பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு - பகுதி : 01


 

லீ புக்‌ஹைட் (Lee C. Buchheit) பிணைமுறிக் கடன் (Sovereign Debt) மறுசீரமைப்புகள் தொடர்பான விடயங்களில் சர்வதேசத்தாலும் அறியப்பட்ட ஒரு நிபுணர். அவர் 43 வருட சட்டப் பணிக்குப் பிறகு 2019 இல் ஓய்வு பெற்றார். அவரது பணியின் போது 24 இற்கும் மேலான பிணைமுறிக் கடன் மறுசீரமைப்புகளில் பணியாற்றியுள்ளார். 2012ல் கிரேக்கத்தின் (Greece) பிணைமுறிக் கடனை மறுசீரமைப்பதற்கு ஆலோசனை வழங்கும் சட்டக் குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். இந்த மறுசீரமைப்பு 206 பில்லியன் யூரோக்களுக்கும் (வரலாற்றில் மிகப்பெரிய பிணைமுறிக் கடன் மறுசீரமைப்பு) அதிகமான பெறுமதி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சதாம் ஆட்சிக் காலத்தில் சேர்ந்த 140 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க 2004-08 காலப்பகுதியில் ஈராக் குடியரசிற்கு அவர் ஆலோசனை வழங்கினார். லீ புக்‌ஹைட் எடின்பர்க் பல்கலைக்கழக சட்டப் பீடத்தில் பணி புரிவதுடன் அவர் லண்டனில் உள்ள வணிக சட்ட ஆய்வுகள் மையத்தில் வருகைதரு பேராசிரியராக உள்ளார்.

சிறிலங்கா இன்று தன்னுடைய பிணைமுறிக் கடன்களை மறுசீரமைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.  தனது கடன்களை மீளச் செலுத்தவோ அவற்றுக்கு வட்டி கட்டவோ முடியாது என்று 2022 சித்திரை மாதம் அறிவித்தது.  அதனைத் தொடர்ந்து 2022 சித்திரை 18 ஆம் திகதி 2 பிணைமுறிகளுக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகையாகிய 78 மில்லியன் அமெரிக்க டொலர்களை கட்டத் தவறியது.  இதன் மூலம் இந்த நூற்றாண்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது கடனைக் கட்டத் தவறிய முதலாவது நாடாக சிறிலங்கா வந்துள்ளது. இந்த பின்னணியில் சிறிலங்காவின் பிணைமுறிக் கடன்களை மறுசீரமைப்பதில் சந்திக்கப் போகும் சவால்களை அறிவது முக்கியமாகும்.

அந்த நோக்கத்தில், “நாடுகளின் பிணைமுறிக் கடன்களின் ஆபத்தையும் அவற்றின் மறுசீரமைப்பையும் விளங்கிக் கொள்ளலும் கையாளலும்” என்ற தலைப்பில் புளோரன்ஸ் வங்கி மற்றும் நிதித்துறை கற்கை நிறுவனத்தினால் (Florence School of Banking and Finance ) 2018 சித்திரை 24 இல் வங்கியாளர்களுக்கு நடத்தப் பட்ட பயிற்சி வகுப்பில் லீ புக்‌ஹைட் வழங்கிய உரையின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த உரையில் பிணைமுறிக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்று ரூரிடானியா Ruritania குடியரசு என்னும் ஒரு கற்பனை நாட்டை முன்வைத்து லீ புக்‌ஹைட் விளக்கியுள்ளார்.  

இந்த உரை வங்கியாளரைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தை கொண்டிருந்தாலும் இந்த உரையின் ஊடாக சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் திரைமறைவில் நடக்கவிருக்கும் கூத்துக்களை நாம் அறிந்து கொள்ளலாம்.  கடன் வழங்கிய பெரும் தனவந்தர்களுக்கும், கடன் வாங்கிய சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே நடக்கும் ஊடாட்டத்தை விளங்கிக் கொள்ளலாம்.  பெரும் பண மூலதனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் நடத்தும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் முடிவில் பாதிக்கப்படுவது கடனாளி நாட்டு மக்களும் கடன் வழங்கும் பன்னாட்டு நிறுவனங்களால் இலாபமீட்டும் அரசாங்கங்களுக்கு வரி கட்டும் அந்நாடுகளின் சாதாரண மக்களும் தான் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.  அடுத்து அவரின் உரைக்கு செல்வோம்.

