பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்களின் அனுபவ பகிர்வு




சேதன விவசாயம், உணவு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு என அதன் பல பக்கங்களையும் அறிந்த பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. இயற்கை வழி இயக்கத்தின் பிதாமகரும் இவரே. எங்கள் தேசத்தில் பிறந்து கல்வி கற்று நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் புலம்பெயர்ந்து வாழும் பலருக்கு இன்று தாய்மண்ணில் என்ன நிலை உள்ளது,  எங்கள் பூர்வீகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற அங்கலாய்ப்பு உள்ளது. புலம்பெயர்ந்த தேசத்தவர்களின் பணத்தை விட அவர்களின் பரந்த அறிவு வளம் இங்கு பகிரப்பட வேண்டும். அப்படியான ஒரு சிந்தனையால் உந்தப்பட்டு வருடந்தோறும் தாயகத்துக்கு வந்து தான் கற்ற அனுபவங்களை எங்கள் மக்களோடு பகிர்ந்து கொள்ளும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்களுடனான உரையாடலில் இருந்து சில பகுதிகளை இங்கே வழங்குகின்றோம்.

நான் ஆரம்ப வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பு வரை படித்த கல்வி முறை ஒரு வகையிலான குருகுல கல்விமுறையும் சமூக அக்கறையும் விவசாயமும் தன்னிறைவு சார்ந்ததுமாக இருந்தது. ஒவ்வொருவரும் தன்னுடைய சூழலையும் இயற்கையையும் புரிந்து கொண்டவர்களாக தெரிந்தவர்களாக அறிந்தவர்களாக  ஈடுபாடுள்ளவர்களாக  இருந்தார்கள். உதாரணத்துக்கு நாங்கள் சிறுவர்களாக இருந்த போது நெல்லு அருவி வெட்டுகின்ற காலத்தில் பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக பள்ளிக்கூடம் விடுமுறை விட்டு விடும். நாங்கள் போய் அதனை உற்சாகத்துடன் செய்வோம். போகும் போது கிராமத்துக்குள்ளால் பாடிக்கொண்டே போவோம். இதெல்லாம் அந்த பள்ளிக்கூடத்தில் கற்பித்தல் முறையின் அங்கமாக இருந்தது. நான் சொல்கின்ற இந்த காலம் 1952 - 1958 வரையுமான காலம்.

அதனை விட மொழியும் சைவ சமயமும் இலக்கிய இலக்கணமும் கணிதமும் வாழ்வியல் செயற்பாட்டு முறைகளும் தான் அங்கே கல்வியாக போதிக்கப்பட்டது.  இயற்கையையும் விவசாயத்தையும் மிக இளம் வயதிலேயே புரிந்து கொள்வதற்கு ஒரு அடிப்படையாக நான் கற்ற பள்ளி இருந்தது. உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்து  பேராதனை பல்கலையில் கால்நடை மருத்துவம் தொடர்பில் பயின்ற நான் அதற்கு பிறகு 14 ஆண்டுகளாக கற்றல், கற்பித்தல் துறையில் தொடர்ந்தும் இருக்கின்றேன்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வேற்று நாடுகளிலும் வாழ்ந்து பல்வேறு பல்கலைக்கழக சூழல்களில் செயற்பட்டு வந்துள்ளேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து முதல் 10 வருடங்களும் ஆய்வாளர், விரிவுரையாளர் என்கிற நிலையில் என்னை முழுமையாக ஆய்வுத்துறைக்கு ஈடுபடுத்துவதற்கான தேடல் தான் என்னை கொண்டு இயக்கியது.


விவசாயத் துறையில் விவசாய அறிவூட்டல் அல்லது விவசாய  விரிவாக்கம் என்கிற பெயரில் நல்ல தொழிநுட்பங்களையும் புதிய அறிவுத்தளங்களையும் அதை நடைமுறைப்படுத்துகின்ற விவசாயிக்கு கொண்டு சேர்க்கின்ற பணி முக்கியமான ஒரு பணியாக இருந்தது.  என்ன தான் ஆழமான விடயங்கள் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற விவசாயிகள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை உலக மட்டத்தில் இருக்கின்றது. இடையில் இருக்கின்ற அந்த தொடர்பாடல் சார்ந்த அறிவை பயன்பட வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பணிக்கு ஒரு தனிப்பட்ட துறை சார்ந்த குறிப்பிட்ட சில நிபுணத்துவங்கள் தேவைப்படுகின்ற பணியாகும். 
     
