வேண்டும் விடுதலை


தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கிளர்ந்தெழும் தமிழ் சமூகம்

தங்களது வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம,; தங்களது வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றிற்கோ அல்லது யாழ்ப்பாண நீதிமன்றிற்கோ மாற்றியமைக்குமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

 கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மூன்று அரசியல் கைதிகளதும் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசியல் கைதிகள் மூவரதும் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மூன்றாவது தடவையாக மூன்று அரசியல் கைதிகளும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் முக்கிய மாவட்டமான யாழ். குடாநாட்டில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் முனைப்புப் பெற்றுள்ளன.

 யாழ். கிழக்கு பல்கலைக்கழக சமூகங்கள் பூரண ஆதரவு 

 யாழ். பல்கலைக்கழக சமூகம, உண்ணாவிரதமிருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்து வருகின்றது. குறித்த அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பல்கலைக்கழக சமூகங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 

இதற்கமைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து இம்மாதம் 4 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தன. இதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக சமூகம் ஆரம்பித்து வைத்தது. 

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்தவித விசாரணையுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகள் செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்களைப் பிரயோகித்து கைதிகளின் விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. 

அன்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுகூடிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவ ஒன்றியங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக 'அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்றாதே!', 'சிங்கள அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி! தமிழ் அரசியல் கைதிகளுக்கு வேறொரு நீதியா??', இது தான் உங்கள் நல்லாட்சியா!', கைதுகளுக்குப் பொறுப்புக் கூறுவது யார்?', 'தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்' உள்ளிட்ட மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பல்வேறு சுலோகங்களைக் கைகளில் தாங்கியிருந்ததுடன் பல கோஷங்களையும் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியற் கைதியாகவிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள எஸ்.கோமகன், அரசியற் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

 உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் செவிமடுத்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையையும் துரிதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை யாழ்.பல்கலைக்கழக சமூகம் சார்பாக முன்வைக்கிறோம். எமது கோரிக்கைகளை அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தினை மாற்ற வேண்டிவரும் என கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவாக உரையாற்றிய பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் வி.அனுராஜ் கருத்துத் தெரிவித்திருந்தார்.

 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை(17) முற்பகல் ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான குறித்த போராட்டம் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அன்றைய தினம் பிற்பகல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மாணவ ஆலோசகர்கள் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடும் போது உரிய அழுத்தங்களை வழங்குவதாகத் தெரிவித்ததையடுத்தே குறித்த போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 19 ஆம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பும் திருப்தியளிக்கவில்லை எனவும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக வகுப்பு புறக்கணிப்பு தீர்மானத்தினை கொண்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 20 ஆம் திகதி அறிவித்துள்ளது. இதேவேளை ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை முற்றிலும் சோர்வடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்தை அடைந்து அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனைத்தப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

 ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் 

 ஐப்பசி மாதம்-07 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். நல்லூரில் 18 அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் அரசியல் கைதிகள் தொடர்பாக ஒன்று கூடிக் கலந்துரையாடின. இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலான கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

 அந்தக் கடிதத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதனால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறும், அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசியல் தீர்மானமெடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்கள் சட்டமா அதிபர் திணைக்களம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீதி அமைச்சு ஆகியவற்றிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை குறித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து நியாயமான பதிலெதுவும் வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகள் அனைவரது விடுதலையை வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கடந்த-09 ஆம் திகதி முற்பகல் யாழ். நகரில் நடைபெற்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

 மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு சுலோகங்களைத் தாங்கியிருந்ததுடன் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திக் கோஷங்கள் பலவற்றையும் எழுப்பினர். இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கெதிராகவும், இலங்கை அரசாங்கத்திற்கெதிராகவும் பல்வேறு கோஷங்கள் ஆக்ரோஷமான முறையில் எழுப்பப்பட்டன.

 இதன் போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகப் பொதுமக்களின் பெருவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வீதி மறியல் போராட்டமும் முற்பகல்-11.30 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

 போராட்டத்தின் நிறைவில் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் முன்னெடுத்த அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் நாட்களிலும் தொடர வேண்டுமா என்பது குறித்து உடனடியாக அரசாங்கம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இல்லாவிடில் போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தமிழ்மக்கள் தள்ளப்படுவார்கள். அந்த நிலையை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

 இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் அமைப்பாளர் அருட்தந்தை சக்தி வேல் கருத்துத் தெரிவிக்கையில், உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வேதனை எங்களால் எளிதில் தாங்க முடியாததொன்று. உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகள் மூவருடையதும் கோரிக்கைகள் நியாயமானவை. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சமத்துவமான நீதி வழங்கப்பட்டுள்ளது என்றால் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியற் கைதிகளுடைய கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகள் தொடர்பாக உறுதியான தீர்மானம் மேற்கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

 இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக சிவப்பு மையினால் தமது பெருவிரல் அடையாளத்தைப் பதிவு செய்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த அடையாளத்தை நாங்கள் இரத்தத்தினால் வைப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் யாருக்கும் எதிரான போராட்டமல்ல. தமிழ்மக்களுடைய எதிர்காலத்திற்காகவும், அவர்களின் அரசியலைப் பாதுகாப்பதற்காகவுமே வீதியில் இறங்கிப் போராடுகின்றோம் என்றார். 

