குர்திஸ்தானும் கடலோனியாவும்


சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் தேசிய இனங்களுக்கு புரட்டாதி மாதக் கடைசி வாரமும் ஐப்பசி மாதம் முதல் வாரமும் மிக முக்கியமானவை.  புரட்டாதி 25ஆம் திகதி ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் பிரதேசத்தில் வாழும் குர்திஸ் தேசிய இன மக்கள் தமது பிரிந்து போகும் உரிமையை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்.  ஐப்பசி முதலாம் திகதி ஸ்பெயினில் உள்ள கடலோனியா பிரதேச மக்கள் தமது பிரிந்து போகும் உரிமையை நிர்ணயிக்க வாக்கெடுப்பை நடாத்துகிறார்கள்.  இக்கட்டுரை எழுதப்படும் வேளை இவ்விரு வாக்கெடுப்புக்களும் நடைபெறுமா என்பதே கேள்விக் குறியான நிலைமையே காணப்படுகின்றது.

குர்திஸ்தான் ஈராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய குர்திஸ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இதில் ஈராக்கின் குர்திஸ் பகுதி சுயாட்சி உரிமையுள்ள ஈராக்கின் மாகாணமாக 2005ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பில் பிரகடனப்படுத்தப்பட்டது.  இம்மாகாண மக்களே இன்று சுயநிர்ணய உரிமை கோரி வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
     
குர்திஸ்தான் வாக்கெடுப்பை ஈராக்கிய அரசாங்கமோ மேற்குலகமோ அங்கீகரிக்கவில்லை.  ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) இற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் முதுகெலும்பாக முன்னணிப் படையாக திகழ்பவர்களும்  குர்திஸ் போராளிகளான பாஷ்மேகா இராணுவத்தினரே.  இருப்பினும் அமெரிக்கா கூட இவ்வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  ஈராக் பிரதமர் ஹைதர் அல்அபாடியின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இவ்வாக்கெடுப்பை சட்டத்துக்கு முரணானது என அறிவித்துள்ளது.  இவ்வாக்கெடுப்புக்கு உடன் பட்ட கிர்குக் மாகாண ஆளுனரை அல் அபாடி பதவியிலிருந்து அகற்றியுள்ளார்.

