிறப்பாக வடிவமைக்க முடியாமல் போனதற்கான காரணம் உணரப்படுகின்ற ஒரு இடத்தை காண்கின்றோம். ஈழ தமிழர்களின் மூளையை பற்றி புகழ்ச்சியாக நான் சொல்ல வரவே இல்லை. அதை நான் ஒரு பொருளாதார காரணியாக தான் சொல்ல வருகிறேன்.
உலகம் முதலாம் உலகமகா யுத்தத்தின் பின்பு ஒரு கைத்தொழில் மயமாக்கத்தை பற்றி அதிகம் உணரத் தொடங்கியது. கொம்யூனிஸ்டுகள் உட்பட, ரஷ்யா உட்பட, லெனின் உட்பட கைத்தொழில் மயமாக்கத்தின் தேவையை, அவசியத்தை உணரத் தலைப்பட்டார்கள். விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து மேம்பட்டு கைத்தொழில் பொருளாதாரம் வர வேண்டும் என்கிற சிந்தனை முதலாம் உலகமகா யுத்தத்தின் பின்பு உலகளாவிய ரீதியில் விருத்தியடையத் தொடங்கியது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட இலங்கை தீவு விவசாய பொருளாதார கொள்கையையும், பெருந்தோட்ட விவசாய கொள்கையையும், இறக்குமதி வர்த்தக பொருளாதாரத்தையுமே அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டது. அது கைத்தொழிலை அல்ல. தமிழின ஒடுக்குமுறையை மையமாக கொண்டு குடியேற்றத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தது. எனவே அதனுடைய புற்றுநோய் அங்கே உற்பத்தியாகியது. ஒன்று பொருளாதார கொள்கை அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் கொள்கை. சிங்கள குடியேற்றங்களை தமிழ் மண்ணில் ஸ்தாபிப்பது என்ற பொருளாதார கொள்கையே பிழையானது.
இந்த காலகட்டத்தில் இலங்கையில் சரியான பொருளாதார கொள்கையை முன்வைத்த ஒரே ஒரு பகுதி இருக்கிறது. அது லங்கா சமசமாஜ கட்சி மட்டும் தான். அது மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி கூட இல்லை. லங்கா சமசமாஜ கட்சி ட்ரொஸ்கியினுடைய வாரிசுகள். ட்ரொஸ்கி கைத்தொழிலின் ஊடாக உலகளாவிய ரீதியாக வளர வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டிருந்தார். எனவே லங்கா சபசமாஜ கட்சி கைதொழிலை இலங்கையில் பிரதானமாக உருவாக்க வேண்டும் என்றும் குடியேற்றம் இலங்கையில் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய உதவாது என்றும் சொன்னார்கள். சிங்கள குடியேற்றத்தை இனப்பிரச்சினையின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்கவில்லை. ஆனால் சிங்கள குடியேற்றத்தை அது பொருளாதார விருத்திக்கு உதவாது என்ற அடிப்படையில் தான் நிராகரித்தார்கள். இன அடிப்படையில் அல்ல. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் தான் இலங்கையின் சரியான பொருளாதார கொள்கையை பற்றிய கோட்பாட்டு ரீதியான கருத்தை கொண்டு இருந்தார்கள். பின்னர் 70 களில் அவர்கள் பல தவறுகளை செய்தார்கள் என்பது வேறு விடயம்.
இந்த விவசாய பொருளாதார கொள்கை மிக மோசமான பிரச்சனையாக இருக்கிறது. டி. எஸ். சேனநாயக்கா மலையக மக்களினுடைய வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்தார். 1947ஆம் ஆண்டு இலங்கையினுடைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈழ தமிழர்களின் மொத்த சனத்தொகையை விடவும் மலையக தமிழரின் சனத்தொகை அதிகமானது. இது பற்றி யாரும் பேசுவதில்லை. வசதியாக எல்லோரும் கை விட்டு செல்கின்றார்கள். ஈழ தமிழர்கள் இலங்கையினுடைய இரண்டாவது பெரிய இனம் என்று சொல்லுகிறோம். ஆனால் ஈழ தமிழர்களின் சனத்தொகையின் அளவை விடவும் மலையக தமிழர்களின் சனத்தொகை 47ஆம் ஆண்டு புள்ளி விபரத்தில் அதிகமானது. இந்த மலையக தமிழருடைய குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்படுகிறது. நாடற்றவர்களாக வைத்திருக்கப்படுகிறார்கள். நாட்டில் உரிமை அற்று தோட்ட தொழிலாளர்களாக வாழ்கிறார்கள். இந்த கட்டத்தில் மலையக தொழிலாளர்களுடைய கண்ணீரிலும் இரத்தத்திலும் விளைந்த பணம் தான் இலங்கைக்கான அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுத்தது. இலங்கையரின் விவசாயம் அல்ல.
