ஆசிரியர் பார்வை




தொடர் ஆக்கிரமிப்பில் சிங்கள பேரினவாதம்

கொழும்பை மையமாக கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசு தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை, கடற்பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றது. அரசின் பெயரால் தொல்லியல் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், நீரியல்வள திணைக்களம் என்பன இத்தகைய திட்டமிட்ட ஆக்கிரமிப்பு பணிகளை செவ்வனவே நிறைவேற்றி வருகின்றன.

 வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மற்றும் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக பிரதேச மக்களால் 21.08.2018 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 வெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் நெடுங்கேணி பொலிஸார் ஊடாக ஆலய நிர்வாக சபையினருக்கு கடந்த 08.08.2018 அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஆடி அமாவாசை பூசை சிறப்பு வழிபாடுகளுக்காக 11.08.2018 அன்று பொலிஸாருடன் பேசியதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

 தாம் காலம்காலமாக வழிபட்டு வந்த வழிபாட்டு உரிமையை மறுத்து அதனை அபகரிக்கும் எண்ணத்தில் அரசு செயற்படுவதாக அப்பிரதேச மக்கள் நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக ஏதோவொரு விதத்தில் அடக்குமுறைகளை முன்னெடுப்பதில் சிங்களம் குறியாகவே நிற்கின்றது. ஏற்கனவே திருகோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருந்த கன்னியாய் வெந்நீர் ஊற்றும் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தமிழ்மக்களின் பூர்வீக கிராமமான கருநாட்டுக் கேணியில் உள்ள அரச காணிகளில் ஒரு பகுதியை சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகாரசபையூடாக காணி உத்தரவுப் பத்திரங்களை வழங்கியுள்ளது நல்லாட்சி அரசு.   இதன்மூலம் தமிழ்மக்களின் நில உரிமை மட்டுமல்ல கடல் சார் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

 இவற்றுக்கெல்லாம் எதிராக பாரியளவில் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியது மக்களின் பொறுப்பு. அதற்கு தலைமைதாங்க வேண்டியது எம் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும். 

-செ.கிரிசாந்-
நிமிர்வு ஆவணி 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.