தமிழ் மக்கள் பேரவையின் செல்திசை




இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்ட அரசியலில் அண்மைக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதமும் 2015 ஆம் ஆண்டு தைமாதமும் மிகவும் முக்கியமானவை.  2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட வழி முறியடிக்கப்பட்டது.  அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்கும் என்ற உறுதியின் அடிப்படையில் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஒன்று தெற்கில் நடந்தது.  பதவிக்கு வந்த அரசும் அதற்கு ஆதரவளித்த தமிழர் தேசிய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களும் ஓர் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஈடுபட்டனர்.  ஆனால் அங்கு முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிரந்தரமாகத் தீர்க்கப் போவதில்லை என்று தமிழ் மக்கள் மத்தியிலிருந்த சமூக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் மற்றும் வெகுசன அமைப்பினர்களும் உணர்ந்து கொண்டனர்.  அதேவேளை புதிய அரசாங்கத்தின் கீழும் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எண்ணற்ற அடக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர் கொண்டு இருக்க வேண்டிய நிலையில் இருப்பதையும் உணர்ந்து கொண்டனர்.  தமிழ் மக்களின் பெருமளவிலான ஆதரவுடன் பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இதனை உணராதிருக்கிறார்கள் என்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தென்னிலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துச் சொல்லக்கூடிய பெரும்பான்மை தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற அமைப்பு ஒன்று தேவைப்பட்டது.  அதன் விளைவாகத் தோன்றியதே தமிழ் மக்கள் பேரவை.

தமிழ் மக்கள் பேரவை 2015 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.  இது ஒரு அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைக்கும் மக்கள் இயக்கமாக இயங்கும் என்று எல்லோரும் உடன்பட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆரம்பித்தது.  பல அரசியல் கட்சிகள் அதில் இணைந்து கொண்டன. தமிழர் பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வந்த சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட பல வெகுஜன அமைப்புக்களும் இணைந்து கொண்டன.  2016 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து கொண்ட எழுக தமிழ் எனும் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் தமிழ் மக்கள் பேரவை நடத்தியது.  அதனையடுத்து 2017 ஆம் ஆண்டு மாசிமாதம் 10 ஆம் திகதி இன்னொரு எழுக தமிழ் நிகழ்வை மட்டக்களப்பிலும் நடத்தியிருந்தது. கட்சி வேறுபாடுகள், பிரதேச வேறுபாடுகள், பொருளாதார வேறுபாடுகள் என்பவற்றையெல்லாம் கடந்து தமிழ் மக்களை ஒன்றிணைப்பதாகவும் அவர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை வெளி உலகத்துக்குத் தெரிவிப்பதாகவும் இந்நிகழ்வுகள் அமைந்தன.

தமிழ் மக்கள் பேரவை தனது ஆரம்ப நோக்கத்துக்கு இயைபாக 2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமிழ் மக்கள் தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வுத்திட்ட முன்யோசனையை முன்வைத்தது.  பல்வேறு கட்சிகள், வெகுசன அமைப்புக்கள், புத்திஜீவிகள், சட்ட ஆளுமைகள் என்பவர்களின் கலந்தாலோசனைகள் விவாதங்களின் பின்னரேயே இந்து ஆவணம் வெளியிடப்பட்டது.  தமிழ் மக்கள் பேரவையின் மிகப்பெரிய சாதனையாக இதனைக் கொள்ளலாம்.

அதனையடுத்து 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்களையொட்டி  இன்னுமொரு மைல்கல்லை நாட்டுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் மக்கள் பேரவைக்குக் கிடைத்தது. இது தொடர்பாக பங்குனி 2018 நிமிர்வு இதழில் பின்வரும் அபிப்பிராந்ததை வெளியிட்டிருந்தோம்.

தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து செயற்படவிழைந்தன.  அதற்கு தமிழ் மக்கள் பேரவை பின்னிருந்து ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன.  தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட இத்தேர்தலில் ஒரு தலைமையை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் தமிழ் மக்கள் பேரவைக்கு இருந்தது.  தமிழ் மக்கள் பேரவை தலைமை குழுவில் இருந்த பலருக்கு இதில் உடன்பாடும் இருந்தது. ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான முடிவெடுக்கம் முறைமைகள் அங்கு நிறுவப்படாமல் இருந்ததால் இறுதியில் முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்தே இறுதி முடிவானது.  இதனால் நடுவிலிருந்து பேரம் பேசக்கூடிய தலைமை இல்லாமையால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து செயற்பட முடியாமல் பிரிந்தன. தமிழ் மக்களின் வாக்குகள் சிதறின. இந்த வரலாற்று முக்கியம் மிக்க சமயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் நிறவனமயப்படுத்தலில் இருந்த குறைபாடுகள் காரணமாக முடிவெடுப்பதில் ஏற்பட்ட குழப்பங்களால் பேரவையின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.

2018 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24 ஆம் திகதி நடந்த தமிழ் மக்கள் பேரவைப் பொதுக்கூட்டத்தில் தான் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பிக்கவிருப்பதாக பேரவையின் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்தார்.  அந்தக் கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது.  உள்ளூராட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவும், தமிழ் மக்கள் பேரவையில் இன்னமும் பங்காளிக்கட்சியாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தொடர்ந்து இருப்பதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏற்படக்கூடிய மனஸ்தாபங்கள் விளங்கிக் கொள்ளப் படக்கூடியது.     

  எது எவ்வாறெனினும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ஒருவர் ஒரு கட்சியை ஆரம்பித்து அக்கட்சி உருவாக்கப் பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தது நியாயமாகப்படவில்லை.  ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்து வளர வேண்டிய தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற்கட்சியாக தன்னைச் சுருக்கிக் கொண்டு விடும் என்ற பலரினதும் ஐயப்பாட்டை உண்மையாக்குவது போல இச்செயற்பாடு அமைந்துள்ளது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியமான வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பு ஒரு வெகுசன அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவைக்கு உள்ளது.  இதனை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மீண்டும் மீண்டும் சுட்டக்காட்டி இருக்கிறோம்.   2018 ஆம் ஆண்டு பங்குனி மாத நிமிர்வு இதழில் நாம் பின்வருமாறு மேலும் எழுதியிருந்தோம்.

இன்று தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு, நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு இலங்கையை பொறுப்புக் கூற வைத்தல் ஆகிய விடயங்களையும் தாண்டி தமிழர் தாயகத்தில் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் ஏராளம் உள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்கான போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், காணிவிடுவிப்பிற்கான போராட்டம் என்பனவற்றுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமை தாங்க வேண்டும். இத்தலைமையின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சனைகளைத் தீர்க்கச் சொல்லி அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

எங்களிடம் ஒரு சிந்தனையாளர் குழாம் (think tank) இல்லாத குறையை இன்று தமிழினம் கடுமையாக எதிர்கொள்கிறது. தமிழ்மக்கள் பேரவை ஆலமரமாக வளர்ந்து கிளை பரப்பியிருந்தால் தமிழ்மக்களின் அத்தனை பிரச்சினைகளையும் அது லாவகமாக கையாண்டிருக்க முடியும். சிந்தனையாளர் குழாம் ஏற்கனவே தமிழ்மக்கள் பேரவையிடம் உள்ளது. ஆனால் அது செயற்திறனின்றி உள்ளமை கவலையளிக்கிறது. கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் எம்மக்கள் பின்தங்கியே நிற்கிறார்கள்.

இவ்வாறாக வரலாற்று முக்கியம் மிக்க பணிகள் பல இருக்க தமிழ் மக்கள் பேரவைப் பங்காளிக் கட்சிகள் தேர்தல்களை முன்னிறுத்தியும் ஆசனங்களைக் கைப்பற்றுவதை நோக்கியும் நகர்வது கவலையளிக்கிறது.  முக்கியமாக தென்னிலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்துள்ளது. ஒரு தேர்தலை தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள்.  புதிய அரசியலமைப்பு செத்து விட்டது.  இந்நிலையில் தமிழ் மக்கள் அரசியற்தீர்வாக எதிர்பார்ப்பது என்ன என்பதை கட்சி வேறுபாடுகளைக் கடந்து சர்வதேசத்துக்கு சொல்லக் கூடிய ஒரு வெகுசன அமைப்பு அவசியமாக உள்ளது. 

