சமாந்தரக் கட்டமைப்பை உருவாக்குவோம்


எங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது



யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், சமகால அரசியல் கருத்தரங்கும் கைலாசபதி கலையரங்கில் கடந்த 14.12.2018 அன்று இடம்பெற்றது. அதில் பங்கேற்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் குருபரன் ஆற்றிய உரையை இங்கே தொகுத்துள்ளோம்.

இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த யாழ்பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு எனது பாராட்டுக்கள். இப்படியான கலந்துரையாடல் வெளிகள் பல்கலைக்கழகத்திலே முகிழ வேண்டும் என்பது  எங்களுடைய எதிர்பார்ப்பு. தனியே பாடப் புத்தகத்தோடு மாத்திரம் மாணவ சமூகத்தை முடக்காமல் தொடர்ச்சியாக சமகால அரசியல் தொடர்பாக விவாத வெளி அவர்களுக்கு இந்தப் பல்கலைக் கழகத்துக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையாக நாங்களும் உள்ளோம்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நிழல் தமிழரசினுடைய பிரதான இராஜதந்திரி. அண்மைக்காலத்தில் தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பார்வையில் அரசியலைப் பார்த்த ஒரு முன்னோடி என்று அவரைச் சொல்லாம். அதற்கு அப்பாலும் தேசத்தின் குரலுக்கு ஒரு அடையாளம் உண்டு. பெரிதாக குறிப்பாக இளைய சமூகத்தின் மத்தியில் தெரியாத அந்த அடையாளம் அவர் ஒரு தத்துவ ஆசிரியர் என்பது. குறிப்பாக மேற்கத்தேய கீழைத்தேய தத்துவங்களை சிறப்பாக படித்துணர்ந்து அவற்றைப் பற்றி தமிழில் அவர் எழுதிய 'விடுதலை' என்ற நூலை எடுத்து குறிப்பாக அதன் பாகம் 2 கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு அன்ரன் பாலசிங்கத்தின் தத்துவ புலமையின் ஆழம் வெளிப்படும். அந்தளவிற்கு தத்துவப்புலமைக்கு நிகராக குறிப்பாக மேற்கத்தேய தத்துவங்களில் (பின் மாக்ஸீய) அதீத புலமை வாய்ந்த தமிழர்கள் வேறு யாரேனும் இருந்தால் என்னால் மாமனிதர் சிவராம் அவர்களை மட்டும்  தான் குறிப்பிட முடியும்.

எஸ்.வி.இராஜதுரை அறிந்தவர்களுக்கு தமிழ் விமர்சன உலகில் மற்றும் தமிழ் அரசியல் எழுத்து உலகில் அவருடைய வகிபாத்திரம் தெரிந்திருக்கும். எஸ்.வி.ராஜதுரை அவர்கள் “இருத்தலியத்தைப் (existentialismபற்றி ஆழமாக தமிழில் நான் முதலில் வாசித்து அறிந்தது அன்ரன் பாலசிங்கத்தின் எழுத்துக்களில்” என்று சொல்லியுள்ளார்.  அந்த அளவிற்கு அன்ரன் பாலசிங்கத்தினுடைய தத்துவபுலமை என்பது ஆழம் மிக்கது என்பதனை நாங்கள் அறிய வேண்டும்.  ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவருடைய பங்களிப்பை பற்றி அறிகின்ற அதேவேளை அன்டன்பாலசிங்கம் அவர்கள் தமிழில் தத்துவம் சார்ந்து எழுதிய எழுத்துக்களையும் நாங்கள் வாசித்து அறிய வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த இடத்தில் மாணவர்களுக்கு வைக்கின்றேன்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் திம்புவிலிருந்து தமிழர்கள் பங்குபற்றிய சர்வதேச பேச்சுவார்த்தைகள் ஏறத்தாழ எல்லாவற்றிலும் பங்கு பற்றியிருக்கிறார். இறுதி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் இடம்பெற்றபோது உடல் நோய்வாய்ப்பட்டுகலந்து கொள்ள முடியவில்லை. அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் அதில் தலைமை தாங்க வேண்டிய சூழல் இருந்தது. அதுவரை கிட்டத்தட்ட எல்லா மேடைகளையும் கண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு சரளமான பேச்சு வல்லமை உள்ளவர். சரளமாக என்பதனை அழுத்திச் சொல்லுகின்றேன். ஒன்று கல்வி கற்றதன் மூலமாக ஒரு மொழியை நாங்கள் சாதாரணமாக படித்து அதன் மூலம் தொழினுட்ப ரீதியாக அந்த மொழிப்  புலமைக்கு வரலாம். ஆனால் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழில் பேசினாலும் சரி ஆங்கிலத்தில் பேசினாலும் சரி சரளமாக பேசக்கூடியவர். ஆங்கிலத்தை  தாய்மொழியாக கொண்டவர்கள் பேசுவது போல அம்மொழியைச் சரளமாகப் பேசக்கூடிய வல்லமை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு இருந்தது. அன்ரன் பாலசிங்கத்தினுடைய ராஜதந்திர போக்கினுடைய தனித்துவம் அவருடைய தத்துவாசிரிய பின்புலத்திலிருந்தும் அவருடைய மொழிசார் புலமையிலிருந்தும் மற்றும் தான் இணைந்துகொண்ட இயக்கத்தினுடைய அரசியல் பார்வையிலிருந்தும்  செழுமை பெறுகின்றது என்றுதான் நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது.

