ஈழத் தமிழர்கள் மீதான இந்திய மத்திய அரசின் துரோகம்


முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் மீது, குண்டர் சட்டத்தை ஏவி சிறையில் அடைந்துள்ளது தமிழக அரசு. திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மீதான கைதுக்கு எதிராக தமிழ்நாட்டிலும், இந்தியா தாண்டியும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்திலும் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக போராட்டம் இடம்பெற்றது.

 தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் இளந்தமிழக இயக்கத்தை சேர்ந்த சரவணக்குமார் கருத்து தெரிவிக்கையில்,

2009 இறுதிப்போரில் ஈழத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் இன்னமும் இணைந்து செயல்படுவதையே இந்த அடக்குமுறை கைதுகள் வெளிக்காட்டுகின்றன.

மேலும் பா.ஜ.க அரசு தொடந்து மக்களுக்கு எதிராக செயல்படுத்துவதற்கு தமிழ் நாட்டில் எழும் தன்னெழுச்சியான போராட்டங்களை தடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை மிரட்டவுமே இது போன்ற கடுமையான அடக்கு முறை சட்டங்களை தோழர்கள் மீது இந்த அரசுகள் ஏவியுள்ளன.

ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கான நினைவேந்தல் ஒன்று கூடலுக்கும,;  ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கு  துணை நிற்கும் தமிழ்நாட்டு மக்களை ஒடுக்க முயலும் இந்திய அரசின் அடக்குமுறையை, வன்மையாக கண்டிக்கின்றோம். என்றார்.

 தமிழக அரசியல் செயற்பாட்டாளர் செந்தில் கருத்து தெரிவிக்கையில்,

2009 முள்ளிவாய்க்கால் பேரழிவு தமிழகத்தை ஆன்ம விழிப்படையச் செய்தது. அது இலட்சக்கணக்கான இளைஞர்களை தமிழ்த் தேசிய அரசியல் களத்திற்கு இழுத்து வந்தது.  தீக்குளித்து சாகும் கொந்தளிப்புகள் நடந்த பின்னணியில், பேரழிவுக்குப் பின்னான நிலையில்  அன்றாடம் பெருகத் தொடங்கிய அடையாளப் போராட்டங்களை அரசு அனுமதித்த வண்ணம் இருந்தது. சர்வதேச அரசியல், இந்திய அரசின் துரோகம், தமிழ்த் தேசம், இயற்கை வளங்கள், சூழல் காப்பு, மரபுரிமை மீட்பு என அனைத்துத் தளங்களிலும் போராட்டங்களும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் புற்றீசல் போல் பெருகின. இந்த அளவு மாற்றம் ஒரு பண்பு மாற்றத்தை அடைந்ததற்கான குறியீடுதான் இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த  ஜல்லிக்கட்டுப் போராட்டம். டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

இன்னொரு புறம் இந்திய ஆளும் வர்க்கத்தின் மூர்க்கமான பிரதிநிதியாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி அரசின் குறிப்பிடத்தகுந்த பொருளாதார சீர்த்திருத்தங்கள். ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி, ஒரே உணவுக் கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே கட்சி என்பதே அதன் திசை வழி. 2009க்குப் பின்னான வளர்ச்சிப் போக்கில் தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் நிலைமை இந்த திசை வழிக்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது. குறிப்பாக அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதற்கு தேவையான பிரச்சார பலம் புதிய அரசியல் ஆற்றல்களால் பன்மடங்கு பெருகி இருப்பதை அரசு அச்சுறுத்தலாக  கருதுகிறது. ஏனெனில், இவை பிரச்சாரத்தோடு முடிந்துவிடப்போவதில்லை.  இந்த முட்டுக்கட்டைகளை விலக்கிப் போட வேண்டிய காலத் தேவை அரசுக்கு உள்ளது. எனவே, 2009  இல் இருந்து 2017 வரையிலான காலகட்டத்தில் புதிய அரசியல் சக்திகளின் பால் கடைப்பிடித்து  வந்த “ஒரு நாள் கைது அணுகுமுறையை” முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அரசு. அதற்கிசைவாக வளைந்து கொடுத்து நிற்கக் கூடிய பொம்மை அரசாக தமிழக அரசு இருப்பது கூடுதல் வசதியாகியுள்ளது. இந்த எட்டாண்டுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட கொள்கை சட்டகத்திற்குள் பன்னெடுங்காலம் செயல்பட்டுவரும் பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய இயக்க ஆற்றல்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டாஸ் சட்டப் பிரயோகங்கள் இருந்து வந்தன. இக்காலப்பகுதியில் புதிதாக அரசியல் களத்திற்கு வந்த இளைஞர்களைக் கைது செய்தல், தளைப்படுத்தல் என்ற  அடக்குமுறைகளுக்கு அரசு உட்படுத்தவில்லை.


