ஈரானின் இராஜதந்திரமும் அமெரிக்காவின் சறுக்கலும்




சர்வதேச அரசியலில் இராஜதந்திரத்தினை சரியாகவும் திறமையாகவும் கையாளும் எந்தவொரு நாடும் தனது தேசிய சர்வதேச நலன்களை இலகுவில் தக்க வைத்துக் கொள்ளும். அந்தவகையில் ஈரான் சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட அணுவாயுத உடன்படிக்கை விடயத்தில் கைக்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் அதனை பலமான சக்தியாக மாற்றி வருகிறது. அணுவாயுத உடன்படிக்கை விவகாரத்தில் ஈரான் கைக்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளை பற்றி தேடலே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

ஈரான் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதாக கூறி அதன் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தத் தடைகள் 2015ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டன. இதற்காக, 2015 ஆம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஈரானுடன் கூட்டுச்செயல்திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்டநாடுகள் மேற்கொண்டன. அணுசக்தி ஆராய்ச்சிகளை ஈரான் நிறுத்திக் கொண்டதன் பேரில் இந்தஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் அணு ஆயுதங்களை மேற்காசிய நாடுகளுக்கோ அல்லது ஏனைய பிராந்திய நாடுகளுக்கோ விநியோகிப்பதற்கான தடையையும் ஏற்படுத்தியது.

இதனிடையே அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பதிவியேற்ற டொனாலட் டிரம்ப் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை தேர்தல் காலத்திலிருந்து கடுமையாக விமர்சித்தார். அவர் இந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டு, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரதடைகள் விதிக்கப்படும் எனவும் அச்சுறுத்தினார். அதற்கான காலக்கெடு 2018 மே 12 எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இவ்ஒப்பந்த்திலிருந்து மே 9ம் திகதி அமெரிக்கா வெளியேறுவதாக  ட்ரம்ப் அறிவித்தார். 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், சிரியா, மற்றும் மத்திய கிழக்கின் பிறபகுதிகளில் ஈரானின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அந்த ஒப்பந்தம் ஈரானின் நீண்ட தூர ஏவுகணை தயாரிப்பு முயற்சிகளை கட்டுப்படுத்தவில்லை. எனவே அந்த ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது. ஆகையால் அதைவிட சிறப்பான ஒரு ஒப்பந்தம் உருவாக்கலாம் என்றார்.

ட்ரம்பின் இவ் அறிவிப்பின் பின்னால் மேற்காசியாவை மையமாக கொண்டஅமெரிக்க-இஸ்ரேல் கூட்டு சார்ந்த நலன்கள் உள்ளன. இக்கூட்டு ஈரானை கட்டுப்படுத்துவதற்கான ஒரு இராஜதந்திர நடவடிக்கையாகவேஅணுவாயுத ஒப்பந்தத்தை கையிலெடுத்தது.

அந்த இராஜதந்திர நடவடிக்கையை முறியடிக்க ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகளில் முதலாவது அது அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து உடனடியாக விலகாமல் இருந்தமையாகும். இதன் மூலம் ஏனைய ஒப்பந்த நாடுகளுடன் நல்லுறவையும் நற்மதிப்பையும் ஈரான் ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுடனான நட்பின் மூலம் ஈரான் வலுவடைந்தது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்க நட்புநாடுகளான பிரித்தானியஇ பிரான்ஸ், ஜேர்மனி என்பன இதலிருந்து விலகாததுடன் அமெரிக்காவின் வெளியேற்றத்தினையும் கண்டித்திருந்தனர். அமெரிக்கா ஈரானுடான ஒப்பந்தத்திலிருந்து விலகியதால் மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் கவலைதெரிவித்திருந்தார். இது அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய அறிவித்தலை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தத்திலிருந்து விலகாமால் இருப்பற்கு ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டன. இது மேற்காசிய பிராந்தியத்திலும் உலக அரசியலிலும் ஈரானின் அரசியல் ரீதியான அந்தஸ்தினை உயர்த்தியுள்ளது. ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகாமல் இருந்ததன் மூலம் அது அடைந்த இராஜதந்திர வெற்றியாக அரசியல் அவதானிகளால் இது பார்க்கப்படுகிறது.

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்ததை காக்க ரஷ்சிய அதிபர் விளாடிமீர் புடினும் ஜேர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்கலும் உறுதி பூண்டனர். பிராந்திய மற்றும் உலக அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அந்தஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்பதை மீண்டும் வலியுறுத்திய இருவரும்அந்தஒப்பந்தத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறி கொண்டனர். ஐரோப்பாவுக்குள் எழுந்துள்ள கருத்துப் பரிமாற்றம் ஈரானின் இராஜதந்திர அரசியலை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது. ஈரானை விட ஏனைய நாடுகள் அவ்வொப்பந்தம் தொடர்பாக கரிசனையுடன் இருப்பதும் அது தொடர்பான சந்திப்புக்களை  மேற்கொள்வதும்  நன்மையானதே. ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டாலும் அதனால் வரும் நெருக்கடிகளுக்கும் சவாலகளுக்கும் ஈரான் தனித்து முகம் கொடுக்கப்போவதில்லை என்பதே இத்தலைவர்களின் சந்திப்பு உணர்த்தும் செய்தியாகும். இது ஈரானின் அரசியல் உறுதிப்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

மூன்றாவதாக அமெரிக்கா அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதனை தொடர்ந்து ஈரான் சிரியாவிலிருந்து கொண்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரதேசமான கோலன் குன்றின் பகுதிகள் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளது. 2018 மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலின் நிலைகள் மீது ஈரானிய புரட்சிப்படை இருபது ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதற்குப் பதிலடியாக ஈரானிய ஆயுதக் கிடங்குகள், போக்குவரத்துக் கேந்திரங்கள், உளவு மையங்கள் ஆகியவை மீது இலக்குவைத்துத் இஸ்ரேல் தாக்கியதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் இஸ்ரேலின் ஏராளமான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் இஸ்ரேல் தாக்குதலை தம் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தாகவும் சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் மேற்காசியபிராந்தியத்தில் வலுவாகவுள்ளதை உணரமுடியும்.