போருக்கு பின்னரான காலப்பகுதியிலே தமிழருடைய சர்வதேச அரசியல் தொடர்பான புரிந்துணர்வு என்பது ஒரு தோற்ற இனத்தினுடைய அல்லது தோற்கடிக்கப்பட்ட ஒரு போராட்டத்தினுடைய பார்வையிலிருந்து பார்க்கப்படுகின்றது என்பதுதான் என்னுடைய கவலை. அதுதான் இன்று மேலோங்கி இருக்கக்கூடிய பார்வை என்பதனையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பார்வை, தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டது அல்லது மழுங்கடிக்ப்பட்டது அல்லது மௌனிக்கப்பட்டதற்கான காரணம் சர்வதேச அரசியலை நாங்கள் விளங்கிக் கொள்ளத் தவறியமை என்கிறது.  குறிப்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்கதலுக்குப் பின்னர் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களை நாங்கள் விளங்கிக் கொள்ளத் தவறியமை என்று அந்தப் பார்வை சொல்லுகின்றது. ரமேஸ் பிரேம் எழுதிய கட்டுரையில் இந்த வசனம் வருகிறது. “விடுதலைப்போராட்ட இயக்கங்கள் தனித்துவமான பார்வையைக் கொண்டிருக்கலாம். தனித்துவமான சர்வதேச அரசியல் பார்வையை வைத்திருக்கலாம். அரசற்ற தேசமாக இருந்து கொண்டு எந்த ஒரு பேரரசோடும் துணைக்கு போகாமல் அல்லது அவர்களுடைய பேச்சின்படி கேட்காமல் தனித்து அரசியல் நடத்த முடியாது என்பதற்குவிடுதலைப்புலிகளுடைய அழிவு ஒரு உதாரணம்”. இது தான் எங்களுக்கு பிரதானமாக எங்களுக்குச் சொல்லப்படக் கூடிய செய்தி.