கடலை ஆதாரமாக கொண்ட பொருளாதாரம் தொடர்பில் இலங்கை ஒருநாளும் யோசிக்கவில்லை. சோகம் என்னவென்றால், ஒரு தீவான இலங்கை வெளிநாடுகளிலிருந்து தகரங்களில் அடைக்கப்பட்ட மீனை இறக்குமதி செய்கிறது. அவர்கள் மீனை மையமாக கொண்ட கைத்தொழிலுக்கு போயிருக்க வேண்டும். விவசாயத்தை மையமான கைத்தொழிலுக்கு போயிருக்க வேண்டும். மீன்களை தகரங்களில் அடைப்பது, விவசாய உற்பத்திகளை பதப்படுத்துவது போன்ற கைதொழில்களை உருவாக்கி இருக்க வேண்டும். முதலாவது விவசாய கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமும் அதனை பின்பற்றி வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமும் ஒரே கொள்கையை தான் கொண்டு இருந்தன. தோட்ட தொழிலாளிகளுடைய உழைப்பில் இருந்து தான் இலங்கைக்கு அந்நிய செலவாணி வந்து கொண்டு இருந்தது. அந்த பணம் இலங்கையின் அரசியலில் இரண்டு விதங்களில் பயன்பட்டது. அதனை அரசியல் ரீதியாக சமூகவியல் ரீதியாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலாவது அந்த பணத்திலிருந்து தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தேவையான எண்பது வீதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல அந்த பணத்திலிருந்து தான் இலங்கையின் பொதுச்சேவை தொழில் செய்யப்பட்டது. இலங்கை ஒரு பொதுச்சேவை தொழில் நாடு. இலங்கையில் இருக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளும் சரி, கல்வி வசதிகளும் சரி, மருத்துவ வசதி போன்ற பொதுச்சேவைகள் எல்லாம் இந்த தோட்ட தொழிலாளிகளினுடைய உழைப்பில் இருந்து தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும் பொதுச்சேவையோடு சம்பந்தப்படுகிறது. அந்த கல்வியும் சேவை தொழிலுக்கான கல்வி ஆகிறது. ஒரு உற்பத்திக்கான கல்வி அல்ல. சமூக விருத்திக்கான கல்வி அல்ல. எனவே விவசாய கொள்கை பிழை, இறக்குமதி பொருளாதார கொள்கை பிழை, நாட்டிற்கு வருமானத்தை தேடி கொடுத்த மக்களுக்கு குடியுரிமை இல்லை, வாக்கு உரிமை இல்லை, இருப்பதற்கு வீடு இல்லை, நாடும் இல்லை. இந்த அடித்தளத்தில் தான் இலங்கையின் பொருளாதாரம் கட்டி எழுப்பபட்டது. இது ஒரு பக்கம்.
இரண்டாவது சீமெந்து தொழிற்சாலையை காங்கேசன்துறையில் அமைத்தார்கள். இந்த தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட சீமெந்து இலங்கையின் தென்பகுதியில் கோபுரங்களுக்கு உதவின. வடக்கு சுண்ணக்கல் குடாநாடு அதல பாதாளமானது. அங்கே அவர்கள் தங்களுடைய தொடர் மாடி கட்டிடங்களையும் நீர்த்தேக்கங்களையும் மதகுகளையும் இங்கிருந்து வந்த வளத்தில் இருந்து கட்டினார்கள். ஏன் சொல்கிறேன் என்றால் மலையக மக்களினுடைய உழைப்பின் இரத்தமும் வடக்கினுடைய சீமெந்தும் வடக்கு கிழக்கில் இருந்த மூல வளங்களும் தான் இலங்கையினுடைய பொருளாதாரத்திற்கு உதவின.
இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசம் எப்பொழுதும் நெல்லில் தன்னிறைவு, மீனில் தன்னிறைவு, கால்நடையில் தன்னிறைவு என்று இருந்தது. இன்று வரை கிழக்கு மாகாணத்தில் போதிய கால்நடை உண்டு. போதிய பால் உண்டு. கிழக்கு மாகாணம், குறிப்பாக அம்பாறை உணவு களஞ்சியமாக விளங்குகிறது. வடக்கு கொக்கிளாய் கொக்குதொடுவாய் அந்த பகுதிகளிலிருந்து இந்த பக்கம் மன்னார் பருத்தித்துறையான பேதுரு மேடை,கண்ட மேடை, வோட்ச் கண்ட மேடை என எல்லாம் மீன் வளங்கள் நிறைந்த இடங்கள். இங்கிருந்து தெற்கிற்கு மீன் இறால் எல்லாம் போயின. ஏன் யுத்த காலத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மன்னாருக்குள்ளால் தெற்கிற்கு இறால், மீன், கடலட்டை போன்ற பொருட்கள் சென்றடைந்தன. அந்தளவுக்கு யுத்த காலத்தில் கூட நெல்லையும் கடல் உணவுகளையும் தெற்கிற்கு வழங்கியது. இப்படி நிலமை இருக்கிறது. ஆனால் இந்த வடக்கு கிழக்கு மக்கள் கை விடப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்களினுடைய வாழ்வு ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை பற்றி சிந்திக்க சிங்கள புத்திஜீவிகளும் யாரும் தயாரில்லை.
பின்னர் S.W.R.D. பண்டாரநாயக்கா 56 ஆம் ஆண்டு வரும் போது பஞ்சமகா வலவேகு எனும் கோட்பாட்டை கொண்டு வந்தார். பஞ்சமகா வலவேகு என்றால் என்ன, முதலாவது மகாசங்கம் (பிக்குகள்), இரண்டாவது உள்நாட்டு வைத்தியர்கள், மூன்றாவது கல்வி (உள்ளூர் ஆசிரியர்கள்), நான்காவது விவசாயம், ஐந்தாவது கைத்தொழில். கைத்தொழிலில் பண்டாரநாயக்கா காலத்தில் எதுவுமே நிகழவில்லை. மற்ற நான்கை சொன்னாலும் இந்த நான்கிலும் பண்டாரநாயக்கா தோல்வி அடைந்தார். அதாவது, முதலாவதாக எதனை நிறுத்தினாரோ, எந்த பிக்குக்களை முதலாவதாக நிறுத்தினாரோ அந்த பிக்குக்களாலேயே அவர் கொல்லப்பட்டார். முழு அளவில் இன பிரச்சினையை அடிப்படையாக வைத்து கொண்டு பிழையான பொருளாதார கொள்கையையும் இன ஒடுக்கு முறையை தெளிவாக செய்கின்ற ஓர் அரசியலைத் தான் UNP யும் SLFP யும் முன்னெடுத்தன. எனவே இவர்கள் இரண்டு பேரினுடைய அரசியலும் தோல்வியில் முடிவடைந்தன.
பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சில கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டு பொருளாதாரம் பற்றிய கொள்கையில் பயணித்தார்கள். அதில் அவர்கள் கைத்தொழில் பற்றி பேசினார்கள். என். எம் பெரேரா பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். அவர் ட்ரொஸ்கியவாத அடிப்படையில் கைத்தொழில் பற்றிய சிந்தனையை கொண்டிருந்தவர். ஆனால் வெறும் கை முழமிடாது. அவருடைய காலத்தில் அவர் சொன்ன கைத்தொழிலுக்கு தேவையான மூலதனம், முதலீடு, தொழினுட்பம் இந்த மூன்றும் கிடையாது. அங்கு என். எம் பெரேராவினுடைய அரசியல் பொருளாதாரம் முழு அளவில் தோல்வி அடைந்தது. அதனால் அவர்கள் முழு அளவில் அரசியலில் இருந்து நிராகரிக்கப்பட்டார்கள். ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவும் அன்றோடு அரசியலில் இருந்து அகற்றப்பட்டு விட்டார். இங்கு தொடர்ச்சியாக சிங்கள அரசியலில் அரசியல் பொருளாதாரம் என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்டே இயங்கி கொண்டு வருவதை நீங்கள் காண கூடும்.