நான்காவது அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை பொருட்பாடுத்தாத ட்ரம்ப் ஈரானிலிருந்து வணிக நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டார். இதனை பிரான்ஸ் கண்டித்தது. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈரான் பதில் கூற முன்னர் ஐரோப்பிய நாடுகள் அதன் சார்புநிலை எடுப்பது அதன் செல்வாக்கினை உலக அளவில் அதிகரித்துள்ளது.

ஐந்தாவது அணுவாயுத ஒப்பந்தம் சார்ந்து சீனாவின் ஆதரவினையும் ஈரான் பெற்றுக் கொண்டுள்ளது. அணுவாயுத  ஒப்பந்தத்திலிருந்து  வெளியேறுவது  தொடர்பான  அறிவிப்பினை அடுத்து ஈரான் நாட்டின் வெளியுறவுச் செயலாளர் சீனாவிற்கு விஜயம் செய்து ஆலோசனை நடத்தினார். சீன தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் டோங்மிங் பெட்ரோகெமிக்கல்ஸ் அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இணங்கியுள்ளதாக அந்த நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதானசுங்கவரியை அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்நடவடிக்கை  அமெரிக்கா விதிக்க போகும் பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்காது என்பதனை காட்டுகின்றது.  அமெரிக்காவினால் ஈரானுக்கு பெரியளவிலான தடைகளையும் சவால்களையும் ஏற்படுத்தமுடியாது என்பதனை நிருபீத்துள்ளது.

எனினும் அமெரிக்கா தொடர்ந்தும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அத்துடன் ஈரானுடனான  பொருளாதார உறவுகளை  துண்டிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவருகிறது. இதனால் அமெரிக்கா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் மூலம் அமெரிக்காவின் வல்லரசிற்கு சவால் விடும்  இராஜதந்திர நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள  ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜரீப் ‘ஈரானுடனான உறவு மற்றும் சட்டபூர்வமான கடமைகளை அமெரிக்கா அவமதித்துவிட்டது. இவ்விவகாரத்தை நாங்கள் சட்டபூர்வமாக எதிர்கொள்ள உள்ளோம்’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும் எனசர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்க  வல்லரசு  மீது  விசாரணை  மேற்கொள்ளப்படுதல் என்பது சர்வதேசஅரசியலில் அதன் மதிப்பினையும் செல்வாக்கினையும் வீழ்ச்சியடையச் செய்யும் ஒன்றாகும். ஈரான் மீது திணித்த அமெரிக்காவின் அணுவாயுதஅரசியலை அதன் மீதே திணிக்கும் இச் செய்றபாடு ஈரானின் சமகால இராஜதந்திர நகர்வாக காணப்படுகின்றது.

மேற்காசிய அரசியலில் சிரியா விவகாரம் மூலம் பலம் பெற்றுவரும் ஈரான் நாட்டினை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு செயல்பட்ட போதும் அது சாத்தியமற்ற தொன்றாகியுள்ளது. சிரியாவின் வடக்கு எல்லையில் ஈரான் நிலைகொண்டுள்ளது. சிரிய விவகாரத்தின் மூலமாக ஈரான் தனதுபடைகளை அந்நாட்டிற்கு நகர்த்தி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது. இது இஸ்ரேலுக்கு பாரிய தலையிடியாகியுள்ளது. இதனால் பாலஸ்தீன விவகாரம் தொடர்பான எந்வொரு நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாத இக்கட்டான சூழலுக்குள் இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது. சிரியா விவகாரத்திலிருந்து ஈரானை வெளியேற்ற அந்நாட்டினை பலவீனப்படுத்தும் இராஜதந்திர  உத்திகளை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு கையாண்டு வருகிறது. எனினும் அவ்நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தோற்கடிக்கும் விதத்திலான எதிர் இராஜதந்திர நடவடிக்கைகளை  ஈரான் மேற்கொண்டுவருவதுடன் அதில் வெற்றிகளையும் ஈட்டிவருகிறது.

சர்வதேச அரசியலில் இதுவரை காலமும் அமெரிக்க இராஜதந்திரத்திற்குள் அகப்படும் நாடுகள் அதற்கு எதிர் இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது திணறி அடிபணிந்து போகும், அல்லது அழிந்து போகும் தன்மையே நிலவியது. ஆனால் அமெரிக்காவின் அணுவாயுத இராஜதந்திர நகர்வுகளுக்கு சிறந்த பதில் இராஜதந்திர நகர்வுகளை ஈரான் வழங்கி வருகிறது.

லக்னா பாலகுமாரன், யாழ் பல்கலைக்கழகம்
நிமிர்வு யூலை 2018 இதழ்




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.