பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பு – பகுதி : 03

 


ஒரு நாட்டின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை பற்றி லீ புக்‌ஹைட் சொன்னவற்றின் ஒரு பகுதியை சென்ற இதழில் பார்த்தோம். அதன் மூன்றாம் பகுதியை இங்கு தருகிறோம்.

நீங்கள் ஒரு நாட்டுக்கு கடனளித்தவராக இருந்தால், அந்த நாடு ஒரு கடன் மறுசீரமைப்புக்கு போகுமாக இருந்தால், அந்தக் கடன் மறுசீரமைப்புக்கு கீழ் நீங்கள் அளித்த கடன் உள்ளடக்கப்படாமல் இருப்பதற்கு உரிய எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கொடுத்த கடனின் அசலையும் வட்டியையும் முழுவதுமாக திருப்பி எடுப்பதுதான் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியாத பட்சத்தில் உங்கள் கடன் மறுசீரமைப்புக்கு உட்படும் என்று தெரிந்தால், மற்ற எல்லா கடனளித்தவர்களின் கடன்களும் மறுசீரமைத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று நீங்கள் வாதிட வேண்டும்.

கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் நீங்கள் இருக்கும் போது, மற்றவர்களை அதிலிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் நீங்கள் பரிசோதித்து கேள்வி கேட்க விரும்புவீர்கள். இதற்கு சிறந்த உதாரணம், 2005 ஆம் ஆண்டு ஈராக்கில் நான் சந்தித்தது. அமெரிக்க 4வது காலாட்படை பிரிவின் “வேண்டுகோளின்” பேரில் சதாம் உசேன் அரச பதவியில் இருந்து “வெளியேறி” இருந்தார். வெளியேற முதல் அவர் செய்து வைத்திருந்த மோசமான செயற்பாடுகளில் ஒன்று 140 பில்லியன் டாலர் கடனை வாங்கி வைத்திருந்தது. இந்தக் கடன்கள் ஜப்பானிய வங்கிகள் தொடக்கம் கொரிய கட்டுமான நிறுவனங்கள் வரை அனைத்து வகையானவர்களிடமிருந்தும் வாங்கப்பட்டிருந்தன.

இந்த கடன்களை வழங்கியவர்களின் பல்வகைத்தன்மை வியக்க வைக்கும் வகையில் இருந்தது. அங்கு கடன் மறுசீரமைப்பு தொடங்கியபோது, அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏன் அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு வாதங்களை முன்வைத்தார்கள். “கடன் மறுசீரமைப்பு முடிந்த பின் மீண்டும் ஈராக் கடன் வாங்க வேண்டும். அப்பொழுது தாங்கள் அந்தக் கடனை வழங்க தயாராக இருப்போம்.” என்று வங்கிகள் வாதிட்டன. “நான் உங்களுக்கு உறைய வைக்கப்பட்ட கோழிகளை அனுப்பினேன். நீங்கள் அவற்றை பாஸ்ரா துறைமுகத்தில் 49 பாகை சூழலில் இருக்க அனுமதித்தீர்கள். அங்கு அந்தக் கோழிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கவில்லை. அதற்கு நான் பொறுப்பல்ல. எனவே தயவுசெய்து என்னுடைய பணத்தை செலுத்துங்கள்.” என்று ஒரு கோழிகளை பதனிட்டு ஏற்றுமதி செய்பவர் வாதிட்டார்.

இந்தச் செயல்பாட்டில் ஒரு கடனாளி நாடு ஒரு குறிப்பிட்ட கடனளித்தோர் குழுவுக்கு கடன் மறுசீரமைப்பிலிருந்து விலக்கு அளிக்க இணங்குவது கடனாளி நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்று நான் கூறுவேன். ஒரு பொதுவான ஒருமித்த கருத்து இல்லாவிட்டால், எந்தவொரு குறிப்பிட்ட கடனளித்தோர் குழுவிற்கும் விலக்கு அளிக்கப்படக் கூடாது.

ஆனாலும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வர்த்தக கடன் வழங்குனர்கள், விற்பனையாளருக்கு விலக்கு அளிக்கப்படுவது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அடமானக் கடன்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதும் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில், அந்தக் கடன் ஒரு சொத்தை அடமானமாக வைத்து வாங்கப்பட்டது.

