இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன, அடுத்ததென்ன? பகுதி : 02
ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 10.04.2022 அன்று நடாத்தப்பட்ட "இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன, அடுத்ததென்ன?" என்கிற உரையாடல் வகுப்பின் இறுதிப்பகுதி இங்கே பிரசுரமாகிறது.
இப்போது பலரும் பலவாறு சொல்கின்றார்கள். இடைக்கால அரசாங்கம், தற்காலிக அரசாங்கம் அல்லது ஒரு செயற்பாட்டுக் குழு போட்டு பொருளாதார பிரச்சனைக்கான உடனடித் தீர்வு பற்றி பேசுகிறார்கள். தமிழ்த் தலைவர்கள் எல்லோருமே கதியற்றவர்களாக கையாலாகாதவர்களாய் மெளனிகளாய் இருக்கின்றார்கள். எந்தவிதமான விழிப்புமற்று அண்டைநாடு சர்வதேச அரசியல், ஈழத்தமிழர் அரசியல் சிங்களவர் அரசியல் இவற்றை இணைத்துப் பார்க்க எதுவுமே தெரியாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு தெரிந்திருந்தால் இதுவரை சொல்லியிருப்பார்களே. எதனையும் அவர்கள் சொல்லவில்லை.
இலங்கையின் இடைக்கால அரசு அமைக்கப்படுவதைப் பற்றி எல்லோரிடமும் கற்பனைகளுண்டு. ராஜபக்க்ஷக்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்கின்ற குரல்கள் பெரிதாய் எழுந்திருக்கின்றன. இதில் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை பற்றி மறுபடியும் சொல்லலாம்.
இந்து வேதாந்தத்தில் துவைதம், அத்வைதம் என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் உண்டு. துவைதம் என்றால் இரண்டு. அத்வைதம் இரண்டு அல்ல. ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இரண்டு என சொல்கிறது துவைதம். ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இரண்டு அல்ல என்கிறது அத்வைதம். இது தான் இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமைக்கு பொருத்தமான சிறப்பான எடுகோள் ஆகும். இலங்கை அரசில் ஒரு ஜனாதிபதி இருப்பார் அவருக்கு கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம். இதனைப் பார்த்தால் இரண்டு போன்று இருக்கும். ஆனால் ஜனாதிபதி அதிக அதிகாரம் உடையவர் என்பதால் இரண்டு அல்ல ஒன்று தான். ஜனாதிபதியின் அதிகாரம் கலைக்கப்படாதவிடத்து இங்கு ஏற்படுத்தப்படும் எந்த அரசாங்கமும் கோத்தாபயவினுடையதும் ராஜபக்சகளினுடையதும் மட்டுமே தான்.
யாராவது ராஜபக்சகளினை காப்பாற்றும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவி அவர்களை காப்பாற்றி விட்டு வெளியே வரலாம். அவ்வளவு தான் நடக்கும். இடைக்கால அரசாங்கம் என்று சொல்லி வெளிநாடுகளில் கடன் பெறக்கூடிய சக்திகள் அரசில் பங்கெடுத்து ராஜபக்சகளை காப்பாற்றி விட்டு வெளியே வருவதற்கான ஒரு வாய்க்காலைத்தான் ராஜபக்சகளும் விரும்புகின்றார்கள்.
