பூகோளவாதம் புதியதேசியவாதம்




24.02.2018 சனிக்கிழமை  மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய பூகோளவாதம் புதியதேசியவாதம் நூல் வெளியீட்டு விழாவில் சட்டத்தரணி குருபரன் தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து தருகிறோம். 

தமிழர்கள்  சர்வதேச அரசியலைப் பார்க்கின்ற  பொழுது இரண்டு பிரதான சிந்தனை முறைமைகளைக் கருத்தில் கொள்ளலாம். ஒரு சிந்தனை முறைமையில் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஒரு சிந்தனை முன்னோடி என்றுகூட கூறலாம். சர்வதேச உறவுகளைப் பொறுத்த வரையில் அவர் ஒரு யதார்த்தவாதி. நவயதார்த்தவாதம் என்ற விடயம் இருக்கின்றது. நவயதார்த்தவாதம் சர்வதேச உறவுகளை யதார்த்தவாத அணுகுமுறையில் பார்க்கின்ற ஒரு சிந்தனைப் பரப்பின்  முன்னோடி. அதில் ஒரு புலமைத்துவ செயற்பாட்டாளராக திருநாவுக்கரசு இருக்கின்றார்.  இன்னொரு ஒழுங்கு முறை நவதாராளவாத நிறுவனமயவாதம். இந்த இரண்டுக்கும் என்ன பிரதான வித்தியாசம்?

சுருக்கமாக சாதாரண மக்களுக்கு புரியக்கூடியவாறு சொல்வதென்றால் உலகத்திலே வல்லரசுகளாக இருப்பவர்கள் மற்றும் பிராந்திய வல்லரசுகளாக இருப்பவர்கள் தங்களுக்கிடையில் நடத்துகின்ற மோதுகையினுடைய வெளிப்பாடுதான் உலக அரசியலை விளங்குவதற்கு சரியான முறைமை என்று சொல்லுபவர்கள் யதார்த்தவாதிகள். அவர்கள் சர்வதேச உறவுகளைப் பொறுத்த வரையில் ஒரு அரசற்ற தன்மை இருப்பதாக சொல்லுவார்கள். அதாவது உலகத்திலே உலக அரசாங்கம் என்று ஒன்று இல்லை; அரசாங்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால் உறவுகள் எப்படி அமையுமென்று பலவான் தான் தீர்மானிப்பான். அந்த வகையிலே யாருக்கு இராணுவ வலிமை இருக்கின்றதோ அல்லது யாருக்கு மென்வலு இருக்கின்றதோ அவர்களே சர்வதேச உறவுகளை நிர்ணயிப்பவர்களாக கொள்ளப்படுவார்கள். அல்லது யார் இந்த இரண்டையும் சேர்த்து ஜோசப் நீட் என்கிற அறிஞர் பேசுகின்ற புத்திசாதுரிய வலுவைப் (Smart Power) பிரயோகிக்கின்றார்களோ அவர்களே சர்வதேச உறவுகளை நிர்ணயிப்பவர்களாக கொள்ளப்படுவார்கள். அவர்களே சர்வதேச ஒழுங்கினுடைய  தன்மையையும் போக்கையும் நிர்ணயிப்பவர்களாக கொள்ளப்படுவார்கள். இவ்வாறு பார்க்கின்ற ஒரு போக்கு தான் தமிழ் அரசியல் சிந்தனையிலே அதிக பட்சம் பேசப்படுகின்ற சர்வதேசப் பார்வை.

எங்களுடைய பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? சீனாவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? இந்த நிலைப்பாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கூடாக  தமிழர்கள் பெற்றுக் கொண்டது என்ன? அல்லது தமிழர்கள் இழந்தது என்ன என்பதை ஆய்வு செய்வதற்கு இந்தச் சட்டகத்தைப் பயன்படுத்துவது ஒரு தரப்பு.