இப்போது அடுத்த கட்டத்திற்கு போவோம். இந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தான் இன்று பொதுஜன பெரமுன எழுந்து இருக்கிறது. அதன் புத்தி ஜீவிகள் அமைப்பு என அதிகாரிகள் இணைந்த அமைப்பாகவும் சொல்லப்படுகின்றது வியத்மக. இது பண்டார நாயக்காவினுடைய பஞ்சபலவேகய கொள்கையினுடைய நீட்சி தான். அங்கு உருவாகிய இன வாத கோட்பாட்டை கொண்ட சிந்தனையாளர்களினுடைய நீட்சி தான் இது. எனவே இவர்களுக்கு இனவாதத்திற்கு வெளியே இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தை சிந்திக்க தெரியாது. இவர்களுக்கு மூடப்பட்ட பொருளாதாரத்திற்கு வெளியே அரசியலை சிந்திக்க தெரியாது. எனவே இலங்கையில் ஒன்று, மூடப்பட்ட பொருளாதாரம், இரண்டு, இனவாத பொருளாதாரம். இந்த இரண்டும் கைத்தொழில் மயமற்ற பொருளாதாரங்கள். மூன்று, அதற்கான அரசியல், நான்கு, நடைமுறை. இவை அனைத்தும் சேர்ந்து இலங்கையின் அரசியலை எப்பொழுதுமே புற்றுநோய் உடையதாக வைத்திருக்கின்றன.
இந்த பின்னணியில் வியத்மக இனவாதத்திற்கு தான் சேவை செய்யும். நாட்டின் அபிவிருத்திக்கு சேவை செய்யாது. இப்பொழுது தெருவில் நின்று சத்தம் போடுகின்ற இந்த போராளிகள், இந்த கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் நாளைக்கு பாணும், பருப்பும், எரிவாயுவும் வந்தவுடன் வீட்டிற்கு போய் விடுவார்கள். அவர்கள் அதை விட வேறுமாதிரி நினைப்பார்கள் என யாரும் சிந்திப்பது தப்பு. அவர்கள் பழக்கப்பட்ட முறை வேறு. இப்பொழுது தெருவில் குரல் எழுப்புவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆயினும் அது நீடிக்காது. இது ஒரு அடுத்த கட்ட பிரச்சினை.
அப்படி என்றால் இப்போது இலங்கை பிரச்சினை என்ன? இங்கே நாங்கள் தெளிவாக பார்க்க வேண்டிய ஒரு மிகப் பெரிய விம்பம் இருக்கிறது. இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரம் கைத்தொழில் மயமாக்கத்தோடு சம்பந்தப்படாமல் உருவாக்கப்பட முடியாது. மீன்பிடி கடல் வள அபிவிருத்தியோடு சம்பந்தப்படாமல் உருவாக்க முடியாது. விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய அடிப்படையிலான கைத்தொழிலை உருவாக்காமல் உருவாக முடியாது. எனவே இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு புதிய பார்வை வேண்டும். இது பொருளாதார பிரச்சனை. இதனை செய்வதற்கு இனப்பிரச்சினை பற்றிய விடயத்தை முதலில் தீர்த்தாக வேண்டும்.