இலங்கையினுடைய புதிய அரசியல் யாப்பை பிரேரித்த நிபுணர் குழுவினுடைய தலைவர் ஒருவருடைய விடயம் பற்றி பார்க்கலாம். சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டது, 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி விட்டு 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அதிகாரமற்ற ஜனாதிபதி வேண்டுமென்று. அப்படி இருந்தால் தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரென்று கூறினார். ஆனால் அரசியல் யாப்பு குழு தலைவர் ரொமேஸ் டி சில்வா மற்றும் மனோகரா டி சில்வாவும் ஆகிய இரண்டு சட்டத்தரணிகளும் சேர்ந்து ஜனாபதிக்கு ஆலோசனையாக ஒரு திட்ட வரைபொன்றை வழங்கி இருக்கின்றனர். அதில் இன்றைய 44 ஆவது சரத்தின் கீழ் 44A என்கின்ற ஒரு உப பகுதியை அதனோடு புகுத்தி விடுமாறு சொன்னார்கள். இங்கு சஜித் கேட்டது 20 ஆவதை நீக்கு என்பதாகும். ஆனால், இந்த 44A என்ன சொல்கின்றதென்றால் மந்திரி சபையையும் பிரதமரையும் பதவியில் இருந்து உடனடியாக கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. அதன் கீழ் 15 பேரைக் கொண்ட ஒரு மந்திரிசபையை நியமித்து அதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது. பிரதமரை விட மற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டியதில்லை. எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டியதில்லை. நிபுணர்களாக இருக்க வேண்டும். இதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இச்சபை ஒரு வருடத்திற்கு பதவியில் இருக்கும். விரும்பினால் மீண்டும் இரண்டாவது தடவை நீடிக்கலாம். இது தான் அவர்களுடைய பிரதானமான முன்வரைபு.
இதன் கீழ் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி ஜனாதிபதியின் கீழ் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்றும் எதிர்கட்சித் தலைவரும் ஜனாதிபதியும் கூடி ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர்கள் முன்வைக்கின்றனர். இதனை பார்த்தால் புதியது போல தோன்றும்.
இது அமெரிக்க அரசியல் யாப்பிலுள்ள ஜனாதிபதியின் அதிகாரத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது. அமெரிக்க அரசியல் யாப்பில் ஜனாதிபதி பிரதிநிதி சபையின் உறுப்பினராகவோ செனட்சபையின் உறுப்பினராகவோ இருக்க வேண்டும் என்று இல்லை. அவர் தனக்குரிய அமைச்சர்களை நியமிப்பார். அது செனட் இனுடைய அனுமதியை பெற்றால் சரி. அது பிரசித்தமானதாக நிபுணர்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த அமெரிக்க யாப்பில் காணப்படும் இந்த அம்சங்களை தான் அதாவது அரசாங்கம் அமைப்பதற்கு கோத்தாபயவிற்கு அதிகாரத்தை வழங்குவது தான் அவர்கள் புகுத்த நினைக்கும் 44A இனுடைய விளக்கம்.
இந்த முன்வரைபில் சஜித் பிரேமதாஸ கேட்டதற்கு எதிராகத் தான் சொல்லப்பட்டுள்ளது. என்ன எப்படியோ அத்வைதமே இறுதி முடிவு. துவைதம் அல்ல. இடைக்கால அரசாங்கம் என்ற ஒன்று ஜனாதிபதியிலிருந்து பிரிந்தது அல்ல. இந்த அத்வைதத்தை நீங்கள் இலங்கையினுடைய முழு அரசியலிலும் பார்க்கலாம்.
தமிழ் மக்களை ஒழிப்பதற்கு ஏதுவாகவே ஜனாதிபதி முறைமை இலங்கையில் வெற்றிகரமாக ஜெ.ஆர். ஜெயவர்தனாவால் நடைமுறையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி முறைமை இல்லையேல் முள்ளிவாய்க்கால் படுகொலையை தாங்கள் இலகுவில் வென்றிருக்க முடியாதென்று சிங்கள தலைவர்கள், புத்தி ஜீவிகளும் அதனைசெய்தவர்களும் வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார்கள். ஜனாதிபதி முறைமை என்பது அனைத்து வகை சர்வாதிகாரத்திற்கும் அடிப்படையாக இருக்கின்றது. வளர்ச்சிகள் கிடையாத இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் எல்லாமே தலைகீழ். இலங்கையில் பெரும்பான்மையினரின் இனநாயகம் தான் இருக்கின்றது. இங்கு ஜனநாயகத்திற்கான அம்சம் கிடையாது. புள்ளடி போடும் ஒரு கலாசாரம் இருக்கின்றது. அதனூடாக வெற்றிபெற்றவர்கள் ஆட்சியமைக்கின்ற ஒரு பாரம்பரியம் இருக்கின்றது.