இன்னொரு பக்கம் நவதாராளவாத சர்வதேச உறவுகள் என்பது இன்று ஐக்கிய தேசியக் கட்சியாலும் தமிழ்கட்சி ஒன்றாலும் பின்பற்றப்படுவது.  அவர்களுடைய பார்வை என்னவென்றால் அவர்கள் சர்வதேச உறவுகள் மூலமாக தாராளவாத அரசியல் என்ற ஒரு  நிகழ்ச்சி நிரலை  முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்று நினைக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் முக்கியமான பிரச்சனை யுத்தம். யுத்தத்தை தீர்ப்பதற்கு ஜனநாயகம் ஒரு தீர்வு. ஜனநாயக சமாதானம் ஒரு தீர்வு . அந்த அடிப்படையில்தான்  ராஜபக்ஷவை அகற்றி சிறிசேனாவை கொண்டு வந்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக ஒரு எதிர்வினையிலிருந்து ஒரு நேர்முறைக்கு கொண்டு செல்லாம் என அவர்கள் நம்புகிறார்கள். இன்னொரு முக்கியமான விடயம் உலக அரசியலுக்கிடையில் போட்டி இருப்பதில்லை. ஒன்றின் மீது ஒன்று தங்கியிருப்பது தான் அதிகரித்து வருகின்றது என்ற ஒரு பார்வையை அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

உலகத்தினுடைய ஒழுங்கை ஐ.நா. மற்றும் மனித உரிமை பேரவை போன்ற நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன என அவர்கள் சொல்லுகின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இந்த ஒழுங்குக்கு உரியவர்களாக சொல்லலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உண்மையிலே இந்த ஒழுங்குக்கு உரியவர்களா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.  அவர்கள் பேசுகின்ற மென்வலு தொடர்பாக அவர்கள் உண்மையிலேயே விளக்கத்துடன் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இந்த இரண்டு அணுகுமுறைகளில் ஒன்று நாங்கள் சர்வதேச உறவுகளில் தாராளவாதம் அதாவது டiடிநசயட எயடரநள தான் முக்கியம் என்று நினைப்பது. அதனை முன்வைத்துக் கொண்டு அமெரிக்கா எங்களுக்கு போர்க்குற்ற விசாரணை செய்யப்போகிறது; மனிதஉரிமை மீறல்களில் நாட்டம் கொள்ளப்போகிறது; அதை ஒரு விஷயமாக எடுத்து ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையிலை நடவடிக்கை எடுக்கப்போகிறது  அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலை நடவடிக்கை எடுக்கப்போகிறது; என்கின்ற நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டு இந்த அணுகுமுறை வேலை செய்கிறது.

மற்றையது யதார்த்த வாத அணுகுமுறை. இந்தியாஇ சீனா, அமெரிக்க நலன்கள் என்ன என்பதை விளக்கிக்கொள்ள முயற்சிப்பது; அந்த நலன்களின் அடிப்படையில் தமிழர்களின் நலன்களை எவ்வாறு முன்னேற்றுவது என்ற பார்வையை வைத்திருப்பது.

இந்த இரண்டிலுமே பிரச்சினைகள்  இருக்கலாம். இந்த இரண்டாவது ஒழுங்குக்குரியவர் தான் திருநாவுக்கரசு. அவருடைய முடிவை 265 பக்கத்தில் புத்தகத்தின் நடுவில்  பார்க்கலாம். பொதுவாக சமூகவிஞ்ஞானிகளை பொறுத்தவரைக்கும் வருமுன்கூறுதலில் (Prediction) ஈடுபடக்கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது என்ன நடக்கும் என்ற எதிர்வுகூறலை நாங்கள் செய்யக்கூடாது. என்ன நடக்க வேண்டும் என்ற விபரிப்பைத் தான் நாங்கள் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். நான் அதனை பாராட்டுவேன். இந்த நூல் வெறுமனே புலமைத்துவ நூல் அல்ல. செயற்பாட்டுவாதத்தை ஊக்குவிக்கும் நூலும் அல்ல.  புலமைத்துவ நூலிற்கும் செயற்பாட்டுவாதத்தை ஊக்குவிக்கும் நூலுக்கும் இடைப்பட்ட கட்டத்தில் நிற்கின்றது. ஒரு முழுமையான புலமையான நூலுக்கு செல்வதற்கான வாய்ப்பிருந்தாலும் அதனைச் செய்யாமல்,  என்ன செய்யப்பட வேண்டும் என்பதை சொல்லுகின்ற ஒரு தன்மையும் இந்த நூலில் இருக்கின்றது. படித்தவர்களும் அரசியல் புலமைத்துவம் உள்ளவர்களும் தான் இதனை வாசிக்க வேண்டும்; வாசித்து விளங்க முடியும்; என்று எண்ண வேண்டாம். ஏனெனில் இது முழுமையான புலமைத்துவ நூல் அல்ல. சாதாரணமாக யாருமே வாசிக்கக் கூடிய ஒரு நூலாகத்தான் இருக்கின்றது.

