மலையகத் தேசியம்: சிதைக்கப்படும் தமிழ் மொழி




மொழி என்பது வெறுமனே தொடர்பு சாதன ஊடகம் மட்டுமல்ல, ஒரு சமூகம், இனம் அல்லது இனக்குழுமத்தை அடையாளப்படுத்துவதில் மொழி பிரதான பங்கு வகிக்கின்றது.  மொழிக்காக சத்தங்களும், சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனூடாக கருத்துக்களும், உணர்வுகளும் பரிமாறப்படுகின்றது.  நாம் மொழியைப் பேசுகின்றோம் என்பதை விட நாம் எப்படிப்பட்டவர்கள் என மொழி நம்மைப் பற்றி பேசுகின்றது.

மொழியும் இயற்கை சார்ந்த ஒரு விடயம் தான்.  இங்கு மனிதன் இயங்கினால் தான் மொழியும் இயங்கும்.  மோழியை பயன்படுத்துவதற்கு இருக்கும்  வாய்ப்பைப் பொறுத்தே மொழியும் இருக்கும்.  இதன் தொடர்ச்சியாகதான் ஒரு சமூகத்தை தேசிய இனமாக அடையாளப்படுத்துவதில் மொழி பிரதான இடம் வகிக்கின்றது.  மனிதன் பிரதான இடம் வகிக்கின்றபடியால் மனிதனையும் மொழியையும் பிரிக்க முடியாது.  ஒரு தேசிய இனத்ஐ ததாங்கும் தூண்களான நிலம், பொருளாதாரம், கலாசாரம், மக்கள் கூட்டம் என்பவற்றுடன் மொழியும் ஒன்றாக இணைந்திருக்கின்றது.  மொழி பன்முகத்தன்மை கொண்டது.  தேசிய இன அடையாளத்திற்கு மொழி முக்கியமாகும்.  தாய் மொழியின் முக்கியத்துவம், தமிழ் மொழியின் தனித்துவம், தமிழ் மொழியை பிற மொழிக் கலப்பிலிருந்து பாதுகாத்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசியல் யாப்புரீதியாக இலங்கையில் கல்வி மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், சட்டங்களை ஆக்கும் மொழியாகவும் தமிழ் மொழியும், சிங்களமொழியும் அங்கீகாரம் பெற்றுள்ளன.  அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசநிர்வாகச் செயற்பாடுகளில், தமிழ் மொழிக்கு பங்கு கொடுக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் தமிழ் மொழியின் அமுலாக்கம் உரிய முறையில் இடம் பெறுவதில்லை.  வட-கிழக்கிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களான அமைச்சுக்கள், மாகாணசபைகள்,மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் போன்றவற்றின் நிர்வாக செயற்பாடுகள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவில் தமிழ் மொழியில் இடம் பெறுவதில்லை. 

12.11.1999 ஆம் திகதி 1105ஃ25 ஆம் இலக்கவிஷேட அரசாங்கம் வர்த்தகமானி மூலம் நுவரேலியா மாவட்டம் முழுவதும் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  இதே வர்த்தகமானி அறிவித்தலின் பிரகாரம் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்லே, ஹல்துமுல்லை, அப்புத்தளை, ஹாலிஎல, பசறை, மீஹிகாகியுல பிரதேச செயலகங்களும் இரு மொழி பிரதேச செயலகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  அத்தோடு 01.04.2003 அம் திகதி 1283ஃ3 ஆம் இலக்க அரசாங்க வர்த்தகமானி மூலமாக பதுளை மாவட்டத்தின் லுணுகலை, வெலிமடை, சொரணதொட்டை பிரதேச செயலகங்களும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகேகோராளை, உடபலாத்த (தொலுவ) பிரதேசங்களும் காலி மாவட்டத்தின் காலி நகர் சூழ் பிரதேச செயலகமும், களுத்துறை மாவட்டத்தின் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேசசெயலகங்களும் நிர்வாக ரீதியாக இரு மொழி பிரதேசசெயலகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் கங்கஹியலகோரளை (நாவலப்பிட்டி), கங்கவட்டகோரளை (கண்டிபட்டினமும் சூழலும்). மெததும்பர, உடுநுவ ரபிரதேச செயலங்களும், மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை, அம்பன்கஹாகோரளை  (இரத்தோட்டை). ஊக்குவல பிரதேச செயலகங்களும் சிபார்சு செய்யப்பட்ட இரு மொழி பிரதேச செயலகங்களாகும்.  இலங்கையில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்த நிலையில் நுவரேலியா மாவட்டத்திலேயே எண்ணிக்கை அடிப்படையில் அதிக தமிழர்கள் வாழ்கின்றார்கள்.  2012 ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் படி நுவரேலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 711,644 பேரில் 410,200(58.64மூ)பேர் தமிழர்களாவர்.  சிங்களவர் 282,053 (39.63மூ) பேரும், முஸ்லீம்கள் 17,652(2.48மூ) பேருமாவர்.  முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மொழியையே பேசுகின்றார்கள்.  இதனடிப்படையில் பார்க்கின்ற போது நுவரேலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் (60மூ) மானோர் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாவர்.  ஆனாலும் இதே கணிப்பீட்டின் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் 172,364 (21.14மூ) தமிழர்களும்,கண்டிமாவட்டத்தில் 154,321 (11.22மூ)  தமிழர்களும் வாழ்கின்றனர்.

சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையில் பார்க்கின்ற போது நுவரேலியா மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக ஒரு தமிழரே கடமையில் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் இதுவரை காலமும் நுவரேலியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக ஒரு தமிழர் இருந்ததில்லை.  மறுபுறத்தில் நுவரேலியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகையை குறைப்பதற்காக விசேட வர்த்தகமானி அறிவித்தல் மூலம் சிங்களவர்களை பெரும் எண்ணிக்ககையில் கொண்ட கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.  இத்தொகுதி இணைக்கப்படாவிட்டால் இன்று நுவரேலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 70மூ த்திற்கும் அதிகமானோர் தமிழர்களாக இருந்திருப்பார்கள்.

இதே போன்றே இன்றைய சனத்தொகை செறிவு நிலையினை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது நுவரேலியா மாவட்டத்தின் நுவரேலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும், பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தின் பன்விலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தமிழர்களே பிரதேச செயலாளர்களாக நியமனம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதை செய்வதற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் முன் வரவில்லை.  மலையகத் தலைவர்களும் அதை பெற்றுக்கொடுக்கும் திறனற்றவர்களாகவே உள்ளனர். அரசாங்க சேவையை அடிமட்ட மக்கள் மத்தியில் எடுத்து செல்பவர்கள் கிராம உத்தியோகஸ்தர்களே.   1,750 நபர்களுக்கு அல்லது 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம அதிகாரி இருத்தல் வேண்டும் என்பது இலங்கையில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.  மலையகத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளை எடுத்துக் கொண்டால் 800 தமிழ் கிராமஉத்தியோகஸ்தர்கள் தேவை எனக் கண்டறியப்பட்டது.  ஆனால் இன்று 150 பேர் வரையிலேயே தமிழ் கிராமஉத்தியோகஸ்தர்களாக கடமை புரிகின்றனர். 

மலையகத் தமிழர் பெரும்பான்மையாக உள்ள நுவரேலியா ,அம்பகமுவ, லுணுகலை, பன்விலை பிரதேச சபைகளின் உத்தியோகஸ்;தர்கள் நிலையில் உள்ளவர்கள் பெரும்பான்மையானோர் சிங்களவர்கள்.  ஏனையவற்றிலும் ஒருவர் அல்லது இருவரே தமிழர்களாக உள்ளனர். சபை நடவடிக்கைகள் இரு மொழிகளிலும் நடைபெற்ற போதிலும் நுவரேலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் தவிர மற்றைய அனைத்து சபைகளிலும் தொடர்பாடல்கள், பதிவுகள், ஆவணப்படுத்தல் என்பன தனி சிங்கள மொழியிலேயே இடம் பெறுகின்றது.  நுவரேலியாஅம்பகமுவமற்றும் பன்விலைபிரதேசசபைகளில் மட்டும் ஓரளவிற்கேனும் தொடர்பாடல்களும், பதிவுகளும், ஆவணப்படுத்தல்களும் தமிழ் மொழியில் இருக்கின்ற போதிலும் அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே.  உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பிரதேசசபைகள் உள்ளடங்குகின்ற பிரதேச செயலகங்கள் அனைத்திலும் செயற்பாடுகள் முழுமையாக (நுவரேலியா, அம்பகமுவ, பன்விலை உட்பட) சிங்கள மொழியிலேயே இடம் பெறுகின்றது. 

மலையகத்தை பொறுத்தமட்டில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையிலும் பாரபட்சமே காட்டப்பட்டுள்ளது.  சிங்கள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் லவுகல மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் மொரவேவ பிரதேச செயலகங்களின் மக்கள் தொகைவெறும் எண்ணாயிரம் மட்டுமே. ஆனால் மலையகத் தமிழர் மிக செறிவாக வாழும் நுவரேலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களின் மக்கள் தொகை ஒவ்வொன்றிலும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகும்.  இலங்கையிலேயே மிகவும் அதிகமான சனத்தொகையை கொண்ட பிரதேசசெயலகங்கள் இவையே ஆகும்.  இங்கு பாகுபாடு மிகவும் தெளிவாக உள்ளது.  மேலும் மலையகத்தை பொறுத்தமட்டில் இரு மொழி பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் நடைமுறையில் திருப்திகரமானதாக இல்லை.

திட்டமிட்டவகையில் மலையகத் தமிழர் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும் நெருக்கடிகளை மேலே பார்த்தோம்.  இந்நெருக்கடிகள் ஒரு இனத்தின் மொழியை அழிப்பதன் ஊடாக இனத்தை அழிக்கலாம் என்ற பாசிஸவாதிகளின் கருத்தாக்கத்தின் வெளிப்பாடாகும்.

இக்கருத்தாக்கத்தை எதிர்த்து இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களின் வரலாற்றையும் மலையகமக்கள் தம் தாய் மொழியைப் பாதுகாத்து தம்மை ஒரு இனமாகக் அடையாளப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் எனவும் அடுத்த இதழில் பார்ப்போம்.

வோல்டர் டெரி
நிமிர்வு பங்குனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.