ஐந்து வருடங்கள் என்னுடைய கலாநிதிப் பட்டப்படிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வு வெறும் அறிக்கைகளாகவும், கட்டுரைகளாகவும் வெளி வந்தது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமானதா, ஏற்கப்படுமா, இல்லையா என்கிற கேள்விகள் வந்தன. அப்போது, அந்த துறையை நுணுக்கமாக பார்த்த போது அங்கே ஒரு பெரிய வெற்றிடம் இருந்தது தெரிய வந்தது. மக்களிடையேயான அல்லது மக்கள் அமைப்புக்கள் இடையேயான வெற்றிடம்; அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான வெற்றிடம்; அரசு சார்பற்ற அமைப்புக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான வெற்றிடம்; இவை எல்லாமே இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கருத்து தளங்களில் உள்ளவர்களுக்கு இடையிலான வெற்றிடங்கள். இவற்றுக்கிடையேயான தொடர்பாடல் முழுமையாக நடைபெற வேண்டும். கற்றல் நிகழ வேண்டும். இரண்டு பகுதிகளும் சம நிலையில் இருந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து சேர்ந்தேன்.

அதனுடைய வெளிப்பாடாகத் தான் கடைசியாக நான் பணியாற்றிய சுவீடன் விவசாய பல்கலைக்கழகத்தில் சூழல் இயற்கையியல் சார்ந்த தொடர்பாடல் என்கிற புதிய அறிவியலுக்கு பொறுப்பான பேராசிரியராக எனக்கு நியமனம் கிடைத்தது. அதன் மூலம் என்னுடைய பாதையில் பெற்றுக் கொண்ட எல்லா அறிவியல்பூர்வமான அனுபவங்களையும் சமூகவியல் சார்ந்த அனுபவங்களையும் ஒன்றாக திரட்டிக் கொண்டு வந்து இந்த தொடர்பாடல் தளத்தில் இயங்குகின்ற அதை வழிநடாத்துகின்ற அதற்கு வசதி செய்து கொடுக்கின்ற ஒரு அனுசரணையாளனாக அல்லது துணை போவனாக நான் என்னை காண்கின்றேன். அது என்னுடைய தொழில் சார்ந்த விடயம். மற்றது விவசாய துறை, உணவு உற்பத்தி துறை, உணவு போக்கியல் துறை ஆகியவற்றை கற்றவன் என்ற வகையில் இவற்றை எல்லாம் மனிதனும் இயற்கையும் ஒன்றோடு ஒன்று சந்திக்கின்ற பொது தளத்தில்நாங்கள் செயற்படுத்துகின்ற விடயங்களாகப் பார்க்கின்றேன்.


மனிதன் தன்னுடைய தேவைகளை இயற்கையில் இருந்து பெறுகின்றான் என்று சொன்னால் பெறுகிற முயற்சியில் உள்ள குறைபாடுகள் அந்த முயற்சியில் உள்ள தீவிரம் அதே இயற்கையை பாதிக்கும் என்பது தெட்டத் தெளிவான ஒரு உண்மை. ஏதாவது ஒரு பொருளை நாங்கள் சுரண்டி எடுக்கின்றோம் என்றால் அந்த சுரண்டல் தொடர்ச்சியாக நிகழ முடியாது. அந்த சுரண்டலின் எச்சங்கள், விளைவுகள்  அந்த வளங்களையும் பாதிக்கும். அந்த சிந்தனை எல்லோருக்கும் தெரிந்த ஒரு பொதுஅறிவாக இருந்தாலும் கூட விஞ்ஞானம் அந்த சிந்தனையில் இருந்து விலகி வேறெங்கோ போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் சர்வதேச மட்டத்தில் சூழலியலுக்காகவே ஒதுக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாக 1992 இல் ரியோவில் நடந்த முதலாவது சூழலியல் மாநாடு வருகிறது.   அந்த நேரத்தில் தான் பேண்தகைமை (sustainability) என்ற சொல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