நீதி, தர்மம் என்பவற்றுக்கு சிங்கள அரசியல் கலாசாரத்தில் இடமே கிடையாது. ஆதலினால் இத்தகைய சிங்கள அரசியல் கலாசாரத்தில் நாம் நீதியை பற்றி சிந்திக்கமுடியாது. தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை பெறும் விடயத்தில் மிகவும் கட்டுக்கோப்புடன் யோசிக்க வேண்டும். இலங்கை 2500 வருடகால பிரசித்தமான அரசியல் வரலாற்றை கொண்ட ஒரு நாடு. உலகத்தில் 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இறுக்கமான பாரம்பரியத்தை கொண்ட முதலாவது நாடு சீனா தான். அடுத்து ரஷ்யா ஒரு பிரசித்தமான பேரரசுக் கலாசாரத்தைக் கொண்ட நாடு. மன்னராட்சி, பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பை கொண்ட நாடு.
இவற்றுக்கடுத்து இலங்கைதான் இப்பண்புகளை கொண்டுள்ளது. சிங்களவர்களுக்கு 2500 வருடகாலம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட வரலாறும் மன்னர் பாரம்பரியங்களுமுண்டு. இடைக்கிடை சில இடையீடுகள் இருந்தாலும் 2500 வருடகாலம் தொடர்ச்சியான தெளிவான அரசகட்டமைப்பு வளர்ச்சியை உடையது. சிங்களவர்களை பொருத்தவரை அரசு என்பது மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு உறுதியான நிறுவனம். அரசாங்கம் (government) மற்றும் அரசு (state) இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும். கோத்தாபய ஓர் அரசாங்கம். ஆனால் சிங்கள பௌத்தம் ஓர் அரசு. இந்த அரசு மிகவும் பலமானது. இதற்கு பலமான இராணுவம் 1979 இற்கு பின்பு கட்டியெழுப்பப்பட்டது. அது ஒரு குறுகியகால வரலாறைத் தான் கொண்டது. தமிழ் மக்களை கொலை செய்வதையும் மற்றும் எல்லாவிதமான ஏகபோக அக்கிரமங்களையும் சிங்கள மக்கள் அங்கீகரித்ததன் மூலம் அது ஒரு முனைப்பான வளர்ச்சியை அடைந்து விட்டது. வெளிநாடு ஒன்றுடன் யுத்தம் புரிந்ததை போல அப்பாவித் தமிழ்மக்களை கொன்று பெருவளர்ச்சியடைந்த இராணுவக் கட்டமைப்பை கொண்டுள்ளது.
அடுத்தது சிங்கள அதிகாரக்கட்டமைப்பு (bureaucracy) இந்த முழு ஆசியாவிலேயே பலம் வாய்ந்தது. ஜப்பானை இந்தியாவை மற்றும் சீனாவை விடவும் பலம் வாய்ந்தது. உலகத்திலேயே அதிகாரக்கட்டமைப்பை கட்டியாள்வதில் சீனா தான் பலம் வாய்ந்தது. அதனை அறிவார்ந்ததாக அறிமுகப்படுத்தியதும் அதுதான். அதாவது இந்த பரீட்சை முறையென்பதை சீனா தான் உலகுக்கு கொண்டு வந்தது. அங்கிருந்து தான் அது கிரேக்கத்திற்கு போய் ஐரோப்பாவிற்கு போய் திருப்பி எங்களுக்கு வந்தது. சீனர்கள் மத்தியில் சாதியமைப்புகூட இல்லை. எனவே திறமைசாலிகள் ஆட்சிக்குவருவதை விரும்பினார்கள். திறமைசாலிகளை தெரிவு செய்வதற்குரிய ஒரு முறை தான் பரீட்சை. அதிகாரக்கட்டமைப்பில் திறமைசாலிகளை நியமிப்பதற்கு அவர்களது குடும்பத்திற்குள்ளால் சாதிக்குள்ளால் ஆட்களை தெரிவுசெய்வதற்கு இடமில்லாத போது திறமைக்குள்ளால் தெரிவு செய்ய முற்பட்ட போதுதான் அவர்கள் பரீட்சை என்கின்ற முறையை கொண்டு வந்தார்கள். அது தான் இன்று உலகம் முழுவதும் இருக்கின்றது.
