கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு - பகுதி 02ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022  அன்று நடாத்தப்பட்ட "கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் இறுதிப் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

ஸ்பெயினில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் போது ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயினை பாதுகாக்க முற்பட்டன. அது ஏன் என்பது ஒரு அரசியல் பொருளாதார விளக்கமூடாக சொல்லலாம். ஸ்பெயினின் பிரச்சனை என்பது ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்களின் சுமையாக மாறும். எனவே ஸ்பெயினின் பிரச்சனையை தீர்க்காமல் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் எல்லாம் சேர்ந்து ஸ்பெயினை இரவோடு இரவாக அதன் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்கள்.
 
இலங்கையின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க இப்போது பல நாடுகள் முன் வருகின்றன. அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஸ்பெயினில் அதை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை தீர்மானத்திலிருந்த ஸ்பெயினுக்கு பொருளாதார உதவி வழங்கப்பட்டது. இலங்கையில் அப்படி அல்ல, "இறால் போட்டு சுறா பிடிக்கிறது போல." இலங்கைக்கு பல நாடுகள் உதவப் போகின்றன. சர்வதேச நாணய சபை (IMF) உதவப் போகிறது, உலக வங்கி (world bank) உதவப் போகிறது. அமெரிக்கா உதவப் போகிறது. ஜப்பான் உதவப் போகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் எல்லாமே இலங்கைக்கு உதவப் போகின்றன. இந்த நாடுகள் தங்களுடைய நலன் நோக்கு நிலையில் நின்று கொண்டு தான் இலங்கைக்கு உதவப் போகின்றன.

எனவே இலங்கையின் பிரதான பிரச்சனை என்னவென்றால் முதலாவதாக சொன்னது போல அமெரிக்க அரசியல் என்பது உலகம் பற்றியது. இலங்கையில் தமக்கு தேவையான அரசியல் இலாபத்தை எவ்வாறு தேடுவது என்பது பற்றியது தான். இலங்கைக்கு பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். ஒரு குறுகிய காலத்திற்கு இவ்வாறு தக்க வைக்க இவர்களால் முடியும். இது முதலாவது பிரச்சனை. இனப்பிரச்சினை அப்படியே பொங்கி எழுந்து வெளியே வரும். அதனை தீர்க்க மாட்டார்கள்.  

இந்த பின்னணியில் இலங்கையினுடைய பிரச்சனையை கைத்தொழில் மயமாக்கம் செய்தோ, விவசாயத்தை நவீன மயப்படுத்தியோ, மீன்பிடி தொழிலை நவீன மயப்படுத்தியோ இலங்கை உள்ளூர் உற்பத்தியை உருவாக்கியோ இவர்கள் தீர்க்க போவதில்லை. மாறாக வெளிநாடுகளில் தங்கள் பண்டங்களை வாங்குவதற்கு கடன் கொடுக்க போகிறார்கள்.  இதன் மூலம் பணத்தை கொடுத்து இலங்கைக்கு தங்களுடைய வர்த்தகத்தையும் தங்களுடைய அரசியல் பிடியையும் பிடிக்க போகிறார்கள்.
 
இலங்கை தன்னுடைய  இறைமையை எல்லா வழிகளிலும் இழந்தது தமிழ் மக்களை அழித்ததன் மூலம்தான். எல்லா நாடுகளிடத்திலேயும் கை ஏந்தி தன் முழு இறைமையையும் விற்க போகிறது இலங்கை. தன்னுடைய சகோதர இனத்தோடு இலங்கையின் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு ஈழ தமிழர்களும் இலங்கையிலுள்ள ஏனைய இனங்களும் சிங்கள மக்களும் சேர்ந்து இறைமையை பங்கிட்டு வாழ்வதற்கு பதிலாக, அரசியல் அதிகாரத்தை ஒருவருக்கு ஒருவர் பங்களித்து வாழ்வதற்கு பதிலாக இலங்கை இறைமையை முற்றிலும் விற்று வாழ்கின்ற ஒரு அரசியலை இலங்கையின் சிங்கள தலைவர்கள் அரங்கேற்றி விட்டார்கள். இதிலிருந்து மீள முடியாது. எனவே தற்காலிகமாக ஏற்படக்கூடிய பொருளாதார மீட்சி என்பது அந்த அரசை பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டது. இறுதியாக ஒரு கட்டத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய போராட்டம் திரும்பி வரும்.
 