ரமேஸ் பிரேம் அவர்கள்  தமிழீழ விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மௌனிக்கப்பட்டமை என்பது ஒரு காலகட்டத்தினுடைய முடிவு (end of an era) என்று கூறுகின்றார். அதாவது, இனிவரும் புதிய உலக ஒழுங்கிற்குள் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் இருப்பது சாத்தியமற்றது என்று கூறவருகிறார். சனல் 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டு விவகாரங்களை கையாளும் ஊடகவியலாளர் Jonathan Miller கடந்த மாவீரர் தினமன்று  யாழ் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். பல கேள்விகள் கேட்டார்.  கேட்ட கேள்விகளில் முக்கியமானது  மீள தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கிச் செல்கின்ற வாய்ப்பிருக்கின்றதா என்பதே. அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று தெரியாது. எங்களுடன் பேசும் போது கேட்பது முக்கியமான கேள்வியாக இருப்பது இதுதான். இதில் தான் ரமேஸ் பிரேம் சொன்னதை யோசித்துப் பார்க்கின்றேன். விடுதலைப்போராட்ட இயக்கங்கள் என்பதே சாத்தியப்படக் கூடிய ஒரு உலக ஒழுங்கிற்குள் நாங்கள் இருக்கின்றோமா என்ற கேள்வி முதன்மையானது.

உதாரணமாக இலங்கையில், ஈழத்தில் விடுதலைப்போரட்டங்கள் உருவான காலகட்டம் என்பது வேறு, இன்று நாங்கள் இருக்கக் கூடிய காலகட்டம் என்பது வேறு. சோமாலி கடற்கொள்ளையாளரர்களையும் விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் பிரித்து அறியாத ஒரு உலக ஒழுங்கிற்குள் நாங்கள் வாழுகின்றோமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. நான் கொழும்பு பல்கலைக்கழகத்திலே சட்டமானி மாணவனாக நான்காவது வருடம் இருக்கும் பொழுது ஒரு பொதுக்கூட்டத்தில் அமெரிக்க தூதுவர்  சொன்னார், தங்களுக்கு கூடுதலாக பிரச்சனையாக இருந்தது கடற்புலிகள் தான் என்று. தாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு சுடுவதற்கான கலங்களைக் கொடுக்கவில்லை என்றும் அவர்களைத் தற்பாதுகாப்பு செய்வதற்கான கலங்களையே கொடுத்தோம் என்று சொன்னார். மேலும், தங்களுக்கு கடல்மார்க்கமாக வர்த்தகத்தைச் செய்வதற்கு சோமாலி கடற்கொள்ளையர்கள் எந்த அளவிற்குப் பிரச்சனையாக இருந்தார்களோ அதே போன்று கடற்புலிகளின் பிரசன்னமும் இந்திய சமுத்திரக் கடலில் பிரச்சனையாக இருந்தது என்று சொன்னார். ஆகவே அதனைக் கட்டுப்படுத்துவது தான் தங்களுடைய நோக்கமாக இருந்ததே தவிர இந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக தாங்கள் ஆயுதத்தை வழங்கவில்லை என்று விளக்கத்தை சொன்னார். இது யுத்தம் நடந்து கொண்டிருநத காலத்திலே 2008 ஆம் ஆண்டிலே கூறப்பட்ட பதில்.

ஏறத்தாழ 2001 ஆம் ஆண்டுக்கு பின்னராக போராட்ட இயக்கங்களுக்கான சமூகஅரசியல் வெளியை முற்றாக மூடக்கூடிய ஒரு ஒழுங்கிற்குள் நாங்கள் வந்துவிட்டோமா என்ற கேள்வி இருக்கின்றது. இன்று அரசினுடைய கரங்கள் தொழில்நுட்ப சாதனங்களூடாக நீண்ட கரங்களாகி எங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பாகத்தையும் கட்டிப்போடுகின்றன. முந்தி யாழ்ப்பாணத்தில் நிறைய ஒழுங்கைகள் இருந்தபடியால் ஒழுங்கைக்குள்ளால் போய் வந்து இயக்கங்கள் தப்பி பிழைத்தது. இப்போ அப்படி முடியுமா? கூகுள் மப் இருக்கிறது. மீள ஆயுதப் போராட்டம் நடக்குமாக இருந்தால் அரசினுடைய தொழிநுட்ப வல்லமை அதனோடு இணைந்த புலனாய்வுக்கரங்களினுடைய ஆழமான ஊடுருவல் காரணமாக என்னுடைய பார்வையில் மீளவும் போராட்ட இயக்கங்கள் இலங்கையில் மாத்திரம்  அல்ல எங்கேயும் தொடர்வதற்கு சாத்தியங்கள் இல்லை. ஆகவே யாராவது வன்முறையை நாடவேண்டும் என்றால் அது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிக்கும் வன்முறை இருக்கும். அதை மீறி ஒரு அரசிற்கு எதிராக ஒரு அரசற்ற குழுமம் ஒன்று ஆயுதம் தூக்கி ஒரு தேசத்தைப் போன்று போராட்டத்தை நடத்தி முடிப்பதற்கான ஒரு காலகட்டத்தை நாங்கள் கடந்துவிட்டோம். ஆகவே தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கிச் செல்கின்ற வாய்ப்பிருக்கின்றதா என்ற கேள்வி பொருத்தமில்லாதது என்று கருதுகின்றேன்.