இதில் அவர் சொல்லுகின்ற முடிவு என்ன? 'கிட்டிய எதிர்காலத்தில் இலங்கைத்தீவு  இரண்டாக உடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை வரலாற்று வளர்ச்சி விதி உணர்த்துகின்றது. அமெரிக்காவின் பரந்த பூகோளநலன், இந்தியாவின் பிராந்திய நலன், ஈழத்தமிழரின் குறைந்த பட்ச உயிர்வாழும் நலன் எனும் மூன்று நலன்களும் ஒன்று சேர்த்து ஒரு நேர் கோட்டில் வரும்போது இலங்கைத்தீவு இரண்டாய் உடையும். இது விருப்பு வெறுப்பிற்கு அப்பாலான வரலாற்று நியதி என்று சொல்கிறார். இது நடக்க சில பத்தாண்டுகள் (decades) ஆகலாம்'.

இந்த முடிவை நாம் விமர்சனப்போக்கோடு பார்க்க வேண்டும். இந்த மோதுதலின் விளைவாக இந்த மூன்று தரப்புகளின் நலன்களும் ஒரு கோட்டுக்குள் வரும்போது நாங்கள் விரும்புகின்ற தீர்வு வரும் என்று அவர் சொல்வது சரியா? அது மட்டுமே எங்களுக்கு விடிவைப் பெற்றுத்தருமா? இது தொடர்பாக பார்க்க வேண்டியது அவசியம். பூகோள அரசியல் தொடர்பான பார்வையில் முழுமையாக ஆழ்ந்து அதுதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் தன்மையுள்ளது என்று மு.திருநாவுகரசு சொல்லுகின்றாரோ என்ற ஐயம் எனக்கு வருகின்றது.

அப்படி பார்த்தால் நாங்கள் இன்று இருக்கின்ற சர்வதேச உறவுகளின் சிக்கல்த் தன்மையை (complexnature) கவனத்தில் கொள்ளாமல் விடுகிறோம். ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையில் பணப்பரிமாற்று கண்காணிப்பு செயலணி (finacial task force) என்ற ஒன்று இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு அரசுகள் நிதிகளை வழங்குகின்றனவா என்பதனை மேற்பார்வை செய்வது தொடர்பான ஒரு செயலணி தான் அது. அந்த செயலணியிலே இந்தியா உறுப்பினராக இணைந்து கொள்கின்றது. பாகிஸ்தானை ஒரு கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று சொல்லி ஒரு முன் வைப்பை வைக்கின்றது. முதலாவது வாக்கெடுப்பிலே பாகிஸ்தானும் பாகிஸ்தானுக்கு சார்பாக சீனாவும் சவுதிஅரேபியாவும் இன்னும் பல நாடுகளும் வாக்களிக்கின்றன. மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தாலே பாகிஸ்தானை அந்தக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடியாது. அதை தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவிடம் சொல்லுகிறது, நான் சவுதி அரேபியாவை பார்த்துக் கொள்கிறேன், நீ சீனாவை பார்த்துக் கொள் என்று. சீனாட்டை இந்தியா போய் சொல்லுகிறது பாகிஸ்தானை இந்த பட்டியலில் சேர்க்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று. தெற்காசிய அரசியல் பற்றி குறைந்த பட்ச விளக்கமும் இங்கிருப்பவர்களுக்குத் தெரியும் பாகிஸ்தானும் சீனாவும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று. ஆனால் சீனாவிடம் போய் இந்தியா சொல்லுகிறது உங்களுக்கு பணப்பரிமாற்று கண்காணிப்பு செயலணியில் இன்னும் முக்கியமான பொறுப்புக்களை தருவதற்கு இந்தியா உங்களுக்கு ஆதரவளிக்கும்;  பாகிஸ்தானை இந்த பட்டியலில் சேர்ப்பதற்கு நீங்கள் சம்மதியுங்கள் என்று. சீனா அதற்கு உடன்பட்டு பாகிஸ்தானை அந்த பட்டியலில் சேர்ப்பதற்கு உடன்படுகின்றது. இது எங்களுடைய அரசியலின் ஒரு சிக்கல்த் தன்மை. திருநாவுக்கரசு சொல்லுகின்ற நலன்கள் ஒரு கோட்டில் வரும் என்பதை இந்த உதாரணம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அப்படி அந்த நலன்கள் சாதாரணமாக வந்து சேராது என்று உரைக்கிறது.