எந்தவித விளக்கமும் தேவையற்ற சுயமான உண்மை என நான் கருதுவதை சொல்லிக் கொண்டு எனது உரையை தொடங்குகிறேன். அதாவது, இந்த 21 ஆம் நூற்றாண்டில் கடன் வாங்கும் எந்த ஒரு நாடும் அக்கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குவதில்லை. இது வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும் அல்லது வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் பொருந்தும்.    இங்கு, திருப்பிச் செலுத்துதல் என்பது, ஒரு நாடு அப்போது தனக்கு இருக்கும் வளங்களை உபயோகித்து தன்னுடைய அந்தக் கடன் பொறுப்பை விட்டு வெளியேறுதல் என்று தான் அர்த்தப்படும்.  ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் எல்லா நாடுகளும் கடன் வாங்கும் பொழுது, அந்தக் கடனை கட்ட வேண்டிய காலம் முதிர்வடையும் பொழுது வேறு இடத்திலிருந்து இன்னுமொரு கடனை வாங்கி முதல் வாங்கிய கடனை கட்ட முடியும் என்ற நம்பிக்கையிலேயே கடன் வாங்குகின்றன.  அப்படி வாங்கிய புதிய கடனை கட்ட வேண்டிய காலம் முதிர்வடையும் போது மேலும் இன்னுமொரு கடனை வாங்கி அதனை கட்ட முடியும் என்று நம்புகின்றன. இவ்வாறாக இது நிரந்தரமாக முடிவில்லாமல் தொடர்கிறது. 

இந்த காரணத்திற்காகவே இதை நான் மறுகடனெடுத்தல் அனுமானம் (refinancing assumption) என்று அழைக்கிறேன். நாடுகளின் இந்த ஓயாத வெட்கமற்ற கடன் பெருக்கத்தினாலேயே அவற்றின் பொருளாதாரத்தில் பிணைமுறிக் கடன்களின் பங்கு பொதுவாக வளர்ச்சியடைகின்றது. இந்தப் பங்கு மிகவும் அரிதாகவே குறைவடைகின்றது. கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதம் (debt to GDP ratio) என்பதைப் பார்க்கும் போது அது கீழே போகலாம். ஏனெனில், GDP உயரலாம் ஆனால் பிணைமுறிக் கடன்களின் பங்கு அரிதாகவே குறையும். 

பழைய காலத்தில் இது இவ்வாறாக இருந்ததில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு, வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதன்மை கடன் வழங்குபவர்களாக பெரும் வணிக வங்கிகள் இருந்தன. எந்த வணிக வங்கியாளரும் தனது வங்கியின் கடன் மேற்பார்வைக் குழுவிடம் ரூரிடானியா குடியரசிற்கு கடன் வழங்குமாறு ஒரு கோரிக்கையை முன்மொழிய தயங்குவார்கள். ஏனெனில் இந்தக் கடனை ருரிட்டானியா திருப்பிச் செலுத்தும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது தான் மேற்பார்வைக் குழு கேட்கப் போகும் முதற் கேள்வி என்று வங்கியாளருக்கு தெரியும். 

இந்தக் கேள்வியின் பின்னால் இரண்டு அடிப்படைகள் இருக்கின்றன. முதலாவது, ரூரிடானியா தன்னுடைய சொந்த வளங்களைப் பயன்படுத்தி அந்தக் கடனை திருப்பிச் செலுத்துமா என்பது. இரண்டாவது, முக்கியமாக, அந்தக் கடன் முதிர்ச்சியடைந்து திருப்பிச் செலுத்த வேண்டிய  நாளில் வங்கிக்கு அந்த கொடுப்பனவை மேற்கொள்வதில் ரூரிடானியாவிற்கு ஏதும் சிக்கல் (risk) இருக்குமா என்பது.  எதிர்காலத்தில் ஒரு நாள் ரூரிடானியா தனக்கு ஏற்புடைய வட்டி வீதத்தில் இன்னுமொரு இடத்தில் இருந்து கடன் வாங்கி தன்னிடம் வாங்கிய கடனை மீளச் செலுத்தும் என்ற நிச்சயமற்ற தன்மையை எந்த ஒரு வங்கி மேற்பார்வைக் குழுவும் அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

