நினைவேந்தல்களில் அரசியல் பேசக் கூடாதா?

 


நினைவேந்தல்களில் அரசியல் பேசக் கூடாது என்று இப்போது ஒரு சாரார் பேசத் தொடங்கியுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களின் போதும் இப்படியான குரல்கள் ஒலித்தன. ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழி நின்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். பன்னிரு நாட்களும் ஒரு சொட்டு நீரும் அருந்தாது தனது கொள்கையில் உறுதியாக நின்றார். அவரது கோரிக்கைகளை இந்திய - இலங்கை அரசுகள் ஏற்க மறுத்த நிலையில் இறுதியில் தாய்மண்ணின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்தார்.  

இன்றும் அந்த ஐந்து கோரிக்கைகள் வலுவாக உள்ளன. ஆனால், திலீபனின் அகிம்சை போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை பேசாமல் வெறுமனே விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்துவது, தூக்குகாவடி எடுப்பதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக எண்ணக் கூடாது. தியாக தீபம் திலீபனின் ஒப்பற்ற தியாகம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்தப்பட வேண்டும். அதன் பின்னாலுள்ள அரசியலும் உரத்துப் பேசப்பட வேண்டும். அப்போது தான் ஆயுத வழியில் அல்ல. ஜனநாயக வழியிலும் ஒலித்த எங்கள் குரல்வளை நெரிக்கப்பட்ட விடயம் சர்வதேசத்துக்கும் தெரியவரும்.  

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்து பயணிப்பவர்கள் பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தலையும் மீறி திலீபனின் நினைவேந்தலை அனுட்டித்தார்கள். அதில் மக்களும் பங்கு கொண்டனர். அகிம்சை வழியில் உயிர்நீத்தவருக்கு கூட நினைவேந்த தடை விதிக்கப்பட்டு எழுந்த அச்சுறுத்தல்களையும் தாண்டி நினைவேந்தல் இடம்பெற்றது. 


இன்று நினைவேந்தல்களுக்கு ஒரு வெளி திறக்கப்பட்டிருக்கும் நிலையில் நினைவேந்தல்கள் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். கட்சிகள் நினைவேந்தல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அங்கு மக்களை முன்னிலைப்படுத்த வேண்டும். நினைவேந்தல்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் இருந்த காலத்தில் மக்கள் வெளிப்படையாக இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதனை வைத்துக் கொண்டு மக்கள் அக்காலங்களில் உணர்வற்று இருந்தார்கள் என்று சொல்ல முடியாது.

தடைகள் தளர்த்தப் பட்டு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் நினைவேந்தல்களை தமது கட்சிச் செயற்பாடாக கருதாமல் மக்களின் செயற்பாடாக மாற்ற கட்சிகள் முன்வர வேண்டும். அப்படி இருந்தால் தான் மக்களும் அதிகளவில் பேரெழுச்சியுடன் திரள்வார்கள். கட்சிகளும் வேறு தரப்புகளும் பிழையான வழியில் நினைவேந்தலை கொண்டு செல்லும் முயற்சியை மக்கள் தடுப்பார்கள். அதனூடாக தமிழ்த்தேசத்தின் விடுதலை அரசியல் மக்களாலேயே முன்னெடுக்கப்படும். மறுபுறத்தில், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கும் அவர்களின் ஆதரவு கிடைக்கும்.


தமிழ்த் தேசிய அரசியலை இனிவரும் தலைமுறையினரிடம் முறையாக கடத்துகின்ற இடமாக பார்க்காமல் திலீபனின் நினைவேந்தலை தமது கட்சியின் செயற்பாடாக ஒரு தரப்பினரும், தமிழ்த் தேசிய அரசியலை நீக்கம் செய்யும் செயற்பாடாக மறுதரப்பினரும் மாற்ற முனைந்த நிகழ்ச்சியே இம்முறை நடந்து இருக்கிறது.

இதில் நினைவேந்தலை வெறும் அஞ்சலி நிகழ்வாக சித்தரித்து, தூக்குகாவடி எடுப்பதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக கருதி தாங்கள்தான் தமிழ் தேசியத்தின் காவலர்கள் என்று சொல்லித் திரியும்  குழுக்கள் தொடர்பாக நாம் விழிப்பாக இருக்க வேண்டும். அதேபோன்று, நினைவேந்தலை தமது கட்சியின் ஏகபோக உரிமையாக காட்ட முனையும் கட்சிகள் பற்றியும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.  