இலங்கையின் ஜனநாயகம் பற்றி பார்ப்போம். டொனமூர் அரசியல் யாப்பின் ஊடாக 1931ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை வழங்க பட்டது. இது ஒரு ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரு வெற்றி. பிரித்தானியாவில் 26ஆம் ஆண்டு தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சகல பெண்களுக்குமே 26 ஆம் ஆண்டில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு 31ஆம் ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த டொனமூர் அரசியல் யாப்பு என்ன செய்ததென்றால் வாக்குரிமையை இலங்கைக்கு வழங்கி இலங்கையின் ஜனநாயகத்தை விழுங்கி விட்டது. அது ஜனநாயகத்தை விழுங்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டு விட்டது. இனங்களுக்கு இடையிலான உரிமைகளை ஜனநாயக ரீதியாக தீர்ப்பதற்கான அதனுடைய மண் சார்ந்த பிரதேசம் சார்ந்த ஒரு தீர்வை முன் வைத்திருந்தால் டொனமூர் அரசியல் யாப்பில் வாக்குரிமை பயனளித்திருக்கும். மாறாக அது 74 வீதமான சிங்கள பௌத்தர்களின் கையில் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் எனும் உன்னதமான விடயத்திற்கு பதிலாக இன நாயகம் தோன்றியது. எனவே இலங்கையின் வரலாறு இனநாயகத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
இந்த இன நாயகத்தின் அடிப்படையில் அரசியல் யாப்பு உருவாக்குவதற்கும் சிங்கள தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு பின்னணி இருந்தது. அது இந்திய எதிர்ப்பு வாதம். மகாத்மாகாந்தியை 1927ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் வரவேற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ஈழ தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு வந்து விட போகிறார்கள் என்ற வெள்ளையர்கள் பார்த்தார்கள். இதன் மூலம் இலங்கையை எதிர்காலத்தில் பிரித்தானியா இழக்க வேண்டி வரப்போகிறது. இந்திய தேச விடுதலை போராட்டம் இலங்கை வரை விஸ்தரித்தால் இந்தியாவின் பகுதியான இலங்கை போன பின்பு இலங்கையில் ஒரு நாளும் தளம் அமைக்க முடியாது. இந்துமா கடலில் இலங்கையை ஒரு நாளும் தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்ற அச்சத்தின் காரணமாகத் தான் டொனமூர் அரசியற் குழுவினர் சிங்கள மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து, அனைவருக்குமான வாக்குரிமையை வழங்கினர். 74 வீதமான மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் போனது. அதை சிங்கள தலைவர்கள் மகிழ்ச்சிச்சியுடன் வரவேற்றார்கள். அன்றிருந்த தமிழ் தலைவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
இந்த அரசியல் யாப்பினுடைய மாபெரும் தவறுகளில் இருந்து தான் இலங்கையினுடைய இன்றைய அரசியற் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. நாடாளுமன்ற முறை, தேர்தல் முறை, கெபினட் முறை அதன் பின்பு புதிது புதிதாக ஜனாதிபதி முறை எல்லாம் இந்த கட்டமைப்பில் இருந்து தான். எனவே இலங்கை முழுக்க முழுக்க இனவாத அடிப்படையிலேயே அரசியல் யாப்பு உருவாகிய ஒரு நாடு. இப்போது இலங்கையில் ஒரு விடயத்தை தெளிவாக பார்க்கலாம். இராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பது மகா சங்கத்தின் தெளிவான முடிவு. இராஜபக்ச குடும்பம் தவறு செய்கிறது என்பது யாவருக்கும் தெரியும். அது ஊழல் நிறைந்தது என்பதும் யாவருக்கும் சந்தேகமின்றி தெரியும். அவர்கள் தேசபக்தர்கள் இல்லை அவர்கள் குடும்ப பக்தர்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களை விட்டால் இந்திய எதிர்ப்புக்கும் தமிழின அழிப்புக்கும் பொருத்தமானவர் இலங்கையில் கிடையாது. வரக்கூடிய எந்த மாற்று சக்திகளாலும் இந்திய எதிர்ப்பு தமிழின அழிப்பு என்ற அடிப்படையில் ஒரு தெளிவான உறுதியான தலைமைத்துவத்தை உருவாக்க முடியாது.