அமெரிக்காவிற்கு எப்படி அமெரிக்கா எனும் நாடு உலகமாக இருக்கிறதோ அவ்வாறே சீனாவிற்கு சீனா என்ற நாடு என்பது இந்துமா கடலாக இருக்கிறது. சீனாவின் கண்ணோட்டத்தில் இந்துமா கடல் சீனாவின் ஒரு பகுதி. சீனா தெளிவாகச் சொல்கிறது. இலங்கையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கை ஓங்கி இருக்கின்ற நிலையில் சீனா சற்று ஓரடி ஈரடி பின்னே போயிக்கிறது.  இருந்தாலும் சீனாவினுடைய இறுதி தீர்வு அதனுடைய கட்டமைப்பான அபிவிருத்தி வளர்ச்சி தான். அது இலங்கையோடும் பாகிஸ்தானோடும் பர்மாவோடும் சேர்த்து கடல் ரீதியாக தன்னுடைய கட்டமைப்பை விருத்தி செய்கிறது. எனவே அதிலிருந்து சீனா பின் வாங்கி போய்விட முடியாது. பின் வாங்கினால் இந்தியா சீனாவிற்கு உலகம் இல்லை.
இந்தியாவிற்கு இலங்கையில் ஒரு தளம் தேவையில்லை. ஏனென்றால் 7500 கிலோமீட்டர் நீளமான இந்துமா கடல் கரையோரத்தை கொண்ட இந்தியாவிற்கு இலங்கையில் தளம் தேவையில்லை. மாறாக இந்தியாவிற்கு தேவைப்படுவது என்வென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் வரக்கூடாது என்பது தான். சீனாவோ அமெரிக்காவோ இலங்கையில் தளம் அமைக்க கூடாதென்பது தான் இந்தியாவின் தேவை. இந்துமாகடல் இல்லாத சீனாவிற்கு தான் இலங்கை தேவை.

இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா அப்படி அணுகும் என்று தெரிந்திருப்பதனால், இந்தியா எப்பொழுதுமே அனுசரித்துப் போகும் என்று தெரிந்து இருப்பதனால் நெருக்கடி வரும்போது இந்தியாவிடம் இலங்கை காசு வாங்குகிறது. காசு வாங்கிக் கொண்டு நாளைக்கு கையை விடும். இன்றைக்கு இருக்கின்றவர்கள் இன்னுமோர் ஐந்து வருடங்களில் இருப்பார்கள் என்று இல்லை, இன்னுமொரு புதிய அரசாங்கம் வரும். அது இந்தியாவுடன் சுமூக உறவு வைத்திருக்க வேண்டுமென்பது நிபந்தனை கிடையாது. அவர்கள் தங்களது சூழலுக்கு பொருத்தமானவர்களுடன் உறவை வைத்திருப்பார்கள்.

ஆனால், கட்டமைப்பு என்பது பலமானது. சீனா இலங்கையை கட்டமைப்பு வளர்ச்சியூடாக அணுகுகிறது. இந்தியா உதவி செய்து இலங்கையை தன்னுடன் அணைக்கப் பார்க்கிறது. உதவி செய்யும் உறவு ஒரு நிமிடத்தில் அற்று போகலாம். கட்டமைப்பை வெட்ட முடியாது. இந்தவகையில் இன்று இந்தியா வைத்து இருக்கின்ற மென்மையான போக்கை நாளை கைக்கொள்ள முடியாது. இந்தியா விரும்பினாலும் கைக்கொள்ள முடியாது. இனப்பிரச்சினை பூகம்பாக எரிமலையாக  எழும்பும். அது தீர்க்கப்படாது. ஈழத்தமிழர்கள் பலமான பாரம்பரிய கலாச்சார பின்னணியை கொண்டவர்கள். இந்த பிராந்தியத்தில் தென்னிந்தியாவுடன் சேர்த்து அவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