அந்தக் கடன் திருப்பச் செலுத்தப்படாவிட்டால் அந்த சொத்தை கடனாளி நாடு இழக்க நேரிடும். உதாரணமாக, ஒரு விமானத்தை கடனுக்கு வாங்கினால், அந்தக் கடனை செலுத்தாவிட்டால் விமானத்தை இழக்க நேரிடும்.

சர்வதேச நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகள் ஊடாக தமது கடன்
பிணக்குகளை தீர்த்துக் கொள்ளும் கடன் வழங்குனர்களுக்கு இந்த செயற்பாட்டில் என்ன நடக்கும்? இதற்கு பதிலாக வெனிசூலா நாட்டில் நடந்ததைப் பார்ப்போம். அந்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகளை தேசியமயமாக்குவது மற்றும் அபகரிப்பது என்ற கொள்கையை வழக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் நடந்து வருகின்றன. 

உலக வங்கியின் முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையத்தின் (International Center for the Settlement of Investment Disputes, ICSID) முன் நாற்பது வழக்குகள் இது தொடர்பாக வந்தன. நடுவர் மன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வெனிசூலா குடியரசுக்கு எதிரான நட்ட ஈட்டு தீர்ப்புகள். கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில், கடனளித்தவர்களிடம் நிவாரணத்தை கோரும் போது, மிகுதியாக இருக்கும் கடன் தொடர்பாக கடனாளி நாடு என்ன செய்யப் போகிறது என்பதற்கான பதில் இல்லாமல் கடனளித்தவர்களால் அந்த நிவாரணக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். நடுவர் மன்ற தீர்ப்புகளும் ஒரு வகை கடனே. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பிலிருந்து நடுவர் மன்ற தீர்ப்பு வைத்திருப்பவர்களை விலக்கவோ அல்லது அவர்களுக்கு தனியாக பணம் செலுத்தவோ ஏனைய கடனளித்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில், கடனளித்தவர்கள் தாம் வழங்கும் கடன் நிவாரணத்தை கடனாளி நாடு ஒரு குறித்த சிறு குழுவினரை திருப்திப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக கருதுவார்கள். இதுதான் இங்கு நடக்கும் பேச்சுவார்த்தைகளின் இயங்கியல்.

பிணைமுறிக் கடன் மறுசீரமைப்பு

பிணைமுறிக் கடன் மறுசீரமைப்பு உண்மையில் மிகவும் எளிமையானது. உண்மையில் அதில் இருப்பவை மூன்று கருவிகள் மட்டுமே. நாம் கடனின் அசலை குறைக்க முடியும். இதனை முடி வெட்டுதல் (hair cut) என்று சொல்வார்கள். இரண்டாவது வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். மூன்றாவது கடனின் முதிர்ச்சிக் காலத்தை நீட்டிக்கலாம். அல்லது அந்த மூன்றில் விரும்பியவற்றை எடுத்து கலந்து பொருத்தலாம். பிணைமுறிக் கடன்களின் மறுசீரமைப்பில் செய்யக்கூடியது இவ்வளவுதான்.

ஒரு அரசாங்கத்துக்கு கடன் கொடுத்த உள்ளூர் நிதி நிறுவனங்களைத் தவிர, கடன் கொடுத்த வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிலைப்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும். இதனை நாம் ஐரோப்பாவில் நடந்த கடன் நெருக்கடி காலகட்டத்தில் அறிந்து கொண்டோம். அங்கு பிணைமுறிக் கடன்களை மறுசீரமைக்க வேண்டாம் அல்லது மிகவும் மென்மையான முறையில் மறுசீரமைக்க வேண்டும் என்று இந்த நிதி நிறுவனங்கள் தங்கள் சொந்த அரசாங்கங்களை நச்சரித்தன. ஐரோப்பிய அரசாங்கங்கள் அதனை ஏற்றுக் கொண்டன. அவை ஏன் இந்த எதிர்மறையான கொள்கையை ஏற்றுக் கொண்டன என்து ஒரு கேள்விக்குறி. 

