பிணைமுறிக் கடன்களை மறுசீரமைத்தல் - பகுதி : 04

 


கடன்களை மறுசீரமைப்பதற்கு முதலாவது வழி கடனளிப்பவர்களுடன் கலந்தாலோசிப்பது, இரண்டாவது வழி கடனளித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று பார்த்தோம்.  இங்கு பேச்சுவார்த்தை என்பது பேரம் பேசுவதை குறிக்கும். இரண்டாவது வழியில் கடனாளி நாடு கடனளித்த வங்கிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடனளித்தோர் குழுக்களை (creditor committee) அங்கீகரித்து அவற்றினூடாக கடனளித்தவர்களுடன் பேரம் பேச வேண்டும். இந்த ஒழுங்கு 1980 களில் அற்புதமாக செயற்பட்டது.

ஆனால் இந்த ஒழுங்கு பின்னர் உடைந்து போனது. கடனளித்த வங்கிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட வங்கி ஆலோசனைக் குழுக்கள் முதன்முதலில் அமைக்கப்பட்டபோது, சரியான சிந்தனையுள்ள அனைத்து வங்கியாளர்களும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக சிந்திப்பார்கள் என்ற ஒரு எளிமையான அனுமானத்தின் அடிப்படையிலேயே அவை அமைக்கப்பட்டன. எனவே, குழுவின் முன்பு வரும் ஒவ்வொரு முக்கிய பிரேரணைக்கும் ஏகமனதான ஒப்புதல் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தங்கள் அடிப்படை விதியாக அமைத்துக் கொண்டனர். இந்தக் குழுக்கள் பொதுவாக 12 முதல் 15 உறுப்பினர்களைக் கொண்டிருந்தன. 1980 களில் ஏற்பட்ட நெருக்கடியின் முதல் ஆண்டுகளில், சர்வதேச வங்கிக் கட்டமைப்பு ஒரு மிகச் சிறிய நூலிழையிலேயே தொங்கிக் கொண்டிருந்தது. அதனால் இது நன்றாக வேலை செய்தது.

ஆனால் ஒரு தசாப்தம் உருண்டோடியதும், இந்த ஒழுங்கில் வெடிப்புகள் ஆரம்பமாகின. சிறிய வங்கிகள் இந்த விளையாட்டை விளையாட விரும்பவில்லை. உதாரணமாக, ஜப்பான் போன்ற வேறுநாடுகளின் மேற்பார்வையின் கீழ் இருந்த சில வங்கிகள் இந்த விளையாட்டை விளையாட ஆர்வமாக இருக்கவில்லை. அந்த தசாப்தம் முடிவடையும் நேரத்தில், சில வாரங்களாக மட்டுமே இருந்த கடன் மறுசீரமைப்புப் பொதியை ஒப்புக்கொள்வதற்கும் அது கையெழுத்திடுவதற்கும் இடையே எடுக்கப்பட்ட காலம் சில ஆண்டுகளாக நீண்டு சென்றது. உதாரணமாக பிரேசில் 1992 இல் ஒப்புக் கொண்ட பிராடி கடன் மறுசீரமைப்பு (Brady restructure), 1995 வரை கையெழுத்திடப் படவில்லை.

கடைசிக் காலங்களில், 1998 இல் ரஷ்யாவில் நடந்தது ஞாபகத்துக்கு வருகிறது.  80 களில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு வங்கி ஆலோசனைக் குழு ரஷ்யாவில் 1998 இல் இருந்தது. இந்தக் குழுவின் முடிவுகளுடன் ஒரு வங்கி இணங்க மறுத்தது. மாதங்கள் கடந்தன. இறுதியாக ரஷ்யா அந்த வங்கியை அந்தக் குழுவிலிருந்து நீக்கியது. அதுதான் அதற்கிருந்த ஒரே வழி. இந்த குழுக்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்களில் ஒன்றை அந்த சம்பவம் அம்பலப்படுத்தியது. இந்தக் குழுக்கள் தங்கள் இஷ்டப்படி தங்களை உருவாக்கி கொள்கின்றனவா அல்லது கடனாளி நாட்டின் ஆசீர்வாதத்துடன் உருவாகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

மேலே சொன்னவாறு, வங்கி ஆலோசனைக் குழுவின் நிர்வாகம் முதலாவது பிரச்சனையாக இருந்தது. அவை அதைத்  தாண்டி நகர்வது போல் இப்பொழுது தெரிகிறது. அதாவது இந்தக் குழுக்கள் தமக்குள்ளே பெரும்பான்மையால் அடையப்படும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக சொல்கின்றன.

