சம்பூர் அன்றும் இன்றும்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருமோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஒரு அழகிய கடலோரக் கிராமமே சம்பூர்.  இது மூதூரிலிருந்து 8 கிலோமீற்றர் கிழக்கிலும், திருகோணமலை நகரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில், 8 கடல்மைல்கள் தொலைவில், தரை வழியாக 38 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் நிறைந்த பசுஞ்சோலைகளால் சூழப்பட்டதுமான சம்பூர் கிராமம் நிறைவான நீர்வளம், நிலவளம், வனவளம் முதலானவற்றைக் கொண்ட ஒரு சம்பூரண பதி என்று இவ்வூருக்கு வரும் அனைவராலும் கூறப்படுவதுண்டு.  இக்கிராமமானது சுமார் 240 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது.

குளக்கோட்டு மன்னனால் அமைக்கப்பட்ட வில் எனஅழைக்கப்படும் அழகிய நீளமானவில் போன்ற வளைந்த அமைப்புடைய குளத்தையும், அம்மன்னனின் ஆணைப்படி குளக்கட்டை அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட பாரிய கற்களையும் சம்பூரில் இன்று காணலாம். குளத்தின் ஒரு கரையில் சம்பூர் கிராமமும் மறு கரையில் கூனித்தீவுக் கிராமமும் அமைந்துள்ளது. தாமரை மலர்கள் நிறைந்த குளத்தின் அழகிய காட்சியும் தென்னஞ்சோலைகள் நிறைந்த குளக்கரையினோடு மெல்ல வரும் குளிர் தென்றலும் மனதுக்கு இதமானது.

திருகோணேச்சரப் பெருமானுக்குரிய திருக்கோயில் திருப்பணிகள் குளக்கோட்டு மாகாராஜாவினால் பூர்த்தி செய்யப்பட்ட பிற்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பிற பிரதேசங்களில் வைத்து வழிபடுவதற்காக காவல் தெய்வங்களாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் பலவற்றை இந்தியாவிலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு வரும்போது ஓடம் திசைமாறி திருக்கோணேச்சரத்திற்கு தென்கிழக்கே உள்ள சம்பூர் கடற்கரையோரத்தை அடைந்து கல்லாகிவிட்டதாக ஐதீகம்.  இன்றும் கூட கல்லாகி விடப்பட்டதாகக் கூறப்படும்தோணியையும், தோணியைக் கட்டியதாகக் கூறப்படும் கற்சங்கிலி போன்ற வடிவம் மண்ணினுள் செல்வதனையும் சம்பூர் கடற்கரையோரத்தில் காணக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் கிராமத்தின் தோற்றம் மற்றும் தொன்மை பற்றிய தகவல்களை கோணேசர் கல்வெட்டு சாசனம், திருகோணாச்சல வைபவம், வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல், திருகோணமலைத் திருத்தலங்கள், காரியம்மன் காவியம், மேல்நாட்டவரின் குறிப்புக்கள் போன்ற நூல்களின் மூலமும் செவி வழிக்கதைகள் மூலமும் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு செல்வச் செழிப்புடன் விளங்கிய சம்பூர் கிராமமானது நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற யுத்த சூழல் காரணமாக பாரியதொரு சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.  தமது சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து, தமது சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.  இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு, ஐயங்கேணி, கொக்குவில், ஊறணி போன்ற கிராமங்களிலும் வேறு சில கிராமங்களிலும் வாழ்ந்து வந்தனர்.

பின்னர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டை பறிச்சான் போன்ற நலன்புரி நிலையங்களில் ஒரு தசாப்க காலமாக தமது வாழ்க்கையினை கழித்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு இந்நலன்புரி நிலையங்களிற்கு பல தொண்டு நிறுவனங்கள் உதவிகளைசெய்தன. பின்னர் அவ் உதவிகளும் இடைநடுவில் நிறுத்தப்பட்டு மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர்.  இது மட்டுமல்லாது இப்பத்து வருட வாழ்க்கையினையும் சிறிய தகரக்கொட்டில்களுக்கு உள்ளேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  வயது முதியவர்கள், சிறார்கள், கைக்குழந்தைகள் என பலரும் மழை, வெயில், வெள்ளம், குளிர்காலம் போன்றவற்றால் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். தொண்டு நிறுவனங்கள், அரசாங்கம் போன்றவற்றின் எந்த உதவிகளும் இல்லாத நிலையில் தாமே தொழில்களை மேற்கொண்டு தமது குடும்பங்களை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை.  பெரும்பாலானோர் கூலிதொழில்களை மேற்கொண்டே தமது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.