இன்னொரு காரணம் தமிழ் மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அழிவு. அந்த அழிவுகள் மோசமாக இருக்க வேண்டுமென திட்டமிடப்பட்டதற்கான காரணம் அடுத்த முப்பது  வருடங்களுக்கு தமிழர் தங்களுடைய இருத்தல் சார்ந்த கேள்விகளை மாத்திரமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. ஆகவே இவ்வாறான சிந்தனைகளை நோக்கி போவதற்கான ஒரு தலைமுறை எழாதவாறான ஒரு அழிவை 2009 ஆம் ஆண்டில் விட்டுச்சென்றார்கள். இந்தச் சூழலில் எங்களுக்குச் சொல்லப்படுகின்றது,அரசோடு அண்மித்த பிராந்திய அரசோ அல்லது அமெரிக்கா போன்ற பேரரசோடோ இணைந்து கொண்டு அவர்கள் மூலமாக சாத்தியமானதை மட்டும் நாங்கள் செய்து கொண்டு போக வேண்டும் என்று. இவ்வாறான தாராண்மைவாத சர்வதேச பார்வை ஒன்றினை எங்களுக்கு முன்னால் வைக்கின்றார்கள். அந்தப் பார்வை ஒன்றே சாத்தியமானது. தாராண்மைவாத அரசுகளோடு நாம் சேர்ந்து கொண்டு மனிதஉரிமை அரங்குகளில் எங்களுடைய பிரச்சனைகளை பேசி அதன்மூலம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வோம். இதற்கு இணைசெய்யும் விதமாக எங்களுடைய மிதவாத அரசியல் இருக்க வேண்டும். அதைத் தாண்டி அரசியல் பேசுபவர்கள் இலட்சிய அரசியல் பேசுபவர்கள் யதார்த்தத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள். தமிழர் தேசத்தில் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இது நாங்கள் எவ்வளவுதூரம் பின்நோக்கி விடப்பட்டுள்ளோம் என்பதனைக் காட்டுகின்றது.

அன்ரன்பாலசிங்கம், சிவராம் ஆகியோர் காட்டிய இராஜதந்திர பார்வையை முற்று முழுதுமாக பின்தள்ளி இன்று எங்களுக்கு சுயாதீனமாக வெளியுறவுப் பார்வை இருக்கக் கூடாது. ஏதேனும் வெளியுறவுப் பார்வை எங்களுக்கு இருக்குமாக இருந்தால் அது சார்புநிலை அரசியலாகவே இருக்க வேண்டும். என்ற பார்வை முன்வைக்கப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மேலோங்கி இருக்கக் கூடிய வெளியுறவு தொடர்பிலான பார்வை இது தான்.