2012 இல் கிரேக்கத்தின் பிணைமுறிக் கடனை மறுசீரமைப்பதற்கு முன்னராக ஐரோப்பிய அரசாங்கங்கள் கடன் நெருக்கடிக்குள் இருந்த நாடுகளின் கடன்களை மறுசீரமைக்கவில்லை. ஐரோப்பிய அரசாங்கங்கள் கடன் நெருக்கடிக்குள் இருந்த நாடுகளுக்கு பண உதவி வழங்கி நெருக்கடியிலிருந்து தூக்கி விட்டன. அவை ஏன் அவ்வாறு செய்தன? ஒரு காரணம் என்னவென்றால், இந்தக் கடனாளி நாடுகளின் பெருமளவான கடன் பத்திரங்களை வடக்கு ஐரோப்பிய வங்கிகள் வைத்திருந்தன. கடனாளி நாடுகள் அசலைத் திருப்பிக் கட்டாவிட்டால் அந்த வங்கிகள் தோல்வியடையும் என்பதை வங்கிகள் தமது சொந்த அரசாங்கங்களுக்கு தெரிவித்தனர். அந்த வங்கிகள் தோல்வியடைந்து அவற்றை மீளக் கட்டமைப்பதிலும் விட அந்த வங்கியிடம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவி செய்து அவற்றினூடாக வங்கிக்கு சேரவேண்டிய காசைப் பெற்றுக் கொள்வது அந்த அரசாங்கங்களுக்கு அரசியல் ரீதியாக அனுகூலமாக இருந்தது.

1980 களிலோ 1990 களிலோ இது நடக்கவில்லை என்று நான் சொல்லப் போவதில்லை. அந்தக் காலத்திலும் வணிக வங்கிகள் நிச்சயமாக அமெரிக்க அரசாங்கத்தையும் ஐரோப்பா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களையும் இவ்வாறான செயற்பாட்டை செய்யுமாறு வற்புறுத்தின. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றன. 1980கள் முழுவதும் என்ன நடந்தது என்பதை நீங்கள் ஞாபகப்படுத்தினால் இது புரியும். அந்தக் காலப் பகுதியில் கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த கடன்களை கடனாளி நாடுகள் தொடர்ச்சியாக சமாளிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் யாரும் கடன்களை தள்ளுபடி செய்வதை ஏற்க தயாராக இருக்கவில்லை. ஏனெனில் அது சர்வதேச வங்கி சமூகத்தின் ஸ்திரத்தன்மையை சிதைத்துவிடும். எனவே அமெரிக்க அரசாங்கம் போன்ற அரசாங்கங்கள், கடனாளி நாடுகள் தங்கள் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக அதே வங்கிகளிலேயே அந்நாடுள் கடன் வாங்க
வேண்டியிருந்தாலும், வட்டியை செலுத்தும் செயல்முறையைத் தொடர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தன.

இப்பொழுது IMF செயற்பாட்டுக்கு வருவோம். ஒரு கடனாளி நாடு தனது கடன்களை மறுசீரமைப்பதில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளைப் பற்றி பேசுவோம். 

எனது பார்வையில் IMF என்பது ஒரு சுவாரசியமான நிறுவனம். அது ஒரு நாட்டின் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதம் (Debt to GDP ratio) பற்றி அதிக கவனம் செலுத்தும். உண்மையாக சொல்லப் போனால் ஒரு நாட்டின் கடன் வாங்குவதற்கான இயலுமையை மதிப்பிடுவதற்கு இந்த விகிதம் ஒரு மோசமான சுட்டி ஆகும். ஏனெனில் அது ஒரு டாலரின் நாளைய மதிப்பையும் 40 வருடங்களுக்கு பின் அதன் மதிப்பையும் ஒன்றாகவே எடை போடுகிறது. 

ஆனால் IMF பொருளாதார வல்லுனர்கள் தமது பொருளாதார உதவியின் விளைவாக ரூரிடானியா, தன்னுடைய கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதத்தை 60 வீதமாக குறைத்துக் கொள்ளும் என்ற யோசனையுடனேயே பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள். இந்த நிலைமையில் ரூரிடானியாவின் நிதி அமைச்சருக்கு வேறு வழி கிடையாது. அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு வணக்கம் செலுத்தி விட்டு வரவேண்டியது தான்.

இதுதான் 2011 ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி கிரேக்கத்துக்கு நடந்தது. 26ஆம் திகதி நள்ளிரவு வரை IMF மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உத்தியோகபூர்வ சக்திகள் கிரேக்கத்தின் வர்த்தக முறிக் கடனில் ஒரு யூரோ கூட மறுசீரமைக்கப் படுவதற்கு தடை விதித்திருந்தன. ஆனால் 27 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு அவர்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறியது. ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இடமிருந்து கிரேக்கம் பெற்றிருந்த கடனைத் தவிர ஏனைய வர்த்தக முறிக் கடன்கள் யாவும் ஆகக்குறைந்தது 50
வீத முடி வெட்டுதலுக்கு (hair cut) உள்ளாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டார்கள். அதற்கு கிரேக்கம் வணக்கத்துடன் இணங்கியது. இந்த முடிவை IMF உம் ஐரோப்பிய ஒன்றியமும் வெளியிட்டன. ஆனால் இந்தக் கடன் முறிப் பத்திரங்களை வைத்திருந்தவர்கள் தமது அசலின் 50 வீதத்தை கைவிடுவதற்கு எவ்வாறு இணங்க வைக்கப்படுவார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை.