இதில் சிங்கள அதிகாரக்கட்டமைப்பு மிக தெளிவான திட்டவட்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பெளத்த மதத்தின் பின்னணியில் அவர்கள் சாதி வேறுபாடுகள் உண்டு. அதிலும் அரசியலில் 100% சாதி வேறுபாடுகள் உண்டு. அது தமிழர்களுக்கு தெரியாது. தீண்டாமைதான் சிங்கள மக்களிடம் இல்லை, ஆனால் சாதி வேறுபாடு இருக்கிறது. சிங்கள மக்களிடம் உள்ள அதிகாரக்கட்டமைப்பு மிகவும் உறுதியானது. மிகவும் திறமையானது. தமிழ்மக்களிடமும் அதிகாரக்கட்டமைப்பு இருக்கின்ற போதும் அது சிங்கள மக்களிடம் இருப்பதிலிருந்து பன்மடங்கு வேறுபடுகின்றது.
தமிழ் அதிகாரக்கட்டமைப்பு தீர்மானமெடுக்கும் ஒன்று அல்ல. அரசியல் தீர்மானத்தில் பங்காளிகள் அல்ல. தமிழ் அதிகாரக்கட்டமைப்பில் உள்ளவர்கள் சிங்கள அரசும் மந்திரிகளும் எடுக்கின்ற தீர்மானத்தை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே. தமிழர்கள் பல்வேறுப்பட்ட பெரிய அமைச்சு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் ஒரு எழுத்து தீர்மானத்தை எடுக்க அனுமதிக்கபடாதவர்களேயாகும். சிங்கள ஆட்சியாளர்கள் வழங்குகின்ற கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே. எல்லாவற்றிற்கும் எஜமானிடம் அனுமதி கேட்டு நிற்பார்கள். எஜமான் சொல்வதையே செய்வார்கள். அந்த வகையில் சிங்கள அதிகாரக்கட்டமைப்பு தான் அதிகாரமுள்ள ஒன்றாக இருக்கிறது.
சிங்கள அரசில் முதலாவது பெளத்த மகாசங்கம் பலமான நிறுவனம். இராணுவமும் அதிகாரக் கட்டமைப்பும் பலமான நிறுவனங்கள். அதிகாரக் கட்டமைப்பு இரண்டு வகையாகப் பிரிக்கப்படலாம். ஒன்று, உள்நாட்டு நிர்வாக அதிகாரக் கட்டமைப்பு, இரண்டு, வெளிநாட்டு கொள்கையை நிர்ணயிக்கும் அதிகாரக் கட்டமைப்பு. வெளிநாடு சம்பந்தமான அதிகாரக் கட்டமைப்பில் சாதி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது கோத்தாபயவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டவர்களும் சாதி அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அரசியலில் அதிகாரமற்றவர்கள்.