மகிந்தராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வருகின்ற பொழுது அவர்கள் பிழையாக அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள் எனவே அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது நியாயமான நிலைப்பாடு. யார் பிரதமராக வரவேண்டும் என்ற விடயம் வருகின்ற பொழுது ரணிலுக்கு ஆதரவாக வெளிப்படையாக வாக்களிக்க முடியும் என்றும் கூட்டமைப்பினுடைய  பேச்சாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த விளக்கம் சார்புநிலை அரசியலிலிருந்து வருகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில்  மகிந்தராஜபக்ஸ மோசமானவர் என்கிற  பொதுக் கருத்து ஏற்கப்பட்டிருக்கிறது. ரணில்விக்ரமசிங்க ஒரு குள்ள நரி என்ற அபிப்பிராயத்திலும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றனர். ஆனால் ரணில்விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக கைதூக்க முடியுமென்று சொல்கிறார்கள். இந்த சார்புநிலை அரசியல் யாரோடு சேர்ந்து கொண்டு எந்த அரசினுடைய வழிநடத்தலில் அரசியலை செய்கின்றோமோ அவர்கள் காட்டுகின்ற வழிதான் நாங்கள் தேசிய அரசியலில் எங்களுடைய தீர்மானங்களை எடுப்போம் என்ற நிலை. இது தான் சரியான நிலைப்பாடாக எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

நாங்கள் தோற்றவர்கள் என்ற பார்வையிலிருந்த இந்த விடயத்தை பார்த்து யதார்த்த பூர்வமாக இதனை அணுகி முடிப்போம் என்ற ஒற்றைப் பரிமாணத்திலே இது முன்வைக்கப்படுகின்றது. எங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடம் என்னவென்றால், அரசியல் தீர்வாக இருக்கலாம் வெளியுறவு அரசியல் தொடர்பான பார்வையாக இருக்கலாம் சமூகவிடயங்களாக இருக்கலாம் எதிலையுமே ஒற்றைப்பார்வைதான் சாத்தியமானது என்று நினைக்கிறார்கள். இப்படியான பார்வை  எங்களுடைய சமூகத்தின்  ஆத்மாவிற்கு என்ன செய்யும்? சுயாதீனமாக சிந்திக்ககூடிய இயல்பாக புதிதாக புத்தாக்கமாக சிந்திக்க கூடிய ஒரு இளைஞர் சமூதாயத்தை நுண்ணிய  வடிவத்திலே கிழித்தெறிந்து விடுகின்றோம்.

அப்படி சிந்திப்பது பொருத்தமற்றது. அப்படி சிந்திப்பது  மோசமானது. இதற்கெல்லாம்  மாற்று இருக்கின்றது.  விடுதலை அரசியல் பேசிய ஒரு சமூகம் இன்று யதார்த்த அரசியல் மூலமாக ஒரு எதிர்கால சமுதாயத்தினுடைய  அரசியல் சமூக சிந்தனைகளை மழுங்கடிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோம். அண்மையில் மேற்கத்தேய தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மதியபோசனம் அருந்தக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன் போது அவர் என்னை கேட்ட கேள்வி, “இப்போது தான் கிளிநொச்சி, முல்லைத்தீவும் போய்விட்டு வருகின்றேன். ஏன் நாங்கள் தான் தமிழர்களது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்கிறார்கள்?” என்ற கேள்வி கேட்டார். இதைத் தான் காத்திருப்பு அரசியல் என்று நிலாந்தன் பலவருடமாக எழுதுகிறார். அவர்கள் எங்களுடைய பிரச்சனையை தமக்கு சாதகமாகப் பாவிக்கிறார்கள் என்று தெரிந்தும் தெரியாத மாதிரி நாங்கள் திரும்ப திரும்ப கேட்கிறோம். அந்த முட்டாள் தனம் தான் ஓர் அதி உச்ச முட்டாள் தனம். 2009 ஆம் ஆண்டில் சர்வதேசம் தொடர்பாக ஆழமான புரிதலை ஏற்படுத்திக் கொண்ட  சமூகம் நாங்கள். வலிகள் மூலமாக அந்தப் புரிதலைப் பெற்ற சமூகம் அதே சர்வதேசம் எங்களைவந்து காப்பாற்றும் என்று நம்புகின்றதை எப்படி லொஜிக்கலாக விளங்கப்படுத்துவதென்று எனக்கே தெரியவில்லை என்று நான் சொன்னேன்.

