உயிர்த்த ஞாயிறு படிப்பினை



சித்திரை 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வெடித்த குண்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு ‘காட்டிக் கொண்டிருந்த’ படத்தை உடைத்துப் போட்டுள்ளன.  இலங்கையின் இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது.  புலிகள் மட்டும் தான் தனிநாடு கேட்டு நின்றார்கள்.  அவர்களை அழித்ததுடன் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது.  இலங்கை பல இன மக்கள் மீண்டும் சமாதானமாக வாழும் நாடாகிவிட்டது.  சர்வதேசங்களே எமது அபிவிருத்திக்கு உதவுங்கள்.  சுற்றுலாப்பயணிகளே வாருங்கள் வந்து கொண்டாடுங்கள். என்றெல்லாம் படம்காட்டிக் கொண்டிருந்த இலங்கை உண்மையிலேயே இனமுரண்பாடுகளால் எக்கணமும் வெடிக்கக்கூடிய ஒரு அணுக்குண்டு என்று உலகிற்கு காட்டப் பட்டுள்ளது.  இங்கு இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை.  வெறுமனே ஒரு இராணுவ வெற்றியே அடையப்பட்டுள்ளது என்பது நிதர்சனமாகி உள்ளது.

குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் தம்மை முழுதாக மறைக்கும் ஆடைகளுக்கு அரசாங்கம் தடைவிதித்தது.  வைகாசி 7, 2019 அன்று அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்துக்கு கற்பிக்க வந்த முஸ்லிம் ஆசிரியைகள்தலைமுடியை மூடும் மேலாடைகளை அணிந்து கொண்டு பாடசாலைக்குள் செல்லக் கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இவர்களைத் தடுத்து நிறுத்தியவர்கள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள். ஆசிரியைகள் அணிந்திருந்த மேலாடை வகைகள் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிராதவை என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து நீர்கொழும்புப் பகுதிகளில் தங்கியிருந்த பாகிஸ்தான் மற்றும் அப்கானிஸ்தானைச் சேர்ந்த அகமாடி முஸ்லிம் ஏதிலிகள் அவர்ளின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  இவர்களை வெளியேற்றியவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்த அகதிகளை அரச படையினர் பேருந்துகளில் ஏற்றி வேறு இடங்களுக்கு கொண்டு சென்றனர். இன்று அவர்கள் காவல் நிலையங்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் தாழ்ந்த வாழ்க்கைத்தரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளில் அடாத்தாக தங்கியிருக்கும் படையினர் இந்த ஏதிலிகளை தொடர்ந்தும் இருக்க அனுமதிக்குமாறு சிங்கள வீட்டு உடைமையாளர்களை நிர்ப்பந்திக்கவில்லை. ஏதிலிகள் தங்கியிருந்த இடங்களை சிங்களக்காடையர் தாக்குவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழங்கவும் படையினர் தயாராக இருக்கவில்லை.  ஏனெனில் சிங்களக்காடையர் தாக்குவார்களாக இருந்தால் அவர்களை தடுத்து நிறுத்தவோ அவர்களை எதிர்த்துத் தாக்கவோ படையினரின் இனப்பற்று விடாது.

அதேவேளை, அந்த ஏதிலிகளை வவுனியாவில் குடியேற்ற அரசாங்கம் முனைந்தது.  அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரனும் ஆதரவு அளித்தார்.  ஆனால் வைகாசி 4, 2019 அன்று வவுனியாவின் மூன்று பிரதேச சபைத்தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவை இவ்வாறு இருக்க இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தென்னிலங்கையில் தாக்குதல்கள் தொடர்கின்றன.  வைகாசி மாத முதல் இரு வாரங்களிலும் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பல இடங்களிலும் பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வியாபாரத் தலங்களும் தாக்கப்பட்டன.

இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்களவர் என்ற மூன்று தரப்பினருக்கு இடையான பரஸ்பர இனமுரண்பாடு சற்றும் தணியவில்லை. மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் அதையே சுட்டி நிற்கின்றன. இந்த நிலைமையில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த முன்னேறிய தரப்பினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோரின் கருத்துக்களும் வேண்டுகோள்களும் பாமரத்தன்மையாக உள்ளன.

