சிங்கள பெருந்தேசியவாதத்திடம் பறிபோகும் குருந்தூர் மலையும் பூர்வீக நிலமும்



முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு பிரதேசத்தின் குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை அபகரிக்கும் முயற்சி தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த விகாரை ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது. இவற்றை கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 21.09.2022 அன்று குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, அங்கு மீண்டும் பௌத்த விகாரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந் நிலையில் அங்கு ஆயுதங்கள் தாங்கிய பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் பொல்லுகளுடன் குவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பொலிஸார் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர். பொலிஸாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022 அன்று குருந்தூர்மலைக்கு விஜயம் செய்து, இதற்கு மேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார். இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் ஒரு பௌத்த துறவி மற்றும் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குருந்தூர் மலையில் உள்ள 'குருந்தாவசோக' ரஜமாஹா விகாரையின் விகாராதிபதியாக கல்கமுவே சந்தபோதி தேரர் செயற்பட்டு வருகிறார். குருந்தூர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் உள்ளிட்ட பூர்வீக வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்த சூலமும் பிடுங்கி எறியப்பட்டுள்ளது. 

குருந்தூர்மலை தொடர்பிலான AR673/18 என்ற வழக்கு, குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தைச் சார்ந்த மக்களால்  நகர்த்தல் பத்திரம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்தவழக்கில் ஏற்கனவே 13.09.2018 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், மிகத் தெளிவான கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதிலே, குருந்தூர் மலைப் பிரதேசம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருகின்ற பிரதேசம் எனவும், அப்பிரதேசத்திலே புதிதாக எவ்விதமான கட்டடங்களையும் அமைக்க முடியாது. மேலும் பரம்பரையாக வழிபாடு செய்கின்ற சைவர்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதனை யாராலும் தடுக்க முடியாது. அத்தோடு ஏனைய புதிய கட்டுமானங்களை செய்யும்    முயற்சிகளில் ஈடுபடுபவர்களை கைது செய்யலாம் எனவும் கட்டளை வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டளையினை மீறியே தற்போது அங்கு புதிதாக ஒரு விகாரை அமைக்கப்பட்டு, அந்த விகாரையில் 12.06.2022 அன்று, விசேட பூசை வழிபாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து முழுக் குருந்தூர் மலையும் தொல்பொருளியல் ஆய்வுப் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் பகுதியாக பிரகடனப்படுத்தியதனால் அங்கு வழிபாடு செய்ய செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதோடு அப்பகுதியில் இராணுவத்தினரின் பிரசன்னமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பின்பு குறித்த பகுதியில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 2018 இல் தேரர் ஒருவர் வருகை தந்து இராணுவத்தினரின் உதவியுடன் புத்தர் சிலை ஒன்றினை நிறுவ முற்பட்டதால் தான் முதன்முதலாக கடுமையான சர்ச்சை வெடித்தது. தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்று 13.09.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. மேலும் தொல்பொருள் அகழ்வுகளை மேற்கொள்வதாக இருந்தால், யாழ்.பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையையும் மூத்த வரலாற்று ஆய்வாளர்களையும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. குறித்த பகுதியில், தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களை மேற்கொள்வதும் செய்யப்பட முடியாது என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஆண்டு கிராமமக்களின் பங்கேற்பின்றி படையினரின் முழுமையான ஒத்துழைப்புக்களுடன் தொல்பொருள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க கூறி இருந்தார். எனினும், அங்கு தொல்பொருள் சின்னமாக கிடைக்கப் பெற்றது 8 அடுக்குகள் கொண்ட அஷ்ட லிங்கம் எனப்படும் தாராலிங்கம் என்று வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிட்டதோடு தமிழக ஆய்வாளர்கள் ஊடாக அதனை உறுதிப்படுத்தியதாகவும் கூறி இருந்தார்.

தொல்பொருள் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்கக் கட்டமைப்பான  தொல்பொருள் திணைக்களம்  குறித்த இடங்களை தொல்பொருள் பகுதியாக பிரகடனம் செய்து அங்கு நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு எவ்விதமான அதிகாரங்களையும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு எந்த அடிப்படை சட்ட ரீதியான ஏற்பாடுகளையும் கொண்டிராத  தொல்பொருள் திணைக்களம் அங்கு  அகழ்வுகளும், ஆய்வுகளும் நிறைவடையாத பகுதியில் நிர்மாணங்களுக்கு இடமளித்தது என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு கருவியாகவே தொல்பொருள் திணைக்களம் செயற்படுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஒதியமலைக் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு மார்கழியில் நிகழ்த்தப்பட்ட மோசமான படுகொலைகளின் பின்னர் பழைய தண்ணிமுறிப்பு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அன்று இடம்பெயர்ந்தவர்களில் 23 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களும், 48 ஏக்கர்கள் வரையிலான புலங்களும் தற்போதும் உறுதிகளுடன் காணப்படுகின்றன.  தண்ணிமுறிப்பு  அ.த.க.பாடசாலை, தபாலகம், நெற்களஞ்சியசாலை உள்ளிட்டவற்றின் எச்சங்கள் ஏற்கனவே தமிழ் மக்கள் இங்கே வாழ்ந்தமையை உறுதிப்படுத்துகின்றன. 