சனல் 4 முள்ளிவாய்க்கால் காணொளியில் வரும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். யூ.என் யுத்தபூமியை விட்டுப் போகிறது விட்டிட்டுப் போக வேண்டாம் என சனமெல்லாம் குழறுகிறது. யூ.என் வெளியேற பிறகு கொத்துக் கொத்தாக குண்டு போட்டு கொன்றதை சனம் பார்க்கிறது. பின்னர் விக்கிலிக்ஸ்கேபிள்  மூலமாக வந்த செய்திகள், நோர்வே சமாதான பணியக அறிக்கையில் இருந்து  வந்த செய்திகள், அதன் பின்னராக வந்த ஆவணப்படுத்தல் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு பார்க்கும் போது சர்வதேச சமூகம் இந்த அழிவு நடக்கும் என்று தெரிந்திருந்தும் இந்த அழிவை நடக்கவிட்டது என்பது தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான பொது கலந்துரையாடல்களும் பொதுவெளிகளில் தாராளமாக நடந்திருக்கிறது.இவ்வாறு இருக்க தமிழ் சமூகம் இன்னும் சர்வதேச சமூகத்தை, மேற்கத்தேயத்தை எதிர்பார்த்திருக்கின்றது என்றால் அதனை நாங்கள் எப்படி விளங்கிக் கொள்வது? அந்த எதிர்பார்ப்பு சரியென மீள மீள சொல்லப்படுகின்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, பூகோள அரசியலைப் பற்றி பேசுகின்றவர்களும் இதனைத் தான் சொல்லுகின்றார்கள். எங்களுக்கு இருக்கக் கூடிய மிகவும் முக்கியமான பணி இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு சிந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா என்பதை ஆராய்வதே.

சுயமாக இந்த தேசம் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டுமென்றால் முதலாவதாக நாங்கள் செய்ய வேண்டிய பணி ஒன்று இருக்கின்றது. எங்களுடைய சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதுதான் அது. அந்த வலிமையான இடத்தில் நின்று கொண்டு சுயாதீனமாக வெளிநாட்டுப் பார்வையை நாங்கள் பார்ப்போமென்றால் அதிலிருந்து நாங்கள் பயன் நிறைய பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஓர் உதாரணம் சொல்லுகின்றேன்., இங்கிலாந்தினுடைய யூ.என் பாதுகாப்பு சபைக்கான  பிரதித்தூதுவராக இருந்த ஒருவர் ஈராக்கை எவ்வாறு ஐக்கிய இராச்சியம் கையாண்டது என்பதில் அதிருப்தி அடைந்துஅந்த வேலையை  விட்டு வெளியே வருகிறார். வந்து சுயாதீனமாக இயங்கும்  அரசற்ற தேசங்களுக்கு இராஜதந்திரம் தொடர்பான உள்ளீடுகளை வழங்குவது ஆலோசனைகளை வழங்குவதனை ஒரு தொழிலாக செய்கின்றார். அவர் குர்த்திய மக்கள் செய்ததை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். குர்திய மக்கள் சிரியாவில் பிரச்சனை வருகின்ற பொழுது மேற்கத்தேயத்தோடு சார்ந்து நின்று கொண்டு ஆசாத் அரசாங்கததிற்கு எதிராக நிலைப்பாடு எடுக்கின்றார்கள். குர்தியர்களும் எங்களைப் போன்று அரசற்ற தேசத்தைச்  சேர்ந்தவர்கள். நான்கு அரசுகளுக்குள் அந்த மக்கள் அகப்பட்டு நிற்கின்றார்கள். ஐசிசும் (ISIS) அசாடும் ஒரு பக்கம் மேற்கத்தேயம் மறுபக்கம் இதற்கிடையில் ஒரு வெளி ஒன்று வருகின்றது. அதாவது யாரும் ஆள முடியாத யாரும் ஆள இல்லாத சந்தர்ப்பத்தில் குர்திய மக்கள் சந்திக்கிறார்கள். தாங்களாக ஒரு சுயாட்சியை உருவாக்குகின்றார்கள். அந்த சுயாட்சியை எந்த அரசியல் அமைப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த சர்வதேச அரசாங்கமும் உதவவும் இல்லை. அவர் சொல்லுகின்றார் ஒரு விதத்திலே அரசற்ற ஒரு அரசாக அந்த சுயாட்சி அங்கு தொழிற்படுகின்றது என்று.  மக்களுக்குரிய சேவைகளை வழங்குகின்றது. அந்த நிலையில் நின்று கொண்டு அவர்கள் ஒரு நிழல் அரசை நடாத்திக் காட்டி இன்று அமெரிக்காவிடம் மேற்கத்தேயத்திடம் ரஸ்யாவிடம் சீனாவிடம் கேட்கிறார்கள் இதனை அங்கீகரியுங்கள் என்று. இது ஒரு வித்தியாசமான பார்வை.