இதுவரை நாங்கள் இலங்கையினுடைய பிரச்சினை தீர்க்கப்படாத அடித்தளத்தை கொண்டது என்பதையும், அது அரசியல் பொருளாதார ரீதியாக பொருட்களை வாங்கி விற்கின்ற ஒரு தரகு வர்த்தக நாடாக இருக்கிறது என்பதனையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். ஆனால் தீவாக இருக்கிற நாடு மீனை இறக்குமதி செய்கிறது எனும் துயரத்தை புரிந்து கொள்வதில் இருந்து இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை பார்ப்போம். ஈழத்தமிழர்களுடைய மூளை இலங்கையினுடைய அரசை கட்டமைக்க பயன்படவில்லை. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிற்கு விசுவாசமாக இல்லை, சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அது வேற விடயம். ஆனால் இலங்கையை கட்டி வளர்க்க வேண்டும் என்ற பற்று பாசத்தோடு இலங்கை தமிழர்களுடைய மூளை இலங்கை அரசுக்கு உதவவில்லை. உதவவும் மாட்டாது. அந்த சிந்தனையோடு நாங்கள் யாருமில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களுடைய மூளை வளம் என்பது இலங்கையை கட்டியெழுப்ப போவதில்லை.
 
இலங்கை சிங்களவர்களுடைய மூளை தமிழர்களை ஓடுக்குவதிலேயே திருப்பப்பட்டிருக்கிறது. எனவே அதுவும் நேர்மறையான பாத்திரத்தை கொள்ளாது. சிங்களவர்களோடு இருக்கின்ற நிபுணர்கள் அறிஞர்கள் எல்லோரும் தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கு தங்களுடைய மூளையை செலவழிக்கின்றார்கள். தமிழ் தரப்பு தம்மை மீட்பதற்கு மூளையை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்திப்பது குறைவு. அவர்கள் வெளிநாடுகளுக்கு போய் விடுகிறார்கள். அதிலிருந்து தமிழ் தரப்பு தனது மூளையை பயன்படுத்துகிற ஒரு கட்டம் வரும். அது தவிர்க்க முடியாதது. நிச்சயமாக வரும். இதை நான் கற்பனையில் சொல்லவில்லை. இதற்கு ஒரு யதார்த்தம் உண்டு.

சரி இப்படிப்பட்ட இந்த நிலையில் நாங்கள் அரசியல் பொருளாதாரம் பற்றி உள்நாட்டு, சர்வதேசம், பூகோளம் என்ற மூன்று அடுக்குகளிலும் வைத்துப் பார்ப்போம். இப்பொழுது பாருங்கள். வெறும் உள்நாட்டு கண்ணோட்டத்தோடு  இலங்கை அரசியலை நீங்கள் பார்த்தால் நிச்சயம் தோல்வியடைவீர்கள். இந்தியாவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள், அமெரிக்காவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள். ஆனால் இந்த மூன்று அடுக்குகளிலும் பார்த்தால் தோல்வியடையமாட்டோம்.

உலக அளவில் முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு லெனின் தன்னுடைய சோஷலிச பொருளாதார கொள்கை தோல்வியடைந்ததை உணர்ந்தார். எனவே புதிய பொருளாதார திட்டம் என்கிற கொள்கைக்கு போனார். அங்கு கலப்பு சந்தை பொருளாதாரத்தை கொண்டு வர முற்பட்டார். புதிய சிந்தனை தேவை என்பதை லெனின் உணர்ந்தார் என்பதை சுட்டிக்காட்டவே நான் இதனை கூறினேன். இந்த 1921ஆம் 22ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு ரஸ்யாவில் ஏற்பட்டது. முக்கியமாக ட்ரொஸ்கி, புக்காரின் என்கின்ற இரண்டு பேர் பொருளாதார கொள்கையை திடமாக முன்வைத்தனர். விரைவான கைத்தொழில் பொருளாதாரம் வேண்டுமென்று அவர்கள் ஆணித்தரமாக முன் வைத்தார்கள். மாறாக ஸ்டாலின் நிலச்சீர்திருத்தத்தையம் விவசாயத்தையும் முதன்மைப்படுத்தினார். அவர் சொன்னது சரி. ஆனாலும் அவற்றை விடவும் முக்கியமானதாக இருந்தது உண்மையிலேயே கைத்தொழில் மயமாக்கம் தான்.
 