இரண்டாவது பிரச்சனை விவாகரத்து போன்றது. அதாவது, ஒரு கடனாளி நாடு அங்கீகரித்து ஆசீர்வதித்து உருவாக்கப்பட்ட ஒரு வங்கி ஆலோசனைக் குழு அந்த நாட்டு வேண்டுதல்களுக்கு இணங்காத நிலையில் அவர்களுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஆலோசனைக் குழுவுடன் நடத்தப்படும் பேச்சுவாரத்தை பல மாதங்கள் அல்லது வருடங்களாக தொடர்ந்தால் அதனை IMF விரும்பாது. அந்தப் பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்ளாவிட்டால் தமது உதவித் திட்டம் உடைந்து போகும் என்று IMF சொல்லும்.

கடனளித்தோரால் உருவாக்கப்பட்ட வங்கி ஆலோசனைக் குழுவை பகைத்துக் கொண்டு அதன் ஒப்புதல் இல்லாமல் பரந்த கடனளித்தோர்  சமூகத்துடன் ஒரு கடனாளி நாடு ஒரு பரிவர்த்தனையை நடத்த முடியும் என்ற எண்ணம் மிகவும் ஆபத்தானது. ‘அன்பான கடன் பத்திரங்களை வைத்திருக்கும் சமூகத்தினரே நாங்கள் இதனை ஆதரிக்கவில்லை’ என்று ஒரு செய்திக்குறிப்பை அந்தக் குழு வெளிவிட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே இது ஒரு ஆபத்து. ஆகவே ஒரு கடனாளி நாடு கடனளித்தோர் குழுக்களுடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு போகுமாக இருந்தால் அது திருமண பந்தம் மாதிரி பிரிக்க முடியாதது. பிரிந்தால் மரணம் தான்.

ஒரு வேளை எப்பொழுதுமே இணங்காமல் விலகி நிற்கும் ஒரு கடனளிக்கும் நிறுவனம் அந்த குழுவில் இருந்தால் என்ன செய்வது? எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘ருரிடானியா கட்டாயம் அதன் IMF கடனையும் மறுசீரமைக்க வேண்டும்.’ என்பதை விதியாக்க வேண்டும் என்று ஒரு நிறுவனம் எப்பவும் சொல்லிக் கொண்டிருந்தது. எங்களால் IMF கடனை மறுசீரமைக்க முடியவில்லை. எங்களால் IMF கடனை மறுசீரமைக்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த பிரச்சினையை விவாதிப்பதில் மாதங்கள் செலவிடப்படும்.