ரூரிடானியாவின் கடன் கோரிக்கைக்கு வங்கி மேற்பார்வைக் குழுவின் பதில் பலவாறாக இருக்கும்.  வழக்கமாக அவர்களின் பதில் ஒரு தவணைக் கட்டண கடன் ஆக இருக்கும். அதாவது ஒரு கால வரையறுக்கு உட்பட்ட (உதாரணமாக 10 வருடம்) கடன், ஆனால் கடனாளி குறிப்பிட்ட தவணை இடைவெளிகளில் கட்டாயமாக கடனின் முதலை (உதாரணமாக கடைசி 5 வருடங்களில்) பகுதி பகுதியாக கட்டி முடிக்க வேண்டும்.  அப்படி செய்யும் போது கடன் முதிர்வடையும் நாளில் அதிலிருந்து மீள்வதற்கு கொடுப்பனவை செய்வது  ரூரிடானியாவிற்கு பெரும் சிரமமாக இருக்காது.

முந்தைய ஆண்டுகளில் வேறு பொறிமுறைகளும் இருந்தன. உதாரணமாக குறித்த சேமிப்பு நிதியம் (sinking funds) என்ற ஒரு பொறிமுறையில், கடனின் அளவு உண்மையில் அதன் வரையறுக்கப் பட்ட காலப் பகுதியில் குறையாது. ஆனால் கடன் வாங்கியவர் அதற்கு சமனான நிதியை ஒரு காபந்து நிறுவனத்திற்கு சிறிது சிறிதாக கட்டி வர வேண்டும். கடன் முதிர்வடையும் காலத்தில் அதனைக் கட்ட அந்த காபந்து நிறுவனத்தின் நிதி பயன்படுத்தப்படும். 

இப்பொழுது அப்படியில்லை நண்பர்களே! 

இன்றைய உலகில் நாடுகள் முதன்மையாக முறிகளின் சந்தைகளிலிருந்தே (bond markets) கடன்களை பெறுகின்றன.  இந்தச் சந்தைகள் சடுதியான கடன் முதிர்வுகளையே விரும்புகின்றன. அதாவது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் பத்திரத்தின் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவதாகும். எனவே இந்த கடன்கள் மறுகடனெடுத்தலூடாக தீர்க்கப்படும் என்ற அனுமானத்தில் தான் நாம் அனைவரும் இந்த நாட்களில் செயல்படுகிறோம். 

40 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் உள்ள வேறுபாடு என்பது அத்தனை ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது என்பதையும் எந்த அளவுக்கு முதலீட்டுச் சந்தையின் பரவலையும் அதன் கையிருப்பு பணத்தின் அளவையும் காட்டி நிற்கிறது.  40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூலதனச் சந்தைகள் மிகப் பெரியதாக இருப்பதால், ரூரிடானியா மூலதனச் சந்தையிலிருந்து மறுகடனெடுக்க முடியும் என்று கூறுவது இப்போது முற்றிலும் நம்பத்தகுந்ததாக உள்ளது.  

உங்கள் நாட்டிற்காக நீங்கள் கடன் வாங்கப் போகிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் ஒரு வெளிநாட்டு நாணயத்தில், அநேகமாக அமெரிக்க டொலரில், ஒருங்கிணைக்கப்பட்ட LIBOR (London Inter Bank Offered Rate) வட்டி வீத அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தின் மூலம் கடன் வாங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். இன்று நீங்கள் எந்த நாணயத்திலும் கடன் வாங்கலாம், அதை நீங்கள் விரும்பும் நாணயத்திற்கு மாற்றலாம். நீங்கள் நிலையான வட்டி வீதத்துக்கு கடன் வாங்கலாம், அதை மாறும் வட்டி வீதக் கடனாக மாற்றலாம். எனவே மூலதனச் சந்தைகள் பரந்தும் மிகப் பெரிதாகவும்  பல்வகைப் பட்டதாகவும் உள்ளன. 