ட்ரொஸ்கி, புகாரின் இரண்டு பேருமே கொலை செய்யப்பட்டு விட்டார்கள். புகாரின் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஸ்டாலினால் கொல்லப்பட்டார். ஸ்டாலின் அனுப்பியவரால் ட்ராஸ்கி மெஸ்க்கிக்கோவில் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு பெரிய சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். புரட்சியாளர்களை கொன்றது புரட்சியாளர்கள் தான். இது புரட்சியின் வரலாற்றில் சோகமான ஒரு உண்மை. இது வரலாறு முழுக்க நிகழ்கிறது.

இந்த ட்ரொஸ்கியினுடையதும் புகாரினினுடையதுமான கைத்தொழில்மயமாக்க கொள்கையை தான் டென்ஷியாவோபிங் பின்னர் கையில் எடுத்தார். ட்ரொஸ்கியும், புகாரினும் கொல்லப்பட்ட இடத்தில் ரஸ்யா கைத்தொழில் மயமாக்கத்தில் வீழ்ச்சியடைந்தது. அது சரணாகதி அடைந்தது. அது பனிப்போரில் வீழ்ச்சியடைந்த கதை ஒரு நீளமான சோகம். இந்த காலகட்டத்தில் தான் ரஷ்யாவினுடைய வீழ்ச்சியை கண்ணால் கண்டு கொண்டிருந்த டென்ஷியாவோபிங் அந்த இருவரினது கொள்கைகளையும் கையில் எடுத்தார்.
 
ஆனால், இந்த இரண்டு பேரினுடைய பொருளாதார கொள்கையிலும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. புகாரினினுடையது உள்நாட்டு தேசிய அளவிலான நவீன கைத்தொழில் மயமாக்கம். ட்ரொஸ்கியினுடையது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைத்தொழில் மயமாக்கம். இருவர் சொல்லியதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால் சோசலிச கட்டமைப்பிற்குள்ளே தொழில் மயமாக்கம் என்பது. ஆனால் டென்சியாவோபிங் ஏகாதிபத்திய அமைப்பிற்குள்ளே கைத்தொழில் மயமாக்கம் என்று சொன்னார். இந்த இரண்டு அமைப்புகளும் (system) வேறு வேறு.

இந்தியா ஒத்துழைப்பு பொருளாதாரத்தை (collaboration economy) ஐக் கொண்டு வந்தது. அது இந்திய பிரதமராக இருந்த நரசிம்மராவால் கொண்டு வரப்பட்டது. சீனாவில் 1979ஆம் ஆண்டு உருவாக்கபட்ட திட்டம் சுமாராக 15 வருடங்களின் பின் வளர்ச்சியை கண்ட பொழுது இந்தியா திகைத்து போய் விட்டது.  இந்தியாவில் இருந்தது ஏறக்குறைய மூடிய பொருளாதாரம். அது தேசிய முதலாளித்துவத்தோடு இருந்தது. தேசிய முதலாளித்துவத்தில் இந்தியாவினுடைய கைத்தொழில் உலக கைத்தொழில் பண்டங்களுடன் போட்டியிட கூடிய தன்மையை கொண்டு இருக்கவில்லை. எனவே இந்தியாவை ஒத்துழைப்பு பொருளாதாரத்திற்கு இட்டு சென்றவர் நரசிம்மராவ்தான்.
 
நான் எப்போழுதும் ஒன்று சொல்வேன். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இரண்டு பிரதானமான தூண்கள் உண்டு. ஒன்று, நேருவினுடைய பழைய அணிசாரா கொள்கை என்ற பிழையான கொள்கையினை, பங்களாதேஸ் பிரச்சனையின் போது இந்தியாவை பலம் பொருந்திய தேசமாக உருவாக்குகின்ற மறுபக்கம் கொண்டு சென்றவர் இந்திராகாந்தி. இதன் பின்பு 1970களின் மத்தியில் இந்தியா செய்த உள்நாட்டு தவறுகளை நான் எற்கிறேன் என்பது அர்த்தம் அல்ல. அவருடைய வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவை மிக ஸ்திரமாக  வழி நடத்தினார். இராணுவ ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவை ஒரு பலமாக உருவாக்குவதில் 71, ஆம் 72ஆம் ஆண்டு காலத்தில் இந்திராகாந்தியின் பங்களிப்பு அதிகம். அதேபோல இந்தியாவினுடைய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நரசிம்மராவின் பங்களிப்பு பெரிது. இன்று இந்தியா அனுபவிக்கின்ற பொருளாதாரம் நல்லது கெட்டது மேன்மையானது மேன்மையற்றது எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தியா அனுபவிக்கின்ற இன்றைய பொருளாதாரத்தினுடைய தந்தை உண்மையான அர்த்தத்தில்  நரசிம்மராவ் தான். அவருடைய ஒத்துழைப்பு பொருளாதாரம் தான்.