என்னுடைய நாற்பதாண்டு ஆய்வுப்பணியில் இரண்டாவது பகுதியை பேண்தகைமை என்றால் என்ன அது எவ்வாறு மனித இருப்போடு தொடர்புடைய அத்தனை முயற்சிகளிலும் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதற்கு அர்ப்பணித்துள்ளேன். ஒரு வியாபாரத்தை தொடங்கும் போது எவ்வாறு இலாப நட்ட அடிப்படையில் கணிப்புகளை செய்கின்றோமோ பொருளாதார வினைத்திறனை பற்றி பேசுகின்றோமோ அதே நேரத்தில் நாங்கள் அதனுடைய ஏற்றத்தாழ்வுகளை  பேண்தகைமை என்கிற தளத்தில் நின்றும் ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இது இரண்டையும் சேர்த்து பார்க்க வேண்டிய தன்மையில் தான் இன்றைய உற்பத்தி மயப்படுத்தப்பட்ட விவசாயம் உள்ளது. உற்பத்தி மயப்படுத்தப்பட்ட விவசாயம் சமூகங்களையும், இயற்கையையும் எங்கே கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது, அதனுடைய தாக்கங்கள் என்ன, என்பவற்றைப் பார்க்கும் போது ஒரு மிதமான நிலைக்கு போக வேண்டிய தேவை தென்படுகின்றது. இதே வேகத்தில் நாங்கள் உணவு உற்பத்தியையும் நுகர்வையும் தொடர்ந்து கொண்டே போனோம் என்றால் நாங்கள் அன்றாடம் உண்கின்ற உணவு வெறும் நச்சூட்டப்பட்ட பற்றாக்குறைகள் நிரம்பிய ஒரு உணவாகவும் அதன் உருவாக்கம் கழிவுகளை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்ற ஒரு செயற்பாடாகவும் இருக்கின்ற ஒரு நிலைக்கு நாங்கள் போய் முடிவோம்.

அதற்கு மாற்றீடாக வந்த முயற்சிகளில் ஒன்று தான் இந்த சேதன விவசாயம் அல்லது இயற்கை வழி வேளாண்மை.    கல்வியூட்டுபவன் அல்லது பல்கலைக்கழக ஆசிரியன் என்கிற வகையில் அந்த முயற்சியினுடைய வளர்ச்சியை நடைமுறைப்படுத்துகிற வாய்ப்பு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் கிடைத்தது. ஈழத்திலும் நான் இதனை மேற்கொள்வதற்கான பின்னணி இது தான். 1986 ஆம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக இந்த துறையை அவதானித்து வருபவன், பங்கு பற்றி வருபவன்,  மாணவர்களை வழிநடத்தி வருபவன், மேற்பார்வை செய்தவன்  என்கிற முறையில் யுத்தத்திற்கு பின்பாக எம் சொந்த மண்ணிலும் ஆபத்துக்கள் அளவுக்கதிகமாக வெளித்தெரிகிற இந்த நிலையில் என் அனுபவங்களை பகிர்வதற்கான விருப்பமும் தேவையும் இருந்தபடியால் இங்கே வந்தேன்.

மற்ற நாடுகளை போல் அல்லாமல் இலங்கையில் வீட்டு மிருகங்களை விட ஆடு, மாடு போன்ற விவசாயத்திற்கு உதவும் மிருகங்களுக்கு முக்கியத்துவம் கூட. சிறீமாவின் ஆட்சிக் காலத்தில் நாங்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில் பாலுற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் கால்நடைகளின் வளர்ப்பு முறையும், உடலியல் சார்ந்தும் இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆழமாக படித்தவர்களுக்கு மண்ணைப் பற்றியோ அல்லது மண்ணில் கால்நடைக்கு தீவனத்தை  வளர்ப்பது பற்றியோ அல்லது கால்நடையினுடைய எச்சங்கள் மண்ணுக்கு திரும்பி போகின்ற அந்த வட்டத்தை யாரும் கற்பிக்கவில்லை. இயற்கைவழியாகவே இருக்க வேண்டிய அந்த சுழற்சி கல்வித்திட்டத்தில் இருக்கவில்லை. கல்வியின் குறைபாடே அது தான்.