இங்கு ஒரு சுவாரஸ்யமான மாற்றம் ஒன்று நடந்து உள்ளது. பாரம்பரியமாக IMF ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் கடனின் பங்கைப் பார்த்து, அது சமாளிக்கப் படக் கூடியதா இல்லையா என்று முடிவெடுத்து வந்தது. அதாவது, IMF உதவித்திட்டத்திற்குப் பிறகு நாட்டின் கடன் பங்கு சமாளிக்கப்படக் கூடியதாக இருக்கும் என்று IMF ஊழியர்கள் நம்புகிறார்களா என்று அதன் ஆளுநர் குழுவிடம் சொல்ல வேண்டும். பாரம்பரியமாக இது ஒரு வெட்டு ஒன்று துண்டு இரண்டு முடிவாகும். ஆம் அல்லது இல்லை என்ற பதில் மட்டுமே இருக்க முடியும். 

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு கடன் வழங்கப்பட்ட போது இதுதான் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கொள்கையை மாற்ற IMF முடிவு செய்தது. அவர்கள் இப்போது ஒரு இரண்டும் கெட்டான் பகுதி என்று ஒன்றை அனுமதிக்கிறார்கள். இங்கு IMF உதவியின் பின்னர் ஒரு நாட்டின் கடன் சமாளிக்கப்படக்கூடியதா இல்லையா என்று IMF ஊழியர்களால் உறுதியாக சொல்ல முடியாது. 

இந்தச் சூழலில், மறுவடிவமைத்தல் (reprofiling) என்று அழைக்கப்படும் ஒரு செயற்பாட்டை IMF அங்கீகரிக்கும். மறுவடிவமைப்பு என்பது முதிர்ச்சியின் நீட்டிப்பாகும். சிலவேளைகளில் வட்டி விகிதம் குறைக்கப்படும். ஆனால் அசலில் குறைப்பு (முடி வெட்டுதல்) இல்லை. கடன் முதிர்வுக் காலத்தை நீடிப்பதுதான் நோக்கம். இச்செயற்பாடு கடன் முதிர்வுக் காலத்தை IMF உதவிக் காலத்திற்கு வெளியே நகர்த்துவதால் இது ஒரு பெரும் கவர்ச்சிகரமான தெரிவாக பார்க்கப்படுகிறது. இங்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் கடனாளி நாடு IMF பணத்தில் தங்கியிருக்க வேண்டியதில்லை. அதுதான் இதன் முக்கிய அம்சம். அதாவது, ஐரோப்பாவில் முன்பு தான் விட்ட தவறை மீண்டும் செய்ய IMF விரும்பவில்லை. இந்த நடவடிக்கையின் நோக்கம் என்னவெனில், IMF திட்டம் அதன் நல்ல வேலையை முதலில் செய்யட்டும். 

ஐந்து ஆண்டுகளின் பின்னர் ரூரிடானியாவின் பொருளாதாரம் எங்கு உள்ளது என்பதைப் பார்ப்போம். அப்பொழுது ரூரிடானியாவிற்கு மேலும் நீடித்த கடன் நிவாரணம் தேவையா, அப்படியானால் அந்த கடன் நிவாரணத்தின் அளவு என்ன ஆகியவற்றை அப்பொழுது முடிவு செய்வோம். இந்த தர்க்கம் தோற்கடிக்கப்பட முடியாதது. இதற்கு சிறந்த உதாரணம் 2003 ஆம் ஆண்டு உருகுவேயில் நடந்த நிகழ்வு. ஆறு மாதங்களுக்கு முன்பு கூட உருகுவே முதலீட்டுக்கு சாதகமான தரத்தில் இருந்தது. சர்வதேச சந்தைகளில் பதினெட்டு கடன் பத்திரங்கள் அதற்கு இருந்தன. அவற்றின் வட்டிகளை உருகுவே மிகவும் ஒழுங்காக கட்டிக் கொண்டு வந்திருந்தது. ஆனால் ஆர்ஜன்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடையில் இருக்கும் சிறிய நாடான உருகுவே அதனுடைய பெரிய அயல்நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனையால் தானும் பாதிக்கப்பட்டது.