இப்போது சோவியத்தினுடைய வீழ்ச்சிக்கு காரணம் கைத்தொழில் இல்லாமல் போனது. சீனாவினுடைய உலகளாவிய ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு காரணம் அது கைத்தொழில் மயமாக்கத்திற்கு போனது. இந்தியா தானாக மாற்றத்திற்கு போகவில்லை. அது சீனாவினுடைய வளர்ச்சியினால் அதற்கு நிர்பந்திக்கப்பட்டு இந்தியா இந்த மாற்றத்திற்கு போனது. சரி இப்போது உங்களுக்கு இது பற்றிய ஒரு பார்வை வந்திருக்கும். இதன் பின்பு மிகப்பெரிய ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் திறந்த பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்ட கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றுக்கு போகிறார்கள். பின்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஆசிய ஆபிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துமே திறந்த பொருளாதாரம், கைத்தொழில் மயமாக்கம் என்கின்ற கொள்கைக்கு போயின.

1990 களின் மத்தியில் இந்த உலகம் முழுக்க கைத்தொழில் மயமாக்கம்  என்ற கொள்கைக்கு 100 வீதம் வந்து விட்டது. இலங்கை இன்னும் வரவில்லை. இலங்கையை விடவும் பிந்தி வந்த நாடுகள் முன்னுக்கு வந்துவிட்டன. மலேசியா, தாய்வான், ஹொங்கொங் எல்லாம் மிகவும் பிந்திய வரலாறுகளை கொண்டவை. அவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். இலங்கை வரவில்லை. இப்படியாக இலங்கையில் சீரழிந்து போகின்ற பொருளாதார கட்டமைப்பில் அவர்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் என்பது வெளிநாடுகளுடன் ஒரு அனுசரிப்பைச் செய்ய உதவுமே தவிர இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவாது. இலங்கையை வாழ வைக்க உதவாது.
 
இலங்கையில் இன்றைய பாணுக்கும், பருப்புக்கும், எரிவாயுவுக்கும் சண்டை பிடிக்கின்ற இந்த மக்களோடு ஈழத்தமிழர்களை ஒப்பிடுவதா?  30 வருடமா மின்சாரம் இல்லை, எரிபொருள் கிடையாது, எரிவாயு, மண்ணெண்ணெய் கிடையாது. மக்கள் தங்களுடைய சுய சார்பு பொருளாதாரத்தால் தனது சொந்தக்காலில் தங்கி நின்றார்கள். நெல் இருந்தது, கால்நடை இருந்தது, பால் இருந்தது, மீன் இருந்தது, காட்டுலிருந்து பெற்ற உணவு இருந்தது. இந்த மக்களுக்கு குடிக்க ஐஸ்கிறீம் இல்லாமல் இருந்திருக்கலாம், அலங்காரமான ஆடை இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்தார்கள். 30 வருட காலமாக வாழ்ந்த இந்த மக்களின் வாழ்க்கையோடு பார்க்கிற பொழுது இந்த மூன்று மாத கால சிங்கள மக்களின் இந்த வாழ்க்கை தமிழர்களின் கண்ணில் ஒரு பொருட்டாக ஒரு போதும் வரப்போவதில்லை. தமிழ் மக்களின் இந்த 30 வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அவர்களுடைய பிரதேசத்தினுடைய சுய சார்பு தன்மை. அவர்களுடைய மனதில் ஊறிப்போய் இருக்கின்ற, அதாவது ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் எந்த துன்பத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்ற ஒரு விடாமுயற்சியுள்ள சளையாத மக்கள் என்கின்ற தன்மை.
 
