சீனாவின் இப்போதைய நகர்வுகள்


கடந்த ஒரு தசாப்தமாக  சீன - இலங்கை உறவு இலங்கைக்குள்ளேயும், பிராந்திய மட்டத்திலும்  சர்வதேச மட்டத்திலும் சர்ச்சை மிக்கதாக மாறி வருகின்றது. தேசிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இலங்கை சீன உறவானது  நிராகரிப்பும் பின்பு அங்கீகரிப்புமாக மாறிமாறி இரு கட்டங்களைத் தாண்டி வந்து நிற்கிறது. மீண்டும் அம்பாந்தோட்டை சார்ந்து இருநாட்டு அரசியல் பங்காளர்களும் இணக்கமான விடயங்களில் இயங்க ஆரம்பித்துள்ளனர். எனினும் இப்பங்காடலானது முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இன்னும் பரிணமிக்கவில்லை. அது சார்ந்த கடும் வாதப்பிரதிவாதங்களை இலங்கை அரசாங்கத்தினர் இன்று எதிர்கொண்டுள்ளனர். இது சார்ந்த நிலை எப்படி அமையப்போகின்றது என்பதனை நோக்குவதே இக்கட்டுரையின் அவசியப்பாடாகும்.

சீன - இலங்கை நட்புறவானது மிக நீண்டது. வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டது. கலாச்சார நெருக்கம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகமாக கொண்டது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இவ்வுறவு மிகவும் நெருங்கியதாக 2005-2015 வரையான காலப்பகுதியிலேயே நிலவியது. மகிந்த ராஜபக்~ ஜனாதிபதியான பின்னர் வளர்ச்சியடைந்த இவ் உறவானது பிரிக்கப்பட முடியாத நிராகரித்து விட்டு இயங்க முடியாத அரசியல், பொருளாதார, இராணுவ உறவைக் கொண்டுள்ளதாக பரிணமித்துள்ளது. மகிந்த ராஜபக்~வின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் ஏற்பட்ட இன முரண்பாட்டிற்கான ஆயுதப் போராட்ட காலத்தை சீனா சரிவரக் கையாண்டு இலங்கை மீது செல்வாக்கு செலுத்திக் கொண்டது. அது நிச்சயமாக இரண்டு வழிமுறைகளைக் கொண்டதாக அமைந்தது.

1. இலங்கைக்கு இராணுவரீதியான உதவிகளையும் ஒத்துழைப்பினையும் வழங்குவதனூடாக இலங்கையை சீனாவில் தங்கியிருக்க வைத்தல்.
2. பொருளாதார ரீதியில் இலங்கை உட்கட்டமைப்பினை வளர்ச்சியடையச் செய்வதுடன் எக்காலத்திலும், இலங்கையின் எந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்திலும் சீனாவுடனான உறவை உறுதி  செய்து கொள்வதற்கான ஒத்துழைப்பு திட்டங்களை ஏற்படுத்தல் என்பனவாகும்.

இவற்றில் முதலாவது வழிமுறை போர் முடிந்த கையோடு மட்டுப்படுத்தப்படும் என்பது சீனாவுக்கு நன்கு தெரியும். அதனால் அக்காலப்பகுதிகளில் வேறு நாடுகளில் தங்கியிருக்காத அளவுக்கு ஆயுத தளபாடங்களை இலங்கைக்கு சீனா கைமாற்றியது. போரின் வெற்றிக்கு தனக்கும் பங்கிருக்கென்பதை வெளிப்படுத்தியதுடன் போருக்கு பிந்திய இலங்கை மீதான சர்வதேசத்தின் நெருக்கடியை இராஜதந்திர ரீதியில் சமாளிக்க பெரும் வகையில் உதவியது. அதன் மூலமும்  இலங்கை சீன உறவு மேலும் நெருக்கமானது. அதாவது இலங்கையை மேலும் தன்னில் தங்கியிருக்கச் செய்தது. இலங்கையை  போரின் போதும்  போருக்கு பின்பும் சீனாவின் ஒத்துழைப்பிலே தங்கியிருக்க வைத்தது சீனாவின் அரசியல் இராணுவ தந்திரத்தின் ஒரு வெற்றியென்றே கொள்ளவேண்டும்.