பாகிஸ்தானிய ஆப்கானிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் குடியேற்றுவதை எதிர்த்தவர்கள்   தமிழர்கள் என்பதால் தாமும் அவ்வினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதையிட்டு வெட்கப் படுவதாக பல தமிழ் முற்போக்காளர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதினர்.  “எனது தமிழ் சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை: இதை நாம் தான் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம். எமது மக்கள் இலங்கையில் துன்புறுத்தலுக்கு அஞ்சி பல நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளார்கள். எம் வாசற்படியலிருந்து இந்த ஏதிலிகளைத் துரத்தி, நன்றி கெட்ட சமூகம் என்ற பெயரை பெற்றுக் கொள்ளாதீர்கள்!” என்று பா.உ. ம. சுமந்திரன் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


தமிழரின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆனபின்பும் இம்மண்ணைச் சேர்ந்த தமிழர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பமுடியாமல் இன்னும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தானிய அப்கானிஸ்தானிய அகதிகளை முதலில் குடியேற்ற முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என வவுனியா பிரதேச சபைத் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.  அந்தக் கேள்விக்கு பல தரப்பினரிடமிருந்தும் ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.  இக்கேள்விக்கு தமிழ் முற்போக்குத் தரப்பினரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.  தம்மைத் தமிழர் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப்படுவதாகச் சொன்னவர்கள் வீடுவாசலை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் தமது சகோதர தமிழர்களுக்கு இதற்கு முன்னர் எந்தவிதமான ஆதரவுக் குரலையும் எழுப்பவில்லை.

“முஸ்லிம் மக்கள் தம் மத்தியில் தேசிய தௌகித் ஜமாத் போன்ற ஒரு பயங்கரவாத அமைப்பு தோன்ற எப்படி இடமளித்தார்கள் என்று தமக்குள் ஒரு சுயதேடலை நடத்த வேண்டும்” என்று சிங்கள தமிழ் முற்போக்காளர்களிடமிருந்து ஒரு குரல் எழுந்துள்ளது.  அவர்களில் சிலரிடமிருந்து “முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல தமிழர்கள் கூட தம்மிடையே ஒரு விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக எவ்வாறு இடமளித்தார்கள் என ஒரு சுயதேடலை நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆக, சிங்கள பேரினவாதத்தால் அடக்குமுறைகளுக்கு உள்ளான இனங்கள் தம் மத்தியில் வன்முறைக்கு எப்படி இடமளித்தார்கள் என்று சுயதேடலைச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.  இந்த இனங்களிடையே வன்முறைக் குழுக்கள் உருவாகுவதற்கு ஊக்கியாக இருந்த புறக்காரணிகள் என்ன என்பதற்கான தேடலை இவர்கள் நடத்தத் தயாராயில்லை.  அல்லது, அதற்கான பதில் தெரிந்தாலும், அந்தப் பதிலின் பின்னால் உள்ள காரணியை மாற்ற முடியாது என்பதனால், பாதிக்கப் பட்ட இனங்கள் எவ்வாறு அதனைச் சமாளித்துக் கொண்டு வாழலாம் என்ற தேடலை மேற்கொள்ளுமாறு கேட்கிறார்கள் போலும்.

இலங்கையைப் பொறுத்தவரை தேசிய இன முரண்பாடு என்பது புதிதல்ல. இந்த இன முரண்பாடு பல தசாப்தங்களாக இலங்கையில் திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது.  இலங்கையின் தேசியக் கொடி, அரசியல் சட்டம் என்பனவற்றிலிருந்து தொடங்கி பாடசாலைப் புத்தகங்கள் வரை பௌத்த சிங்களப் பேரினவாதம் கட்டமைக்கப்பட்டுள்ளது.  தான் பேரினம் என்ற இறுமாப்பிலிருக்கும் ஓர் இனம் தாக்குதலுக்கு உள்ளாகுமிடத்து தனக்குப் பாதுகாப்புத் தேடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகுமிடத்து அது தனக்குத் தேவையான பாதுகாப்புக்கு மற்றய இனங்களே விலை கொடுக்க வேண்டும் என நினைக்கும். இன்று தமிழர்களையும் முஸ்லிம்களையும் பேரினவாதத்துடன் இசைந்து கொடுக்குமாறும் நிலைமைகளைச் சமாளித்து வாழப் பழகிக் கொள்ளுமாறும் கூறுபவர்கள் அந்த விலையை கொடுங்கள் என்றே கூறுகிறார்கள்.  அதாவது அடிப்படையிலேயே பலமாக இருக்கும் ஒரு பேரினவாதம்தான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பயப்பிராந்தி கொள்ளும் பொழுதெல்லாம் மற்ற இனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அதற்குரிய கட்டணத்தை அவர்கள் செலுத்தியே ஆகவேண்டும் என்று கூறுகிறார்கள்.