ஏன், இலங்கையின் உதாரணத்தை எடுத்துப்பாருங்கள். மகிந்த ராஜபக்ஷ  ஒரு சீன சார்பு வெளிநாட்டுக் கொள்கையை முன்வைத்தபடியால் அவருக்கு எதிராக செயற்பட்டு  அவரை நீக்க வேண்டுமென்ற முடிவு சரியெனக் கருதப்பட்டது. அதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபட்டன. உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமல்லஇ ரொய்ட்டர் போன்ற சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை எங்களுக்குச் சொல்லுகின்றன. ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவினுடையதும் இந்தியாவினுடைய பங்கும் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. சீனாவை விட்டு விலகி ரணில்விக்ரமசிங்க வருவாரா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். இந்தியாவினுடைய பிரதான மூலோபாய தத்துவவியலாளராக கருதப்படுகின்ற பேராசிரியர் பிரமசெலணி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சீனாவினுடைய அணுகுமுறை எப்படியாயிருக்குமென்றால் வறிய நாடுகள் அல்லது நிதி தொடர்பாக இறுக்கமாக இருக்கக்கூடிய நாடுகளை வளைத்துப்போடுவதற்காக அவர்களுக்கு கடன்மீது கடன் வழங்கி அந்தக் கடனை செலுத்த முடியாத ஒரு நிலைக்கு கொண்டு வந்து அதன் பின்னர் அவர்களை அந்த அரசியலுக்கு சார்பாக கொண்டு வருவது என்ற போக்கை சீனா காட்டி வருகின்றது. அந்த அடிப்படையில்தான் டிசெம்பர் 2017இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை  அமெரிக்க சார்பாகக் கருதக்கூடிய ரணில்விக்ரமசிங்க அரசாங்கம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு அளிக்கின்றது. மாலைதீவிலே தாங்கள் கட்டமுடியாத கடனுக்காக ஏழு தீவுகளை சீனாவிற்கு தாரைவார்த்துக் கொடுக்கின்றது மாலைதீவு அரசாங்கம். மாலைதீவு அரசாங்கத்திலே உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குகின்ற ஒரு செயன்முறை இப்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த நடைமுறையிலே தலையிட வேண்டுமென்ற இந்தியா கேட்கப்படுகிறது. அதனையடுத்து சீனாவினுடைய அதிகாரபூர்வ செய்தி ஏட்டிலே செய்தி ஒன்று வருகின்றது. தலையிட்டால் நாங்கள் அதற்கு பதில் அளிக்க வேண்டிவரும் என்று சீனா சொல்லுகின்றது. ஆகவே இதை எப்படி விளங்கிக்கொள்வது? ரணில்விக்ரமசிங்க 'அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நான் உங்களுக்குத்தான் முதன்மை அளிக்கின்றேன். அதே நேரம் சீனாவிற்கும் முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது' என்கிறார். மீள மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் அவர் 'முன்னைய ஆட்சியில் இந்தியாவை முழுமையாக பகைத்ததால்தான் அந்த ஆட்சியை இழந்தேன்.  ஆகவே இந்தியாவோடு பகைக்காத ஒரு அரசியலை முன்னெடுப்போம்' என்று நினைப்பதற்கான சாத்தியத்கூறும் இருக்கின்றது. இந்த நேர்கோடு என்ற ஒன்றுக்கு இந்நாடுகளின் நலன்கள் வாறதற்கான சாத்தியக்கூறு பற்றி திருநாவுக்கரசு இலகுவாகச் சொல்லிவிட்டு போவதுபோன்றிருக்கின்றது. இந்த நேர்கோட்டுக்குள் வருவதும் சுலபம் இல்லை என்றும் அவருக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆகவே இதன் முடிவுகளை வாசிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் தமிழர்களுடைய பாராளுமன்றத் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒரு நவதாராளவாத போக்கில் ஐக்கிய நாடுகளுடைய பேரவையும் ஐக்கிய நாடுகளுடைய அமைப்புக்களும் எங்களுக்குத் தீர்வை பெற்றுத் தந்துவிடும் எங்களுக்கு உரிமைகளை பெற்றுத்தந்துவிடும் என்ற நம்பிக்கை. உண்மையில் பார்த்தால் இன்று தமிழர்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அந்த நம்பிக்கையில் தானும்  இல்லை. அவர்களிடம் குறிப்பாக சர்வதேச அரசியல் தொடர்பான  பார்வையில் ஒரு வறுமைத்தனம் இருக்கின்றது.