கடந்த ஆண்டு நான் ஒரு கடன் மறுசீரமைப்பு செய்தேன். IMF இன் மத்தியத்துவத்துடன் நடக்கும் கலந்தாலோசனைக்கும், கடனளித்தோர் குழுக்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை இது நன்றாக வெளிக் கொண்டு வருகிறது. அந்த நாட்டின் பிரதமர் IMF இன் அறிமுகம் நாட்டின் நலன்களுக்கு நஞ்சு என்று கருதியதால் அந்நாட்டுக்கு IMF திட்டம் இருக்கவில்லை. ஆனால் IMF ஒரு பாத்திரத்தை வகித்திருந்தால் முன்பு நான் விவரித்த கடன் தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மை, கடன் நிவாரணத்தின் விகிதாசாரம் போன்ற விடயங்களுக்கு உறுதிமொழிகளை வழங்க ஒரு நிறுவனம் இருந்திருக்கும். அப்படி இல்லாத நிலையில், இந்த நாட்டின் கடனளித்தோர் குழு, அதாவது தனியார் துறை கடன் வழங்குநர்கள், அந்த நாட்டின் நிதிநிலைமைகளை சரி செய்வதற்கான ஒரு திட்டத்தை முடிவு  செய்தார்கள். அவர்கள் அதை தொடர்ச்சியாக கண்காணிக்க முடிவு செய்தார்கள். அதாவது அவர்கள் தங்களை IMF ஆக்கிக் கொள்ள முற்பட்டார்கள்.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. IMF சொல்லி வரிகளை உயர்த்துவது ஒரு விஷயம், ஏனென்றால் வாஷிங்டனில் உள்ள சில பலதரப்பு உத்தியோகபூர்வ அதிகாரிகள் பல விடயங்களையும் ஆராய்ந்து ஒன்றைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால் ஒரு சில தனியார் கடன் பத்திரதாரர்கள் எழுந்தமானமாக பொதுமக்களின் வரிகளை உயர்த்தச் சொல்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்த அழுத்தத்தை முறியடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. எனவே IMF மத்தியத்துவம் இன்றி பேச்சுவார்தைக்குள் நுழையும்போது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.

மூன்றாவது பிரச்சனை, ஒரு குறுகிய கால தீர்வே கடனளித்தோர் குழுக்களின் விருப்பமாக இருக்கும் என்பது. அவர்கள் பின்வருமாறு வாதிடுவார்கள். ‘ருரிட்டானியாவிற்கு கடன் பிரச்சனை உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அநேகமாக இந்த நிலை இன்னும் சில வருடங்களுக்கு தொடரும் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம் . ஆனால் எம்மால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. எதிர்காலம் யாருக்குமே தெரியாது. எனவே உங்கள் கடனின் முதிர்ச்சிக் காலத்தை நீட்டிப்போம். சில வருடங்களுக்கு வட்டி வீதத்தையும் குறைப்போம். ஆனால் பின்னர் அது பழைய வீதத்துக்கு உயரும். இதுதான் எங்கள் தீர்வு. இரண்டு விடயங்களில் ஒன்று நடக்கும். அதாவது வட்டி வீதம் பழைய நிலைக்கு உயர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் பொழுது ருரிட்டானியா தனது பொருளாதார நிலையை மீட்டெடுத்து இருக்கும். இது நடந்தால் எல்லாம் சுகமே. அல்லது, ருரிட்டானியா பொருளாதாரப் பிரச்சனைக்குள் தொடர்ந்து சிக்குப் பட்டிருந்தால் நாம் இந்த பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் வந்து இதே செயற்பாட்டை மீண்டும் செய்வோம்.’

கடனளித்தோர் குழுக்கள் பின்வருமாறும் வாதிடுவார்கள். ‘ருரிட்டானியா தனது பொருளாதாரப் பிரச்சனையில் இன்னும் கீழே போகமுடியாத நிலையில் அடிமட்ட நிலையில் இருக்கிறது என்று நம்பி உங்களுக்கு முடி வெட்டுதலை (reprofiling) தருகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் நாளைக்கே ருரிட்டானியாவின் பொருளாதாரம் சீராகி விட்டால் நாங்கள் உங்களுக்கு தேவையில்லாமல் நிரந்தரக் கடன் நிவாரணம் அளித்து விட்டவர்களாக ஆகி விடுவோம். எனவே, கடனின் அசலை அப்படியே வைத்திருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். தேவைப்பட்டால் நாங்கள் திரும்பி வந்து இதே கடன் மறுசீரமைப்பை மீண்டும் செய்வோம்.’  

கரீபியன் தீவுகளில் இது ஒரு வழக்கமாகவே வந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பெலிஸ் (Belize) மூன்று கடன் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளது. கிரெனடாவில் (Grenada) மூன்று கடன் மறுசீரமைப்புகள். ஜமைக்காவில் மூன்று கடன் மறுசீரமைப்புகள். இவ்வாறாக இது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. இதுவும் கடனாளி நாடு கடனளித்தோர் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில், இந்தக் குழுக்கள் கடன் நிவாரணத்தைக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒரு கடமை என்று கருதினாலும் அந்தக் கடனை கொடுத்து விட்டு ஒரு ஆகக் குறைந்த குறுகிய சங்கிலியில் கடனாளி நாட்டை பிணைத்து வைத்துக் கொள்ளவே விரும்பும். ஆனால் கடனாளி நாட்டைப் பொறுத்தவரையில் அது அவர்கள் மீது போடப்பட்ட தூக்குக்கயிறு தான்.

