பனையாண்மைப் பொருளாதாரம்

 


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்டத்தின் கடையம் பனையாண்மை அமைப்பின் தலைவராகவும், பங்களாதேஸ் நாட்டின் பனைசார் ஆய்வு பேராசிரியராகவும் பனை ஆய்வாளர் முனைவர் பா.மோ. செல்வகுமார் விளங்குகிறார். பனை தொடர்பிலான பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்துள்ள இவர் தமிழ்நாட்டின் கடையத்தில் உள்ள தனக்கு சொந்தமான 4 ஏக்கர் காணியில் 6000 பனை விதைகளை நட்டு பனை மரத்தை வளர்த்து பலருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். பனையாண்மை என்கிற கருத்தியலை பரப்பி வருகிறார். அவருடன் உரையாடிய விடயங்களில் முக்கியமானவற்றை தொகுத்துள்ளோம்.

தமிழ்க்குடிகளின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் மரம் தான் பனை. பனையை வளர்த்து பண்படுத்தி பாதுகாத்து பயன்படுத்தி அதிலிருந்து நமது தேவைகளை நிறைவு செய்து கொண்டு பனையோடு கூடிய தற்சார்பு வாழ்வியல் வாழ்ந்து வளம் கூட்டும் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே பனையாண்மை ஆகும்.

பனையாண்மை (Palmyraculture) என்கிற கருத்தியலை பரப்புவதன் நோக்கம் ஆண்மை என்கிற போக்கு கிடையாது.  பனை பெண்மை என்று வைக்க வேண்டியது தானே என்று பெண்கள் சிலர் என்னிடம் கேட்டார்கள். வேளாண்மை என்பது எங்களின் மரபுச் சொல். ஒரு இடத்தில் இருந்து மண்ணோடு கூடி மண்ணைப் பக்குவப்படுத்தி நீர், ஒளி, காற்று, மனிதவளம், விதைகள், விலங்குகளைப் பயன்படுத்தி  நமக்கு தேவையான பொருட்களை உருவாக்கி சுற்றுச் சூழலுக்கு இசைந்து இணங்கி இயங்கக் கூடிய ஒரு வாழ்வியலைத் தான் வேளாண்மை என்கிறோம். பனை சார்ந்த தொழிலை செய்யும் பனை வீரர்கள்  முழுமையாக விவசாயத்திலும் இருப்பார்கள். ஆனால் பனையை நம்பி அவர்களின் வாழ்க்கை இருக்கும். பாளைப்பணி, ஓலைப்பணி, கைப்பணி, மரப்பணி என இவையாவும் பருவகாலம் சார்ந்தும் அமையும்.

பனையாண்மை என்பது வேளாண்மை என்கிற சொல்லின் உருமாற்றம். ஆண்பால், பெண்பாலைக் குறிக்கும் சொல் கிடையாது. நிலைத்த நீடித்த வேளாண்மை, வளம் கூட்டும் வேளாண்மையாக நாங்கள் பனை சார்ந்த வாழ்வியலைப் பார்ப்பதனால் அந்த வாழ்வியலை பனையாண்மை என்று அழைக்கலாம். எல்லா இடங்களிலும் சொற்பதங்கள் தோன்ற வேண்டும். புது துறை தோன்றும் போது புது சொற்கள் தோன்ற வேண்டும். அப்போது தான் மொழியும் பண்பாடும் சேர்ந்து வளரும். பழைய சொற்களையும் நாங்கள் பயன்படுத்தலாம். அந்த வகையில் இக்கருத்தியலை உருவாக்கி நாங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.

மதங்களுக்கு, பொழுதுபோக்குக்கு மக்கள் சேர்வதனைப் போல இப்போது இயற்கைக்கும் பனை சார்ந்த கருத்தியல்களுக்கும் மக்கள் சேர்ந்திருக்கிறார்கள். நிறைய விழாக்களை முன்னெடுப்பது, பனை சார்ந்த பயணங்களை முன்னெடுப்பது, உணவுத்திருவிழாக்கள், விதை வீசும் திருவிழா, நுங்குத் திருவிழா இப்படி பல மரம் சார்ந்த வாழ்வியலை மக்களாகிய நாம் முன்னெடுக்கிறோம். அடிப்படையில் மனிதன் ஒரு நுகர்வாளன். தேனீக்களின் உழைப்பை திருடி தேன் எடுக்கிற மாதிரி நாங்கள் மரங்களின் உழைப்பை திருடி நமக்கான உணவை எடுக்கின்றோம். மனிதர்கள் உணவை உருவாக்க தெரியாதவர்கள். இன்னொன்றில் இருந்து எடுக்க தெரிந்தவர்கள். தாவரங்கள் தான் உற்பத்தியாளர்கள். மற்றவர்கள் எல்லாம் நுகர்வோர்கள். ஒவ்வொரு தாவரங்களிலும் என்னென்ன சிறப்பியல்புகள் உள்ளன, விலங்குகளில் என்ன சிறப்பியல்புகள் உள்ளன  என்பதை கண்டுபிடித்தோம். அப்படி ஒவ்வொன்றையும் சாப்பிட ஆரம்பித்தோம்.