 ”கட்டுக்குள் நின்றால் சரி, எல்லைக்கோட்டை மீறினால் தட்டி வை” என்ற அடக்குமுறை வடிவத்தை இப்போது அரசு கையிலெடுத்துள்ளது. இது இன்னொரு அரசியல் காலகட்டத்திற்குள்ளான பிரவேசமாகவே தெரிகிறது. பணமதிப்பிழக்கத்திற்கு எதிராக மேடவாக்கத்தில் நடந்த போராட்டத்தில் கட்டவிழ்க்கப்பட்ட காவல்துறை வன்முறை, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் ரவுடித்தனமும் கைதுகளும், தோழர்கள் திருமுருகன், டைசன், அருண், இளமாறன் மீதான குண்டாஸ் சட்டப் பிரயோகம், கதிராமங்கலத்தில் பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் கைது, தோழர் முகிலனுக்கு கூடங்குளம் வழக்கில் ஆஜராக உத்தரவு என இப்புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் தமிழக அரசியலை மேலும் தீவிரப்படுத்தும் அடுத்தக் கட்டத்திற்கு காலம் நகர்வது தெளிவாகிறது. மத்திய அரசு தனது மூர்க்கமான கொள்கைச் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி முன்செல்ல தடையாய் இருக்கும் சக்திகளை அடக்க வேண்டியதே இக்கைதுகளின் நோக்கம்.  அதற்கு முகங்கொடுத்து முன்னேறிச் செல்ல வேண்டியதே நமது தேவை. அதில் பிரச்சார பலம் மட்டுமின்றி, மக்கள் அடித்தளத்தைக் கொண்ட கட்டமைப்பு ரீதியான பலத்தை மக்கள் முகாம் உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையை இக்கைதுகள் உணர்த்துகின்றன. அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிரான மாற்றுக் கொள்கைக்கான சமூக அடித்தளம் கொண்ட இயக்க வளர்ச்சிப் போக்கே மக்களைப் பொறுத்தவரை அடுத்தக் கட்டமாகும்.

தண்ணீரில் அழுத்தப்படும் காற்றுள்ள பந்து மூழ்காது, மேலெழும்பி வரும் என்பது இயற்பியல். போராடும் ஆற்றல்கள் மீதான அரச அடக்குமுறைகள் அடி பணியச் செய்யாது, அரசின் அடித்தளத்தை ஆட்டங்காண வைக்கும் என்பது சமூக அறிவியல். என்றார்.

அரசியல், மனிதவுரிமைச்  செயல்பாட்டாளர் கணேஸ் கருத்து தெரிவிக்கையில்,

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் மற்றும் அரசியல் சாராமல் செயல்பட்டுவரும் அமைப்பாக மே 17 இயக்கம் இருந்து வருகிறது.  கடந்த காலங்களில் இந்திய அரசின் பல விசமத் திட்டங்களை எதிர்த்துப் போராடி மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தும் வேலைகளை மே 17 இயக்கத்தினர் செய்து வந்தனர். குறிப்பாக தோழர் திருமுருகன் அவர்கள் நேரலை விவாதங்கள் மூலம் ஆளும் பாஜக அரசின் முகத்திரையை கிழித்து கொண்டிருந்தார். இப்பொழுது தமிழகத்தில் நடக்கும் பொம்மை ஆட்சி, யார் ஆளுமை செலுத்துகிறார்கள் என்பது உலகம் அறிந்தது. மக்கள் மன்றத்தில் நற்பெயர் பெற்றுவரும் தோழர் திருமுருகனின் வளர்ச்சி பொறுக்காமல் ஏற்பட்ட அச்சம் மற்றும் கசப்புணர்வின் வெளிப்பாடே இந்த கைது என்றார்.


ஊடகவியலாளரும், கேலிச்சித்திரக் கலைஞருமான பாலா கருத்து தெரிவிக்கையில்,
2009 யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் கொடூரத்தை மறக்கவிடாமல் தமிழர்களிடையே தக்க வைப்பதில் மெரினாவில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு முக்கிய பங்குண்டு. ஈழப்படுகொலைக்குப்பின் தமிழர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒரு எழுச்சியும், மெரினா ஜல்லிக்கட்டு தை புரட்சி நிகழ்வு ஆகியவை ஒரே மொழி ஒரே தேசம் என அகண்ட பாரத கனவில் இருக்கும் ஆரியத்துவ கும்பலின் அரசியலுக்கு எதிரானது. திருமுருகன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது என்பது பொதுதளத்தில் ஆர்வமாக இயங்கும் புதிய தலைமுறைக்கு ஒரு உளவியல் யுத்தத்தை உண்டு பண்ணும் செயல். இதன் மூலம் புதியவர்களை களத்திற்கு வரவிடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறது இந்தியம். இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

தமிழகத்திலிருந்து மணிகண்டன்-

நிமிர்வு ஆனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.