அந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க IMF தன்னுடைய கடன்களை மறுவடிமைப்பு (reprofile) மட்டுமே செய்ய வேண்டும் என்று உருகுவே கணிசமான அளவுக்கு வாதிட்டது. முடிவில் அந்த கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றின் முதிர்வு தேதியும் ஐந்து ஆண்டுகள் தள்ளிப் போடப்பட்டது. அவற்றின் வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இந்த திட்டம் மிகவும் அற்புதமாக வேலை செய்தது. இந்த கடன் மறுசீரமைப்பை முடித்த 31 நாட்களுக்குப் பிறகு, உருகுவே முற்றிலும் தன்னார்வ அடிப்படையில் மீண்டும் பணமுறிச் சந்தைகளுக்குச் சென்று கடன் வாங்க முடிந்தது. மேற்கொண்டு உருகுவே எதுவும் செய்ய வேண்டி இருக்கவில்லை. அவர்கள் அந்த ஐந்தாண்டு காலத்தில் மேலும் கடன்களை பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் இன்றுவரை, 25 அல்லது 30 தடவைகள் உருகுவே பணமுறிச்சந்தைகளில் கடன் வாங்கியுள்ளது. IMF இன் இந்த புதிய கொள்கை மேலும் மேலும் பயன் படுத்தப்படுவதை நாம் காணப் போகிறோம் என்பது என் யூகம்.

கடன் மறுவடிவமைத்தல் (reprofiling) போன்ற எந்த விதமான மிதமான கடன் மறுசீரமைப்பும் ஒரு சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படும். இந்தவித மிதமான கடன் மறுசீரமைப்பு என்பது பிரச்சனையை தள்ளிப்போட மட்டுமே பயன்படலாம். ஆனால், ‘ஐந்து ஆண்டுகளின் பின்னர் கடன் வாங்கும் நாடு சமாளிக்க கூடிய கடன் நிலவரத்தைக் கொண்டு இருக்குமா அல்லது அந்த தருணத்தில் தனது கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளும் தரத்தில் இருக்குமா என்று எமக்குத் தெரியாது’ என்று கடனளிக்கும் நிறுவனங்கள் சொன்னால் கடன் மறுவடிவமைத்தல் உதவி செய்யாது என்று IMF வாதிடும்.

இந்தக் கட்டத்தில் அவர்கள் பயந்தது நடக்கும். அதாவது, கடன் முறிச் சந்தைகள் கடன்வாங்கும் நாட்டுக்கு ஒரு நீடித்த கடன் மறுசீரமைப்பு வேண்டும் எனக் கேட்கும். அது இல்லாவிட்டால் கடன் வழங்க அவை மறுக்கும். கடன் மறுவடிவமைத்தலுக்கு (reprofiling) ஆதரவான வாதம் தோற்கடிக்கப்பட முடியாது என்று நான் முன்னர் சொன்னேன். ஆனால் அது அப்படியல்ல என்பதை இங்கே காண்கிறோம். அதாவது கடனாளி நாடு நாளைக்கு கடனளிக்கும் நிறுவனங்களிடம் போய் தனது கடன்கள் சமாளிக்கப்படக் கூடியவை என்று நிரூபிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை இன்றே செய்வது நல்லது என்பதே அந்த வாதம். ஏனெனில் அதனைச் செய்தால் கடனளிப்பவகள் உடனே கடனை வழங்குவார்கள் கடனாளியும் மீண்டும் மறுகடனெடுத்தல் (refinancing) என்ற சக்கரத்தில் ஏறி முடிவில்லாமல் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

ஒரு கடனாளி நாடு தனது பிணைமுறிக் கடன்களை மறுசீரமைப்பதற்கு முடிவு எடுக்க முன்னர் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளை அடுத்து பார்ப்போம். 