இந்த நிலையில் சிங்களவர்கள் மத்தியில் பலம் வாய்ந்த கட்டமைப்பு ரீதியான அரசு இருக்கின்றது. பெளத்த மகாசங்க கட்டமைப்பு இருக்கிறது. இவ்வாறு இருக்கின்ற நிறுவனங்கள் அரசினுடைய பலவீனங்களை மறைந்து போகப் பண்ணக்கூடியவை. எந்த அடி முட்டாளும் அரசில் இருக்கலாம். நிறுவனம் அதை சரிப்படுத்தி எடுக்கும். பெளத்த மகாசங்கம் தீர்மானம் எடுக்கும். அதிகாரக் கட்டமைப்பு நிர்வாகம் செய்யக் கூடியதாய் இருக்கும். இராணுவம் செயற்பாட்டிற்கு உள்ள நிறுவனம். அரசாங்கம் துயில்கின்ற இடங்களில் எல்லாம் அதிர்ச்சியை உள்வாங்கி தன்னை தற்காத்து கொள்வதற்கு இந்த நிறுவனங்கள் செயற்படும். அரசு என்கின்ற பலம் வாய்ந்த கட்டமைப்பு அனைத்தையும் வார்த்து எடுக்கும். எனவே சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த கொந்தளிப்பு அந்த அரசுக்கு ஒரு பொருட்டில்லை. வரலாற்று கண் கொண்டு பார்த்தால் சில காலங்களின் பின்னர் இது தூர்ந்து போய்விடும். தமிழர்களின் பிரச்சினை அப்படியல்ல. ஆதலினால் நாம் கட்டமைப்பு ரீதியான பார்வைக்கு போக வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினை உள்நாட்டு பரிமாணத்தால் மட்டும் நிர்ணயிக்கப் படக்கூடிய ஒன்று அல்ல. அண்டைநாடு, பிராந்திய அரசியல், உலகளாவிய அரசியல் என விரிந்து செல்கிறது. இதில் இன்றைய சூழலில் சிங்கள அரசு பலவீனமாக இருப்பது தான் தமிழ் மக்களுக்கு நல்லது என்ற வரலாற்று படிப்பினையை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும். வரலாற்று படிப்பினையின் அடிப்படையில் சிங்கள அரசை பலப்படுத்துவது எங்களை பலவீனப்படுத்துவதாகவும் எங்களை இழப்பதாகவும் முடியும் என்கின்ற விடயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த பலப்படுத்தல் வேலையை எந்த வெளிநாடும் செய்யக்கூடாது. சிங்களவர்களை பலப்படுத்துவது என்பது தமிழர்களை அழிப்பதாகும். தமிழ் மக்கள் 150,000 பேர் கொல்லப்பட்ட போது உள்நாட்டுப் பிரச்சினை என்று பார்த்து கொண்டும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கியும் மக்களை கொன்றொழித்து விட்டு தற்போது அரசை காப்பாற்றும் நோக்குடன் இருந்தால் இனப்படுகொலையின் இன்னுமொரு வடிவமாகத்தான் அதனைப் பார்க்க வேண்டும். எனவே எந்த ஒரு வெளிநாடையும் நோக்கி நாங்கள் கேட்க வேண்டியது, ‘நீங்கள் வழங்கும் எந்த நிதியையும் நிபந்தனையின் கீழ் மட்டுமே வழங்க வேண்டும்’ என்பதையே. இனப்பிரச்சினைக்கான தீர்வை அவர்கள் முன்வைப்பதாக சொன்னால், தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைக்கின்ற போதும் நாம் ஆமோதிக்கலாம்.
உலக நாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கான உரிமையை வழங்கு என்று அரசை நிர்ப்பந்தித்து திட்டவட்டமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்படியில்லையேல் தமிழ் மக்களை அழித்ததை, இனியும் அழிக்கப்படுவதை அங்கீகரிப்பது என்பதில்போய் முடியும். இதனைத் தான் தமிழ்மக்கள் அனைத்து நாடுகளையும் நோக்கி முன்வைக்க வேண்டும். களத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து நாடுகளையும் நோக்கி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். நிவாரணம் வழங்கினாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற வகையில் வழங்கச் சொல்லி கேட்க வேண்டும்.