போரை வெற்றி கொள்ளவும் அதன் பின்பான சர்வதேச நெருக்கடிகளை கையாளவும் சீனாவின் ஒத்துழைப்பினை நிராகரிக்காத அன்றைய இலங்கை ஆட்சியாளர்களும், அதன் எதிர்கட்சிகளும், பௌத்த மகாசங்கங்களும் ஏன் இப்போது சீனாவுக்கு எதிராக செயல்பட்டுகின்றன? சீனாவின் இராணுவ உதவிகளால் தான் இலங்கை அரசாங்கம் இறுதிக்கட்ட யுத்தத்தினை வெற்றி கொண்டது. இந்தியா, அமெரிக்கா எல்லாம் இரண்டாவது பட்சமான உதவியாளர்களாகவே இலங்கை ஆட்சியாளர்களாலும் உலக ஆய்வாளர்களாலும்  கருதப்படுகின்றன.

பொருளாதாரத்தை பொறுத்தவரை சீனா உலகளாவிய ரீதியில் முதல்தர பொருளாதார சக்தியாகவே இன்றும் உள்ளது. உற்பத்தி, சந்தை, வர்த்தகம், நுகர்வு எதிலும் சீனாவே முதன்மை நாடாக விளங்குகின்றது. 2015 ஆம்  ஆண்டுத் தகவலின் படி சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 7 சதவீதமாகவும் அமெரிக்காவின் வளர்ச்சி 2 சதவீதமாகவுமே  உள்ளதென்பது அதனை தெளிவுபடுத்துகிறது. 2016 இன் கடைசிக் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் மெதுவாகவும், உறுதியுடனும் நகர்வதாகவும்  2040 அளவில் சீனாவின் அரசியல் பலம் மற்றும் இராணுவ வலு அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது பலவீனமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் மேற்குலக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையினால் சீனாவை நோக்கிய உலகம் ஒன்று தயாராகி வருகின்ற சந்தர்ப்பத்திலேயே இலங்கை சீனாவுடன் நெருக்கமடைந்தது. பனிப்போர் முடிந்த பிற்பாடு மேற்குலகம் இலங்கையை கைவிட்டு இந்தியாவுடன் நட்பைப் பேண முற்பட்டது. ஏறக்குறைய இலங்கை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது எனலாம். அப்போது தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும் சீனாவுடனான நட்பை அதிகம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பினர். அதன் பிரகாரமே  இலங்கை – சீனா நட்புறவு சிறிமாவோ பண்டரநாயக்காவின் ஆட்சிக்கு பின்னர் மீண்டும் வலுப்பெறத்தொடங்கியது. மகிந்த ராஜபக்~ ஜனாதிபதி ஆன பின்பு அத்தகைய உறவு நிலை இந்துசமுத்திரம் சார்ந்தும், இந்தியா சார்ந்தும்  சீனக் கொள்கைகளினூடாக மேலும் வலுவடைந்தது.

சீனாவைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையை காலம் காலமாக ஆளலாம் எனக் கருதிய ராஜபக்ஸவின் திட்டம் மேற்கு நாடுகளாலும் இந்தியாவாலும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இலங்கை சீனா நட்புறவு தோற்றதென்பதை விட ராஜபக்ஸவின் அரசியல் அதிகார அளவே தோற்றது என்று கூறலாம். ஏனெனில் தேசிய அரசாங்கம் சீனாவுடனான நட்பினை தொடர்ந்து பேணியதுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம் மட்டுமின்றி 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சீனாவின் கைத்தொழில் வலயம் ஒன்றினை நிறுவுவதற்கும் கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை மேற்கொள்ளவும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. பல்வேறுபட்ட நெருக்கடியைக் கடந்து ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நிறைவடைந்துள்ளது. ஏறக்குறைய 1150 ஏக்கர் நிலத்தை முதற்கட்டமாக சீனாவுக்கு கைமாற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் தேசிய அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. ஆனால் சீனாவை இலங்கையுடன் மிக நெருக்கமடையச் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தற்போது சீனாவை எதிர்த்து போராடும் உணர்வோடு ஏன் செயற்படுகின்றார்?  இதனை தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை நோக்குவதன் மூலமே விளங்கிக் கொள்ள முடியும்.

 தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் சீனாவுடனான ஒத்துழைப்பினை உதறித்தள்ளியது. குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தினை கைவிடுவதாக அறிவித்தது. தம்மை ஆட்சியில் அமர்த்தியவர்களை திருப்திப்படுத்துவதே இதற்கெல்லாம் காரணமாகும்.
 பின்னர் ஆட்சி அதிகாரம் பலமடைய ஜனாதிபதியும், பிரதமரும் சீனாவுக்கு விஜயம் செய்தனர்.
 கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை நிதி நகரத்திட்டம் என பெயர் மாற்றத்துடன் மேற்கொள்வதென  தேசிய அரசாங்கம் உடன்பட்டது.
 தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இலங்கைக்கான சீனத்தூதுவரான ஜீஜியாங்லியாங்க்கும் இடையேயான  முறுகல்.
 சீனத்தூதுவருடன் ஜனாதிபதி நேரடியாக சென்று உரையாடல்.
 2017 ஜனவரி  முற்பகுதியில் அம்பாந்தோட்டையில் 1150  ஏக்கர் காணி சீனாவுக்கு வழங்க ஒப்புதல்.
 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கு அரச பிரதிநிதியாக விஜயம்.
 முன்னாள் ஜனாதிபதி சீனாவிலிருந்து வருகை தந்த பின்பு சீனாவுக்கு எதிரான போராட்டத்தையும் அறிக்கைப் போரையும் ஒருங்கே மேற்கொண்டு வருகின்றார்.

மேற்குறித்த சம்பவங்கள் தொடராக நிகழ்ந்து முடிந்துள்ளன. இதில் முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கையினை முதலில் பார்ப்போம்.

தேசிய அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது இலகுவான விடயமல்ல என்பது முன்னாள் ஜனாதிபதிக்கு நன்கு தெரியும். காரணம் தேசிய அரசாங்கத்தின் காவல்காரனாக நல்லாட்சி இயங்கவில்லை. மாறாக அமெரிக்காவும் இந்தியாவுமே தேசிய அரசாங்கத்தின் முக்கிய காவலர்கள். அத்தகைய காவலர்கள் சீனா மீதான எதிர்புணர்வினாலும் இலங்கை சீன உறவு இந்திய –அமெரிக்கா நலன்களை பாதிக்கும் என்பதினாலுமே தேசிய அரசாங்கத்தை 2015 இல் அமைத்தனர். இதனாலேயே எதிர்கட்சி தலைமையையும் தமிழருக்கு வழங்கினர். அதன் பின்பான இலங்கையின் விடயங்கள் அனைத்தையும் இந்திய – அமெரிக்கக் கூட்டு நிறைவேற்றி வருகின்றது.

ஆனால் தேசிய அரசாங்கத்தின் பிரதமர் இந்திய – அமெரிக்கா கூட்டணியின் போக்கினை நன்கு புரிந்ததுடன் தேசிய அரசாங்கத்தையும் தென் இலங்கையையும் பாதுகாக்கும் பொறுப்புடன் செயற்பட முனைகின்றார். ஒரு வகையில் இந்திய – அமெரிக்கக் கூட்டை கையாண்டு கொண்டு சீனாவுடன் நட்புக்கரம் பற்றிக் கொள்ள விரும்புகின்றார். அதற்கு வலுவான காரணம் சீனர்களின் பொருளாதார பலமும் ஒத்துழைப்பும் கேள்வி கோரலின்றிய கடன் கொடுப்பனவுகளுமே ஆகும். மேலும், இலங்கையின் உட்கட்டுமான வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிய, பங்காற்றிவரும் நாடு சீனா என்பது மட்டுமன்றி இந்திய- அமெரிக்க கூட்டுக்குள் முழுமையாக இலங்கை விழுங்கப்படாதிருக்க வேண்டுமாயின் சீனா பக்கபலமாக அமைதல் வேண்டும் என்பதுவும் காரணமாகும்.