மென்வலு தொடர்பாக மயக்கம் இருப்பதாகச் சொல்லுகின்றேன். சர்வதேச நிறுவனங்களை நோக்கின எமது அரசியல் பற்றி திரு.நிலாந்தன் அவர்கள் சிறப்பாக எழுதியிருக்கின்றார்.  'சர்வதேசத்தை நோக்கிய காத்திருப்பு அரசியலை தமிழ்மக்கள் செய்கின்றார்கள்' என்று எழுதியிருக்கிறார். நல்லதொரு வார்த்தை பிரயோகம். ஆண்டுக்கொரு திருவிழா ஜெனிவாவில் நடக்கின்றது. அதிலை காவடி தூக்கினம் எங்களுடைய அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புக்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்த திருவிழாவில் சமூக செயற்பாட்டாளர்களும் புலம்பெயர் அமைப்புக்களும் பங்கேற்கின்றன. புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரைக்கும் பிரதானமாக தங்களுடைய நாட்டினுடைய  அரசாங்கங்களினுடைய பார்வைக்காக ஏங்கிநிற்கின்ற அமைப்புக்களாத்தான் பெரும்பாலும் இருக்கின்றவே தவிர அவைக்கென்று ஒரு சிந்தனையும் அங்கு இல்லை. இது தான் உண்மையான எங்களுடைய நிலமை.

தமிழ் மக்களுக்கு உண்மை நிலமை விளங்குகிறது. போட்டியான சக்திகள் விளங்குகிறது. சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் மோதுகின்றநிலை அந்த மோதலின் விளைவாகத்தான் எங்களுடைய அரசியல் நிர்ணயிக்கப்படும் என்றும் விளங்குகிறது. அப்படி இருந்தும் நாங்கள் சொல்லுகின்றோம் சர்வதேசம் எங்களை பாதுகாக்க வேண்டுமென்று. இதை எப்படி விளங்கிக் கொள்வது. சர்வதேசம் எங்களை கைவிட்டிருக்கின்றது.

சர்வதேசம் என்று ஒற்றையாக சொல்வதே பிரச்சனை. பல்லினமானதுதான் சர்வதேசம். ஆனால் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட தமிழினம் சர்வதேச சக்திகளுக்காகக்காத்திருந்து தொடர்ந்து அழிவுகளைச் சந்தித்து வருகிறது. தமிழினம் மத்தியில் தொடர்ந்து சர்வதேசம் தங்களை பாதுகாக்க வரும் என்ற நம்பிக்கை எவ்வாறு எழுகின்றது? விடுதலைப்புலிகள் கூட 2009இல் அப்படியான ஒரு காத்திருப்பில் இருந்தார்கள் என்று திருநாவுக்கரசு குறிப்பிட்டிருக்கின்றார்.

எங்கள் எல்லாருக்கும் தெரியும் சர்வதேசங்கள் தங்களுடைய தேசிய நலன்களின் அடிப்படையில்தான் செயற்படுகின்றார்கள் என்று. ஆனால் அதே நேரம் அவர்களை நம்பி தொடர்ந்து காத்திருப்பு அரசியலைச்  செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.  இங்கே எமது விளங்கிக் கொள்ளல் ஒன்றாகவும் செயற்பாடு வேறாகவும் உள்ளதே என்று யோசிக்கத் தோன்றுகிறது.

எது சரி என்பது சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் பொறுத்துதான் இருக்கும். ஆகவே தூய சரி என்று ஒன்று இல்லை என்கிறார் திருநாவுக்கரசு. ஆனால் சிவராம் சொல்லுகின்றார் 'நாங்கள் எங்களுடைய போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டுமென்றால்  உலகத்திலுள்ள ஒடுக்குமுறைக்கு உட்பட்ட சமூகங்களும் படிக்கக் கூடியவாறு அந்த சமூகங்களுடன் ஒத்திசைவாக ஒரு முன்மாதிரியான போராட்டத்தை நாடாத்த வேண்டும்' என்று. எங்களுடைய பிரச்சனை என்னவென்றால் ஒன்று காத்திருப்பு முழுமையாக நடக்கின்றது. அல்லது முழுமையான சரணடைவு நடக்கிறது. விமர்சன பூர்வமான  சர்வதேச நிறுவனங்களுடனான ஊடாட்டம் இல்லை.