பெரிய பிரச்சனை என்னவென்றால், மறுகடனெடுத்தல் அனுமானம் சில சந்தர்ப்பங்களில் உடைந்து போகக் கூடியது. சில சமயங்களில், நாட்டின் தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக முதலீட்டுச் சந்தைகள் அந்நாட்டுக்கு கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. ஆனால், சில சமயங்களில், அது கடன் வாங்கிய நாட்டின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களாகவும் இருக்கும். நாடு எதிர்பாராத புவிசார் அரசியல் நெருக்கடியை சந்திக்கலாம். உலக மூலதனச் சந்தையில் உள்ள பெரியதொரு நிதி நிறுவனம் உடைந்து போகலாம். வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதங்கள் உயர ஆரம்பிக்கலாம். இது 1994இல் நடந்தது. அந்த ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி  11 முறை வட்டி வீதத்தை உயர்த்தியது. இதனால், வளர்ந்து வரும் சந்தைகளில் பணத்தை முதலீடு செய்தவர்கள் இப்போது பாதுகாப்பான லாபகரமான முதலீடு என்று அவர்கள் கருதிய அமெரிக்காவுக்கு அப்பணத்தை பெருவாரியாக இடம் மாற்றினார்கள், இது மெக்சிகோவில் மார்கழி 1994 இல் ஏற்பட்ட டக்கீலா (Tequila) நெருக்கடிக்கான காரணங்களில் ஒன்றாகும். 

பிணைமுறிக் கடனாளி நாடு ஒன்றின் துரதிர்ஷ்டம் அல்லது அதன் முறைகேடான பொருளாதாரப் போக்கு முதலீட்டாளர்களுக்கு பிணைமுறிக் கடன் அளிப்பதில் அபாயங்கள் இருப்பதை நினைவூட்டுகிறது. திடீரென்று அவர்கள் பின்வாங்கத் தொடங்குகிறார்கள். ஒரு சமூகமாக நாம் இந்த ஸ்திரமின்மையை பிணைமுறி நிதிச் சந்தைக்குள் அனுமதித்து விட்டோம். இப்போது நம்மிடம் நிதி அமைப்பு உலகத்தின் அரசியல் கட்டமைப்பு, நிதிக் கட்டமைப்பு, இன்னும் சொல்லப்போனால் இயற்கையின் கட்டமைப்பு என்பவை நிரந்தரமாக எமக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையின் மீது கட்டப் பட்டுள்ளது. மறுகடனெடுத்தல் இந்த நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுமானமாக இருக்கிறது. ஆனால், எந்த காரணத்திற்காகவாவது ஒரு நாடு அதன் முதிர்ச்சியடைந்த கடனை தீர்க்க மறுகடனெடுத்தல் செய்ய முடியாது என்ற கட்டம் வரும் போது பிரச்சனை வருகிறது. அந்த நேரத்தில் அந்நாட்டுக்கு இருக்கும் தேர்வுகள் மிகவும் கொடூரமானவை. 

ஒரு தேர்வு என்னவென்றால், எந்தவிதமான அவமானத்தையோ சங்கடத்தையோ வெளியே காட்டாது பிரச்சனையை தீர்க்க முனைவது. அதாவது, நாட்டின் நிதிக் கையிருப்புகளைப் பயன்படுத்தி  நிதிச் சந்தையில் ஏற்பட்ட இடர் காலத்தை கடப்பது. இது எப்போதுமே குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு மோசமான யோசனை. பெரும்பாலான நாடுகளின் கையிருப்புகள் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும். உதாரணமாக, உலகின் மிகப்பெரிய பிணைமுறிக் கடனாளியான அமெரிக்கா எல்லா கடன் சந்தையிலிருந்தும் முற்றிலும் துண்டிக்கப்படுமாக இருந்தால், கடனைச் செலுத்துவதற்கும் அதன் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிரப்புவதற்கும் சுமார் 17 வாரங்கள் மட்டுமே அதன் கையிருப்பு போதுமானது. என்னுடைய நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு சிறிய ஆய்வில் இது தெரிய வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்க அரசாங்கத்திற்கான கடன் உச்சவரம்பை அதிகரிக்கத் தடை விதித்து. அப்போது இந்த கணிப்பு கிட்டத்தட்ட சரியானது என்று நிரூபணமானது. அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஏறத்தாழ மூன்று மாதங்களில் தங்களிடமுள்ள பணம் தீர்ந்துவிடும், அந்த நேரத்தில் எமக்கு கடனளித்த சிலருக்கு பணம் கொடுக்க முடியாத சூழல் வரும் என்று அமெரிக்க காங்கிரசுக்கு கடிதம் எழுதினார். 