தியாக தீபம் நினைவு நாட்களான பன்னிரு நாட்களும் காலையில் இருந்து இரவு வரை பாடசாலை பிள்ளைகளில் இருந்து வயதானவர்கள் வரை பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் நினைவு நாள் தொடங்கி நான்காவது நாளில் திடீரென அவசர அவசரமாக பொதுக்கட்டமைப்பு உருவாக்கும் முனைப்பு ஒன்று யாழ் மாநகரசபை முதல்வரினால்  முன்னெடுக்கப்பட்டது. மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய நினைவேந்தல் நிகழ்வை ஒரு அதிகாரக் கட்டமைப்புக்குள் கொண்டுவர எடுக்கப்பட்ட  ஒரு முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டி உள்ளது. ஆயினும் குறித்த  பொதுக்கட்டமைப்பு இறுதியில் மாநகர சபையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த போதிலும் அது அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது.  மக்களின் பரவலான பங்களிப்பு இன்றி உருவாக்கப்பட்ட இந்தப் பொதுக்கட்டமைப்பு அங்கீகாரம் இல்லாததாகவும் பலம் இல்லாததாகவும் இருந்தது.  அதன் காரணமாக இந்தப் பொதுக்கட்டமைப்பு தியாக தீபம் போராடிய தமிழ் தேச அரசியலை முன்னெடுக்காமல் பல தரப்பட்டவர்களின் ஆளுமைக்கு உட்பட்டுப் போனது. இப்படியாக அவசர அவசரமாக ஒரு நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பை யாழ்ப்பாண மாநகர முதல்வர் உருவாக்கியமைதான் இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. கட்சிகள் உட்பட எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க இந்த அமைப்பினால் முடியாமல் போனது. ஒரு பலமான வெகுசன அமைப்பு ஒன்றால்தான் தியாக தீபம் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  உட்பட தமிழ் தேசிய அரசியல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் முன்கொண்டு செல்ல முடியும். 

பெரும்பாலான மக்களின் அங்கீகாரத்துடன் வலுவான பொதுக்கட்டமைப்பை அமைப்பதன் மூலம் தான் அடுத்த முறை நினைவேந்தலை சிறப்பாக நடத்த முடியும். அரசியல் கட்சிகளின் தலையீட்டையும் உட்கட்சி சண்டைகளையும் முற்றாக விரட்டி அடிக்கின்ற பண்பை கொண்டதாக அந்த அமைப்பு இருக்க வேண்டும்.

ஆயுதப் போராட்ட காலங்களில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் எவ்வாறு தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது என்பதை சற்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. கிராமங்களில் வீடுகளின் முன்பு மரத்தடிகளினால் சிறிய பந்தல் போடுவார்கள். பச்சைத் தென்னை ஓலையால் பின்னி வாழை மடல்களையும் கொண்டு சுற்றி அலங்கரிப்பார்கள். பந்தலில் வைப்பதற்கு தியாக தீபத்தின் வர்ணப்படம் வேண்டி நினைவேந்தல் தொடக்க நாள் அன்று வெளியாகும் பத்திரிகைகளின் நடுப்பக்கத்துக்காக எதிர்பார்த்து இருப்பார்கள். எதிர்பார்ப்பு வீண் போகாமல் திலீபனின் வர்ணப்படம் வந்திருக்கும். அதனை  காகித அட்டையில் ஒட்டி பந்தலுக்குள் வைத்து தினமும் பூக்கள் தூவி, தீபமேற்றி வழிபடுவார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல்களும் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இவ்வாறாக நினைவேந்தல் மக்கள் மயப்பட்டிருந்தது. உணர்வு மயப்பட்டிருந்தது.

திலீபனின் நினைவு வாரம் முழுவதும் மரநடுகை, மாணவர்களுக்கு இடையே சித்திரப் போட்டி, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் என்பன உட்பட சமூகம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறும். இவற்றினூடாக தியாக தீபத்தின் அரசியற் கோட்பாடு மக்களிடையே கடத்தப்பட்டது, பரப்பப்பட்டது.

ஒரு துளி நீர் கூட இறுதிவரை அருந்தாது அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ்மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த திலீபனை என்றும் நினைவில் இருத்துவோம். அந்த நினைவேந்தல் நாட்களில் அவர் முன்னெடுத்த தமிழ்த்தேசிய அரசியலை உயர்த்திப் பிடிப்போம். அந்த நாட்களுடன் நின்று விடாது ஏனைய நாட்களிலும் அவரின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்.

துருவன்- 

படங்கள் - ஐ. சிவசாந்தன் -

ஐப்பசி 2022 நிமிர்வு இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.