அனைத்துமுட்பட்ட அணுகுமுறை (systems Approach) என்று சொல்லப்படுகின்ற விடயங்களை தொகுத்துப் பார்க்கின்ற வட்டங்களை முழுமைப்படுத்துகின்ற  செயற்பாடு பற்றிபேராதனையில் உதவி விரிவுரையாளராக இருந்த காலத்திலேயே படித்துக் கொண்டிருந்தேன்.  விவசாயத்தில்  farming System Approach உலக மட்டத்தில் வளர்முக நாடுகளின் விவசாயத்தில்  அவசியமான ஒரு சிந்தனையாக வெளிப்படுத்தப் பட்டது.

இந்த நேரத்தில் தான் அவுஸ்திரேலியாவில் உள்ள சிறிய ஒரு விவசாய கல்லூரியில் இதையே அடிப்படையாக கொண்ட கற்பித்தல் கற்றல் முயற்சிக்காக என்னை இணைத்துக் கொண்டேன்.  அங்கேயே 20 ஆண்டுகள் கழிந்து விட்டது.  அங்கே தான் சேதன விவசாயம் குறித்த பல்வேறு புரிதல்களும் ஏற்பட்டது. மீதி 20 ஆண்டுகள் சுவீடன், டென்மார்க் நாடுகளிலும் கழிந்து விட்டன.

1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண விவசாய பீடத்துக்கு வருகை நிலை விரிவுரையாளராக குறுகிய காலம் வந்து அந்த நேரம் இங்கேயுள்ள விடயங்களை பார்த்தேன். கிளிநொச்சியிலும் பல்வேறு வகையான பொருண்மிய அபிவிருத்தி விடயங்களையும் பார்த்தேன். அந்த நேரம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தன்னிறைவுக்கான ஒரு உற்பத்தி சிந்தனையை பார்த்து உண்மையிலேயே அதிசயப்பட்டேன்.  பின்னர் 2004 என்று நினைக்கிறேன்,  யாழ்பல்கலைக்கழகத்தில்  இயற்கை முகாமைத்துவம் சார்ந்த மூன்று நாள் மாநாடு இடம்பெற்றது. அதேநேரத்தில் யுத்தம் நிறுத்தப்பட்டு சந்தைகள் திறக்கப்பட்டு விவசாய உள்ளீடுகள், மூலப்பொருட்கள் குறிப்பாக இரசாயன உள்ளீடுகளின் வருகை வேகமாக வளர்வதனை கண்ணால் காணக் கூடியதாக இருந்தது.


அப்போது ஒரு தெளிவு வந்தது. யுத்த காலத்தில் தடைகள் காரணமாக யூரியா போன்ற இரசாயன உரங்களும், கிருமி நாசினிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது எங்களின் முன்னோர்களின் சேதன விவசாயத்துக்கு முழுதாகவே மாறிய நிலை இருந்தது. அதன் பின்னர் 2007 இல் இருந்து 2017 வரை ஈழத்தில் விவசாயம் என்ன நிலையில் உள்ளது என சிறியதொரு ஆய்வு செய்தோம். அதனடிப்படையில் இப்போதுள்ள நிலையில் சில விடயங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். உணவில் அளவுக்கு அதிகமான இரசாயன பயன்பாடுகளால் என்னென்ன பிரச்சினைகள் மக்களுக்கு வரும் என்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது. உலக மட்டத்தில் இயற்கை வழி இயக்கத்தின் தோற்றத்தையும் பல நாடுகளில் அதன் வளர்ச்சியையும் சமூகத்தில் ஏற்புடைமையை கொண்டு வந்ததனை பார்த்தவன் என்கிற நிலையில்  இங்கேயும் அப்படியான ஒரு முயற்சி வெற்றியளிக்கும் என்கிற துணிவு ஏற்பட்டது. அதனை நேரடியாக தை 2018 இல் வந்து பார்த்த போது உணர்ந்தேன். இங்கேயும் இயற்கை வழி இயக்கத்தை கட்டமைத்து அதற்கு துணை போகக் கூடிய சூழல் உருவானது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.