இரண்டாவது தேர்வு,  கடன் வழங்கக்கூடிய அதிகார பூர்வ மூலங்கள் சிவற்றை முடிந்தால் கண்டு பிடித்து அவர்களிடமிருந்து கடன் வாங்குவதாகும். அந்தக் கடனை முதிர்ச்சியடையும் கடன்களிலிருந்து வெளியேற பயன் படுத்துவதாகும்.  இது தான் ஐரோப்பாவில் 2010 இல் தொடங்கி நடந்தது.  ஐரோப்பாவில் இருந்த கொள்கை அதிகாரபூர்வ கடன் வழங்கும் மூலங்கள் (ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பனவற்றின் ஊடாக கடன் வாங்குவதாகவே இருந்தது.  இந்நிறுவனங்கள் கடனில் அமிழ்ந்திருந்த கிரேக்கம், போர்த்துகல், அயர்லாந்து, சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கு அவர்களின் முதிர்வடையும் கடன்களை கட்டுவதற்காக கடன் வழங்கின.  இதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தது தாமதமாக பங்குனி 2012 இல் நடந்த கிரேக்க கடன் மறுசீரமைப்பு ஆகும்.  இந்தக் கொள்கையின் விளைவு என்னவென்றால், அந்நாடுகளிற்கு வழங்கிய கடன்களால் வணிக நிதி நிறுவனங்களுக்கு வரவிருந்த இழப்பு அவர்களில் கைகளிலுருந்து இந்த உத்தியோகபூர்வ நிதி மூலங்களின் தோள்களிற்கு மாற்றப் பட்டது.  அதாவது அந்த கடன் பொறுப்புகள் இந்த அதிகாரபூர்வ நிதி மூலங்களுக்கு வரி செலுத்துவோரின் கைகளுக்கு மாற்றப்பட்டது. 

இந்த அதிகாரபூர்வ நிதி மூலங்களிடமிருந்து கடன் வாங்குவதற்கான வசதியும் ஒரு நாட்டுக்கு இல்லை என்றால், அந்நாட்டுக்கு ஒரே ஒரு தெரிவு மட்டுமே உள்ளது. தனது கடன்களை மறுசீரமைப்பது என்பதே அந்த ஒரே ஒரு தெரிவு. கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட பிணைமுறிக் கடன் நெருக்கடிகளின் மூலம் நாம் கற்றுக் கொண்ட ஒரு பாடம் என்னவென்றால், அது அநேகமான நாடுகள் தமது கடனை மறுசீரமைக்கும் முடிவை முடிந்தவரை பிற்போட்டுக் கொண்டே வந்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக, 1980களில் நீங்கள் பார்த்தால், கடன் மறுசீரமைப்புக்கு பெரிய உதாரணமாக இருந்தது மெக்சிகோ ஆகும். 1982 ஆவணி வரை அதன் கடன் ஊதிப் பெருத்து இருந்தது. அப்பொழுது ஒரு பொருளாதார வல்லுனர் மெக்சிகோவின் கையிருப்பு எதிர்மறையாகிவிட்டது என்று என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது. இதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது மோசமான நிலைமை என்பது மட்டும் தெரிந்தது. 

கடன் ஊதிப் பெருத்திருக்கும் அதேவேளை அக்கடனை கட்ட எங்குமே மீள்கடன்வாங்க முடியாத நிலைமையில், முதலாவதாக வரும் கேள்வி IMF இடம் போகலாமா என்பது. இது குறித்து வலுவான கருத்துக்கள் உள்ளன. நிச்சயமாக IMF ஒரு அளவு நிதியுதவியை வழங்கும். அதற்காக அவர்கள் வரவேற்கப்படுவார்கள். ஆனால் அது ஒருபோதும் சும்மா கிடைக்கப் போவதில்லை. அதற்கு நிபந்தனை இருக்கும். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அந்த நிபந்தனை ஒரு புறத்தில் நல்ல செய்தியாகவும் மறு புறத்தில் மற்றும் கெட்ட செய்தியாகவும் இருக்கும். அரசியல் ரீதியில் விரும்பத்தகாதவாறு நிதிக்கொள்கையை மாற்றுமாறு IMF கேட்கும் என்பது கெட்ட செய்தி. நிதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தேயாக வேண்டும் என்று அரசியல்வாதிகள் உணர்ந்து கொண்டால் அதனை தாங்கள் சொந்தமாக செய்கிறோம் என்று சொல்வதை விட IMF மீது குற்றம் சாட்டுவது அவர்களுக்கு மிகவும் எளிதானது. 

தமிழாக்கம் - நிமிர்வு 

நிமிர்வு ஆனி 2022 இதழ்

பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு – பகுதி : 02

பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு – பகுதி : 03

பிணைமுறிக் கடன்களை மறுசீரமைத்தல் - பகுதி : 04

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.