ஆபத்தான விளிம்பில் நிற்கும் தென்னமரவடி

 


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்று தென்னவன் மரபு அடி கிராமம். பாண்டியனின் மரபில் வந்தவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் இந்தஊருக்கு தென்னன் மரபு அடி என்ற காரணப்பெயர்  வந்தது என்கின்றனர் முதியோர். தென்னன் மரபு அடி என்ற சொற்கள் சேர்த்து  தென்னமரபடி என்று ஆகி, பிற்பாடு “தென்னமரவடி” எனத்  திரிந்து இன்று அவ்வாறே அழைக்கப்பட்டு வருகின்றது.

இது நீண்ட வடிவத்தில் அமைந்துள்ள திருக்கோணமலை மாவட்டத்தின் வடக்கு உச்சியில், முல்லைத்தீவு - திருக்கோணமலை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமாகும். திருக்கோணமலை நகரத்திலிருந்து புல்மோட்டை ஊடாக சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. தமிழ்தேசிய ரீதியாக பார்க்கும் பொழுது தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதியாகிய வடக்குக்கிழக்கின் இணைப்புபுள்ளியாக இந்த கிராமம் காணப்படுகின்றது. இதனால் நீண்ட காலம் தொட்டு அரச பேரினவாதிகளால் பல்வேறுபட்ட சவால்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அரச கட்டமைப்பு அடிப்படையில் நோக்கும் பொழுது, திருக்கோணமலை மாவட்ட செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. தென்னவன் மரபு அடி கிராமம் தனியான கிராம சேவகர் பிரிவாக காணப்படுகின்றது. குறித்த கிராமத்தில் தரம் ஐந்து வரை கல்வி கற்க கூடிய பாடசாலை காணப்படுவதுடன், குடிநீர் வசதிகள், மின்சாரம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்தை பொறுத்தவரை தென்னவன் மரபு அடி கிராமத்திற்கென விசேட பேருந்துகள் காணப்படாத போதிலும், முல்லைத்தீவு பேருந்து மூலம் குறித்து கிராமத்தை அடைய முடிகின்றது. 

புவியல் ரீதியான பார்வையில் திருக்கோணமலை இயற்கை துறைமுகத்தை போன்றதொரு அமைப்பை கொண்ட பகுதியாக இது காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கந்தசாமி மலை அமைந்துள்ள பகுதி கடலுக்குள் நீண்டு, மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட பகுதியாக காணப்படுகின்றது. அத்துடன் புல்மோட்டை - கொக்கிளாய்தொடு பகுதிகள் உள்ள குடா பகுதிகளின் வாயில் கதவுகளாக தென்னவன் மரபு அடி காத்து நிற்கின்றது. குறித்த பகுதியில் மீன் பிடிதுறைமுகம் ஒன்றும் யுத்தத்துக்கு பின்னர் நிறுவப்பட்டுள்ளது. எனினும் குறித்த துறைமுகத்தை தமிழ் மக்கள் பாரிய அளவில் பயன்படுத்துவது இல்லை என்பது கண்கூடாக தெரிவதுடன், அருகில் உள்ள சிங்கள கிராமத்து மக்கள் தான் குறித்த துறைமுகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் மூன்றாம் தேதி இடம்பெற்ற படுகொலை உட்பட இக்கிராமத்தை சூழ உள்ள பகுதிகளில் 3 தடவைகள் பாரிய அளவில் படுகொலைகளும், இடப்பெயர்வுகளும் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக குறித்த கிராமத்தில் இருந்த மக்கள் திருக்கோணமலையின் நகரப்பகுதி, தம்பலாகமம், வடக்கின் விஸ்வமடு போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து குடியேறி உள்ளனர். தொடர்ச்சியான படுகொலைகளுக்கு உட்பட்டமையினால் குறித்த மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்னரும் கூட கிராமத்துக்கு திரும்பி வருவதை தவிர்த்து வருகின்றனர். எனினும் சுமார் 80 தொடக்கம் 100 குடும்பங்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அடங்கலாக தென்னவன் மரபு அடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் தற்சமயம் தென்னவன் மரபு அடி கிராமத்தை கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரித்து பதவிஸ்ரீபுர எனப்படும் திருக்கோணமலையின் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இணைத்து அதனை அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வடக்குக்கிழக்கு நிலத் தொடர்பு துண்டிக்கப்படுவதுடன், தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியின் நிலத்தொடர்ச்சி என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும். மற்றும் இந்த அரசின் செயற்பாட்டுக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு, இதனை எதிர்த்து வருகின்றனர். 

தற்சமயம் குறித்த செயற்பாடு தொடர்பில் எவ்வித வெளிப்பாடான செயற்பாடுகளும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வெளிக்காட்டப்படுகின்றது. எனினும் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழர் தேசத்தின் நிலத்தொடர்ச்சியை பாதிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மீள் குடியேற்றத்தின் போது குறித்த கிராம மக்களின் பல வயல் நிலங்கள் அயல் சிங்கள கிராம மக்களாலும், புல்மோட்டை இஸ்லாமியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதனால் குறித்த பகுதியில் காணப்பட்ட பலநூறு ஏக்கர் விவசாய நிலம் தமிழர்களின் கையில் இருந்து மாற்று இனத்தவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கிராமத்திற்கு திரும்பி வராமையினால் கிராமத்தில் இளம் தொழில் முனைவர்கள் குன்றி காணப்படுவது பெரும் குறைபாடாக உள்ளது.

வடக்கு கிழக்கு இணைப்பை தொடர்ச்சியாக பேணுவதற்கு இந்த கிராமத்தைக் காப்பாற்ற வேண்டியது அவசியமான செயற்பாடாகும். இதன் அடிப்படையில் திருக்கோணமலை மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை புரியக்கூடிய இளம் சமுதாயத்தினரை குறித்த கிராமத்தில் குடியேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது மறுக்க முடியாத உண்மையாக காணப்படுகின்றது.

ஹயன்-

ஐப்பசி 2022 நிமிர்வு இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.