கண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி




இன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வெளிக்கொண்டுவர நாம் களம் அமைத்து கொடுக்க வேண்டும். யுத்தத்தில் உயிர் இழப்புக்களையும், பொருளாதார இழப்புக்களையும் சந்தித்து நிர்க்கதியாக உள்ள எமது தமிழ்ச் சமுதாயத்தை கல்வியினூடாக முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டுவர எல்லா நடவடிக்கைகளையும் உடன் எடுத்தாக வேண்டும். இல்லாவிடில் எமது வரலாறுகள், அடையாளங்கள், கலாசாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் ஒரு அபாயகரமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஈழத்தில் பல திறமைசாலிகள் எங்கள் மத்தியில் இலைமறை காய்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை வெளியுலகுக்குக் கொண்டு வர வேண்டும்.

தற்காலத்தில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் மத்தியில் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமாரும் ஒருவர். தான் வாழும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நபராக வளர்ந்து வருகிறார். அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள கோரக்கர் என்ற பின் தங்கிய கிராமத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்தவர். தந்தையார் மேசன் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஆரம்ப கல்வியை ஸ்ரீ கோரக்கர் தமிழ் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழிநுட்பத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக பயின்று வருகிறார்.

வினோஜ்குமார் தனது கண்டுபிடிப்பு பற்றி கூறும் போது தரம் 06 இல் கல்வி கற்பித்த விஞ்ஞான பாட ஆசிரியரான சாந்திமதி ஆசிரியர் புத்தக கல்வி மட்டுமல்லாமல் அது சம்மந்தமான ஆய்வுகளையும் செய்து காட்டி முன்மாதிரியாக விளங்கினார். உதாரணமாக சூழலில் காணப்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு பொதுவான கருதுகோளை உருவாக்கும் முயற்சியை எனக்குக் கற்று தந்தார். அன்றிலிருந்த சூழலில் காணப்படும் பிரச்சனைகளை குறிப்பெடுத்து அது சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனையையும் பெற்று சின்ன கண்டுபிடிப்புக்களை செய்வேன். அதை வலயம், மாகாணம், தேசிய மட்டங்களிற்கு கொண்டு செல்வேன்.  எனது நோக்கம் பதக்கமோ, தங்கமோ பணப்பரிசு பெறுவதோ இல்லை. எனது கண்டுபிடிப்பு ஆக்க உரிமை பத்திரம் பெற்று அக் கண்டுபிடிப்பு மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகவே இருக்க வேண்டும்.

என்னை ஊக்குவித்து ஊடகங்கள் மூலமாக அறிமுகப்படுத்தி உதவிகள் புரிந்தது அன்பே சிவம் அமைப்பு. அந்நிறுவனத்தின் சமூக தொண்டனாகவும் பல பணிகளை செய்து வருகின்றேன். எனது கோரக்கன் தமிழ் வித்தியாலயம், சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர்கள், ஆசிரியர்கள் எனது வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.

இளம் விஞ்ஞானியான வினோஜ்குமார் இதுவரை 86 கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்து தனது மண்ணுக்கும், இனத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவற்றுள் 38 கண்டுபிடிப்புகளுக்கு தேசிய விருதும், ஆறு சர்வதேச விருதுகளும்,  நாடுகளுக்கிடையிலான விசேட விருதுகள் ஐந்தும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டில் கனிந்து நாணயக்கார என்ற கண்டுபிடிப்பாளர் 6 பதக்கங்களை பெற்றமையே தனியொருவர் பெற்ற உச்சகட்ட சாதனையாக இருந்தது. இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற் தடவையாக கனிந்து நாணயக்காரவின் சாதனையை முறியடித்து 7 பதக்கங்களையும் அதற்கான பரிசாக 4 இலட்சத்து 40ஆயிரம் ரூபா பணப்பரிசையும் பெற்று சாதனை படைத்துள்ளார் வினோஜ்குமார்.