பணமுறிக் கடன் உலகில் கடன் முறிகள் பரிமாறப்படக்கூடிய நிதி ஊடகங்கள். பழைய நாட்களில் நிர்வாக மயப்பட்ட கடன் பத்திரங்கள் பரிமாறப்படக் கூடிய நிதி ஊடகமாக கருதப்படவில்லை.  ஆகவே அவை  பரிமாற்று நிதி ஊடக சட்டங்களின் கீழ் வரவில்லை. ஆனால் உண்மையிலே பிணைமுறிக் கடன் பத்திரங்கள் பரிமாறப்படக்கூடிய பத்திரங்கள். ஆகவே அவற்றின் பரிமாற்றம் பரிமாற்று நிதி ஊடக சட்டங்களுக்கு கட்டுப் பட்டது. எனவே, கடனாளி நாட்டுக்கும் கடனளித்தோர் குழுவிற்கும் இடையே கடன் பத்திரங்கள் தொரடர்பாக பல சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக பகிரங்கமாக பகிரப்பட முடியாத தகவல்களை கடனாளி நாடோ அல்லது கடனளித்தவரோ தனக்கு விருப்பமான சில தரப்பினருடன் மட்டும் பகிர்வது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஒரு கடனளித்தோர் குழுவிற்கு சிக்கலாக மாறும். இந்நாட்களில் பிணைமுறிக் கடன்களின் உரிமையாளர்களாக பங்குத் தரகு நிறுவனங்கள் (hedge funds) இருப்பார்கள்.  அவர்கள் ஒருநாள் மதியம் பல பணமுறிகளை வாங்குவார்கள் அவற்றை அன்று மாலையே விற்று விடுவார்கள்.  அவர்கள் கடனளித்தோர் குழுக்களில் அங்கம் வகித்தால் அவர்கள் காலவரையின்றி பணமுறிக் கடன் சந்தையில் குறிப்பிட்ட பணமுறிகளை வாங்கவோ விற்கவோ முடியாதவர்களாக கட்டுப்படுத்தப்படுவார்கள். இது ஒரு பிரச்சினையாகி விட்டது.

அடுத்த விடயம் சேவைகளுக்காக வழங்கப்படும் ஊதியம் தொடர்பானது. வங்கி ஆலோசனைக் குழு கடன்மறுசீரமைத்தல் தொடர்பாக தான் வழங்கும் சட்ட மற்றும் நிதிச் சேவைகளுக்கான ஊதியம் வழங்கப் படவேண்டும் என்று கேட்கும். இது ஒரு வகையில் நியாயமாகப் படும். ஆனால் இது ஒரு சிக்கலான விடயம்.

நான் கடந்த வருடம் செய்த கடன் மறுசீரமைப்பு ஒன்றில் எதிர்பாராத ஒன்று நடந்தது. சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களின் சேவைகளுக்கு நாம் நியாயமான ஊதியம் வழங்குவோம் என்று வங்கி ஆலோசனைக் குழுவிற்கு தெரிவித்திருந்தோம்.  ஆனால் எமக்கு தெரியாமலே, வங்கி ஆலோசனைக் குழு அதில் அங்கம் வகித்த நிதி ஆலோசகர்களுக்கு மறுசீரமைக்கப்படும் கடனில் ஒரு விகிதம் ஊதியமாக வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்கள். மறுசீரமைத்தலின் முடிவில், நிதி ஆலோசகர்கள் ஆறு வாரங்களாக மேலோட்டமாக செய்த வேலைக்கு பல மில்லியன் டாலர்கள் தருமாறு கேட்டார்கள்.  அன்றிலிருந்து, வங்கி ஆலோசனைக் குழுக்களின் வேலைக்கு ஊதியம் வழங்க இணங்கும் கடனாளி நாடு அந்த ஊதியம் மணித்தியாலத்துக்கு குறித்த அளவு என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஆலோசனை வழங்கி வருகிறேன். மறுசீரமைக்கப்படும் கடனின் குறித்தளவு விகிதாசார ஊதியம் என்பது இனிமேல் இல்லை.