முதலாவது விடயம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகும். அது கடனாளி நாடு தனக்கு கடனளிப்பவர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்பது பற்றியது. ஒரு காலத்தில், அதாவது 1980 கள் மற்றும் 1990 களில் வணிக வங்கிகள் கடனை மறுசீரமைக்க விரும்பும் ஒவ்வொரு கடனாளி நாடுகளிடமும் முன்வைக்கும் வாதம் இது தான். “எங்கள் கடன்களை மறுசீரமைத்தால் உங்கள் வங்கியாளர்களாகிய நாங்கள் இதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம். எனவே நீங்கள் செய்யப்போவது உங்களை நீங்களே காயப்படுத்துவது ஆகும்.” இது தெளிவாக முன் வைக்கப்பட்டாலும் இது ஒரு அபத்தமான வாதம்.

ரூரிடானியா எங்களை மோசமாக நடத்தினால், அந்நாட்டினால் மற்றொரு பிணைமுறிக் கடன்பத்திரத்தை விற்க முடியாது என்று கடனளிப்பவர்கள் கூறுவதை நீங்கள் கேட்பீர்கள். உண்மையிலேயே அது பைத்தியக்காரத்தனம். ஏனெனில் உண்மையிலேயே பிணைமுறிக் கடன் பத்திரதாரர்களிடையே சகோதரத்துவம் என்பது இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கு ஒருவர் கழுத்தை அறுத்துக் கொள்வார்கள். இரண்டாவதாக, நீங்கள் எதிர்காலத்தில் ரூரிடானியாவுக்கு கடன்
வழங்குவதற்கு தயாராக உள்ள ஒருவராக இருந்தால், ரூரிடானியா இன்று சிக்கலில் சிக்கியுள்ளது என்றால், அதன் இன்றைய கடன் வழங்குனர்கள் மீது கத்தி வீசப்படுவதை நீங்கள் விரும்புவீர்கள். அந்தக் கத்தி வீச்சின் மூலம் ரூரிடானியாவுக்கு கிடைக்கும் நிவாரணம் நாளை உங்களது முதலீட்டுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆகவே, மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம் என்ற சகாப்தம் நிச்சயமாக
முடிந்துவிட்டது. அந்தக் கட்டுப்பாடு இப்பொழுது அங்கு இல்லை. ஆனால் கடனாளி நாடு தனது கடன் வழங்குனர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்பது தான் கேள்வி. கடனாளி நாடு ‘இது தான் நாம் செய்யப் போவது. இதற்கு ஒத்துக் கொள்ளுங்கள். அதைவிட வேறு வழி இல்லை (take it or leave it)’ என்று தம்மை நோக்கி சொல்வதாக கடனளிப்பவர்கள் பல சமயங்களில் குற்றம் சாட்டுவதை நீங்கள் கேட்கலாம்.

கடனாளி நாடு தங்களை முதலில் புறக்கணித்து விட்டு கடைசியில் ஒரு கடன்
மறுசீரமைப்பு முன்மொழிவுடன் தம்மை அணுகுவதாக கடனளிப்பவர்கள் குறை கூறுவார்கள். ‘அந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது அதனை நிராகரித்தால், நாங்கள் உங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதை நிரந்தரமாக நிறுத்தி ஒரு இருண்ட காலத்துக்குள் உங்களை தள்ளுவோம்’ என்று கடனாளி நாடு சொல்லுவதாக கடனளிப்பவர்கள் குறை கூறுவார்கள்.
கடன் வழங்குனர்கள் இதுதான் நடப்பதாக சொன்னாலும் இது ஒரு பொழுதும்
நடப்பதில்லை. 

எந்தவொரு கடனாளி நாடும் எந்தவிதமான கலந்துரையாடலும் இன்றி அதன் கடனை மறுசீரமைக்க முடியாது. கடன் கொடுத்தவர்களுடன் கலந்தாலோசிக்காமல் இருப்பது தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. 

இதன் மூலம் ஒவ்வொரு கடன் வழங்குனரும் மறுசீரமைத்தல் விதிமுறைகளை தமக்கு ஏற்றவாறு அமைக்க முடியும் என்று அர்த்தமில்லை. அதேவேளை, எந்த ஒரு கடனாளி நாடும் தனது கடன் மறுசீரமைத்தல் முன்மொழிவு எடுத்த எடுப்பிலேயே குப்புற விழுவதை விரும்பமாட்டாது. கடனளித்தவர்களை புறக்கணித்தால் இருக்கும் ஆபத்து இதுவாகும்.