இவர் சிறுவயது முதல் கைப்பணிப்பொருட்களை செய்த போதும் அவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. தோல்வியே வெற்றியின் முதல்படி என்பது போல இவரது விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. மின்சாரம் இல்லாத காலத்தில் வீட்டில் குப்பி விளக்கு, மெழுகுவர்த்தி பாவிப்பது வழக்கம். தாயார் சேமித்து ஏற்றிய மெழுகுவர்த்தியே அவரையும் அது சார்ந்த ஒரு கருவியை செய்யத்தூண்டியது. அதாவது மெழுகினை அதிகமாக சேமிக்கும் மெழுகு சுழற்சி இயந்திரம் ஒன்றை முதலில் செய்துள்ளார். அது 2012 இல் இலங்கை பொறியியலாளர் நிர்வாகம் மற்றும் புத்தாக்க ஆணைக்குழு என்பவற்றினால் அங்கீகரிக்கப்பட்டு முதலாவது தேசிய விருது கிடைக்கப்பெற்றதோடு அவரை கண்டுபிடிப்பாளராக அறிமுகப்படுத்தியது.

2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவும் விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் நடாத்திய “ஆயிரம் படைப்புக்கள்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

சர்வதேச விருதுக்காக 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் தாய்லாந்து சென்றார். அங்கு 97 நாடுகளின் 1800 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு பற்றிய சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்புக்கள் கண்காட்சியில் “கணித உதவியாளன்” என்ற இவரது படைப்புக்காக சர்வதேச வெண்கல விருதும், உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் சர்வதேச ஆக்கபூர்வ கண்டுபிடிப்புக்குரிய சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரது கணித உதவியாளன் கண்டுபிடிப்பு என்பது கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்க கூடிய உபகரணம். இதன் மூலம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவான முறையில் கற்க முடியும் . செலவு குறைந்த உபகரணம். இதில் பயன்படுத்தப்பட்ட ஒளித்தொழிநுட்பம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினை பயன்படுத்தி கற்க வகை செய்தது முக்கிய விடயம்.

இந்த வருடம் மாசி மாதம் 02ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்று மூன்று சர்வதேச விருதுகளையும் ஐந்து நாடுகளுக்கிடையிலான விசேட சிறப்பு விருதுகளையும் பெற்றார். SHOES HELPER    என்னும் கண்டுபிடிப்புக்கு பொதுப்பயன்பாடுகள் தொழில்நுட்ப பிரிவும் “சர்வதேச வெள்ளி விருதும்” Association of  British Investors & innovators of united kingdom   இருந்து Special Prize Award    விருதும் Manila young Inventors Association of  Philippines  இடம் இருந்து Philippines Gold விருதும் Two Wheels’ Helper  எனும் கண்டு பிடிப்புக்கு பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும், Macao Invention and Innovation Association of Macao  இருந்து Leading Innovation Award    விருதும், Indian Innovators Association  இருந்து Special Innovation விருதும், Wire Building Tool என்னும் கண்டுபிடிப்புக்கு கட்டட நிர்மான தொழில்நுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும், Citizen Inventor & Innovator Association of  Singapore இருந்து Outstanding Innovation  விருதும் பெற்றார்.

இவர் இவ் விருதுகளை சர்வதேச அரங்குகளில் பெற்ற போது தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டிகட்டி பதக்கத்தை பெற்றுக் கொண்டார். வெளிநாட்டவர்கள் கைகூப்பி வணங்கி கைதட்டினார்கள். தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த இளம் விஞ்ஞானியாக தமிழர்கள் மனதில் தனக்கென இடத்தை பிடித்துள்ளார்.

இவர் கண்டுபிடிப்புக்களினை தரம் 06 இல் இருந்தே ஆரம்பித்துள்ளார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது மூலிகை அரைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து வலயமட்ட கண்காட்சியில் காட்சிப்படுத்தி அது பலரது கவனத்தையும் பெற்றது. 2009 ஆம் ஆண்டு உயிருடன் எலிகளை பிடிக்கும் எலிப்பொறி ஒன்றைக் கண்டுபிடித்தார். 2010 இல் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் மின்விசிறியை கண்டுபிடித்தார். இம்மின்விசிறிக்கு நேராக போய் நின்றால் சுழலும் அவ்விடத்தை விட்டு நாம் சென்றால் நின்றுவிடும். இவற்றை விட கழிவுப் பொருட்களை கொண்டு நீண்ட காலம் பாவிக்க கூடிய பாத்திரங்களை உருவாக்கினார். 

