கல்முனை மாநகர சபையின் எதிர்காலம் பற்றிய ஒரு கண்ணோட்டம்!




திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிஅதிகார சபைகளுள் கல்முனை மாநகர சபையானது சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் கல்முனை மாநகரானது மிகப் பழைமையான புராதன நகரங்களில் ஒன்று. கல்வி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து விடயங்களுக்கான கேந்திரநிலையம். தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவினமக்களும் இப்பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றனர்.

முன்னைய காலங்களில் கிராம சபையாகவும், பட்டின சபையாகவும், நகர சபையாகவும் விளங்கிய இது 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகள் திருத்தச் சட்டத்திற்கு இணங்க மாநகர சபையாக மாற்றப்பட்டது. முன்பு கல்முனையானது தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் நகரப் பகுதியை உள்ளடக்கியதுமான உள்ளூராட்சி சபையாகவே காணப்பட்டது. பின்னர் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் முஸ்லிம்கள் மட்டும் அதிகளவில் செறிந்து வாழும் கல்முனைக்குடி பிரதேசங்களும் இதனுடன் இணைக்கப்பட்டன. இதனால் தற்போது இங்கு பெரும்பான்மையாக முஸ்லிம்களும் அதற்கடுத்து தமிழர்களும் வாழ்கின்றனர். மிகமிகக் குறைந்தளவில் தமிழ்ப் பகுதிகளில் சிங்களமக்களும் வாழ்கின்றனர்.

தற்போது 2017 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்படி, எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இம் மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையில் புதிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எளிய பெரும்பான்மை முறையும், விகிதாசார முறையும் கலந்த கலப்புத் தேர்தல் முறையிலேயே நடைபெறவுள்ளது. கல்முனை மாநகர சபை 23 வட்டாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் விபரங்கள் அட்டவணையாக அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்துக்கு ஒருவர் என 22 வட்டாரங்களில் 22 அங்கத்தவர்களும் எஞ்சிய ஒரு வட்டாரத்துக்கு (12 ஆம் வட்டாரம்) இரு அங்கத்தவரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கிணங்க இங்கு 24 பேர் வட்டாரமுறையில் தெரிவு செய்யப்படுவர்.  மேலும் 16 பேர் விகிதாசார பட்டியலினூடாக தெரிவு செய்யப்படுவர்.  இதன்படி மொத்தம் 40 பேர் தெரிவு செய்யப்படுவர்.

இம்மாநகர சபை எல்லைக்குள் வாழும் மொத்தவாக்காளர் தொகை 74944 ஆகும். இவ்வாக்குகளை இன ரீதியில் நோக்கினால் இங்கு 54078 முஸ்லிம் வாக்காளர்களும், 20666 தமிழ் வாக்காளர்களும் உள்ளனர். சுமார் 200 அளவில் சிங்கள வாக்காளர்களும் உள்ளனர். சாய்ந்த மருது மக்கள் தங்களுக்கு தனிப் பிரதேச சபை கேட்டு அது கிடைக்காமையால் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுகின்றனர். முஸ்லிம் வாக்குகளுக்குள் அவர்களின் வாக்குகள் 19306 என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், நான்கு சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 559 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் இங்குதான் போட்டியிடுகின்றனர். புதிய தேர்தல் சட்டத்திற்கிணங்க ஒவ்வொரு கட்சியில் இருந்தும், சுயேச்சைக் குழுக்களில் இருந்தும் தனித்தனியே 13 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களில் 25 வீதம் பெண்களாக இருக்க வேண்டும். எனவே இம் மாநகர சபையில் 10 பெண்கள் கட்டாயம் இடம்பெறவுள்ளனர்.