இந்த கலந்துரையாடல் இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது. முதலாவது வழி ‘கடனளித்தவர்களுடன் கலந்தாலோசனை (creditor consultation)’ என்பதாகும். இங்கு கடனாளி நாடு ஒரு நிதி ஆலோசகரை நியமிக்கும். நிதி ஆலோசகர் கடனளித்தவர்களிடம் தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ பேசி அவர்களின் மனக்கிடக்கையை அறிந்து கொள்கிறார். கடனாளி நாடு என்ன செய்யப் போகிறது என்பதை அவரால் சட்ட ரீதியாக வெளியிட முடியாது. ஆனால் சில அனுமானங்களை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். 

உதாரணமாக, “ரூரிடானியா 30% கடன் தள்ளுபடியுடன் உங்களை அணுகினால் அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவர் கேள்வி கேட்கலாம். அதற்கு பதிலாக நாங்கள் அதை விரும்ப மாட்டோம். என்பதுதான் கடனளித்தவர்களின் முதல் வாக்கியமாக இருக்கும். 

ஆனால், இரண்டாவது வாக்கியமாக, "வேறு வழியில்லாவிட்டால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம். அதனையிட்டு கோபப்படுவோம்." என்று அவர்கள் சொல்லக் கூடும். நிதி ஆலோசகர் இந்த கலந்துரையாடலின் பலனை கடனாளி நாட்டுக்கும் IMF இற்கும் எடுத்துச் செல்வார். 

கடனளித்தவர்களின் ஒப்புதல் கிடைக்கக் கூடிய கடன் மறுசீரமைத்தல் தொடர்பான எல்லைகள் என்ன என்பதை அவர் தெரிவிப்பார். IMF ஐப் பொறுத்தவரை இந்த கடன் மறுசீரமைத்தல் முன்மொழிவுக்கு கடனளித்தவர்களின் பெரும்பான்மையினர், பொதுவாக 85 அல்லது 90 வீதமானவர்கள், உடன்பட வேண்டும் என்று சொல்லும். அந்த வகையில் கடனளித்தவர்களுடன் கலந்தாலோசனை, கடனளித்தவர்களின் அதி உச்ச விகிதாசாரத்தினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய கடன் மறுசீரமைத்தலுக்கான முன்மொழிவுகள் என்பவை இந்த முதலாவது வழியில் முக்கியமானவை.

இரண்டாவது வழி சர்ச்சைக்குரியது. இந்த வழியில் கடனாளி நாடு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடன் வழங்குநர் குழுக்களை (creditor committee) அங்கீகரித்து அவற்றினூடாக கடனளித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கலந்தாலோசனை, பேச்சுவார்த்தை ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் முக்கியமானது. முதலாவது வழி கடனளிப்பவர்களுடன் கலந்தாலோசிப்பது பற்றி கதைக்கிறது. இரண்டாவது வழி கடனளித்தவர்களுடன் பேரம் பேசுவதைப் பற்றிக் கதைக்கிறது.

ஏன் இரண்டாவது வழி சர்ச்சைக்குரியது என்றால், கடனளித்தவர்கள் ஒரு கடனாளியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது சிறந்த முடிவு தமக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது உண்மை என்று வரலாறு சொல்லவில்லை. வரலாறு அந்த நம்பிக்கை சரியென்று சொல்லாவிட்டாலும் கடனளித்தவர்கள் அதை நம்புகிறார்கள். 

ஆனாலும், கடன் வழங்குனர் குழுக்களை அங்கீகரிப்பதனால் கடனாளி நாட்டுக்கு சில நன்மைகள் இருக்கின்றன. முதலாவது, இவ்வாறான ஒரு குழு இருந்தால் கடனாளி நாட்டின் கணக்கு வழக்குகளை அவர்களே சரிபார்ப்பார்கள். கடனாளி நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி பற்றிய கூற்றுக்களை சரி பார்ப்பார்கள், IMF உடன் கலந்தாலோசிப்பார்கள், தேவையான அனைத்து வேலைகளையும் செய்வார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

இரண்டாவது ஒவ்வொரு கடனளித்தவரும் கடன் மறுசீரமைப்பின் விதிமுறைகள் தம்மைப் போன்ற ஒரு கடனளித்தவரை் குழுவால் பேச்சுவார்த்தை மூலம் எய்தப்பட்டது என்பதை அறிந்து நிம்மதி அடைவார். அதாவது தாங்கள் பேச்சுவார்த்தை மூலம் அடையக் கூடிய சிறந்த தீர்வு இதுதான் என்ற செய்தி அவர்களுக்கு மறைமுகமாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறான ஒரு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கடன் வழங்குனர் குழு அதற்கு ஒரு நல்ல தர முத்திரையை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். ஆகவே, பரந்த கடனளிப்பாளர் சமூகத்திற்கு இந்த ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படும் போது, பொதுவாக அது ஒரு கடன் வழங்குநர் குழுக்களினது கூட்டுச் செய்திக்குறிப்பாக வெளியிடப்படும். அதில் ருரிடானியா கடன்பத்திரங்களை
வைத்திருப்பவர்களிற்கான கடன் வழங்குனர் குழுவும் அதன் அங்கத்தவர்களும் அந்த கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எனைய கடனளித்தவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படும். இது மிகவும் பயனுள்ளது.