குருந்தூர் மலை மற்றும் வயல்காணிகள் அபகரிப்பு தொடர்பில் குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.மயூரன் கருத்து தெரிவிக்கையில், ஒரு காவி உடை தரித்த தேரரால் மாவட்ட நீதிமன்ற நீதிமன்ற கட்டளையினை புறம் தள்ளி தொடர்ச்சியாக இராணுவத்தினை வைத்து கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும் என்றால் இலங்கையில் நீதி எங்கே இருக்கின்றது? நீதியை யார் யாரிடம் கேட்பது? சர்வதேச ரீதியில் பணம் பெறுவதற்காக பச்சைப் பொய்களை சொல்லி திரிகின்றார்கள். அதனை சர்வதேச நாடுகளும் வேடிக்கை பார்க்கின்றன. காலத்திற்கு காலம்  ஐனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாறுவார்கள்.  பல உத்தரவாதங்களை தருவார்கள். இறுதியில் நடப்பது நில ஆக்கிரமிப்பும், பௌத்த மத ஆக்கிரமிப்பும் தான்.  

சிங்கள ஆட்சியாளர்கள் தங்களது நாட்டைக் கூட கொண்டு நடாத்த முடியாத நிலையில்  இங்கு விகாரை அமைப்பதும் சிங்கள மக்களை ஏமாற்றுவதும் அவர்களை பேருந்துக்களில் அழைத்து வந்து தெருத்தெருவாக இறக்கி விடுவதும் எமது நாட்டின் துயர் தோய்ந்த அரசியலாக மாறியுள்ளது. எமது தமிழ் அரசியல்வாதிகள் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற அத்தனை பேரும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதுடன் சர்வதேச ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான தார்மீகமான வேலைத்திட்டங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும். அம்பாறையில் பட்டிப்பளை ஆற்றில் தொடங்கி இன்று முல்லைத்தீவு மாவட்டம் தாண்டிய நிலையில் நிலப்பறிப்பின் உச்சத்தில் இருக்கின்றோம். முல்லைத்தீவில் குள ஆக்கிரமிப்பு நிறைவடைந்து விட்டது. வெகுவிரைவில் வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் வலிகாமத்திலும் இந்த நடவடிக்கைகள்தொடரும் நிலை வரும். அப்போதாவது தமிழ் தலைமைகள் விழித்தெழுகின்றனவா என்பதை சிறிதுகாலம் பொறுத்திருந்தால் பார்க்கலாம்.

தண்ணிமுறிப்பு கிராமஅபிவிருத்தி சங்க தலைவரான  கலைச்செல்வன் பின்வருமாறு தெரிவித்தார். 1984 ஆம் ஆண்டு தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இதுவரைக்கும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலகத்திலும் மாவட்ட செயலத்திலும் கதைத்தோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று தொல்பொருள் திணைக்களம் எல்லைகளுக்கு கல்லுப் போடுவதற்கு காரணம் இவர்கள் தான். இடம்பெயர்ந்த மக்களை உரிய காலத்தில் மீள்குடியேற்றம் செய்திருக்க வேண்டும். மீள்குடியேற்றமும் செய்யவில்லை. மக்களுக்கான காணியினை வழங்குங்கள் என்று கோரியிருந்தோம் அதுவும் செய்து தரப்படவில்லை.  குருந்தூர் மலைக்கு செல்லும் முதலாவது காணி எங்களின் காணி. இன்று எங்கள் காணியில் ஒரு தென்னம்பிள்ளை, கிணறு, பழைய கட்டிடங்கள் என்பன இருக்கின்றன. மக்கள் வாழ்கின்ற குடியிருப்பு இடமான தண்ணிமுறிப்பு 51 ஆம் கண்டம். இந்த இடத்திலும் தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டி காணியினை அபகரித்துள்ளார்கள். அதேபோல் குருந்தூர் குளத்தினையும் முழுமையாக அபகரித்து குளத்தின் கீழ் உள்ள தனியார் வயல் காணிகளை அபகரித்து தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டியுள்ளார்கள்.  எல்லாப் பக்கங்களாலும் ஆக்கிரமித்தால் நாங்கள் என்ன செய்வது? 

தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவரான ச.சசிகுமார் கருத்து தெரிவிக்கையில், தண்ணிமுறிப்பு கிராமம் இப்படியே பாழடைந்து போய்க் கொண்டிருக்கின்றது. குளத்தினையும் வயல் நிலங்களையும் வாழ்வாதாரத்திற்கான மாடுகளின் மேய்ச்சல் தரவையினையும் சேர்த்து வைத்து தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. குளத்தினையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையையும் செய்கின்றார்கள். தனியே குருந்தூர் மலைமட்டுமல்ல, 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வாய்க்கால் கட்டு இதனையும் சேர்த்து நில ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். தமிழ்மக்களுக்கு சொந்தமான  632 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்ல்லாம் பறிபோகும் நிலையில் உள்ளன. 

தமிழ்மக்கள் ஒன்றாக திரண்டு இதற்கெதிராக போராடாவிட்டால் எதுவுமே எஞ்சாது என்றார்.  கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் சிங்கள இனவாத அரசாங்கம் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளையும், நிலப் பறிப்புகளையும் கைவிடவில்லை என்பதற்கு சமீபத்தைய சான்று குருந்தூர் மலை.   

தொகுப்பு - துருவன் 

ஐப்பசி 2022 நிமிர்வு இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.