தற்சார்பு உணவுப் பண்பாடு எம்மை வழிநடத்த வேண்டும்

 


ஐப்பசி 14 உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை விவசாயத் திணைக்கள பண்ணை ஒலிபரப்புச் சேவையின் விவசாய வானொலி சஞ்சிகை நிகழ்ச்சியான களமும் வளமும் நிகழ்சிக்கு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா  (தகைசால் பேராசிரியர் - உப்சலா பல்கலைக்கழகம் - சுவீடன்) அவர்கள் வழங்கிய கருத்துப் பகிர்வுகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.  

சென்ற ஆண்டு இதே காலத்தில் உலக உணவு தினத்துக்கான சிந்தனைகளை உங்கள் முன் வைத்த போது அந்நேரத்தில் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த மூன்று  C   க்கள் பற்றி பேசினோம். அதாவது கோவிட் நோய், தொடர்ச்சியாக உணவு உற்பத்க்கு நெருக்கடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற காலநிலை மாற்றம், உலகத்தில் வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் இவை மூன்றும்  Covid - Climate - Conflict என ஆங்கிலத்தில்  C   ஐ முதல் எழுத்தாகக் கொண்ட மூன்று  C   க்கள் எனப் பேசினோம். எமது உணவை, உணவு வழங்கலை, உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்ற இம் மூன்றோடும் Corporates என்று சொல்லப்படுகின்ற பெரு வணிக நிறுவனங்களையும் நான்காவது  C   ஆக சேர்த்துக் கொள்ளலாம் என்பதையும் நினைவுபடுத்தி இருந்தேன்.

இன்று ஓராண்டுக்கு பின்னர் இப்போதும் கோவிட் தொடர்கிறது.  எமது சூழலை வாழ முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கின்ற காலநிலை அச்சுறுத்தலை நாம் தொடர்ந்து எதிர்கொள்கிறோம். அதனைக் கவனிக்கக் கூட நேரமில்லாமல் நாங்கள் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறோம். உலகத்தையே உலுப்புகின்ற வகையில் உக்ரேனிய நாட்டில் ஏற்பட்டிருக்கிற யுத்தம் உணவு விலை அதிகரிப்பை, உர விலை அதிகரிப்பை, எரிபொருள் விலை அதிகரிப்பை பெரிய அளவில் உலக மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அச்சுறுத்தலும் ஓராண்டுக்கு முன் இருந்ததை விட அதிகரித்திருக்கின்ற இன்றைய சூழலில் நான்காவதான பெரு வணிகங்கள் எமக்கான உணவுத் தொகுதியை, உணவு வழங்கலை, உணவுப் பாதுகாப்பை தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சி இன்னும் சில படிகள் மேலோங்கி இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

உணவு சார்ந்த இந்த நெருக்கடி சாதாரண உள்நாட்டு நெருக்கடியாக சென்ற ஆண்டு காணப்பட்டதும், உலக தேசங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான நட்புறவு  தொய்வடைந்து எதிர்ப்புநிலை பெருமளவாக அதிகரிக்கின்ற சூழலில்,  இந்த ஓராண்டு காலத்தில் மிகத் தீவிரமான உணவு விலையேற்றம் மட்டும் என்றில்லாமல், உணவுப் பற்றாக்குறை, உணவு கிடைக்காத நிலை, எரிபொருள் நெருக்கடி இறக்குமதிக் கொள்கையில் இறுக்கம் எல்லாம் சேர்ந்து உலக மட்டத்திலான உணவு நெருக்கடி ஒன்றினை இன்று இலங்கை மக்களாகிய நாங்களும் எதிர்கொண்டிருக்கிறோம்.

அதே வேளையில் உர இறக்குமதித் தடை காரணமாக சென்ற ஆண்டு பெரும்போக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டதும், பின்னர் பல்வேறு நெருக்குவாரங்களின் காரணமாக செயற்கை உரங்கள் மீளவும் இறக்கப்பட்டுப் பெருந்தோட்டப் பயிர்களுக்கு மட்டும் உரம் வழங்க முடியும் என்கிற நிலையும் ஏற்பட்டிருந்தது. அக் காலப்பகுதியில் சீனாவிலிருந்து இயற்கை வழியில் பெறப்பட்ட உரங்களைக்  கொண்டு வந்து பயன்படுத்த முடியுமா என்கிற வாதப்பிரதிவாதங்களும், பின்னர் உரக் கப்பல்கள் வந்து போன கதைகளும் எல்லோரும் அறிந்ததே. அதே வேளை ‘நானோ யூரியா’ (nano urea) என்ற திரவ யூரியாவை கொண்டு வந்து எம்மிடையே ஏற்படுத்தப்பட்ட குழப்ப நிலைகளை எல்லாம் நாம் சந்தித்தோம்.