அடுத்து சர்வதேச ரீதியில் உக்ரைன் யுத்தம் உலக அரசியலில் ஒரு புதிய ஒழுங்கினுடைய வாசல் கதவை தட்டுகின்றது. இதுவரை காலமும் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா இப்போது சொல்கிறது ரஸ்யா மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று. இது எமக்கும் பொருந்தக்கூடியது தானே. இலங்கையிலும் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்று சர்வதேசத்தை அமெரிக்கா கோர வேண்டும். இன்று ஐ.நா சபை எடுத்திருக்கும் தீர்மானத்தின் படி ரஸ்யா மனிதஉரிமை ஆணையத்தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஏன் ஈழத்தமிழர்களுக்கும் செய்யக் கூடாது. அப்படிப் பார்த்தால் உக்ரைன் ஈழத்தமிழர்களுக்கான வெளியொன்றை திறந்து விட்டுள்ளது.
புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்குரிய அரசியலை தீர்மானிக்க அரைவாசி பங்குடையவர்கள், களத்தில் வாழுபவர்கள் அரைவாசி பங்குடையவர்கள். புலம்பெயர் நாடுகளிலும் ஒரு செயற்குழுவை உருவாக்கி அதன் வழி சாத்வீக ரீதியாக தமிழ்மக்களுடைய அரசியல் கோரிக்கையை முன்வைக்கின்ற ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அகமும் புறமும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
ஈழத்தமிழர்கள் கவனிக்க வேண்டிய பிரதான விடயங்களில் ஒன்று வரலாற்று அனுபவம் என்ற ஒன்று எங்களிடம் இருக்கிறது. சிங்கள மக்களிடம் ஏற்பட்டிருக்கின்ற இந்த கொந்தளிப்பு எம்மிடம் முள்ளிவாய்க்காலிற்கு பின்பு ஏற்பட்டது. குறிப்பாக அது எழுக தமிழ் 1, எழுக தமிழ் 2 என்று மேலே வளர்ந்து வந்தது. எங்கள் தலைவர்களே எம்மை கைவிட்டு விட்டார்கள். ஆனால், இயல்பாகவே ஒரு மக்கள் போராட்டம் எழுந்தது. பின் எங்கள் தலைவர்களே அதனை சீரழித்தும் விட்டார்கள். அதன் பின், அனைத்து தமிழ் தலைவர்களும் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். அவ்வாறு குலைத்ததும் அதன் பின் முன்னெடுக்காததும் வரலாற்று குற்றம். ஆனால் வரலாறு மீண்டும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஒன்றுபட்டு அனைவரும் நிற்க வேண்டும். ஒன்றுபட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும்.
அப்படிச் செய்யத் தவறும் தலைவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும். உங்கள் நிதியுதவிகளில் தான் இவர்கள் தேரோட்டுகிறார்கள். நீங்கள் அங்கே சிரமப்பட்டு உழைத்து எம் மக்களுக்கும் உதவ வேண்டும் என்கிற மனதோடு இருக்கின்றீர்கள். புலம்பெயர் தமிழர்களின் நிதியை பயனுள்ளதாக்கின் ஈழத்தமிழர் நிதியம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த ஒரேயொரு நிதியம் போதும். அது ஜனநாயக பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதனூடாக ஈழ தமிழர்களுக்கு பல்வேறுபட்ட பொருளாதார விருத்தி, கல்வி என்பவற்றுக்கும் மற்றும் நெருக்கடிகள் வருகின்ற போதும் உதவி செய்யலாம். உள்நாட்டு அரசியல் தலைவர்களும் காலம் காலமாக உழைத்த பணம் வைத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் அரசியலை செய்யட்டும்.