இதனை நன்கு புரிந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுடன் நெருக்கமான உறவுக்கு உரியவராக மகிந்த ராஜபக்சவை காட்டுவதன் மூலம் ஒரு போர்க்கால அரசியலை செய்து கொள்ள முயன்றார். இதனை முறியடிப்பதும் இந்திய – அமெரிக்க கூட்டின் ஒத்துழைப்பை பெறுவதுமே மகிந்த ராஜபக்~வின் தற்போதைய குறிக்கோளாகும். என்னதான் இந்நாள் ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய அரசாங்கம் என்று பறை சாற்றிக் கொண்டிருந்தாலும், அவர்களின் நடவடிக்கைகள்  இலங்கைத் தேசியம் என்ற கோணத்திலும் பிரதமரதும், ஜனாதிபதியினதும் இருப்புக்கும் கட்சிசார் நலன்களுக்கும் உட்பட்டதாகவே அமையும்.

மனித உரிமை மீறல் சார்ந்து ஏற்பட்ட அகௌரவத்தை கழுவுவதற்கான உத்தியாகவே பிரதமர் - ஜனாதிபதியின் தேசிய அரசாங்கம் அமைந்தது. இலங்கையின் தேசிய நலனுக்காக அதிலும் தென் இலங்கையின் தேசிய இலாபத்திற்கான போரை உள்நாட்டில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து நிகழ்த்தி விட்டு அதற்கு திட்டமும் உபாயமும் போட்டுக் கொடுத்துவிட்டு, சர்வதேசத்தையும் பயன்படுத்திவிட்டு அதிலிருந்து வெளியேறி அமைத்ததே தேசிய அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதியையும் அவரது காலத்தில் தமிழர் மீது நிகழ்த்திய மனித உரிமை மீறலையும் மூடி மறைப்பதற்கும் ஏற்படுத்தப்பட்டதே தேசிய அரசாங்கம்.

தேசிய அரசாங்கம் அல்லது அதன் காவலர்களான இந்திய – அமெரிக்கா கூட்டு தமிழர்களுக்கு ஏதாவது அதிகாரம் வழங்கிவிடுமோ என்பதனை கண்காணிப்பதற்காக ஒரு கூட்டு எதிரணி அமைக்கப்பட்டது. உலக ஜனநாயகத்தில் இல்லாத ஓர் அதிசயம் இலங்கையில் 2015 இல் நிகழ்ந்தது. இரண்டாவது பெரும்பாண்மையுடன் ஒர் அணி வெளியே காணப்பட மூன்றாவது பெரும்பான்மை எதிர்கட்சியாக விளங்குகிறது. இதுவும் இந்த தேசிய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பும், ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் இலங்கை விவகாரமும் ஒரே நேர் கோட்டில் இயங்கும் இலங்கை தேசியமாகும்.

அம்பாந்தோட்டையில் ஏற்பட்ட சீன- இலங்கை நெருக்கடியை கையாள தேசிய அரசாங்கத்தின் பிரதமரே முன்னாள் ஜனாதிபதியை சீனாவுக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ஒரு வாரம் சீனாவில் இருந்து சீன - இலங்கை உறவை சரி செய்து விட்டாரா அல்லது தனது மீள் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினரா என்பதே பிரதான கேள்வியாகும். நிச்சயமாக இந்திய – அமெரிக்கக் கூட்டினை கையாள வேண்டும். என்கின்ற உத்தியை முன்னாள் ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.

அதனால் தான் சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் 99 வருடத்திற்கு வழங்குவது ஆக்கிரமிப்பு செயல் எனவும், சீன - இந்திய நீர் மூழ்கிகள் திருட்டுத்தனமாக இலங்கைக்குள் பிரவேசிக்கின்றன எனவும், சீனா எமக்கு தேவைதான் அதற்காக இலங்கையின் இறைமையை அடகு வைக்கமுடியாது என்றெல்லாம் கருத்துக் கூறி வருகிறார். ஆனால் இக் கருத்துக்கள் முழுவதையுமே முன்னின்று செயல்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி தான் என்பதே நகைமுரண்பாடானதாக உள்ளது.