எமது வரலாற்றை பார்த்தோமானால் இன்றைய உணவு நெருக்கடி புதிய ஒன்றல்ல. சுதந்திரம் அடைந்த பின்னரான காலத்தில் 1974 ஆம் ஆண்டு இன்றுள்ளது போன்றே முன் எப்போதும் காணாத ஒரு உணவுப் பற்றாக்குறை, உணவு நெருக்கடி, உணவுப் பஞ்சம் என்பவற்றை இலங்கை கண்டது பலருக்கு நினைவிருக்கலாம். அதன் பல்வேறு பரிமாணங்களை அன்று இளையோர்களாக நாங்கள் கண்டோம். அனுபவித்தோம். பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யவெனப் புதுப்புது வழிகளையும் அன்றைய அரசு முன்வைத்திருந்தது.

1974 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவிலேயே மிகவும் உன்னதமான முறையில் உணவைப் பெற்றுக் கொண்ட மக்கள்,  உலகத்தால் பேசப்படக் கூடிய ஆரோக்கிய நிலையில் வாழ்ந்த சமூகம், கல்வியில் மேம்பட்ட நிலையில் இருந்த நாடு என்ற பல்வேறு நற்பெயர்களை இலங்கை பெற்றிருந்தது. அந்நேரம் நடைமுறையில் இருந்த சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகளின் நடுவே நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் சில நடைமுறைக் குளறுபடிகள் ஏற்பட்டன. அதையும் விட பெருமளவில் தேயிலை, தென்னை மற்றும் ரப்பர் எனும் பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியில் பொருளாதாரம் தங்கியிருந்தது. தன்னுடைய வரவுக்கு மிஞ்சிய செலவில் உணவை இறக்குமதி செய்ததனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி பற்றாக்குறை நிலவியது. அந்நேரம் மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. மரவள்ளி, இறுங்குப் பயிர்ச் செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற தேசிய மட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சோர்கம் (sorghum) என்று அழைக்கப்படுகின்ற தானியத்தை உற்பத்தி செய்து அதனை மாவுடனும் உணவில் ஒரு அங்கமாகவும் உட்கொண்டு வாழ்ந்தோம். அந்தநேரம் நிலைமையை சமாளிப்பதற்காக 40000 தொன் அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. அது பெரிய செய்தியும் ஆகியது.

1974 உணவு நெருக்கடிக்குப் பின்னான ஐம்பது ஆண்டு காலத்தை மீள நோக்கினோமானால், அன்று ஏற்பட்ட நெருக்கடியினை ஒத்த வகையில் இன்று நாட்டினது வருமானம், இறக்குமதிச் செலவு இவை இரண்டுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற வித்தியாசம் நாட்டில் மீளவும் மிகத் தீவிரமான உணவு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றமையை நாங்கள் அவதானிக்கலாம்.

இரண்டு வெவ்வேறான பொருளாதாரக் கொள்கைகளின் கீழ் இறுதியில் ஒரே வகையான உணவு நெருக்கடியினை நாம் சந்தித்திருக்கிறோம் என்பது இங்கே கவனத்துக்குரியது. முன்னையது பொதுவுடைமைத் தன்மை கொண்ட ஒரு அரசியல் கோட்பாடு எனக் கொண்டோமானால்,  இரண்டாவதினை முதலாளித்துவக் கொள்கையாகவே நாம் கொள்ள வேண்டும். 1977 ஆம் ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கோட்பாடு,  முற்றுமுழுதாக திறந்த சந்தை தாராளமயமாக்கப்பட்ட சந்தை என்ற வகைப்பட்டது. இரு வேறுபட்ட பொருளாதாரக்  கொள்கைகளும் ஒரே  உணவு சார்ந்த நெருக்கடியில் இந்நாட்டினைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன என்று சொன்னால் எமக்குரிய பிரச்சனை கொள்கை, கோட்பாடுகளை வகுப்பதில் உள்ள சிக்கலா? அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலா? அவற்றை முகாமைத்துவம் செய்வதில் எங்களுக்கு பற்றாக்குறைகள் உண்டா? இவற்றை நாம் இன்று மீளாய்வு செய்து பார்க்க வேண்டும்.