பனை உங்கள் வீட்டு அயலில் நிற்கும். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏதாவது ஒன்றைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்கும் உங்களுக்கும் இடையே நெருங்கிய பந்தம் உருவாகி இருக்கும். நுங்கு என்பது உணவு. ஐந்து நுங்கை வெட்டி சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும்.  பஞ்சம் போக்கியான பனை, பதநீர், நுங்கு, பனம்பழம், கிழங்கு என இனிய ஊட்டமிக்க உணவுகளை உருவாக்கி தருகிறது. கோடையின் தாக்கத்தை போக்க உதவும் இந்த உணவுகள் அனைத்தும் இப்பருவத்தில் கிடைப்பது இயற்கையின் கொடையாக உள்ளது.

எங்கள் ஊரில் வரலாற்றுக் கதையாக சொல்லுவார்கள். பிரித்தானியர்கள் தொடர்வண்டிப் பாதை போடும் போது தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியின் பல இடங்களில் பனை மரங்களை வெட்டித் தள்ளி விட்டுப் போட்டார்கள்.  அந்த நேரம் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் அங்குள்ள கிராம மக்களில் ஒருவரிடம் பதநீர் வாங்கி குடித்திருக்கிறார். அந்த சுவை, வெயிலில் களை தீர்ந்த உணர்வால் மீண்டும் மீண்டும் அங்கே வந்து குடித்திருக்கிறார். இப்போது நீங்கள் போடும் ரயில்பாதை அதே போல் நீளமாக போகுமாக இருந்தால் நிறைய பனை மரங்களை வெட்ட வேண்டி இருக்கும். அதனால் பாதையை மாற்றிப் போடுங்கள் என கிராம மக்கள் அந்த அதிகாரியிடம் கேட்டிருக்கின்றனர். அந்த உணவை சாப்பிட்டு பழகியதனால் அந்த மக்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மாற்றி போட்டாராம்.  

பனையில் இருந்து ஒரு பொருளை எடுத்து சாப்பிட்டு பழகினோம் என்றால் பனையை இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்கி விடுவோம். உணவிலிருந்து உடை உறைவிடம் என பல்வேறு பயன்பாடுகளுக்கு தேவையான மூலப்பொருட்களை அது தருகிறது. தற்சார்பு வாழ்வியலுக்கான மரம் என்று பனையை சொல்கிறோம் என்றால் உணவு, உறைவிடம், உடை, ஆற்றல், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு என பல்வேறு பயன்களை பனையிலிருந்து பெற முடியும் என்பதனாற் தான் அவ்வாறு சொல்கிறோம்.


பசுமைப் பொருளாதாரத்தை தக்க வைப்பதாகவும் சூழலியலை சரியான முறையில் பேணுவதாகவும் ஏனைய மரங்களுக்கு தாயாகவும் பனை விளங்குகின்றது. பனைமரம் தன்னைச் சுற்றியுள்ள பல்லுயிர்களின் பன்முகத்தன்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பனை மரங்களின் அருகில் இருக்கும் தாவரங்களின் வளர்ச்சி நிலை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது.  நுண்ணுயிர்களில் தொடங்கி மாடுகள் போன்று பேருயிர்கள் வரைக்கும் தீனி போடுகிறது. நிறைய உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளது. 

சங்க இலக்கியங்களில் நெய்தல் நில மக்கள் பனையை தெய்வமாக வழிபடுகின்றார்கள்.  பனைமர மாடசாமி, ஒற்றைப்பனைமர சாமி என ஆங்காங்கே குட்டிக் கோவில்கள் இருக்கும். ஊரில் பனை என்கிற பெயரில் குறிச்சிகளும் உணவகங்களும் உண்டு. பனையாண்மை என்பது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருத்தியல்.  ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியங்களில் கள்ளைப் பற்றிய பதிவு அதிகமாக உண்டு. அன்று கள் தான் முதன்மையான பானமாக இருந்திருக்கிறது. சமூகத்தை ஒன்றிணைக்கக் கூடிய பானமாக இருந்திருக்கிறது.

தூக்கணாங் குருவிகள் கூடு கட்ட பனைமரங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கும். பனையின் குளுமை, காற்றுக்கு ஈடுகொடுக்கும் தன்மை, பனைஓலையின் வலிமை போன்றவற்றால் அதிலேயே அதிகமாக கட்டும். பல பனைகளில் 50 க்கும் மேற்பட்ட கூடுகள் இருக்கும். பனை அந்தக் குருவிகளுக்கு  ஊர் போன்று இருக்கும். பனை மரமே ஒரு சூழல் தொகுதி என்பார்கள். ஏனென்றால் பல்வேறு உயிரினங்கள் அதில் வாழ்கின்றன. பனை மரங்களை குளக்கட்டுகளில், வாய்க்கால் ஓரங்களில் அதிகம் நாட்டினால் அந்த அணைக்கட்டு இன்னும் பலமாகி வருவதனை கண்கூடாக கண்டுள்ளோம்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த எங்கள் சமூகம் சாதிய அடிப்படையில், மத அடிப்படையில், இட அடிப்படையில், கல்வி, பொருளாதார அடிப்படையில் சிதைந்து போய்க் கிடக்கிறது. இப்படி சிதைந்து போகாமல் பண்பாட்டு அடிப்படையில் மீட்டெடுத்து இயற்கை, மொழி, அறிவியல், மனிதநேயம்  இந்த நான்கு  பண்புகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தால் நாங்கள் நல்லதொரு எதிர்காலத்தை கட்டியமைக்கலாம். வரும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கையை கொடுத்துவிட்டுப் போகலாம்.