இங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகளாவன, 1.) ஐக்கிய தேசியக் கட்சி, 2.) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, 3.) இலங்கை தமிழரசுக் கட்சி, 4.) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 5.) தேசிய காங்கிரஸ், 6.) தமிழர் விடுதலைக் கூட்டணி, 7.) மக்கள் விடுதலை முன்னணி, 8.) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, 9.) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்முனையின் தேர்தல் கள நிலவரங்களைப் பார்ப்போமாயின் 12 ஆம் வட்டாரம் இரு இனங்களுக்கும் சவால் மிக்கதாக விளங்குகின்றது. ஏனெனில் இது இரட்டை அங்கத்தவர் கொண்ட கிட்டத்தட்ட இரு இன வாக்காளர்களும் சரிசமமாக வாழும் பிரதேசமாகக் காணப்படுகின்றது.  ஒரு வாக்கு வித்தியாசமேயானாலும்  தேர்தல் சட்டத்தின்படி வெல்லும் கட்சிக்கே இரு உறுப்புரிமையும் வழங்கப்படவுள்ளது. இது இத் தேர்தல் முறையின் மிகப் பாரிய குறைபாடாகவுள்ளது. எப்படியோ ஒரு இனம் இதனால் பாதிக்கப்படுவது உறுதி.

உண்மையில் இதுவும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் தான் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மேலுள்ள 12 ஆம் வட்டாரபிரிப்பில் அதில் சேர்க்கப்பட்டுள்ள கல்முனைக்குடி 01 இலும், கல்முனை 03 முஸ்லிம் பிரிவிலும் உள்ள முஸ்லிம் வாக்காளர் தொகை ஒரு தனி வட்டாரத்திற்குப் போதுமானதாகும். ஏனைய பகுதிகள் ஒரு தனி தமிழ் வட்டாரத்திற்குப் போதுமாகும். நிலத் தொடர் அடிப்படையிலும் இதுவே சரியானது. ஆனால் தமிழர் பிரதேசத்தில் இருக்கும் நகரப் பகுதியை சொந்தம் கொண்டாடுவதற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அரசாங்கத்தினூடாக இவ் வேலையைச் செய்துள்ளனர். தமிழ்த் தலைமைகளும் இதில் அக்கறை கொள்ளவில்லை. எனவே இங்கு இரண்டு உறுப்புரிமையையும் தமிழர்கள் பெறவேண்மாயின் இவ் வட்டார தமிழ் வாக்காளாகள் ஒன்றிணைந்து தமது வாக்குப் பலத்தைக் காட்டவேண்டும்.

அடுத்த விடயம் இம் மாநகர சபையில் ஆட்சியமைக்க ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு 20 ஆசனங்களுக்கு மேல் பெற வேண்டும். ஆனால் கள நிலவரங்களின்படி எந்தக் அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ அவ்வாறு பெறக் கூடியநிலையில் இல்லை. ஒன்று ஒரு முஸ்லிம் கட்சியுடன் ஒரு தமிழ்க் கட்சி சேரவேண்டும். அல்லது சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் கட்சியுடன் இணைய வேண்டும். சிலவேளை இரண்டு கட்சிகள் இணைந்தோ அல்லது கட்சியுடன் சுயேச்சைக் குழு இணைந்தோ 20 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாது போகலாம். எனவே இம்முறை கல்முனை மாநகரசபைத் தேர்தல் முடிவுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கப் போவது என்னவோ உண்மைதான்.

அத்துடன் சாய்ந்தமருது மக்களும் தங்களதுபலத்தை இத் தேர்தலில் நிரூபிக்கத்தான் போகின்றார்கள். அதாவது கல்முனை முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அவர்கள் பாடம் புகட்டப் போகின்றார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் இத்தேர்தல் முறையினால் இங்கு தமிழர்களும் ஆட்சியமைக்கும் சக்தியாக திகழப் போகின்றார்கள்.

இத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் கடந்த கால உள்ளூராட்சிசபைத் தேர்தல்களில் ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள் இங்கு வாக்களித்த வீதம் மிகக் குறைவாகும். மேலும் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதும் தமிழர்கள்தான். இச் செயற்பாடுகளினால் இன விகிதாசாரப்படி தமிழர்கள் பெற வேண்டிய உறுப்புரிமையையும் கூட இழந்த வரலாறுகள் தான் உள்ளன. இதனால் தமிழர் பகுதிகள் அபிவிருத்தியில் மிகவும் புறக்கணிக்கப்பட்டன. எனவே முதலில் அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. அப்போதுதான் கல்முனையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் தங்களது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.



வை. சுந்தரராஜா, கல்முனை
நிமிர்வு  தை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.