உலக மட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை விட இன்னும் பலகோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அல்லற்படுகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  உணவுப் போதாமையால் உலகில் 82 கோடி மக்கள் தவிக்கிறார்கள். 230 கோடி மக்கள் வாராந்தம் தமது உணவுத் தேவையை சமாளிக்க முடியாதவாறு இருக்கிறார்கள். சோமாலியா நாட்டின் இவ்வாரம் அறிவிக்கப்பட்ட தகவலின்படி இன்னும் ஒரு வாரத்தில் அங்கே உணவில்லாமல் சிறு குழந்தைகள் உட்பட மக்கள் பலரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு பெருமளவில் இடப்பெயர்வும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மோசமான நிலை இலங்கை மக்களுக்கு ஏற்படாவிட்டாலும்  இலங்கையின் வறிய மாவட்டங்களின் பட்டியலில் இரண்டாவதாக இருக்கின்ற முல்லைத்தீவில் 60 வீதமான வீடுகளில் உணவு போதாமையால் அல்லல்படுகிறார்கள். பலர் வறுமை கோட்டுக்கு கீழே சென்று விட்டார்கள் என்று ‘பிள்ளைகளை காப்பாற்றுவோம்’ (save the children) என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.  உலக உணவு தினத்தின்போது உணவுப் பிரச்சனையை வெறுமனே வழங்கலில் உள்ள பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. உணவு உற்பத்திக்கு வேற்று நாடுகளில் மட்டும் தங்கியிருக்காமல் அதாவது உணவு இறக்குமதியை நம்பி காத்திருக்காமல், பொருளாதார நெருக்கடியின் போதும் உணவுத் தேவையை சமாளிக்கும் நிலையை நாம் அடைய வேண்டும் என்றால் தற்சார்பு மிக்க உணவுத்தொகுதியை வளர்த்தெடுத்து அதனை செயற்படுத்துகின்ற சமூகமாக எம்மை வழிநடத்த வேண்டும் என்ற உண்மைகள் தெட்டத் தெளிவாகின்றன.

உணவு உரிமை, உணவு இறைமை அல்லது உணவு இறையாண்மை என வெவ்வேறு சொற்பதங்களால் குறிக்கப்படும் கருத்துநிலை பற்றி இவ்விடத்தில் பேசுவது பொருத்தமாய் இருக்கும். எமக்கு உணவு போதாமை எனும் நிலை ஏற்படும் போது அந்த உணவு போதிய அளவில் சரியான தரத்தில் கிடைக்க வேண்டும் என்பது எமக்கான உரிமை மட்டுமல்ல அதனை உறுதிப்படுத்துவதே உணவு பாதுகாப்பு (food  security) என அரசுகளும், பன்னாட்டு உதவி நிறுவனங்கள் பேசிவருவது உண்மை. ஆனாலும், வெறுமனே உணவின் அளவு, தரம் என்பவற்றுக்கு அப்பால், வேறொரு நிலைப்பாடும் உள்ளது.  

நாம் எமக்கான உணவினை  எவ்வளவில் உட்கொள்ள வேண்டும் என்ற விபரங்களைத் தாண்டி எந்த உணவை நாங்கள் உண்ண வேண்டும் என்பதும் அந்த உணவு யாரால் உற்பத்தி செய்யப்படுவதை நாம் விரும்புகிறோம்,  என்ன வகையில் அது உற்பத்தி செய்யப்பட  வேண்டும் என்ற கரிசனைகளும் . உணவை உட்கொள்ளும் அதனை வாங்கும் நுகர்வோர் மத்தியில் ஏற்பட வேண்டியது இங்கே அவசியமானது. விலை கொடுத்து வாங்கும் மக்கள் எது வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்வார்களாக இருந்தால் அதனை உற்பத்தி செய்து விளைவித்து வழங்குவதற்கு எல்லா நாடுகளிலும் உள்ளது போல் இங்கும் விவசாயிகள் இருப்பார்கள்.

நாம் எதை உண்ண வேண்டும் என்பதனை வேறு யாரோ தீர்மானிக்கும் இடத்துக்கு வேகமாக சென்று சிதறிப் போகாமல், இந்த உணவை முடிந்த அளவு இயற்கைக்கு ஏற்ற வகையில், எம்முடைய இயற்கை வளங்களுக்கு ஏற்ற வகையில், எங்களுடைய பாரம்பரியத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக, நச்சுப் பொருள்கள் கலக்காத உணவாக உட்கொள்ள வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கும் வல்லமையையும் உரிமையினையும் எமது கையில் வைத்துக் கொள்வதனையே உணவு இறையாண்மை என்கிறோம்.