இயற்கையில் இருக்கக் கூடிய எல்லா உயிரிகளும் எல்லோருக்குமானது தான். ஆனால், யாருடைய வாழ்வியலில் அதிகம் பனை சம்பந்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் பகுதிகளில் தான் அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கிறது. தமிழ்மொழி பேசும் கூட்டத்தோடு பனையும் பயணித்திருக்கிறது என்று சொல்லலாம்.  இலக்கியங்கள், வரலாறுகள், புவியலின் அடிப்படையிலும் பார்த்தீர்கள் என்றால் தமிழ்மக்கள் வாழ்ந்த எல்லாப் பக்கங்களிலும் பனைகள் செறிவாக இருந்திருக்கின்றன. உலக இலக்கியங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தால் எத்தனை இலக்கியங்கள் பனையைப் பற்றி பதிவு பண்ணியிருக்கிறது என்று பாருங்கள். அப்படி தேடிப் பார்த்தால் தமிழ் இலக்கியத்தில் மட்டுமே பனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பனை குறித்து ஆயிரம் ஆண்டுகள் பதிவு இருக்கிறது என்றால் அது தமிழில் மட்டும் தான். பனையை தமிழர்களின் அடையாளம் என்று சொல்வதற்கு தகுதி இருக்கிறது. தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் பனை குறித்து நூற்றாண்டு பதிவுகள் உண்டு.  தமிழர்களுடைய வீடுகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதோ ஒரு பனை பொருள் அவர்களோடு ஒட்டிக் கொண்டு போகும். அப்படி ஒரு கலாசாரத்தை நீங்கள் எந்த இனத்துடனும் பார்ப்பீர்களா? ஆகவே பனை இந்த மக்களுக்கான மண்ணுக்கான மரமாக அடையாளமாக இருந்திருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டுக்கும் தேசிய மரமாக பனையே உள்ளது. கம்போடியாவின் தேசிய மரம் பனை, இந்தோனேசியாவின் ஒரு மாநிலத்துக்கும் தேசிய மரம் பனை.

பனை பரவியுள்ள இடங்களை உலக ரீதியில் பார்த்தால் பனை வழித்தடம் ஒன்றைக் காணலாம். இலங்கையிலிருந்து இந்தியா, பங்களாதேஸ், பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியடனாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூகினி, ஆபிரிக்கா வரை சுற்றி ஒரு வட்டம் வரைந்தால்   அதனை பனை வட்டம் என்று கூறலாம். இதனை புவியியல் ரீதியாகவும் நீங்கள் இணைக்கலாம். இங்கே எல்லாம் பண்பாட்டு தொடர்பு உள்ளது, பரிமாற்றம் உள்ளது. இந்த நாடுகளில் எல்லாம் பனை நன்றாக வளர்ந்து வருகிறது.  இங்கெல்லாம் பனை ஏறும் கருவிகள், பனை ஏறும் முறைகள், பனை சார் பொருள்களை எடுக்கும் முறைகள், பயன்படுத்தும் முறைகளை பார்த்தால் பண்பாட்டு தொடர்பு  தெரியும். மொழிவழியாக நாம் ஒரே இனமாக இல்லையென்றாலும் இந்தப் பனை வழியாக ஒரு கலாசார தொடர்பு உள்ளது. ஆனால் இதில் முதன்மையானவர்களாக தமிழர்கள் இருந்திருக்க முடியும்.

மங்களகரமான எல்லா இடங்களிலும் பனையை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். வடமொழியில் பனையை அமங்கலமான மரமாக காண்பித்து இருப்பார்கள். பனை, எருமை மாடு என்பவை கறுப்பாக இருக்கும். கறுப்பாக இருக்கும் எல்லாவற்றையும் ஒரு கூட்டம் ஒதுக்கும்.  நாங்கள் கறுப்பாக இருக்கும் எல்லாவற்றையும் நேசிப்போம்.

மிகுந்த ஊட்டச்சத்தும், மருத்துவப் பண்பும் நிறைந்த பல்வேறு வகையான பொருள்களை மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் வாரி வழங்கும் பனையை இன்னும் அதிகமாக நடுவோம்.  

புரட்டாதி 2022 நிமிர்வு இதழ் 

#பனையாண்மை #பனைவீரர் #பனைவழித்தடம் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.