இத்தகைய பின்னணியில் இனி, மீளப்போகின்ற இலங்கையின் அமைப்பை மாற்ற (system change) வேண்டும் என்று நாமல் ராஜபக்ச சொல்கிறார். அவர் சொல்லும் அமைப்பு மாற்றம் என்பது என்ன? பொருளாதார முறையை மாற்றுவதற்கு பெயர் தான் அமைப்பு மாற்றம். அவர் சொல்லுவது அதுதான். அவர்கள் இந்த அமைப்பைத் தான் வைத்திருக்க போகிறார்கள். இன்றைய உலக வர்த்தக பொருளாதார அமைப்பைத்தான் வைத்திருக்கப் போகிறார்கள். பிரச்சனை அமைப்பு அல்ல. பிரச்சனையாக இருப்பது கட்டமைப்பு. இங்கே பிரச்சினை அமைப்பு (system) அல்ல கட்டமைப்பு (structure).


உதாரணமாக, அமெரிக்கா என்ற நாடு முதலாளித்துவத்தை அமைப்பு (system) ஆக கொண்டு இருக்கிறது. சமஷ்டி அரசியலமைப்பை (federal constitution) கட்டமைப்பாக (structure) கொண்டிருக்கிறது. அவர்களுடைய அரசியல் கட்டமைப்பு (political structure)  சமஷ்டியாக இருக்கிறது. ஆகவே அமைப்பு வேறு கட்டமைப்பு வேறு. நாமல் சொல்கின்ற அமைப்பு என்னவென்று தெரியாது.
 
கட்டமைப்பை மாற்ற வேண்டும். இந்த கட்டமைப்பு மாற்றப்படாத நிலையில் ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை. ஆதலினால் திரும்பவும் தெளிவான வார்த்தையில் சொல்வதானால், ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சனை தீராத வரைக்கும் இலங்கையில் எந்த பொருளாதாரவிருத்தியும் இல்லை. தமிழ் மக்களின் மூளையில் சமாதானம் என்கின்ற ஒரு வார்த்தை எழாத வரைக்கும் அவர்களிடமிருந்து முதலீட்டுக்கும் இலங்கையில் இடமில்லை. வெளிநாடு கடன் கொடுக்கும். முதலீடு செய்யாது. இலங்கையில் இருக்க கூடிய இந்த அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்  யாரும் துணிந்து முதலீடு செய்ய வர மாட்டார்கள். இது ஒரு ஆழமான பிரச்சனை.

உலகத்தில் ஒரே ஒரு கருத்தியல் தான் இருக்கிறது. இதில் நாடுகளுக்கு இடையில் எல்லை எதுவும் கிடையாது. பனிப்போர் முடிந்ததன் பின்பு திட்டவட்டமாக சந்தை பொருளாதார ஏகாதிபத்திய பொருளாதார முறை தான் உலக ஒழுங்காக இருக்கிறது. இது தான் உலக முழுவதற்குமான கருத்தியல். அமெரிக்காவினதும் இது தான், சீனாவினதும் இது தான், இந்தியாவினதும் இது தான், ரஸ்யாவினதும் இது தான். எனவே உலகத்தில் இந்த கருத்தியலில் வேறுபாடு என்று எந்தவொரு அரசிடமும் கிடையாது.
 
உலகம் முழுவதுமே ஒரே மாதிரியான கருத்தியலின் கீழ் உள்ளன. அப்படியானால் நாடுகளுக்கு இடையிலான போராட்டங்கள், முரண்பாடுகள் என்ன?  அங்கு ஒரு போட்டி இருக்கிறது. ஒரே கருத்தியலுக்குள் போட்டிகள் இருக்க முடியும். ஒரு சந்தை முறைக்குள் பொருளாதாப் போட்டி நிகழும். ஆனால் அந்த போட்டி பகைமை கொண்டதாக இருக்க போவதில்லை. எல்லா நாடுகளும் ஒரு கருத்தியலைத் தான் கொண்டிருக்கின்றன.