அரசற்ற தேசம் சர்வதேச அரசியல் பற்றி யோசிக்கும் போது முதலாவதாக தீர்மானிக்க வேண்டியது எங்களுடைய தேசிய நலன்கள் என்ன? எங்களுடைய தேசிய நலன்கள் என்ன என்பதைப்பற்றி ஒரு தெளிவான பார்வை இல்லாமல் சர்வதேச நலனோடு எங்களுடைய தேசிய நலன் எப்படி உறவாடுகின்றது என்பது பற்றி நாம் பார்க்க இயலாது. போருக்கு பின்னரான சூழ்நிலையில் எங்களுடைய தேசிய நலன்கள் என்ன என்பது பற்றி தெளிவு இருக்கின்றதா என்று கேட்டால் ஒரு கேள்விக்குறியேதான் இருக்கின்றது. அடிப்படையில் தெளிவிருந்தாலும் எங்களால் தேசிய நலன் தொடர்பாக எங்களால் இறுக்கமாக முன்வைப்பை வைக்க முடியாமல் இருக்கின்றது. அந்த இறுக்கமான முன்வைப்பிலிருந்து இந்தியாவுடன் பேசலாம்; அமெரிக்காவுடன் பேசலாம்; சீனாவுடன் பேசலாம்.

ஆனால் போருக்குப்பின் எங்களுடைய தேசிய நலன் என்ன என்பது பற்றி  இந்த சமூகம் இன்னும் உரையாடவில்லை. எங்களுடைய சுயநிர்ணய போராட்டத்தினுடைய எதிர்காலம் என்ன அதனுடைய பாங்கென்ன அதனுடைய உள்ளடக்கம் என்ன என்பது பற்றி எமது சமூகம் இதுவரை உரையாடவில்லை. பழைய உரையாடல்கள் மீது நின்று கொண்டே நாங்கள் தொடர்ந்து சர்வதேசத்துடன் உறவாடலாம் என்று நினைக்கின்றோம். இதுதான் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய வறுமை என நினைக்கின்றேன். இந்தக் குழப்பத்திலிருந்து தெளிவு வேண்டுமாயின் இன்னும் உரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும். முதலாவது சர்வதேச அரசியல் தொடர்பான அண்மைக்கால நீரோட்டங்களை மிகத் தெளிவாக அவதானிக்க வேண்டும். அதனை குறிப்பிட்ட ஒரு சட்டகத்தில் மட்டும் பார்க்க முடியாது என்ற தெளிவிற்கு வரவேண்டும். ஆனால் அந்த சட்டகங்கள் தரக்கூடிய உபகரணங்களை  எப்படி அடையப்போகிறோம் என்பதனைப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது தமிழ் தேசியம் தொடர்பான ஒரு ஆழமான சமூக உள்வாங்கிய உரையாடல்இ எல்லோரையும் சேர்த்த ஒரு உரையாடல் நடைபெற வேண்டும். அந்த உரையாடல் தெளிவானால்தான் சர்வதேச அரசியலோடு நாம் பேசலாம். அவை யாவும் திருநாவுக்கரசருடைய புத்தகத்தை வாசிக்கும் போது வருமென்றால் இது எங்களுடைய தமிழ் தேசிய செயற்பாட்டு வாதம் தொடர்பான ஒரு முக்கிய நூலாகப் பார்க்கப்படலாம்.

ஆகவே தயவு செய்து எந்தப் புத்தகம் என்றாலும் விமர்சனரீதியாக பார்க்க வேண்டும். படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஆழமாக வாசிக்க வேண்டிய நூல். தமிழில் இப்படியான நூல்கள் வெளிவருவது குறைவு. இந்த நூலைப் படிப்பதுவும் அதன் வழி நாம் சிந்திப்பதுவும் தான் திருநாவுக்கரசு தனது வாழ்க்கை காலத்தில் எமது இனத்துக்கு செய்த பங்களிப்பிற்கு நாம் செய்யக்கூடிய நன்றிக்கடன்.

தொகுப்பு-விக்னேஸ்வரி
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.