தேசிய அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்திலும் பத்திரிகையாளர் முன்னும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் மையம் அமைவதற்கான அடிக்கல் நாட்டும் போதும் இலங்கையை பொருளாதார பலம்வாய்ந்த நாடாக மாற்றுவதே சீனாவுடனான இத்தகைய உடன்படிக்கையின் இலக்கு என்கிறார். அதுமட்டுமன்றி 2016 நவம்பரில் சீனாவைச் சேர்ந்த 12 முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள். அவர்கள் அமைச்சர்கள் பலரை சந்தித்து முதலீட்டுக்கான வாய்ப்புக்களை அறிந்ததுடன் தாம் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் 150 தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிடும் போது 2020 வரை சீனா இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளதாகவும் ஐரோப்பாவை விட சீனாவே இலங்கைக்கு உதவும் நாடு எனவும் குறிப்பிட்டார். சீனாவிடமிருந்து பெறப்படும் கடன் 2 - 3.8 க்கு இடைப்பட்ட வட்டி விகிதத்திலேயே  பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இலங்கை சீன உறவு வலுவானது. நிரந்தரமானது. மாற்ற முடியாதது. பொருளாதார சுபீட்சத்திற்கானது. அரசியல் பாதுகாப்புக்கானது. தேசிய அரசாங்கத்தின் தலைமைகளைப் பொறுத்தவரை அமெரிக்க-இந்தியக் கூட்டு கடந்த காலத்தில் இந்தியா மாதிரியானதே. அப்போது அமெரிக்காவை வைத்துக் கொண்டு இந்தியாவை கையாண்ட நிலை மாறி இப்போது சீனாவை வைத்துக் கொண்டு அமெரிக்க இந்தியக் கூட்டை கையாள இலங்கை ஆரம்பித்துள்ளது. இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தேசிய அரசாங்கத்தின் ஆட்டத்தின் பங்காளர்கள் மட்டுமே. பயனாளிகள்  அல்லாதவர்கள். அவர்களது பலவீனமே தேசிய அரசாங்கத்தினது பலம். இந்திய அமெரிக்க கூட்டின் நிலையும் அவ்வாறானதே.

எனவே இங்கு ஒருவிடயம் மிகத்தெளிவாகின்றது. புதிய அரசியலமைப்பு சாத்தியமாகும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியின் கை ஓங்குகிறது. தென் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழும் போல் தோன்றினாலும் அதனை இலகுவில் சாத்தியப்படுத்த முடியாது. அதனை எட்டுவதற்கு முன்னாள் ஜனாதிபதி முயலுகிறார். ஆனால் இவற்றை எல்லாம் கடந்து அரசியலமைப்பு, தேசிய அரசாங்கமும் நிலைத்திருப்பதே தேசிய அரசாங்க காவலர்களுக்கு அவசியமானது. அதேநேரம் சீன உறவை இந்திய – அமெரிக்கா கூட்டுடன் கையாளமுனையும் பிரதமரும் தேசிய அரசாங்கத்தை தொடரவே விரும்புகின்றார். இந்தியா – அமெரிக்கா – சீனா என்ற முக்கோணமும் பிரதமர் - ஜனாதிபதி – முன்னாள் ஜனாதிபதி என்ற முக்கோணமும் வேறு வேறுபட்ட திசையில் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கின்றன. இதில் எந்த இலாபமும் இல்லாத அரசியல் தலைமையாக தமிழர் தரப்பு காணப்படுகிற பரிதாபம் நிரந்தரமானதல்ல. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஹம்பாந்தோட்டை தந்துள்ளது. தமிழ்த் தலைமைகள் இச்சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தினால் தமது இலக்கை அடைவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்க முடியும்.

கலாநிதி கே.ரி. கணேசலிங்கம்-
நிமிர்வு மாசி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.