 
இவர்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சனைகளாக மலசலகூடப் பிரச்சனை, தண்ணீர்ப் பற்றாக்குறை என்பன இருந்தன. தகரத்தால் மறைக்கப்பட்ட மலசலகூடங்கள், அதுவும் போதுமான மலசலகூடங்கள் இல்லாமை, குளிப்பதற்காக வாய்க்கால்களை தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தமை, மின்சாரத்தை பெற்றுக்கொள்வதில் சிரமம், இன்ப துன்பங்களை பகிர முடியாதநிலை, ஒரு சிறு கொட்டிலுக்குள்ளேயே தமது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை, இடப்பற்றாக்குறை என இவ்வாறு பல பிரச்சனைகளோடு பிள்ளைகளின் கல்வி நிலையில் வீழ்ச்சி நிலை என பல இன்னல்களுக்கு மத்தியில் அகதிகளாக இம்மக்கள் வசித்து வந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டம் உட்பட வந்து பல கட்டப் போராட்டங்களின் பயனாகவும் ஆட்சி மாற்றத்தின் பிரதி பயனாகவும் இரண்டு தொகுதியினராக சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.  குடியேற்றத்தின் போது பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.  ஒரு தொகுதியினர் 2015 ஆம் ஆண்டளவில் குடியமர்த்தப்பட்டனர்.  மற்றத் தொகுதியினரின் காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தனர்.  அது மட்டுமல்லாது சம்பூர் பாடசாலையினையும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.  இப்பிரச்சினையையும் போராட்டங்களினூடாக இம்மக்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

காணிகளை நேரில் சென்று பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இராணுவத்திரால்  வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. காணிகள் அடர்ந்த காடுகளாகக் காணப்பட்டன. தமது காணிகள் எதுவென்றே அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் தமது எல்லைகளை இனம் கண்டு கொள்வதிலும் தமக்கான கொட்டில்களை அமைத்துக் கொள்வதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்.

இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது ஊரில் குடியேறி விட்டோம் என்று ஓரளவு திருப்தியுடன் இருந்த போது இன்னுமொரு பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.  காரணம் சம்பூரில் இந்திய உதவியுடன் அமைக்கப்படவிருந்த அனல்மின் நிலையத்திட்டம். இத்திட்டம் சம்பூர் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் மூலமும் இலங்கையின் பல பாகங்களிலும் செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் நிறுத்தப்பட்டது.


இப்போது தமது சொந்த இடத்திலேயே வாழ்க்கையை நடாத்தி வரும் மக்கள் தமது சொந்த ஊரில் குடியேறிய மகிழ்ச்சியைத் தவிர வேறு எந்தவிதமான முன்னேற்றங்களும் அற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.  காரணம் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் இன்றும் கூட முற்றுமுழுதாக வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

இவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக போக்குவரத்துப் பிரச்சனை காணப்படுகின்றது.  இவர்கள் தமது எந்தவிதமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டுமானாலும்  8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மூதூருக்குச் செல்ல வேண்டும். மூதூருக்குச் செல்ல வேண்டுமானால் தனியார் போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுவதில்லை.  இலங்கை போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  அதுவும் இவை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் மட்டுமே வருகை தருவதாகவும் இதன் காரணமாக தாம் விரும்பிய நேரத்தில் பயணம் செய்து கொள்ள முடியாதுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னர் இந்தா மக்கள்  எந்த விதமான வைத்திய உதவிகளும் அற்ற நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.  தமது சொந்த ஊரில் வைத்தியசாலை இல்லாமையினால் சிகிச்சைகளுக்கு மூதூர் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.  மக்கள் குடியேற்றப்பட்டு சுமார் இரண்டரை வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் வைத்தியசாலை அமைப்பதற்கான கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் இன்னும் அவை பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளது.
மனிதனுக்கு மிகவும் முக்கியமாக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குவது நீர்.  இந்நீரைப் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  யுத்த சூழ்நிலைக்கு முன்னர் தமது காணிகளுக்குள் தங்களுக்கென தனித்தனியான கிணறுகளை வைத்துக் கொண்டு எந்தவித நீர் தட்டுப்பாடுமின்றி வாழ்ந்து வந்தனர்.  ஆனால் யுத்தத்தால் கிணறுகளை தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.  தற்போது கிணறுகள் கட்டுவதற்கு எந்தவித வசதிகளுமற்ற நிலையில் மாதாந்தம் பணம் செலுத்தி குழாய் நீரினை பெற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு பல பிரச்சனைகள் மத்தியலும் பாரம்பரியமாக வாழ்ந்த தமது மண்ணைக் காப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தவும் தாம் குடியிருக்கும் காணிக்குள்ளேயே வீட்டுத்தோட்டங்களை செய்து காய்கறிகளை விற்று செலவினைக் குறைத்து சிறுசிறு கடைகளை அமைத்து தமது க~ட நிலையினை ஓரளவு சமாளித்து சிறிது சிறிதாக சம்பூரை மீளக் கட்டமைத்து வரும் இம்மக்களும் எம்மினத்தின் நாயகர்களே.

மயில்வாகனம் கோகிலதாஸ்.
குமாரபுரம் கிளிவெட்டி.
நிமிர்வு பங்குனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.