இதற்குள் இலங்கையின் நிலை என்ன? வர்த்தக பொருளாதாரம் தான் அதனுடைய கருத்தியலாக இருக்கிறது. கைத்தொழில் பொருளாதாரம் கிடையாது. விவசாய பொருளாதாரம் தான் இருக்கிறது. அங்கும் நவீன மயமாக்குதல் கிடையாது. இது அவர்களுடைய பொருளாதாரம் பற்றிய அடிப்படை பிரச்சனை. இலங்கையினுடைய ஆட்சியில் இருக்கின்ற அல்லது கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்ற நிபுணர்கள் மூடிய பொருளாதாரத்திலிருந்தும் வர்த்தக பொருளாதாரத்திலிருந்தும் வெளிவந்தவர்கள் தான். மூடிய பொருளாதாரம் வர்த்தக பொருளாதாரம் என்பவற்றிலிருந்து வந்தவர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஒரு கைத்தொழில் மயமாக்கல் சிந்தனை வரவில்லை. வர இயலாது. அது கொஞ்ச காலம் எடுக்கும். அதற்கு புரட்சிகரமாக சிந்திக்கிற நல்ல தலைவர்கள் தேவை.

அது ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை தீர்க்கின்ற வகையிலான ஒரு புரட்சிகர மாற்றம் ஒன்று சிங்களவர்கள் மத்தியில் வந்தால் தான் சாத்தியம்.  சிங்கள மக்கள் மத்தியில் பெருந் தலைவர் (great leader) கிடையாது. சிறந்த தலைவர் என்று சொல்லக் கூடிய ஒருவரும் கிடையாது. அங்கு தலைவர்கள் சாகசம் செய்வார்கள். எதிரிகளை வீழ்த்துவது தான் அவர்களுடைய சாதனை. அவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவது ஒரு சாதனை இல்லை. சமாதானத்தை உருவாக்குவது அவர்களுக்கு சாதனை இல்லை. மக்களை அழிப்பது தான் அவர்களுடைய சாதனை. இப்படிப்பட்ட சாதனையை கொண்ட தலைமைத்துவத்தையும், அறிவியலையும்,  இராணுவத்தையும், தலைவர்களையும் கொண்ட ஒரு தேசத்தில் இனியும் அமைதி நிலவும் என்கிற வரலாற்று போக்கு கண்ணுக்கு தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இப்போது வரக்கூடிய எந்தவொரு தற்காலிகமான சுமூகநிலையும் ஈழத்தமிழர்களுடைய தீர்க்கப்படாத பிரச்சனை. அதாவது இனி எந்த அரசியல் யாப்பு திருத்தமும் கொண்டு வர மாட்டார்கள். தமிழர்களுக்காக எந்தவித சமஷ்டி ஆட்சியும் கொண்டுவர தயாராக இருக்க மாட்டார்கள். தமிழர்களுக்காக போராட வேண்டிய ஒரு கால கட்டத்தை தமிழர்கள் 100 வீதம் தவற விட்டிருக்கிறார்கள். அதாவது, ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். எமக்கு சமஸ்டி முறை வேண்டும் நாங்கள் இலங்கையை கட்டி எழுப்ப ஒத்துழைப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும். சமஸ்டி முறையின் கீழ் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களை கைது செய்ய முடியாது என்பது போல தமிழ் மக்களை கைது செய்ய முடியாது. ஒரு சிங்கள மகன் கொல்லப்பட்டதற்கு மகா சங்கம் கண்டனம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டிருக்கிறது. ஒன்றரை இலட்ச மக்கள் கொல்லப்பட்டதற்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும், இந்த கட்டத்தில் தமிழர்களும் சேர்ந்திருந்தால் மகா சங்கம் அப்படி தமிழர்களை புறக்கணிக்கின்ற நேரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்கின்ற நடவடிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது. அது ஒரு வகையில் எங்களுக்கு ஒரு தளத்தை தேடி தந்திருக்கும்.


கைது செய்து சிறைக்கு போவது என்பது அரசியலின் ஒரு அங்கம். எமது தலைவர்கள் கைதிகளாக இருக்க தயாரில்லை. அவர்கள் பணங்களையும் பண்டங்களையும் பேணவும் பாதுகாக்கவும் தான் தயாராக இருக்கிறார்கள். இந்த பின்னணியில் தமிழர்கள் தலைவர்களால் கைவிடப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். தமிழர்களை கை விட்டது வெளிநாடுகள் மட்டுமல்ல. தமிழ் தலைவர்களும் கை விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை மண்ணில் கை விடப்பட்ட மக்களாக இருக்கின்ற தமிழ் மக்களை வெளிநாடுகளும் கை விட்டு விடுகின்றன. இந்த ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளத் தவறக் கூடாது.