இது பூகோள அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை எவ்வாறு பயன்படுத்துவது அதன் மூலமாக எவ்வாறு கட்டமைப்புக்களை ஏற்படுத்துவது என்பது தொடர்பான காத்திரமான ஒரு மாற்றுப்பார்வை. குர்திய மக்களால் முடிந்தது.அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். அவ்வழியில் எங்களை சிந்திக்கவே விடமாட்டோம் என்று சொல்லுகிறார்கள். இதைச் சொன்னால், இது இங்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா என்பது தான் அடுத்த கேள்வி. ஏன் நாங்கள் அதனை சாத்தியப்படுத்த முடியாது என்று ஒருத்தரும் கேட்பதில்லை. அல்லது அரசியலில் தீர்மானிக்கின்ற சக்திகள் கேட்பதில்லை.

இறுதியாக நான் சொல்லக் கூடியது இது தான்,  சர்வதேச  அரசியலை விமர்சன கண் கொண்டு பாருங்கள். விடுதலைப்புலிகள் இயக்கமும் அன்டன்பாலசிங்கமும் வெளியுறவுக் கொள்கையை இராஜதந்திர அரசியலை நடாத்தியதில் சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில் எங்களுக்கென்று நண்பர்களுமில்லை பகைவர்களுமில்லை என்ற நிலைப்பாடு தான் இருந்தது. எந்த நேரத்தில் எந்த காய் நகர்த்தலைச் செய்தால் அது தமிழர்  தேசத்திற்கு பயன்படும என்பதனை சிந்திக்க வேண்டிய ஒரு வெளியுறவுப் பார்வை அது. அந்த வெளியுறவுப் பார்வையானது போருக்கு பின்னரான சூழலிலும் ஒரு காத்திரமான வெளியுறவுப் பார்வையாக இருக்க வேண்டும் என்றால் நாங்கள் எங்களைப் பலப்படுத்திக்  கொள்ள வேண்டும். எங்களுக்குள் மாற்று புத்தாக்க சிந்தனைகள் வேண்டும். அது வெளியுறவுத் துறையிலும் வேண்டும்.

அந்த வகையிலே மாணவர் சமூகமாக இன்றைய நாள் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவாக பரவலாக வாசிப்போம் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள். சர்வதேச உறவுகளில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக பரவலாக வாசிப்போம். மாற்றுத் தீர்வுகளை தேடித் தேடிப் பார்ப்போம். அந்த மாற்றுத் தீர்வுகளிலிருந்து படிக்கக்கூடிய படிப்பினைகளிலிருந்து எங்களது தேசத்திற்கு ஏற்ற ஒரு வெளியுறவுப் பார்வையை நாங்கள் கட்டியமைத்துக் கொண்டு சுயாதீனமாக அதேவேளை இராஜதந்திரமாக புத்திசாலித்தனமாக எங்களுடைய அரசியலையும் வெளியுறவையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு-துருவன்
நிமிர்வு தை 2019 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.