எனவே இராஜபக்ச குடும்பத்தை அகற்றுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அந்த நிலையில் தான் அமெரிக்கா விரும்பிய 19வது சீர்திருத்த சட்டத்தை மீளக் கொண்டு வந்து வெளிநாட்டு நிதிகளை பெற்று இராஜபக்சக்களை காப்பாற்றி இலங்கையை இன்றைய நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டுமென்பது மகா சங்கத்தின் முடிவு. மகாசங்கம் தெளிவாக யோசித்திருக்கிறது. ஒருவகையில் 20 ஆவது திருத்தத்தை நீக்கினால் சிங்கள மக்களை திருப்தி படுத்தலாம். 19வது ஜே. வி. பி கொண்டு வந்தது, ரணில் சிறிசேனா கொண்டு வந்தது. அதை மீளக் கொண்டு வந்து விட்டால் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால் கோத்தாபய ராஜாபக்ச பதவியில் இருப்பதற்கு தான் அந்த செயற்பாடு. இந்த ஏற்பாட்டின் கீழ் அவர்கள் 19வது சீர்திருத்தத்தை பற்றி சொல்கிறார்கள். அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். அதனை 21வது சட்ட திருத்தமாக கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள்.
இதைவிட இன்னொன்றும் முக்கியம் இலங்கையினுடைய அரசியல் யாப்பு கமிஷன் தலைவராக இருந்த ரொமேஷ் டி. சில்வா 44 A என்கின்ற உள்ளீடை கொண்டு வர வேண்டுமென்று சொல்லி இருந்தார். அரசியல் யாப்பிலே 44வது சரத்திற்கு மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்லி இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பில் ஒரு மாற்றம் கொண்டு வந்து நாடாளுமன்றில் நான்கில் மூன்று பெரும்பான்மை வாக்குக்களோடு 44A கொண்டு வருவோம் என்று சொன்ன அந்த அரசியல் யாப்பின் நிபுணர் குழுவின் தலைவர் தமிழரது பிரச்சினைக்கும் சமஸ்டி ரீதியிலான தீர்வை கொண்டு வந்து அதையும் ஒரு சரத்தாக இணைப்போம் என்று சொல்லவில்லை. இந்த சரத்தை கொண்டு வரலாம் என்றால் அந்த சரத்தை ஏன் கொண்டு வர முடியாது? அவர்கள் தமிழருக்கு உரிமைகள் வழங்குவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இன்று குறைந்தபட்சம் சமஸ்டியை மூன்று கட்சிகள் கேட்கின்றன. “நான் சமஸ்டியை உள்ளடக்கவில்லை. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கட்சிகளும் அதை சொல்கின்றன. அந்த ஜனநாயக ரீதியிலான மக்களின் நடவடிக்கை எதிர்ப்பதற்கு நான் யார்? ஆகவே அதனை உள்ளடக்குகிறேன்.” என்று சொல்லி ஒரு தீர்வை முன்வைக்கலாம் தானே.
ஆனால், இந்த பாண், அரிசி, பருப்பு, சமையல் எரிவாயு பிரச்சனையை தீர்ப்பதற்கு இன்றைய அரசியல் யாப்பிற்கு சீர்திருத்தத்தை செய்வதற்கு மகா சங்கம் ஓடி வருகிறது. சங்க கட்டளை பிறப்பிப்பேன் என்று கூட சொல்கிறது. சங்க கட்டளை என்பது பலருக்கு தெரிந்திருக்காது. அது மோசமான ஒரு விடயம். சங்கம் என்பது பிக்குகளை அதாவது பௌத்த துறவிகளை சங்கம் என்று சொல்வது. சங்கத்தோடு சேர்ந்து அவர்கள் பௌத்த சாசனத்தின் அடிப்படையில் கட்டளை பிறப்பிப்பார்கள். அந்த கட்டளை இறுதியிலும் இறுதியானது. அதை யாரும் கேலிக்குள்ளாக்க முடியாது. எனவே சங்க கட்டளையின் படி ஆட்சி இருக்கும். கோத்தாபய வீட்டிற்கு போக வேண்டும் என்று சங்கம் கட்டளை இட்டால் அது தான் நடக்கும். அது சட்டப்படி அல்ல, நடைமுறைப்படி. அப்படி சங்க கட்டளை பிறப்பிக்க போகிறோம் என்று சொல்கின்ற மகா சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கு சங்க கட்டளை பிறப்பிப்பதாக சொல்லலாம் தானே. சொல்ல மாட்டார்கள்.
அடுத்த இதழில் முடியும்...
வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு-
நிமிர்வு ஆனி 2022 இதழ்
கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு - பகுதி 02
Post a Comment