வங்கி ஆலோசனைக் குழுக்கள் இந்த ஊதியத்தை தமது ‘சாதனைக்கான ஊதியம்’ என்று அழைத்தார்கள். இவர்கள் என்ன சாதனையை இருக்கிறதென்று எனக்கு விளங்கவில்லை.  அவர்களைப் பொறுத்தவரையில் சாதனை என்பது கடன் மறுசீரமைத்தலைத் தவிர்ப்பதாகவே இருக்க வேண்டும். அல்லது கடனாளி நாட்டுக்கு ஆகக்குறைந்த கடன் நிவாரணத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். கடனாளி நாட்டைப் பொறுத்தவரையில் இவற்றில் எது நடந்தாலும் அந்நாட்டுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. அப்படியிருக்க கடனாளி நாடு இந்த ‘சாதனைக்கு’ ஏன் ஊதியம் வழங்க வேண்டும்?

இந்த வங்கி ஆலோசனை குழுக்களை அமைப்பதில் சில பிரச்சனைகள் இரு்கின்றன என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். சர்வதேச மூலதன சந்தைகளின் சங்கம் (International Capital Markets Association (ICMA)) இது தொடர்பாக சில வசனங்களை பிணைமுறிப் பத்திரங்களில் எழுத வேண்டும் என்று பிரேரித்தது. அதாவது, எதிர்காலத்தில் அந்த பிணைமுறிக் கடனுக்கு மறுசீரமைப்பு தேவைப்பட்டால் கடனளித்தோர் குழுக்களை கடனாளி நாடு அங்கீகரிக்கும் என்றும் அவற்றின் சேவைகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் பிணைமுறிப் பத்திரங்களில் எழுத வேண்டும் என்று ICMA சொன்னது. இது ஒரு சிக்கலான விடயம்.

பல கடனாளி நாடுகள் இந்த பிரேரணையை கருத்தில் எடுக்கவில்லை. இது கடனாளி நாடுகள் கடனளித்தோர் குழுக்களை அங்கீகரிக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் அவற்றை அங்கீகரிப்போம் என்று முன்கூட்டியே உறுதி அளிப்பது பிரச்சனையைத் தரும். இங்கே இன்னுமொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒரு பெரிய பிணைமுறிக்கடன் மறுசீரமைத்தலின் போது பல கடனளித்தோர் குழுக்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.  அவை ஒவ்வொன்றும் மறுசீரமைத்தல் தொடர்பாகவும் அதற்கு கிடைக்க வேண்டிய ஊதியம் தொடர்பாகவும் வித்தியாசமான நிலைப்பாடுகளை கொண்டிருக்கும். அந்த நிலையில் அவை எல்லாவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை கடனாளி நாட்டுக்கு வரும்.

2005 ஆம் ஆண்டு ஈராக் கடன் மறுசீரமைப்பின் பொழுது 6 கடனளித்தோர் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒவ்வொரு குழுவுடனும் ஈராக் ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் என்று எண்ணுவது கற்பனை.  ஒவ்வொரு குழுவும் தனது கடன்களுக்கு மறுசீரமைப்பிலிருந்து விலக்களிக்கப் படவேண்டும் என்றும் ஈராக் மற்றக் குழுவினருக்கே கழுத்தறுப்பு செய்ய வேண்டும் என்றும் சொன்னது. இக்கருத்தையே எல்லாக் குழுக்களும் கொண்டிருந்தன.

