ஈழத்தின் வேளாண் மன்னர்



"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் ஆதனால் உழந்தும் உழவே தலை" என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு இணங்க பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. என்று தெளிவாக விளக்குகிறது அந்தக் குறள்.

இதனை எத்தனை பேர் விளங்கிக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைக் கொண்டாடும் நாம் எமது தாயகப்பிரதேசத்தில் வாழ்ந்து விவசாயத் துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிவிட்டு சாதாரணமாக இருக்கும் ஒருவரை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எமது பிரதேசத்தில் வாழ்நாள் விவசாயிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் யாரையும் நாம் கண்டு கொள்ளாததன் விளைவு, தற்போது முழுநேர விவசாயிகள் பலரும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள். 

இன்றைய நிலையில் இயற்கை விவசாயம் என்பதே அருகிக் கொண்டு செல்லும் நிலையில், அதீத செயற்கை உரப்பாவனையால் மண்ணின் வளம் குன்றிக்கொண்டு போகிறது. இந்நிலையில் விவசாயத்தில் சாதித்த மூத்த விவசாயியைப் பற்றி நினைப்பது பொருத்தமானது. வன்னிப் பிரதேசத்தில் இருந்து வெளிவந்த அறிவுக்கதிர் என்கிற இதழில் இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1948 இல் பிறந்த கந்தையா முத்துக்குமார் விவசாயம் செய்து அதன்மூலம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 1964 இல் படித்துக் கொண்டிருக்கும் போதே தகப்பனார் கந்தையாவுடன் இணைந்து உழவுத்தொழிலில் ஈடுபட்ட முத்துக்குமார், பின்னர் 1968 - 1969 காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில்  நெற்செய்கையை சிறப்பாக செய்து ஏக்கருக்கு 177 புசல் நெல்லை அறுவடையாகப் பெற்றதற்காக வவுனியா அரச அதிபர் பி.சி பெரேரோவிடமிருந்து முதலாம் பரிசையும் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் 1974 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற பொருட்காட்சியில் தரமான தேசிக்காய் உற்பத்திக்காக 3 ஆம்  பரிசினையும், 1993 - 1994 காலப்பகுதியில் ஏக்கருக்கு 160 புசல் நெல்லை உற்பத்தி செய்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து வேளாண் மன்னர் என்கிற சிறப்பு பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். 1995 இல் உலக உணவு நிறுவனத்தின் சர்வதேச மட்ட நெல் உற்பத்திக்கான முதன்மைப் பரிசு, 1997 இல் வடக்கு கிழக்கு மாகாண மட்டத்தில் சிறந்த விவசாயிக்கான பரிசு, 2001 இல் வவுனியா விவசாயத் திணைக்களத்தினால் சிறந்த வீட்டுத்தோட்டத்துக்கான  பரிசு என்பவற்றையும் இவர் பெற்றுள்ளார்.

1995 ஆம் ஆண்டு உலக உணவு நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையும், உலக உணவு தினத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவையும் நினைவு கூரும் முகமாக பரிசில் வழங்கும் நிகழ்வு தாய்லாந்தில் இடம்பெற்றது. இலங்கை அரசும் இதனைக் குறிக்கும் முகமாக 2 ரூபாய் நாணயக் குற்றியை வெளியிட்டது.     இதன்போது தாய்லாந்து மாகாராணியிடம் இருந்து முதன்மைப் பரிசினை முத்துக்குமார் பெற்றுக் கொண்டார்.

விவசாய பொருளாதாரத்தையே முதன்மையாக கொண்ட எமது சமூகம் இன்று என்ன நிலையில் உள்ளது என்பதற்கு விவசாயத்தின் இன்றைய நிலையே உண்மையான சாட்சி. பசிக்கு சோறு போடும் விவசாயிக்கு நாங்கள் உரிய மதிப்புக் கொடுக்கின்றோமா? என்கிற கேள்வியை நாங்கள் எமக்குள்ளேயே நியாயமாக எழுப்ப வேண்டும்.

முத்துக்குமார் ஐயாவுடன் பேசும் போது அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு.  இயற்கையில் காணப்படும் மண், நீரை மூலதனமாகக் கொண்டு இவற்றை உச்ச பயன்பாட்டில் பயன்படுத்தி விவசாயத்தில் இடைவிடாது ஈடுபட்டேன்.  தூறல் நீர்ப்பாசனம் போன்ற நவீன தொழிநுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதனூடாக நீரை வினைத்திறனுடன் பயன்படுத்தவும் சேமிக்கவும் முடியும். கால்நடைகளை வளர்ப்பதனூடாக கிடைக்கின்ற சாணம், இலை தளைகளை பசளையாக  பயன்படுத்தவதனூடாக   மண் வளத்தை சரியான சமநிலையில் பேணவும், உயர்த்தவும் முடியும். என்னிடம் முன்னர் நூறுக்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. போரால் அவை ஏராளமாக அழிந்து தற்போது சிலவே உள்ளன. தற்போது நெற்பயிர் பயிரிடுவதுடன் சேர்த்து மிளகாய், கச்சான், சோளம், பன் புரூட் போன்றவற்றையும் பயிரிட்டு வருகிறேன். இப்போது கூட்டிணைந்த பண்ணை தொடர்பில் அக்கறை செலுத்தி வருகிறேன்.

இன்று பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வருவதாக கூறி பயமுறுத்துகிறார்கள். இவை எல்லாம் உடல்நலத்துக்கு எவ்வளவு கேடு என்பதனை மக்கள் உணரவேண்டும். எல்லாரும் விவசாயத்தை நோக்கி வர வேண்டிய காலகட்டம் இது. 

முதலில் விவசாயத்தில் பற்று இருக்க வேண்டும். அடுத்து நம்பிக்கை இருக்க வேண்டும். நட்ட இலாபத்தை பார்க்கக் கூடாது. நாங்களே உற்பத்தி செய்து சாப்பிடுவோம் என்கிற நோக்கத்தைப் பார்க்க வேண்டும். விவசாயத்தில் நவீன தொழிநுட்பத்தை புகுத்த வேண்டும். பாரம்பரிய நெல் இனங்கள் எமக்கு மிகவும் உகந்தவை.  நஞ்சில்லா உணவை நாங்களும் சாப்பிட வேண்டும், மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்கிற நல்ல நோக்கம் முதலில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த நஞ்சில்லா உணவை நாங்கள் உட்க்கொள்கின்றோம் என்கிற நிலை உருவாகும். அதன் மூலம் நல்ல ஆத்மதிருப்திகிடைக்கும்.

இங்கே விவசாய திணைக்களத்தினர் முன்வந்து விவசாயிகளுக்கு உதவும் நிலை உள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் விவசாயத்தில் நவீன தொழிநுட்பங்களின் பயன்பாடு அவசியமானது.  விவசாய விளைபொருளை மதிப்புக்கூட்டி விற்கின்ற தொழிற்பாடு இருக்க வேண்டும். அதற்கான உதவிகளை விவசாய திணைக்களம் செய்து கொடுக்க வேண்டும். என்றார்.

துருவன்


நிமிர்வு ஆடி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.