பணத்தை சரியான முறையில் மேற்பார்வை செய்யவும், நிர்வகிக்கவும், ஆய்வு செய்யவும் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு நிதியம் ஒன்றை உருவாக்கினால் அனைத்து வெளிநாட்டு மக்களும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் நிதி வழங்க மக்கள் தயாராகவுள்ளனர். மேற்படி அனைத்து பின்னணியிலும் தமிழ் மக்கள் செயற்பட ஒரு காலம் வந்துள்ளது. அமைதியின்மையால் நாடு பிரிபட்டுப்போக வேண்டிய நிலை பிற்காலங்களில் ஏற்படுகின்ற போதும் தற்போதும் சில சாத்தியமான விட்டுகொடுப்புகளைசெய்ய தயாராக இருக்க வேண்டும். நீங்கள் துண்டு துண்டாக நின்றாலும் ஓரிடத்தில் நின்று ஒன்றாக போராடும் களத்தினை உருவாக்குங்கள். நாங்கள் போராட தயங்கினால் எங்களை நாங்களே கைவிட்டு விடுவோம். இந்தப் பின்னணியில் தமிழ்மக்கள் விரைவாக செயற்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது. இனி வரப்போகும் காலங்கள் வேகமாக விரிவடைந்து பின் தணிந்து போகலாம்.
அதற்கு தயாராக குறைந்தபட்ச சமஷ்டியை வைத்திருக்கும் நாங்கள் அதனடிப்படையில் செய்து காட்ட வேண்டும். அது சிங்கள மக்களின் மனதினை வென்றெடுக்க உதவும். ஏனெனில் சமஷ்டி கோரிக்கையை 1956 ஆம் ஆண்டு வரை தமிழர்கள் முன்வைக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு வரையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்வைத்திருந்த ஒற்றையாட்சி கொள்கையை ஆதரித்து வாக்களித்த மக்கள் நாங்கள். 1956 ஆம் ஆண்டு தான் தமிழரசுக்கட்சி அதாவது செல்வநாயகம் அவர்கள் முன்வைத்த சமஷ்டி கோரிக்கைக்கு ஆதரவளித்தோம். சமஷ்டி கோரிக்கையை 1949 ஆம் ஆண்டு செல்வநாயகம் முன்வைத்திருந்தாலும் 1956 ஆம் ஆண்டு தான் தமிழ் மக்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே ஒற்றையாட்சியின் கீழ் நாங்கள் தீர்வு காண சிங்களவர்களுடன் முற்பட்டோம் என்பதையும் அரசாங்கத்தில் 1948 ஆம் ஆண்டிலிருந்து பங்கெடுத்தவர்கள் என்பதையும் சிங்களமக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள், தமிழர்கள் சிங்கள அரசுடன் ஒத்துழைத்தார்கள். ஆனாலும் திரும்ப திரும்ப முரண்பட்டமையால் தான் சமஷ்டிகோரிக்கை என்ற ஒன்று வந்தது. மீண்டும் மீண்டும் அதற்கு பின்னாலும் முதுகில் குத்தியதால் தான் தனிநாடு தமிழீழம் கோரிக்கை வந்தது.
பின்பு, யுத்தத்தில் தோல்வியடைந்த பின்பு மீண்டும் சமஷ்டி கோரிக்கைக்கு அனைவரும் வந்திருக்கின்றோம். இதனடிப்படையில் தமிழ் மக்கள் போராடலாம். தமிழ் மக்களின் ஐக்கியம் மட்டுமே தமிழ் மக்களின் விடிவுக்கு வழி. தமிழ் மக்களின் ஐக்கியம் தமிழகத்தையும் சென்றடையட்டும். தமிழகம் இந்திய மத்திய அரசை வற்புறுத்தட்டும். சர்வதேசத்தை அனைத்து புலம் பெயர்ந்தவர்களும் உள்நாட்டவரும் வற்புறுத்த வேண்டும். வேகமாக அரசியல் மாறப்போகும் சூழலில் எங்களுக்குரிய பாத்திரத்தை வகித்து நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட வேண்டும். ஓய்ந்து ஒளிந்திருக்காமல் வரலாற்றின் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பது இக்கட்டான காலக்கட்டத்தை கடப்பதற்காக அரசியல் சாராத அறிவியல் பூர்வமான மதிப்பீடே ஆகும்.
தொகுப்பு - கார்த்திகா
ஐப்பசி 2022 நிமிர்வு இதழ்
Post a Comment