சில மாதங்களில் இந்த கொந்தளிப்பு அது பாரியளவில் இலங்கையினுடைய அரசியலை பெரிதாக குழப்பும். இன்று இருப்பது போல் இருக்காது. தற்செயலாக ஓரடி பின்னால் வைத்திருக்கும் சீனா ஈரடி முன்னால் வைக்க தான் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராடி தான் ஆவார்கள். அது இன்னொரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராட முந்தியது போல ஈழத்தமிழர்களை இனிமேலும் கொல்ல இயலாது. வரலாற்றின் வளர்ச்சி இடம் கொடுக்காது. ஆனால் கலவரங்கள் வரலாம். அரசு நேரடியாக கொல்லுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கும் அது போராட்டத்தின் வெற்றியாக இருக்கும். எனவே இலங்கை அரசியலில் வரக் கூடிய காலங்களில் இன்று ஒரு சின்ன ஓய்வுநிலை ஏற்பட்டாலும் அது சிங்கள மக்களுக்கு தீர்வாக இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு தீர்வாக இருக்க போவதில்லை.

தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் இந்த இடத்தில் வரலாற்று வாய்ப்பை கைவிட்டு விட்டார்கள். தனிப்பட்டவர்களை குறை சொல்லுவதோ குற்றம் சொல்லுவதோ இங்கு நோக்கம் இல்லை. அறிஞர்கள் கூட நிலைமைகளை சரியாக இனங்கண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்ட தவறி விட்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள இன வாத அரசை பாதுகாக்கும் பணியை தான் தமிழ் அரசியல் தலைவர்கள் பெருமளவில் செய்கிறார்கள். தமிழ் மக்களை அவர்கள் கைவிட்டு இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுக்க தவறி உள்ளார்கள். இதனால் வரக்கூடிய சோகமான விடயம் ஒன்று நான்கு ஐந்து வருடங்களின் பின்னர் கொடூரமான பக்கங்கள் வரும். ஈழத்தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கபடாத வகையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்ற இந்த காசு இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் தூக்கி நிறுத்த மாட்டாது. அது மீண்டும் கிளம்பும். எனவே கொந்தளிப்புக்கான ஒரு வாய்ப்பை மீண்டும் இந்த அரசியல் ஏற்படுத்தும். இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சனையின் பின்னணியில் இலங்கை தீவு இரண்டாக உடைவது இறுதியிலும் இறுதியான தீர்வாக போகும்.
 
இலங்கை தீவு இரண்டாக உடைவதற்கு உரிய போக்கை இந்த நெருக்கடி சற்று தாமதப்படுத்தி இருந்தாலும் அதை முடித்து வைக்க மாட்டார்கள். இந்த நெருக்கடியிலிருந்து அது அடுத்த கட்டமாக அது வெடித்து வெளியேறி வரும். இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு எந்தவொரு அரசாலும் ஒருபோதும் காண முடியாது. அது நாடு இரண்டாக உடைவது என்பதின் மூலம் மட்டும் தான் இலங்கைக்கு தீர்வு வரும். அது தான் இந்த பிராந்தியத்தில் சமாதானத்தை கொண்டு வரும். உடையும் என்பது என்னுடைய உளவியல் ரீதியான முடிவு கிடையாது அறிவியல் ரீதியான முடிவை தான் சொல்கிறேன். நாம் இலங்கையில் ஒன்றுப்பட்ட மக்களாக இருப்பது எனக்கு மிகுந்த விருப்பம் ஆனால் அதற்கு இடமில்லை எனும் போது நாங்கள் எப்படி ஒன்றுப்பட முடியும்? அந்தவகையில் இலங்கை இரண்டாக உடைவதற்கான ஒரு வரலாற்று போக்கை இன்றைய சின்ன தீர்வு ஏற்படுத்த போவதில்லை. மாறாக இது அடுத்த கட்டத்திற்கு போகும் என்பதையே உய்த்துணரக் கூடியதாக இருக்கிறது.

வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு-

நிமிர்வு ஆடி 2022 இதழ்

கொழும்பு கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு - பகுதி 01

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.