ஆசிரியர் பார்வை


வரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம்

கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் எமது எதிர்கால சந்ததி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறையில் இருந்து தாளையடி வரை வாடிகளை அமைத்து தென்னிலங்கையை சேர்ந்த 14 நிறுவனங்கள் கடலட்டை பிடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெதிராக மீனவர்களும் பல்வேறு வகையான போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். ஆனால், இதற்கு நிரந்தரமான தீர்வு தான் இன்னமும் எட்டப்படவில்லை.

 தாளையடியில் எமது தமிழ் மீனவர்களின் வாடிகள் காய்ந்து போய், உரிய பராமரிப்பின்றியும், தொழில் செய்ய ஆட்கள் இன்றியும் இருந்தன. இது தொடர்பாக ஒரு தமிழ் மீனர் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியானவை. கரைவலைத் தொழிலில் பிரதானமாக ஈடுபடும் எமக்கு,  கடந்த நான்கு மாதங்களாக மீன்பிடிபாடு மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. காரணம், கடலட்டை பிடிப்பதற்கு இங்கே வாடிகளை அமைத்துள்ள தென்பகுதி மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளை கடற்கரையின்   ஓரங்களால் வேகமாக செலுத்துவதால் எங்களின் பாரம்பரிய கரை வலைகள் அறுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக அங்குமிங்கும் கரைகளில் இவர்களது படகுகள் ஓடித்திரிவதால் மீன்கள் கரையை நோக்கி வருவது தடைப்படுவதால் மீன் பிடிபாடு குறைவடைகிறது.

அதே சமயம், தென்னிலங்கை மீனவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடலட்டைகளும்  சங்குகளும் கூலர் ரக வான்களில் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன. இப்படியாக வேறும் பல பெறுமதி மிக்க கடல் வளங்களும் வரைமுறையின்றி பறி போவது தொடர்ந்தால் ஓரிரு வருடங்களில் கடல்வளம் முழுமையாக சூறையாடப்பட்டுவிடும். ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராக தொல்லியல் திணைக்களமும், வளவளப் பாதுகாப்பு திணைக்களமும் செயற்பட்டு வரும் நிலையில் தற்போது   கொழும்பிலுள்ள நீரியல் வளத் திணைக்களமும் கடலட்டை பிடிப்பதற்கான  அனுமதியை கொடுத்து தமிழர் விரோதமாக செயற்பட்டு வருகின்றமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

கடலட்டை பிடிப்புக்கு வடமட்ராசி கிழக்கிலுள்ள ஐந்து மீன்பிடி சங்கங்களும், சில தனிநபர்களும் உடன்பட்டுள்ளதாக நீரியல் வளத் திணைக்களம் குறிப்பிடுகிறது. சமாசங்கள், சம்மேளனங்களில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் பலரும் தென்னிலங்கை முதலாளிகளுக்கு விலைபோன விடயமும் மீனவர்களுடனான உரையாடல் மூலம் தெரிய வந்தது. இந்நிலை மிகவும் ஆபத்தானது. கடந்த பல வருட போரினால் கடலுக்குள் முழுமையாக இறங்காது இருந்த எம் மீனவர்கள் அன்று சிங்கள கடற்படையாலும் இன்று தென்னிலங்கை மீனவர்களாலும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக தமிழர் பிரதேசங்களில் இப்படியான கடல்வளச் சூறையாடல்கள் முழுமையாக நிறுத்தப்படுவது ஒன்றே இதனைத் தீர்க்க உள்ள ஒரே வழியாகும்.

-செ.கிரிசாந்-
நிமிர்வு யூன் 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.