உணவு சார்ந்த விடயத்தில் கொஞ்சம் தீவிரமாக சிந்திக்கக் கூடிய மக்களாக நாம் மாற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. நிபுணத்துவம், தொழிநுட்பம், புதிய பயிர்கள், புது வர்க்கங்கள், ஏற்றுமதி, அதனால் பெரு வருமானம் என்பவற்றை எமக்கு அறிமுகம் செய்வதற்கு பலரும் வருகிறார்கள், வந்து கொண்டும் இருப்பார்கள்.  

எம்முன்னால் வைக்கப்படும் ஒவ்வொரு தெரிவுகளையும் விவசாயிகளான நாங்களும் விவசாய உற்பத்திகளை உணவாக உட்கொள்ளும் மக்களாகிய நாங்களும் அவை ஒவ்வொன்றையும் சரியான முறையில் மதிப்பீடு செய்து முடிவுகளை எடுத்தோமானால் எமக்கு இது வேண்டும், இது வேண்டாம், என்று சொல்லக்கூடிய பலத்தை நாம் எமது கையில் வைத்துக் கொண்டோமானால் நாம் வலுமிக்க சமூகமாக பெரிய நெருக்கடிகளையும் சமாளிக்க கூடியவர்களாக வாழ்ந்து கொள்ளலாம். இந்த உரிமையை வேறு யாரிடமோ அல்லது தமது இலாபத்துக்காக உழைக்கும் ஒரு நிறுவனத்திடமோ அல்லது ஒரு வர்த்தக உற்பத்தியாளரிடமோ கையளித்து விட்டோமானால் நாங்கள்  மீளவும் இந்த நெருக்கடி நிலையை தொடர்ந்தும் சந்தித்துக் கொண்டே இருப்போம்.

ஒவ்வொருவரும் தத்தமது மாவட்டங்கள், நிலப்பரப்புகள், கிராமங்கள் அவற்றுக்கு உகந்த வகையிலான உணவை உற்பத்தியை அவரவர் மண் நிலத்தன்மைக்கு ஏற்ற வகையில் விவசாயத்தை மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் மண் நலத்தையும் மண் வளத்தையும் காப்பாற்ற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

கடந்தவாரம் நான் சுவீடனில் தங்கியிருந்த போது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளில் அன்று மேலோங்கி இருந்த கூட்டுறவு முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பதனை ஆய்வு செய்த அறிஞர் வந்திருந்தார். இங்கும் ஒரு காலத்தில் கூட்டுறவு முயற்சிகள் இருந்தன. பின் தாராளவாத சிந்தனை கொண்ட போக்கின் போது அவை மெது மெதுவாக வலுவிழந்து  பெரும்பாலான இடங்களில் அற்றுப் போயிருக்கின்றமை நாம் நன்கறிந்ததே.

அங்கு சோவியத் கம்யூனிச காலத்துக்கு பின்னான நிலையில் பழைய கூட்டுறவு முறையை எவ்வாறு மீளக் கொண்டு வரலாம் என அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பது குறித்த அடிப்படை விடயங்களை அந்த அறிஞர் தெளிவுபடுத்தி இருந்தார். ஆகக் குறைந்தது விவசாயிகளின் உற்பத்திப் பண்டங்களைச் சந்தைப்படுத்தும் வழிமுறைகளிலாவது கூட்டுறவு  வகையில் இயங்குவதன் மூலம் கிடைக்கும் பல இலாபங்களை இந்த நாட்டு விவசாயிகள் விளங்கிக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்த போது அதில் எமக்கும் சில நல்ல பாடங்கள் இருக்கின்றன என்பதை  நான் புரிந்து கொண்டேன்.  

எனவே உள்ளூர் மட்டத்தில் உள்ளூர் சுழற்சி வட்டமான ஒரு உணவுத் தொகுதியையும்,  தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்தியையும், நல்ல ஆரோக்கியமான பாரம்பரியத் தன்மை கொண்ட உணவை வழங்குகின்ற விவசாயிகளையும் குடிமக்களாகிய நாம் ஆதரிக்க வேண்டும். எந்த உணவு எமக்கு வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவ் உணவுக்குரிய பெறுமதியை தெரிந்து அதற்கேற்ற விலையினைக் கொடுத்து வாங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும்  சொல்லக்கூடிய நுகர்வோராக நாம் இருந்தோமானால் இரண்டு பகுதியினரும் சேர்ந்து எமக்கான ஒரு நல்ல உணவுத்தொகுதியை வளர்க்க முடியும். அதுவே இன்றைய உலக உணவுத் தினத்துக்கான செய்தியாக அமைகிறது.

கூட்டாக சிந்திப்போம், கூட்டாக கொள்கைகளை வகுப்போம். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்.

தொகுப்பு: துருவன் 

கார்த்திகை 2022 நிமிர்வு இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.