தேர்தலை முன்வைத்து இயங்கும் கட்சிகள் தேர்தலின் முன்னரும் தேர்தலின் பின்னரும் மக்கள் எதிர்பார்ப்பதைச் செய்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் தாம் பொறுப்பெடுத்துக் கொண்ட அரச இயந்திரத்தை இயங்கச் செய்வதற்கு அவர்கள் இணக்க அரசியலுக்குள் தள்ளப்படுவது தவிர்க்கப்பட முடியாதது. இதனையே எமது வரலாறு சுட்டி நிற்கிறது.  அதேவேளை கட்சி வேறுபாடுகளைக் கடந்த ஒரு மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவையைப் பலப்படுத்த வேண்டியது தமிழராக இருப்பவர்கள் எல்லோரதும் கடமை.  இவ்வாறான அமைப்பு ஒன்றின் மூலமே ஆசனங்களின் பின்னால் ஓடும் அரசியற்கட்சிகளை தேர்தலின் பின்னும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நெறிப்படுத்த முடியும்.

தேர்தல்களில் விக்னேஸ்வரனின் புதிய கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு போட்டியாக வரலாம்.  இதனால் விக்னேஸ்வரன் இணைத்தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவையை விட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி விலக நினைக்கலாம். ஆனால் அது இன்றைய தமிழ் மக்கள் அரசியலை மேலும் பிளவு படுத்தி பின் நோக்கித் தள்ளுவதாகவே முடியும். அல்லது இரு கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு இணைந்து செயற்பட முனையலாம்.  தேர்தலுக்கூடாக அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் எமது பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றுவதற்காக இவர்கள் மீது மக்களிடமிருந்து அழுத்தங்கள் வரும்.  அதனை அவர்கள் மேலிருந்து கீழ் நோக்கிய செயற்பாடுகளினூடாகவே கையாள முற்படுவர்.  அது உள்முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்பது வரலாற்றினூடாக காணக் கிடைக்கும் படிப்பினை.

இந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமாயின் தமிழினத்தை ஒரு பதாகையின் கீழ் இணைத்து கீழிருந்து மேல் நோக்கிச் செயல்படும் ஒரு வெகுஜன இயக்கம் அவசியமாகிறது.  மேலிருந்து கீழாக செயற்படும் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளும் கீழிருந்து மேலாக செயற்படும் ஒரு வெகுஜன இயக்கத்தின் செயற்பாடுகளும் இணைந்தே நாம் விரும்பும் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்தை நோக்கி எம்மை நகர்த்தும்.  ஆகவே தமிழ் மக்கள் பேரவையின் இருப்பை உறுதி செய்வது இன்றியமையாதது.  இதற்காக தமிழ் மக்கள் பேரவையினுள் தனி ஒரு கட்சியின் செல்வாக்கு அதிகரிக்காமல் அதை வெகுஜன இயக்கமாகத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.  இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்கள் பேரவையின் இருப்பு அவர்களின் வேலையை இலகுவாக்கும்.  ஆகவே தமிழ் மக்கள் பேரவையை விட்டு விலகியிராமல் அதனைச் செழுமைப் படுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையும் தனது தலைமைத்துவத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்.  ஒரு கட்சியின் தலைவர் அதன் இணைத்தலைவராக தொடர்ந்து இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். இது தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்ட அவ்வரசியற் கட்சியின் அங்கம் என்ற பிம்பத்தை உருவாக்க வழிவகுக்கும்.  அந்த அபிப்பிராயம் ஏற்பட முன்னரே முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.  தமிழ் மக்கள் பேரவையின் தலைமைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  அதில் அரசியல் கட்சிகளின் நிர்வாக அங்கத்தவர்கள் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும்.  தமிழ் மக்கள் பேரவைக்கென ஒரு நிறுவன யாப்பு உருவாக்கப் படவேண்டும்.  அதில் நிர்வாக சபைக்கான அங்கத்தவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படலாம் அவர்கள் எவ்வாறு பதவி நீக்கப்படலாம் என்பவை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.


நிமிர்வின் பார்வை
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.