யாருக்கு கடன் மறுசீரமைப்பிலிருந்து விலக்களிப்பது அல்லது மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பதை கடனாளி நாடு முடிவு செய்த பிறகும், கடனளித்தவர்களுக்கு இடையே சந்தேகம், போட்டி, பொறாமை இருக்கும். இந்த போட்டி பொறாமையை சமாளிக்க பலவிதமான செயல்முறைகள் உருவாகி உள்ளன.  இந்த செயல்முறைகள் வெவ்வேறு கடனளித்தோர் குழுக்கள் மற்றக் குழுக்களுடன் சமநிலையாக தங்களை இணைத்துக் கொள்ள வழி செய்கின்றன.  இதற்கு ஒரு இழிவான உதாரணமாக இருப்பது பாரிஸ் கிளப் (Paris club) எனும் கடன் வழங்குனர்களின் குழு. பாரிஸ் கிளப் பங்கு கொள்ளும் ஒவ்வொரு கடன் மறுசீரமைப்பிலும் சமமாக நடத்தப்படுவதற்கான விதி என்று ஒன்று இருக்கும். அந்த விதியில், பாரிஸ் கிளப்பில் இருப்பவர்களும், அதில் இல்லாதவர்களும், இருதரப்பு உடன்படிக்கையில் கடன் வழங்கிய நாடுகளும், வர்த்தக வங்கிகளும் சமமாகவே கடனாளி நாட்டினால் நடத்தப்பட வேண்டும் என்று இருக்கும்.

ஆனால் வணிகக் கடன் வழங்குபவர்கள் பலவிதமான விஷயங்களைச் செய்கிறார்கள், 2005 இல் அர்ஜென்டினா கடன் மறுசீரமைப்புக்கு முற்பட்ட பொழுது எதிர்கால சலுகைகள் மீதான உரிமைகள் (Rights Upon Future Offering (RUFO) பிரிவு என்று அழைக்கப்படும் ஒன்றில் கையெழுத்திடும்படி கேட்கப்பட்டது. அதாவது, அர்ஜென்டினா கடன் மறுசீரமைப்பு செய்யும் பொழுது, ஒரு கடனளித்த வங்கி எந்த பேச்சுவார்த்தைக்கும் இணங்கி வராமல் நின்றால், அதனை இணங்கப் பண்ணுவதற்காக அரஜென்டினா அந்த வங்கிக்கு விசேட சலுகைகளை அளித்தால், அதே சலுகைகள் எல்லா கடனளித்தோருக்கும் வழங்கப் படவேண்டும் என்று அந்த ஆவணம் சொன்னது. இவ்வாறாக, கடனளிப்பவர்கள் தங்களுக்கு இடையே சமநிலையை பேண பல்வேறு நுட்பங்களை பயன்படுத்துவார்கள்.

ஒரு கடனாளி நாடு தனது கடன்களை மறுசீரமைக்க விளையும் பொழுது அது செய்ய வேண்டிய செயற்பாடுகள் என்ன, அது கடனளித்தோரை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் அப்படிக் கையாளும் போது ஏற்படக் கூடிய சிக்கல்கள் என்ன என்பதை கடன் மறுசீரமைப்பில் சர்வதேசத்தாலும் அறியப்பட்ட லீ புக்ஹைட் (Lee Buchheit) சொன்னவற்றை இதுவரை பார்த்தோம்.

சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பில் அதற்கு கடனளித்தோருடன் கலந்தாலோசனை (creditor consultation) செய்வதற்கு லசார்ட் அன் கிளிபர்ட் சான்ஸ் (Lazard and Clifford Chance, LLP) எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தை சிறிலங்கா அமர்த்தியுள்ளது.  அதற்கென அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்தக் கடன் மறுசீரமைப்புக்கு இணங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டு சிறிலங்காவுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிணைமுறிக் கடன் கொடுத்த ஹமில்ட்டன் வங்கி (Hamilton Bank) தனக்கு சேரவேண்டிய அசலையும் வட்டியையும் பெற்றுத் தருமாறு அமெரிக்காவின் நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.  இவ்வாறாக லீ புக்ஹைட் சொன்ன பல செயற்பாடுகள் சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பில் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழாக்கம் - நிமிர்வு

புரட்டாதி 2022 நிமிர்வு இதழ் 

பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு - பகுதி : 01

பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு – பகுதி : 02

பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு – பகுதி : 03

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.