தூத்துக்குடி துயரம்





வேதாந்த நிறுவனம் பிரித்தானியாவைத் தலைமையகமாக கொண்டியங்கும் ஒரு நிறுவனம். பூமியைத் தோண்டி கனிப்பொருட்களை எடுத்து அவற்றிலிருந்து உலோக மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். இவ்வுற்பத்தியின் போது உருவாகும் கழிவுப் பொருட்கள் பாதுகாப்பாக கையாளப் படாவிட்டால் சுற்றுப் புறச்சூழல் பேரளவில் பாதிக்கப்படும்.
சாம்பியாவில் (Zambia)வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான செப்புச்சுரங்கத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் அங்கிருக்கும் கவ்யு(Kafue) நதிமாசடைவதாக 2016 ஆம் ஆண்டு மக்கள் குற்றம் சுமத்தினர். அந்த ஆண்டு வைகாசி மாதம் இந்த நிறுவனத்துக்கெதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்நிறுவனம் மக்கள் நலனில் எந்தவித அக்கறையுமில்லாமல் செயற்படுவதாக குற்றம் சுமத்தியு ள்ளனர்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடா மற்றும் நியம்கிரி மலையிலிருந்து பாக்ஸைட் (bauxite) கனிமம் அகழும் சுரங்கத்தை நிறுத்துமாறு அங்கிருந்த மக்கள் போராடினர். போராடியவர்களை தீவிரவாதிகள் என்று கூறி பொலிசார் கைது செய்தனர். அப்பொழுது பொலிசுக்கும் வேதாந்த நிறவனத்துக்கும் இடையே இருந்த இணைப்பு அம்பலமானது. மக்களின் ஏகோபித்த ஜனநாயக ரீதியான எதிர்ப்பின் காரணமாக 2016 ஆம் ஆண்டு வைகாசியில் இந்திய உச்ச நீதிமன்றம் இச்சுரங்கங்களை மூடுமாறு உத்தரவிட்டது.

சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக நடத்தும் போராட்டங்கள் இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை உலகின் பல பாகங்களிலும் முடக்குவதை மேலுள்ள தகவல்கள் தெரிவிக்கன்றன.

அதேவேளை வேதாந்த நிறுவனம் ஏறத்தாழ 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் சுமையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தூத்துக்குடியில் இருக்கும் செம்பு உருக்கும் ஆலையும் மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இவ்வாலை இயங்காமையால் பெருமளவு நட்டத்தை வேதாந்த நிறுவனம் எதிர்நோக்குகிறது. கடன் சுமையில் மூழ்கியுள்ள வேளையில் இந்த நட்டம் அதனை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.  இந்த ஆலையை எவ்வாறாகினும் மீள இயங்க வைக்க ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பெரும் பிரயத்தனப்படுகிறது.
சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் மக்கள் நடத்தும் போராட்டங்களின் நியாயத்தன்மையால் இது கைகூடாமல் உள்ளது.  இந்தப் போராட்டத்தின் திசையை மாற்றி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி போராட்டத்தை மழுங்கடிக்கும் தேவை ஆட்சியாளருக்கும்  வேதாந்தவுக்கும் உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே கடந்த 22 ஆம் திகதி தூத்துக்குடியில் 12 ஜனநாயகவழிப் போராட்டக் காரர்கொல்லப்பட்ட துயரம் நடந்தது.   மக்களை வன்முறைப் பாதைக்கு இட்டுச் சென்று அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து போராட்டத்தை நசுக்குவது ஆட்சியாளர்களுக்கு ஒரு இலகுவான வழி.  ஏனெனில் ஜனநாயக ரீதியாக அவர்களால் இப்போராட்டத்தை எதிர் கொள்ள முடியாது.

ஆட்சியாளர்களிடம் இருப்பது ஆயுதங்களும் அதிகாரங்களும் மட்டுமே.  அவை அளவுக்கதிகமாகவே அவர்களிடம் உள்ளன.  அவற்றைப் பயன்படுத்துவதே அவர்களது முதலாவது தேர்வாகும்.  இதனை உணர்ந்து கொண்டு போராட்டத்தின் பாதை திசைமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.  காஷ்மீரைப் போல தமிழ் நாட்டையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வளச் சுரண்டலைத் தங்கு தடையின்றி செய்யவதே அவர்களின் திட்டம். இந்த தந்திரங்களுக்கு பலியாகாமல் இருப்பது முக்கியம். போராடும் மக்கள் ஜனநாயக ரீதியில் ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்து தமது இலக்குகளை அடைய வாழ்த்துவோம்.

நிமிர்வு  வைகாசி 2018 இதழ்



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.