குர்திஸ்தான் தலைநகர் இர்பிலில் புரட்டாதி 16ஆம் திகதி உரையாற்றிய அம்மக்களின் தலைவர் மசூட் பர்சானி இவ்வாக்கெடுப்பு பாஷ்மேகா படையினரின் மகத்தான தியாகங்களால் அடையப்பட்டது எனக்குறிப்பிட்டார்.  கடந்த 25வருடங்களாக இந்தப் பிரதேசத்தின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அவர்கள் முக்கிய காரணியாகத் திகழ்ந்தனர் எனவும் குறிப்பிட்டார்.  இனவழிப்பையும் அநீதியையும் நிறுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.  அடுத்த சந்ததி குர்திஸ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஸ்பெயின் கடலோனிய பிரதேசம் பார்சலோனா நகரத்தை உள்ளடக்கியது. இது ஸ்பெயினின் வடகிழக்கிலுள்ள கரையோர மாகாணமாகும்.  சுயாட்சி உரிமையைக் கொண்ட இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கடலோனியர் என்ற தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாவர்.  இப்பிரதேசத்தின் ஆட்சி தலைவர் கார்லன் புய்ஜ்டெமொன் பிரிந்து போவதற்கான வாக்கெடுப்பு ஐப்பசி முதலாம் திகதி நடத்தப்படும் என அறிவித்துள்ளார். ஆயினும், இப்பிரிவினையை பார்சலோனா மேயர் ஏடா குலோ எதிர்க்கிறார்.  கடலோனியா மக்களில் பாதிப்பேர் பிரிந்து போவதை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.  ஆடி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 49.4 வீதமான கடலோனிய மக்கள் பிரிந்து போவதை எதிர்ப்பதாகவும் 41.1 வீதமான மக்களே அதனை ஆதிரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாக்கெடுப்பு தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.  புரட்டாதி 18ஆம் திகதியுடன் பிரதேச சுயாட்சியை ரத்துச் செய்வதாக மிரட்டியுள்ளது.  ஏடா குலோவும் கார்லஸ் புய்ஜ்டெமொன்டும் இணைந்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயுடன் பேச்சுவார்த்தை நடத்த விண்ணப்பித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு முகாம்களில் இருந்தாலும் இவ்வாக்கெடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என ரஜோயைக் கேட்டுள்ளனர். அதன் பெறுபேறுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் ஸ்பெயின் அரசு வாக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்படவிருக்கும் வாக்குச் சீட்டுக்களையும் வாக்குப் பெட்டிகளையும் அபகரிக்கத் தொடங்கியுள்ளது.  இவ்வாக்கெடுப்புக்கென அமைக்கப்பட்டிருந்த இணையத்தளத்தை முடக்கி விட்டது.  எனினும் கடலோனியா பிரிவினைவாதிகள் உடனடியாக வேறு ஒரு இணையத்தளத்தை உருவாக்கி விட்டனர். இதற்கு விக்கிலீக்ஸ் இணையத்தை இயக்கி வரும் ஜூலியன்  அசாஞ்சே உதவி செய்வதாகக் கூறப்படுகிறது.  இவ்விணையத்தளத்திலிருந்து கடலோனியர்கள் தமக்கான வாக்குச்சீட்டுக்களைப் பதிவிறக்கி அச்சிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகளுடன் ஐப்பசி முதலாம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை தமது ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தலாமென அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இங்கு பிரித்தானியாவின் ஒரு மாகாணமான ஸ்கொட்லாந்தின் பிரிந்து போகும் உரிமைக்காக 2014 புரட்டாதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பை கவனத்தில் கொள்வது நல்லது. இவ்வாக்கெடுப்பு பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டியது.  ஸ்கொட்லாந்து மக்களுக்கு கூடிய உரிமைகளுடன் கூடிய சுயாட்சியை வழங்கி அவர்களை தம்முடன் இருக்குமாறு வாக்களிக்கும் படி பிரித்தானியா தூண்டியது.  அதில் வெற்றியும் கண்டது.  பெரும்பான்மை ஸ்கொட்லாந்து மக்கள் பிரித்தானியாவடன் தொடர்ந்து வாழ சம்மதித்தனர். இது இலங்கைக்கு ஒரு முன்னோடிப் பாடத்தை வழங்கியுள்ளது.

மறுபக்கத்தில், குர்திஸ்தான் மற்றும் கடலோனியா வாக்கெடுப்புக்கள் ஈழத்தமிழரின் ஜனநாயக ரீதியான உரிமைப் போராட்டத்துக்கு நல்ல முன்மாதிரிகளாகும்.  குர்திஸ்தான் மக்கள் தம்மைச் சூழவுள்ள ஈராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக நீண்ட காலமாக தளராமல் போராடி வந்துள்ளனர்.  நவீன வரலாற்றில் 1920களிலிருந்தே பல எழுச்சிகளையும் அடக்குமுறைகளையும் வீழ்ச்சிகளையும் கண்டவர்கள்.  சர்வாதிகாரி சதாம் ஹசைனால் விச வாயுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுத்தவர்கள்.  வீழ்ந்த போதும் மனம் தளராமல் மீண்டெளுந்து போராடி இந்த நிலையை அடைந்துள்ளார்கள்.  அவர்கள் வரலாற்றிலிருந்து நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைச் சூழவுள்ள நாடுகளின் அடக்குமுறை அரசியலை தளர்ந்து போகாத நம்பிக்கையுடனும் விவேகத்துடனும் விடாமுயற்சியுடனும் ஜனநாயக ரீதியில் முறியடிக்க வேண்டும்.

அதே போன்று கடலோனிய மக்கள் பலம் பொருந்திய ஸ்பெயின் அரசாங்கத்தையும் நவீன மயமாக்கப்பட்ட ஜனநாயகப் போர் முறைகளூடாக ஆட்டங்காண வைத்திருக்கிறார்கள்.  மாறிவரும் உலக அரசியலில் ஜனநாயக ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு இவ்விரு வாக்கெடுப்புக்களிலிருந்து நாமும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

லிங்கம்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.