எந்த ஒரு இயக்கமோ அமைப்போ குறிப்பிட்ட சிலரின் உத்வேகத்தின் அடிப்படையில் ஒரு தெளிவு நிலையில் தான் வளர்கிறது. இன்று உலகம் முழுக்க எல்லோருக்கும் பெரும்பாலும் தெரிந்தது பசுமை இயக்கம்(Green Movement) என்று சொல்லப்படுகின்ற சுற்றுச்சூழல் இயக்கம். அதன் வரலாறை பல வகையாக சொன்னாலும், இதற்கு  Silent Spring என்கிற நூலை எழுதிய  Rachel Carson இன் எழுத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக சொல்வார்கள். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆய்வாளர். பூச்சி வகைகளை பற்றிய ஆய்வில் முக்கிய பங்கு வகித்தவர். அமெரிக்க விவசாய திணைக்களத்தில் முக்கிய ஆய்வாளராகவும் விளங்கிய பெண்மணி. வசந்த காலம் ஆரம்பிக்கும் போது குளிர் நாடுகளில் பறவைகள் தூங்கு நிலையில் இருந்து வெளியே வந்து கீச்சு கீச்சு என்று சத்தம் போடும். தான் வளர்ந்த இடத்தில் வசந்த காலத்தில் பறவைக் குரல்கள் இல்லை. இதனைப் பற்றி ஆழமாக யோசித்தார்.  பூச்சிகளை ஒழிக்க பூச்சி கொல்லிகளை பெருமளவில் விவசாயத்தில் பயன்படுத்த தொடங்கியாகி விட்டது. பூச்சியை அழித்தால் அதனை சாப்பிடுகின்ற பறவைகளும் அழியும். இதனை விளக்கி ஒரு உணர்ச்சி வசமான ஒரு நூலை எழுதியிருந்தார். திருப்புமுனையாக அந்த நூல் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த இயக்கத்தின் ஒரு கூறாகத்தான் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதில் நச்சுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து 60 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச ரீதியாக இயற்கை வழி இயக்கத்தின்  அடித்தளம் வகுக்கப்படுகின்றது. அப்படியான ஒரு இயக்கத்தை சட்டம் மூலம் கொண்டுவர முடியாது. கட்டுப்பாடுகளை உருவாக்கியும் விற்பனை செய்ய முடியாது என சொல்ல முடியாது. கீழிருந்து மேல் நோக்கித் தான் வர வேண்டும். மற்ற நாடுகளில் அதன் வளர்ச்சிக்கு இரண்டு காரணிகள் இருக்கின்றன. தனது சொந்த நலனுகாகவும், தனது குழந்தைகளின் நலனுக்காகவும் தங்களுடைய சொந்த பயிர்ச்செய்கை முறையை மாற்றியவர்கள் தான் பெரும்பாலானவர்கள். அவர்கள் தான் ஆரம்பகர்த்தாக்கள். அவர்களுடைய உற்பத்தியை வாங்கி உட்க்கொள்ளும் நுகர்வோர் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் அந்த நுகர்வோருடைய  தேவை விரைவாக அதிகரிக்க இந்த வழியில் இறங்கிய விவசாயிகளுக்கு உற்சாகமாயிருந்தது. சேதன விவசாயத்தை செய்பவர்கள் அதனை வாங்கி உண்ணும் நுகர்வோர்கள் ஆகிய இரண்டு பங்காளர்களின் ஒத்துழைப்பினாலும் சிறிது சிறிதாக இந்த இயக்கம் வளர ஆரம்பித்தது.