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கடந்த 13ஆம் திகதி வடமாகாணம் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக சமூகமும் பூரண ஆதரவு வழங்கியிருந்தது.

 20 வரையான தமிழ்க் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுத்திருந்தது. இதற்கமைவாக குறித்த ஹர்த்தால் அனுஷ'டிக்கப்பட்டது.

 வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் வீதி மறியல் போராட்டம்
இதேவேளை கடந்த-13 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட பொதுமக்கள் ஏ-09 பிரதான வீதியை மறித்து வீதி மறியல் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்திப் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். 

ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு கடும் எதிர்ப்பு: 
கறுப்புக் கொடி காட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

 வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த்தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாசார விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக விழா இடம்பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த கே.கே.எஸ். பிரதான வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நோக்கிப் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்துள்ளார்.

 இதன் போது ஜனாதிபதிக்கெதிராகவும், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரத்துக் கோஷம் எழுப்பியுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியின் வருகைக்கெதிராகக் கறுப்புக் கொடிகளும் காட்டியுள்ளனர்.

 "ஜனாதிபதி மைத்திரிபால வாகனத்தில் இருந்து இறங்கி வந்து போராட்டக்காரர்களை சந்தித்தார் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பம்மாத்து. எந்தவொரு அரச தலைவரும் தனது பாதுகாப்பு தொடர்பில் அப்படி அக்கறையற்று இருக்க அவரே நினைத்தாலும் முடியாது. ஆகவே இந்த மாதிரியான 'Photo Opportunity' தருணங்கள் எல்லாம் முற்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்பதை அறிக. தமிழ் மக்களுக்கும் சரி சர்வதேசத்திற்கும் சரி 'engage' பண்ணுகிறேன். (பேசுகிறேன்) என்று காட்டினால் போதும் என மைத்திரி நம்புகிறார். சர்வதேசத்திற்கு போதும் தான். முகப்புத்தக பதிவுகளைப் பார்த்தால் தமிழ் மக்களுக்கும் இந்த பெரிய மனசுக்காரன் இமேஜ் போதும் போல இருக்கு"என கருத்து வெளியிட்டிருந்தார் யாழ்.பல்கலைக்கழக சடடத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன். 

"அரசியல் கைதிகள் தொடர்பாகவும் இதுவரை ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே நாம் உங்கள் வருகைக்கு எதிராகப் போராட்டம் நடாத்தினோம்" என சுரேஷ;பிரேமச்சந்திரன் ஜனாதிபதியிடம் கூறினார். அதன்போது தான் இது தொடர்பில் வெகு விரைவில் கலந்துரையாடல் நடாத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார.; தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுங்கள். அதன் பின்னர் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடித் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என சுரேஷ; பிரேமச்சந்திரன்; பதிலளித்துள்ளார். இதனையடுத்துப் பதிலெதுவும் கூறாமல் ஜனாதிபதி அங்கிருந்து சென்றுள்ளார்.

 ஜனாதிபதி அங்கிருந்து விழா மண்டபத்திற்குச் சென்ற பின்னரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுள்ளது. 'மைத்திரியே வெளியேறு', 'அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று', 'அரசியற் கைதிகளை விடுதலை செய்' உள்ளிட்ட பல்வேறு கேஷங்கள் எழுப்பியும், கறுப்புக் கொடிகள் காட்டியும் இதன் போது எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி மண்டபத்தில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகி இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட்ட போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். எனினும், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த போது சுமார் ஐந்து நிமிடங்கள் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகினர். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து ஓய்ந்த பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகக் கோஷமெழுப்பினர். இதனையடுத்து முற்பகல்- 11.15 மணியளவில் எதிர்ப்புப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.

 நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் பல்வேறு அழுத்தங்களையும் மீறி ஜனாதிபதிக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

 ஜனாதிபதியுடனான சந்திப்பு திரும்பதியளிக்காத நிலையில் அவரது விருந்துபசாரத்தை தாம் புறக்கணித்த நிலையில் அன்று மாலை இடம்பெற்ற தீபாவளி இராப்போசனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டிருந்தமை அதிருப்தியளிப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 மைத்திரி-ரணில் கூட்டரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வரும் கூட்டமைப்பின் தலைமை நினைத்திருந்தால் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு எப்போதோ தீர்வு பெற்றுத் தந்திருக்க முடியும். தற்போது உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை காரணமாகவும், மக்களின் போராட்ட எழுச்சி காரணமாகவும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாகக் கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைக்குக் கூட்டமைப்பின் தலைமை தள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் ஆதரவாக வெறும் கருத்துக்கள் கூறுவதையும், அறிக்கைகள் வெளியிடுவதையும் விடுத்து உடனடியாகச் செயலில் இறங்கியாக வேண்டிய தருணமிது. மாறாக உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காத நிலையில் அவர்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான முழுப் பொறுப்பையும் கூட்டமைப்பின் தலைமையே ஏற்க வேண்டி வரும். இதனால், தமிழ்மக்களின் மாறாத கோபத்திற்கும், வெறுப்பிற்கும் கூட்டமைப்பின் தலைமை ஆளாக வேண்டி வரும்.

  செல்வநாயகம் ரவிசாந்- 
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.