இவற்றுடன் தன்னியக்க தாலாட்டும் தொட்டில் ஒன்றையும் கண்டுபிடித்தார். அத்தொட்டில் குழந்தைகளை தாலாட்டி தூங்க வைக்கும். சிறுநீர், மலம் கழித்தால் ஒருவித சத்தத்தை எழுப்பி பெற்றோருக்கு தெரியப்படுத்தும். குழந்தை தூங்கி எழுந்ததும் அலாரம் அடிக்கும். அதற்கு நுளம்பு வலையும் இருக்கிறது.
கம்பிகளை இலகுவாக கட்டும் கருவியை கண்டுபிடித்தார். இது கட்டிட நிர்மான வேலைகளின் போது சாதாரண கம்பிகளை குறடுகளின் உதவியால் திருகி இணைப்பதால் கைகளில் வலியும் காயமும் ஏற்படும். இவர் கண்டுபிடித்த கம்பி கட்டும் கருவி நான்கு பக்கங்களும் உறுதியாக இருக்குமாறு இணைப்பதும் இதில் உள்ள சுழலும் பொறியியல் தொழில்நுட்பம் குறைந்த விசையை பயன்படுத்தி விரைவாகவும் நேர்த்தியாகவும் கம்பிகள் வீணாகாமல் கட்டமுடியும்.

இவ்வாறு 86 கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து பல உற்பத்திப்பொருட்களுக்கு உரிமையாளனாகவும் இளம் விஞ்ஞானியாகவும் போற்றப்படுகின்றார். தற்போது டெங்கு நுளம்பை அழிக்கும் பொறிமுறை ஒன்றை கண்டுபிடிப்பதனை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கல்விக்கு அப்பால் ஓய்வு நேரங்களில் இவ்வாறான கண்டுபிடிப்புக்காக தனது நேரத்தை செலவிடுகிறார். பாடசாலை பருவத்தில் படிக்கும் போது எமது அறிவை மக்களுக்கு பயன்படும் விதத்தில் மாற்றினால் அது எமக்கும் எம் தேசத்துக்கும் என்றும் பெறுமதியானதாகவும், உதவிக்கரமாகவும் இருக்கும் என வினோஜ்குமார் இன்றைய மாணவர்களுக்கு தெரிவித்தார்.

தற்போது வினோஜ்குமார் பல்கலைக்கழக ஓய்வு நேரங்களில் பாடசாலை மாணவர்களுடன் தான் கண்டுபிடிப்புக்களை முயற்சிக்கும் போது பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். எப்படி கல்வியை ஆராய்ச்சி மனப்பான்மையுடன்  கற்க வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தி வருகிறார். மாணவர்களுக்கு கண்டுபிடிப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்குகிறார்.  அவர்களுக்கு சிறு உதவிகளை செய்கிறார். அதைவிட அன்பே சிவம் அமைப்புடன் சமூக பணிகளில் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற உதவும் செயற்பாடுகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தனது எதிர்கால இலட்சியத்தை பற்றிக் குறிப்பிடுகையில் கண்டுபிடிக்கபட்ட கண்டுபிடிப்புக்களை வணிகமயமாக்குதல், சுயதொழில் வாய்ப்பை தனது கண்டுபிடிப்பு மூலம் ஊக்குவித்தல் என்பவற்றைக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு பொருளும் பல்வேறு மனிதர்களின் தளராத முயற்சிகளின் பலனாகவே கண்டுபிடிக்கப்பட்டன. இதை உணர்ந்து செயற்பட்டு நாமும் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று வினோஜ்குமார் தெரிவித்தார்.

எழுத்தாக்கம்: பானு 
 நிமிர்வு மாசி 2019 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.