அண்மைக் காலங்களில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மதரீதியாக இனரீதியாக தேசியவாதங்கள் புதிதாக வலுப்பெற்று வருவதைக் காணலாம். இந்த நிலைமையில் இனவாதம் செழித்து வளரத் தேவையான அகக்காரணிகளை எல்லாம் கொண்ட இலங்கையில் இஸ்லாமியத் தேசியவாதம் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்று.  இவ்வாறு இருக்கையில் இஸ்லாமிய தேசியவாதத்தின் நீட்சியான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் வெளிப்பட இவ்வளவு காலம் எடுத்ததையிட்டு உண்மையிலேயே ஆச்சரியப் படவேண்டும்.

ஒரு இனத்துக்கும் ஒரு மதத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் சாசனம் இருக்கும் வரை இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.  இலங்கையில் இயற்றப் படும் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் அரசியல் சாசனம்தான் அடிப்படை. இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு குரல் கொடுக்காமல் சிறுபான்மை இனங்களை சமாளித்துப் போகுமாறு கோருபவர்கள் அடிப்படை நோயைத் தீர்க்கும் மருந்தைக் கேட்காமல் அந்நோயினால் வரும் அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்து கேட்கிறார்கள்.

இவை ஒருபுறமிருக்க ஒரு பேரினவாதத்தின் பயப்பிராந்திக்கு பாரிய விலை கொடுத்துக் கொண்டிருக்கும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் இப்பேரினவாதத்தை எவ்வாறு கூட்டாக எதிர்கொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.  அன்று தமிழரின் தேசியவிடுதலைப் போராட்டத்திலும் சரி, இன்று முஸ்லிம் மக்களின் இருப்புக்கான போராட்டத்திலும் சரி அந்நிய நாடுகளினதும், சக்திகளினதும் தாக்கம் இருக்கிறது.  இந்த அந்நிய சக்திகள் தமது சொந்த இலாபங்களுக்காக அரசற்ற இந்த சிறுபான்மை இனங்களை பயன்படுத்திக் கொள்ளும்.  அந்தப் பயன்படுத்தலில் இருந்து தப்பவேண்டுமானால் பாதிக்கப் பட்ட இரு இனங்களும் ஓர் உடன்படிக்கைக்கு வரவேண்டிய தேவை உள்ளது.

தமிழரின் விடுதலைப் போராட்டுத்துக்கு எதிராக முஸ்லிம்களை சிங்களப் பேரினவாதம் நன்றாகவே பயன்படுத்தியது. அதனை சிங்கள தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டுள்ளனர்.  இன்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமிழரைப் பயன்படுத்தும் சதியை முன்னெடுக்க சிங்கள பேரினவாதம் முற்படும். இது சிங்கள தலைவர்களுக்கு கைவந்த கலை. இதனை உணர்ந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழருடையதும் கடமை. இன்று சிங்கள பேரினவாதத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு தமிழ் மக்கள் உதவி செய்ய வேண்டிய காலம் இது.

முஸ்லிம்கள் எமுது விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்தவர்கள் என்பதால்இதனைத் தமிழர் உளப்பூர்வமாக செய்ய முன்வருவதில் தயக்கம் இருக்கும்.  ஆனால் எமது எதிர்கால அரசியல் நலனை முதற்கொண்டு இந்த உடன்பாட்டை நாம் செய்யவேண்டும். அவ்வாறு உடன்பாட்டுக்கு போகுமிடத்து இருதரப்பினரும் அந்த உடன்பாட்டினூடாக தாம் அடைய நினைப்பது என்ன என்பதையும் அந்த உடன்பாட்டின் எல்லை என்ன என்பதையும் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு பேரினவாதத்தை எதிர்கொள்ளவதற்கு எமக்கு வேண்டிய உதவியை எல்லா இடங்களில் இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  மேலும் இச்சந்தர்ப்பத்தின் விளைவாக தமிழரும் முஸ்லிம்களும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதை சிங்களப் பேரினவாத அரசு விரும்பாது.  அதனைத் தடுப்பதற்கு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழர் மத்தியிலுள்ள கைக்கூலிகளையும் அது பயன்படுத்தும். ஆகவே இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது முஸ்லிம்களுடன் ஒரு வெளிப்படையான ஒப்பந்தத்துக்கு வருவதே. அந்த ஒப்பந்தம் நாளடைவில் ஒரு கூட்டுக்கு வழிவகுக்குமானால் அதுவும் வரவேற்கத்தக்கதே.

ரஜீவன் 
நிமிர்வு வைகாசி 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.