ஆனால் கடன் வழங்குனர் குழுக்களை அங்கீகரிப்பதில் சில பிரச்சனைகள் இரு்கின்றன. இங்கே கொஞ்சம் வரலாற்றைப் பார்ப்போம். 1980 களில் வணிக வங்கிகள் மத்தியில் குறிப்பிடத்தக்க வகையில் கூட்டு ஒழுங்குக்குள் இருந்தன. எனவே மெக்சிகோ தான் வட்டிகளைக் கட்டப் போவதை நிறுத்தப் போவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குள் மெக்சிகோவிற்கான வங்கி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விட்டது. அந்தக் காலகட்டத்தில் தங்கள் கடனை மறுகட்டமைக்க தள்ளப்பட்ட 24 அல்லது 25 நாடுகளுக்கு இவ்வாறான ஆலோசனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. 

இந்தக் குழுக்களில் கடனாளி நாட்டிற்கு மிகப்பெரிய கடன்களை வழங்கியவர்கள் பொதுவாக அங்கம் வகித்தனர். புவியியல் ரீதியிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அங்கு இருந்தது. அதாவது இக்குழுக்களில் எப்பொழுதும் ஒரு ஜப்பானிய வங்கி இருக்கும், இரண்டு ஐரோப்பிய வங்கிகள் இருக்கும்.

அவர்கள் கடன் மறுசீரமைப்பின் விதிமுறைகளுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டவாக்கங்களைக் கூட அவர்களை தீர்மானித்தார்கள். சில வருடங்களுக்கு இது அற்புதமாக வேலை செய்தது. இந்த வங்கி ஆலோசனைக் குழுக்கள் பரந்து பட்ட வங்கிச் சமூகத்தின் மீது தமக்கிருந்த போதுமான செல்வாக்கை பயன்படுத்தினார்கள். அதனால் இந்த உடன்பாட்டை எதிர்த்து ஒருவரும் நிற்கவில்லை.

ஒரு சிறிய வங்கியாக இருந்து கொண்டு, இந்த மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு ஒத்துப் போவதில்லை என்று முடிவு செய்தால், சிற்றி வங்கி (City Bank) இன் தலைவரிடமிருந்து அந்த சிறிய வங்கிக்கு முதலில் ஒரு தொலைபேசி அழைப்பு வரும். ‘நியூயார்க்கில் உள்ள வங்கிகளுடன் உள்ள உறவை நீங்கள் பேண விரும்பினால் இந்த ஒப்பந்தத்துக்கு நீங்கள் இணங்க வேண்டும்’ என்று சொல்லப்படும். அந்த வங்கி அதையும் எதிர்த்து நின்றால், அதனை மேற்பார்வையிடும் மேலிடமாகிய அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve) இடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும். ‘நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். அங்கிள் சாம் (uncle Sam) நீங்கள் இந்த மறுசீரமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.’ என்று சொல்லப்படும். அதன் பின்னர் சிறிய வங்கிக்கு வேறு வழியில்லை.

தொடரும்...

தமிழாக்கம் - நிமிர்வு 
ஆவணி 2022 நிமிர்வு இதழ் 
1 comment:

  1. Although each pay chart presents a different home edge, want to} at all times contemplate going for a 9/6 pay chart when half in} Jacks or Better video poker. Check out all the choices to play video poker video games for free. In this exciting recreation, your successful is predicated on ending up with a poker hand 파라오카지노 such as flush, straight, two pairs, or even a a} royal flush. There are dozens of different video-poker video games in casinos. Different video games will have totally different price of returns, that means some video games, if you win, present you with|provides you with} a higher percentage of your money back and others present you with|provides you with} a decrease percentage. A "9/6 Jacks or Better" paytable is the most effective as a result of|as a end result of} the speed of return is ninety nine.54%, that means the casino solely retains .46% of your money.

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.