பிறகு குறிப்பிட்ட சில நாடுகளில் அதனை  ஒழுங்கமைப்பதற்கு அந்நாட்டு அரசுகள் தலையிடுகின்றன. மானியங்களையோ, சட்டங்களையோ, வரையறைகளையோ, சான்றிதழ் வழங்குதலையோ  கொண்டு வருகிற அளவுக்கு அவர்கள் வருகின்றார்கள். இந்த வளர்ச்சி ஒரு 30 வருடத்துக்குள் தான் வருகின்றது. அதில் முன்னணியில் இருந்த நாடுகளில் குறிப்பாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் அதற்குரிய வகையில் ஆய்வையும், கல்வியையும் ஒழுங்கமைக்கும் வட்டத்தில் முக்கிய உறுப்பினராக நான் பங்கு பற்றியிருக்கிறேன்.  1994 இல் கலாநிதிப்பட்டப்பிடிப்பில் (PHD) இயற்கை வழி விவசாயத்துக்கு உதவக் கூடிய  ஆய்வு செய்பவர்களுக்கு கற்கை நெறி ஒன்றை வடிவமைத்து வகுப்பு எடுத்தோம்.  இன்றுவரை கிட்டத் தட்ட 1000 க்கும் மேற்பட்ட  முதுநிலைப்பட்டதாரி (Msc) மாணவர்களை உருவாக்க காரணமாக இருந்தது. இங்கேயுள்ள விவசாய பீடத்திலேயோ அல்லது விவசாய கல்லூரிகளிலேயோ இலங்கைக்கும் பொருந்தக் கூடிய முழுமையான கற்கை நெறியை உருவாக்கலாம். போதியளவு அனுபவங்களும் அதற்கு தேவையான புத்தகங்கள் வெளியீடுகள் எல்லாம் இருக்கின்றன. நேரமும் காலமும் வந்து சேர்ந்தால் எல்லாம் சாத்தியமாகும்.

இங்கு இயற்கை வழி இயக்கத்தின் செயற்பாடு உயிர்ப்போடு இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வாரந்தோறும் இடம்பெறும் களப்பயண முயற்சி வரவேற்கத்தக்கது. “உலகத்தில் நீ என்ன மாற்றத்தை காண விரும்புகிறாயோ நீ அந்த மாற்றமாக மாற வேண்டும்" என்ற மகாத்மா காந்தியின் கூற்று இந்த இடத்தில் முக்கியமானது. நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ உங்களுடைய வீட்டில் செய்கின்ற அந்த வீட்டுத் தோட்ட முயற்சி நடைமுறை வாழ்வியலாக மாற வேண்டும். இயற்கை வழி இயக்க நண்பர்கள் சிறிதாகவும், பெரிதாகவும் வீட்டு தோட்டங்களை செய்ய தொடங்கி இருக்கின்றீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  அதன் தொடர்ச்சி தான் இயற்கை வழி அங்காடி.

இயற்கை வழி வேளாண்மை என்பது திரும்ப பழமைக்கு திரும்புதல் அல்ல. பழமையில் உள்ள  நல்ல விடயங்களை எடுத்து புதிய முயற்சிகளையும் சேர்த்து இரண்டிற்கும் இடையில் உள்ள அறிவியல் சார்ந்த ஆய்வு. அந்த ஆய்வையும், பரிசோதித்து பார்க்கின்ற மனநிலைக்கு நாங்கள் வர வேண்டும். அந்தப் பசளையா இந்தப் பசளையா சிறந்தது என மண்ணில் போட்டு பரீட்சித்துப் பார்க்கும் நிலை முக்கியமானது.  நேரத்தை விரயமாக்காமல் வேகமாக செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த தளத்தில் பயிற்சி பெற்ற ஒருவருடைய அனுசரணை தேவை. அப்படி யோசிக்கும் போது இரண்டு வாய்ப்புக்கள் தான் இந்த சமூகத்தில் உள்ளது. ஒன்று பல்கலைக்கழகம் இரண்டாவது விவசாய திணைக்களம். அவர்களுடைய பங்களிப்பும் அனுசரணையும் அவசியமானது.

அந்த வகையில் விவசாய விரிவாக்க அலுவலர்களுக்கு இதன் வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் சொல்லி அவர்களுடைய செயற்பாட்டுத் தளத்திலே அவர்கள் கொண்டுவரக் கூடிய புதுமைகளை பற்றி ஒரு மூன்று நாள் பட்டறையை செய்வோம் என்று சொன்னோம். அதனை விவசாயத் திணைக்களம் ஏற்றுக் கொண்டது ஒரு சாதகமான அணுகுமுறையாகும். இயற்கை வழி இயக்கத்தின் கடந்த 7 மாத கால வளர்ச்சியை விஞ்ஞான பூர்வமானதாக மாற்ற வேண்டும். எல்லோரும் எதுவும் நடக்காது என்று இருக்கும் மனநிலையில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிற உதாரணங்கள் நிறைய தேவைப்படுகின்றன.

அனுபவப் பகிர்வு அடுத்த இதழில் முடியும்

நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.